Friday, November 18, 2011

இமயமலையில் ஒரு இனிய யாத்திரை -4


ஓம் நமசிவாய:

ரிஷிகேஷ் நகரம் ஹரித்துவாரத்திலிருந்து டேராடூன் செல்லும் சாலையில் 24 கி.மீ தூரத்தில் உள்ளது. இது சார் தாம் யாத்திரையின் நுழைவு வாயில் ஆகும். சீசன் சமயத்தில் (மே-ஜூன்) மாதங்களில் இங்கிருக்கும் எண்ணற்ற சுற்றுலா நிறுவனங்களின் மூலம் யாத்திரிகள் நான்கு கோவில்களுக்கும் யாத்திரை செல்கின்றனர். புனித நீராட பல "காட்" என்று இங்கு அழைக்கப்படும் ஸ்நான கட்டங்களும், இறைவனை தரிசனம் செய்ய பல கோவில்களும், மடங்களும், யாத்திரிகள் தங்குவதற்கு பல சத்திரங்களும் நிறைந்த கங்கையின் வலக்கரையில் அமைந்த நகரம். சங்கரர் நிறுவிய பரதாலயம் இங்குதான் உள்ளது. இங்குள்ள திரிவேணி கட்டத்தில் பிண்ட ஸ்ரார்த்தம் செய்வது விசேஷம். எண்ணற்ற ரிஷிகளும் மகான்களும் வாழ்ந்த இடம். இங்கிருந்துதான் நாங்கள் 06-09-2011 அன்று எங்கள் யாத்திரையை துவங்கினோம்.


யாத்திரை சென்ற பேருந்து

GMVN நிறுவனத்தினர் ஒரு 15 பேர் அமரக்கூடிய மேலே உள்ள வண்டியை எங்களுக்காக ஒரு வழிகாட்டியுடன் கொடுத்திருந்தனர். அவருடைய பெயர் அர்விந்த் மைதானி, வண்டி ஒட்டியின் பெயர் மதன்சிங் நெகி, அவருக்கு துனையாக கிளீனர் சிபுசிங் என்பவரும் உடன் வந்தாற். அதிகாலை எழுந்து இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரத்தில் அமைந்துள்ள இந்த ரிஷிலோக் சுற்றுலா பங்களாவின் அருமையான தோட்டத்தையும் அதில் பூத்துக்குலுங்கும் மலர்களையும் புகைப்படம் எடுத்தோம். காலையை சிற்றுண்டியை அங்கேயே முடித்துக்கொண்டு வண்டியில் அனைவரும் ஏறினோம். அவர்கள் வழக்கப்படி, யமுனா மய்யாக்கீ ஜே! கங்கா மய்யாக்கீ, ஜே! ஜெய் கேதார் நாத் கீ! ஜெய் பத்ரி விஷால் கீ! என்று யாத்திரை தொடங்கியது.
ரிஷிலோக் சுற்றுலா விடுதியின் அழகான பூங்கா

வழிகாட்டி அவர்கள் முதலில் கூறிய செய்தி இன்று நாம் மதிய உணவிற்கு பார்கோட் என்ற இடத்தில் நிற்போம். யமுனோத்த்ரியை அடைய 5 கி.மீ நடைப்பயணம் செய்ய வேண்டும் எனவே இன்று அதன் அடிவாரத்தில் தங்குவோம். மழை இந்த வருடம் அதிகம் என்பதால் எப்போதும் ஒரு சிறு பையில் இரண்டு செட் துணிமணிகள் மற்றும் சோப்பு, பல்பொடி மற்றும் அவசியமான பொருட்கள் பூஜை சாமான்கள் எடுத்து தனியாக எப்போதும் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். எல்லா பெரிய பெட்டிகளையும் மேலே தூக்கிச்செல்ல வேண்டாம். எதிர்பாராமல் எங்காவது தங்க நேர்ந்தாலும் சிரமம் இருக்காது என்று கூறினார், ஒட்டடைக்குச்சி போல் நெடிதுயர்ந்த மரங்கள் வானத்தை ஒட்டடை அடிப்பதை பார்த்துக்கொண்டே முசோரி செல்லும் பாதையில் வண்டி நகர்ந்தது. முதலில் ஜாலி கிராண்ட் என்ற இடத்தில் உள்ள விமான நிலயத்தை பார்த்தோம். டெல்லியிலிருந்து டேராடூன், ஹரித்வார், ரிஷிகேஷ் விமானம் மூலம் வருபவர்கள் இங்குதான் வரவேண்டும்.

ரிஷிலோக் சுற்றுலா பங்களா

நமது யாத்திரை முழுவதும் இமயமலையில் என்பதால் முதலில் இமயமலையின் புராண சிறப்பைப் பற்றி பார்க்கலாமா அன்பர்களே?

