உ
ஓம் நமசிவாய
கங்கோத்ரி ஆலயம்
சார்தாம் (நான்கு ஆலயங்கள் அல்லது பீடங்கள்) எனப்படுகின்ற மிகவும் புனிதமுடைய மற்றும் மதிப்பிற்குரிய நான்கு திருத்தலங்கள் இந்த பரதகண்டத்தின் நான்கு திசைகளிலும் எல்லைக் காவலாக அமைந்துள்ளன. அவையாவன வடக்கில் உள்ள பத்ரிநாதம், தெற்கில் உள்ள இராமநாதம் – இராமேஸ்வரம், கிழக்கில் உள்ள துவாரகை மற்றும் கிழக்கில் உள்ள ஜெகந்நாதம் - பூரி ஆகிய ஆலயங்கள் சார்தாம் என்றழைக்கப்படுகின்றன. சிவபெருமானின் அம்சமாக காலடியில் அவதரித்த, ஹிந்து மதத்திற்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கர பகவத்பாதாள் தனது பீடங்களை இந்த நான்கு தலங்களில் ஸ்தாபனம் செய்தார். இந்த தலங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு இந்துவும் தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது சென்று வழிபட வேண்டும் என்பது நியதி.
கேதார்நாத் ஆலயம்
அது போல உத்தராகாண்ட மாநிலத்தின் சோட்டா சார்தாம் ( சிறிய நான்கு பீடங்கள்) என்று அழைக்கப்படும் யமுனோத்திரி, கங்கோத்ரி, திருக்கேதாரம், பத்ரிநாதம் ஆகிய நான்கு தலங்களுக்கு செல்லும் யாத்திரையே அடியேன் மேற்கொண்ட சார்தாம் யாத்திரை. உத்தராகாண்ட மாநிலத்தில் இந்த தலங்கள் அமைந்துள்ளதால் இந்த யாத்திரையை உத்தராகாண்ட் யாத்திரை என்றும் இமயமலையில் அமைந்துள்ளதால் இமயமலை யாத்திரை என்றும் அழைக்கின்றனர்.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் குறிஞ்சி நிலமான இமயமலையும் அதைச் சார்ந்த பகுதிகளும் உத்தரக்காண்ட (உத்தராஞ்சல்) என்று தனி மாநிலமாக இப்போது பிரிக்கப்பட்டிருக்கின்றது. உத்தராகாண்ட் மாநிலம் இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாகும். பனி ஆறுகள், கம்பீரமான பனியடர்ந்த மலைகள், பிரம்மாண்டமான மற்றும் களிப்பூட்டும் சிகரங்கள், மலர்களின் பள்ளத்தாக்குகள், ஸ்கையிங் இடங்கள் மற்றும் அடர் வனங்கள், மேலும் புனித யாத்ரீகர்கள் தங்கிச்செல்வதற்கான பல மடங்கள் மற்றும் பல கோவில்கள் ஆகிவற்றை இம்மாநிலம் உள்ளடக்கியுள்ளது.
இந்த உத்தராக்காண்ட மாநிலம் இரண்டு மண்டலங்களாக அமைந்துள்ளன கிழக்குப்பகுதி குமோன் என்றும் மேற்குப்பகுதி கர்வால் என்றும் அழைக்கப்படுகின்றது. சார்தாம் யாத்திரையின் ஆலயங்கள் அனைத்தும் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளன. இந்த நான்கு ஆலயங்களில் இரண்டு புண்ணிய நதிகளான கங்கை மற்றும் யமுனையின் உற்பத்தி ஸ்தானமான சக்தி தலங்கள், ஒன்று சிவபெருமானின் ஜோதிர்லிங்க ஸ்தலம், தேவாரப் பாடல் பெற்ற தலம். ஒன்று பூலோக வைகுண்டம் என்று அறியப்படும், பெருமாள் தானே தோன்றிய ஸ்வயம்வக்த ஸ்தலமான ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திவ்யதேசம். ஆதிசங்கரின் பெரிய சார்தாம் யாத்திரையிலும் பத்ரிநாதம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவையல்லாமல் தேவாரப்பாடல் பெற்ற கௌரி குண்டம், மற்றும் இந்திர நீல பர்வதம் மற்றும் பிரயாகைகள் எனப்படும் நதியின் சங்கமங்கள் எனப்படும் பஞ்ச பிரயாகைகளையும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட மற்றும் இரு வடநாட்டுத் திருப்பதிகளான தேவப்ரயாகை எனப்படும் கண்டம் என்னும் கடிநகரையும், திருப்பிருதி எனப்படும் ஜோஷிர்மட்டையும் தரிசனம் செய்கின்றோம்.