கொழுந்து திகழ்வெண் பிறைஜடிலக் கோவே மன்றில் கூத்தாடற்கு

எழுந்த சுடரே; இமயவரை என்தாய் கண்ணுக்கு இனியானே;

தொழும்தெய் வமும்நீ, குருவும்நீ, துணைநீ, தந்தை தாயும்நீ,

அழுந்தும் பவம்நீ, நன்மையும்நீ, ஆவி, யாக்கை நீதானே.

(பொருள்): பிறையை அணிந்தவனே, சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்கு எழுந்த சுடரே, இமயவன் பெற்ற உமையின் கண்ணுக்கு இனியவனே, எனது தெய்வமும், குருவும், தாயும் தந்தியும், இவ்வுலகமும், நன்மையும், உயிரும் உடலும் என அனைத்தும் நீயே! என்று தாயுமானவ சுவாமிகள் பாடியபடி நம் அன்னை மலையரசன் பொற்பாவை, பார்வதியின் தாய் வீடுதான் இந்த இமயமலை.

நமது நாட்டின் வடக்கு எல்லையும் அரணுமான இமயமலையே புராணங்களின் படி பார்வதியின் தாய் வீடு. ஸ்ரீ லலிதா அஷ்டோத்தரத்தில் ஒரு நாமாவளி ஹிமாசல மஹா வம்ச பாவனாயை நமோ நம", ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமம் "உமா சைலேந்த்ர தனயா கௌரி கந்தர்வ சேவிதா". உமையம்மை மலைகளுக்கெல்லம் அரசனான, இமய மலையின் அரசன் இமவான் மகளாக பிறந்து, வளர்ந்து விளையாடி தவமிருந்து சர்வேச்வரனை கை பிடித்த இடம் இமயமலை.

இதை குமரகுருபரர் மீனாக்ஷி அம்மன் பிள்ளைத் தமிழில்

“வளர்சிமய இமயப்பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே” என்றும்

அபிராமி பட்டர்

“குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடைக் கோலவியன் மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை”,

கருணை குலவு கிரிராச புத்ரி,

அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே .

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங் குழையே

சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ தனயை

என்றெல்லாம் அன்பொழுக பாடுகின்றார்.

அம்பிகையைப் பற்றி பாடும் போது ஆதி சங்கர பகவத் பாதாள் இமஹிரி சுதே, என்றும் கிரி கன்யே என்றும், சைலசுதே என்றும் கிரிராஜ புத்ரி என்றும் வாத்சல்யத்துடன் பாடுகின்றார்.

சகல செவங்களும் தரும்

இமய கிரிராஜ தனயை கற்பகவல்லி


பூரணி புராதனி சுமங்கலை சுதந்தரி

பராந்தகி த்ரியம்பகி யெழில்

புங்கவி விளங்குசிவ சங்கரி ஸஹஸ்ரதள

புஷ்பமிசை வீற்றிருக்கும்

நாரணி மனாதீத நாயகி குணாதீத

நாதாந்தசக்தி என்றுன்

நாமமே உச்சரித்திடுமடியர் நாமமே

நானுச்சரிக்க வசமோ

ஆறணி சடைக்கடவுள் ஆரணி எனப்புகழ

அகிலாண்டகோடி யீன்ற

அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்

ஆனந்த ரூப மயிலே

வாரணியும் இருகொங்கை மாதர்மகிழ் கங்கைபுகழ்

வளமருவுதேவை யரசே

வரை ராசனுக்கிருகண் மணியாயுதித்த மலை வளர்

காதலிப்பெண் உமையே!


(இராமேஸ்வரத்தில் வளர் பர்வதவர்த்தினி அம்பாள் மேல் தாயுமானவர் பாடிய அற்புத பதிகத்தின் ஒரு பாடல்)