பத்ரிநாத் ஆலயம்
இந்த நான்கு தலங்களுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவையாவன இவை இமய மலையின் பனி மூடிய சிகரங்களின் மடியில் இவை அமைந்துள்ளன. வருடத்தில் ஆறு மாதத்தில் இவை பனி மூடி இருக்கும் அப்போது இங்குள்ள தெய்வ மூர்த்தங்கள் கீழே இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அனைத்து தலங்களும் பல்வேறு புராண கதைகளுடன் தொடர்புள்ளவை. நான்கு தலங்களும் கங்கை நதியின் உப நதிகளில் அமைந்துள்ளன. இத்தலங்களில் அல்லது அருகில் வெநீநீர் ஊற்றுகள் உள்ளன, ஆதி சங்கரருடன் தொடர்புடையவை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒருவர் முயற்சி செய்து அவனருள் இருந்தால்தான் இத்தலங்களுக்கு செல்ல முடியும் மலையேற்றம் அவசியம் என்பதால் நல்ல உடல் நலம் நன்றாக இருப்பவர்கள் மட்டுமே செல்வது புத்திசாலித்தனம். மேலும் ஒரு பனி மூடிய சிகரத்திற்கு சென்று தரிசனம் செய்து விட்டு பின்னும் அடுத்த தலத்திற்கு செல்ல வேண்டும், மேலும் கீழே இறங்கி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்பதால் நாட்களும் அதிகமாக ஆகும். டெல்லி வரை இரயில் மூலமாக சென்றால் நான்கு தலங்களையும் தரிசனம் செய்துவிட்டு திரும்பிவருவதற்கு குறைந்தது பதினைந்து நாட்களாவது ஆகும்.
இனி வரும் பதிவுகளில் இன்னும் இந்த யாத்திரைகளைப் பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ள உடன் வாருங்கள் அன்பர்களே.
8 comments:
இந்த இனிய யாத்திரையைத் துவக்கத்திலிருந்து படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று துடிப்பாய் இருக்கிறது. கலர் கலராய் மிளிரும் பின்னொளியில் எழுத்துக்கள் வாசிக்க முடியாத அளவுக்கு மங்கலாகத் தெரிகின்றன. அவற்றை சரிசெய்தால், சுலபமாய் வாசித்தறிய வழி பிறக்கும்.
இந்தத் தொடரைத் தொடங்கியமைக்கு மிக்க நன்றி, நண்பரே!
மிக்க நன்றி ஜீவி அவர்களே, template மாற்றி விட்டேன் இப்போது எப்படியுள்லது என்று தங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
புகைப்படங்கள் அருமை... மிக துல்லியமாக இருக்கின்றன..
தொடருங்கள்.. காத்திருக்கிறோம்.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
இன்னும் பல அருமையான புகைப்படங்கள் உள்ளன. பின் வரும் பதிவுகளில் தொடரும். அவசியம் வந்து தரிசனம் செய்யுங்கள்
தொடர்ந்து வருகிறேன், படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது, கடந்த 2010 ஆண்டு நான் சென்று வந்தேன் , நீங்கள் அடுத்த முறை செல்லும் பொது தெரிவித்தால் நானும் வருகிறேன்
நிச்சயம் தெரிவிக்கின்றேன் ஸ்பார்க் கார்த்தி ஐயா.
அப்போது கூறி (22 பாகம் என்று நினைக்கிறேன்) தற்போது தான் படிக்க துவங்குகிறேன்... :-) ஒவ்வொன்றாக படித்து விட்டு வருகிறேன்.
தொடர்ந்து படித்து வாருங்கள் கிரி
Post a Comment