பரம கருணாமுர்த்தி, வானருய்ய தான் ஆலமுண்ட நீலகண்டர் எம்பெருமானை மாணிக்க வாசகரும் தமது திருவாசகத்திலே மலைக்கு மருகனைப் பாடி நாம் தேள்ளேணம் கொட்டோமோ என்று பாடுகின்றார். அன்னை ஜகத்ஜனனி, ஜகன்மாதா, மஹா த்ரிபுரசுந்தரி நாம் எல்லாரும் உய்ய இமவான் மகளாக பிறந்து அருள் பாலித்ததால் அன்னையை, மலையரசன் பொற்பாவை, வரைமகள், வரையரசன் புத்ரி, மலைமகள், மலைமங்கை, ஷைலபுத்ரி, பார்வதி, பர்வதவர்த்தினி, கிரிஜா, கிரிசை, கிரிநந்தினி, கிரிவர புத்ரி, மலை வளர் காதலி உமை, பர்வத புத்ரி, பார்வதி, இமவான் மடந்தை உத்தமி என்றெல்லாம் அழைத்து மகிழ்கின்றனர் பக்தர்கள்.இப்புனிதமலையில் இந்து, புத்த சமயங்களின் பல்வேறு புண்ணிய தலங்கள் அமைந்துள்ளன. திருக்கயிலாயம், தொடங்கி, கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத், அமர்நாத், வைஷ்ணோ தேவி, காமாக்யா, கங்காத்ராதேவி, தாராதேவி, சாமுண்டாதேவி, ஜூவாலாமுகி, முக்திநாத், பசுபதிநாத் என்று எண்ணற்ற இந்து புண்ணியத்தலங்கள் இமயமலையில் அமைந்துள்ளன. மேலும் எண்ணற்ற புத்தவிகாரங்கள் இமயமலையெங்கும் பரவியுள்ளன.

"மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநிலமீதினில் இது போல் பிரிதில்லையே'' என்றும் “வெள்ளிப்பனி மலை” என்றும் மகாகவி பாரதியார் போற்றிய மாமலையான இமயமலை புவியியலின் படி, இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய, மிக உயர்ந்த, மாபெரும் மலைத்தொடராகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும் இந்த இமயமலைத் தொடர் ஆசியாவிலுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடருக்கு வடக்கே 4,300 மீட்டர் உயரத்திலே திபெத் உயர் பீடபூமி உள்ளது. உலகத்திலேயே உயரமானதும், அதே சமயத்தில் இளைய மலை அம்மலைத்தொடர் சுமார் 30 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது.

மஞ்சு கொஞ்சும் மலை முகடுகள் நிறைந்த இமயமலை

ஹிம் என்றால் பனி ஹிமாலயம் என்றால் பனி ஆலயம் என்று பொருள். எனவே இமாலயத்தில் எப்போதும் பனி நிறைந்திருக்கும். பனி மூடிய சிகரங்களை கொண்டுள்ளதால் இம்மலைத் தொடர் அதிகமாக சிதைவு அடையவில்லை. இம்மலைத் தொடர் கிழக்கு மேற்கில் இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் விரிந்து பரந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தொடங்கி, பாகிஸ்தான். இந்தியா, நேபாளம். சீனா, பூடான், மியான்மார் வரை பரவியுள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இந்த மலைத்தொடர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நம்முடைய இந்தியத் திருநாடே பாலைவனமாக மாறியிருக்கும். இந்து மஹா சமுத்திரத்திலிருந்து வரும் மேகக்கூட்டங்களை தடுத்து நிறுத்தி இந்திய திருநாட்டை வளமிக்க நாடாக மாற்றியுள்ளது இம்மலைகள். அதே சமயம் திபெத்திலிருந்து வரும் குளிர் காற்றை தடுத்து நிறுத்தி நல்ல தட்பவெப்ப நிலை வடநாட்டில் நிலவ உதவுவது இம்மலைத்தொடர்கள்தான். செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு.

மோகன், வைத்திலிங்கம், தனுஷ்கோடி

எப்போதும் பனியால் மூடப்பட்டிருப்பதால் அப்பனி உருகி பாயும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, யாங்சிகீ, மஞ்சளாறு, ஐராவதி என்னும் வற்றாத ஜீவநதிகள் அனைத்தும் உருவாகி ஆசிய கண்டத்தையே வளமாக்குகின்றன. அகழ்வாராய்ச்சியின் மூலமாக முதன் முதலில் நாகரீகம் இந்த இமய மலையிலிருந்து உற்பத்தியாகி ஓடும் ஆற்றின் கரையோரங்களில் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாகரீகத்தின் தொட்டிலும் இமயமலைதான். இப்பூவுலகின் ஒப்பற்ற கொடுமுடியாகிய எவெரெஸ்ட் தொடங்கி அனைத்து 8000 மீட்டருக்கும் உயர்வான பனி மூடிய சிகரங்கள் அனைத்தும் அமைந்திருப்பதும் இம்மலைகளிள்தான். உலகின் பத்து மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலையில் உள்ளன.

பச்சைப் போர்வை போர்த்தது போல காட்சி தரும் இமயமலை

இம்மலை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன சிறிய இமயம், பெரிய இமயம், எல்லை கடந்த இமயம். இமயமலை கொடுமுடிகள் இறைவனின் வாசஸ்தலம் இவற்றில் விண்ணைத் தொடும் கைலாயம் சிவலிங்க முடி எழிலின் திரு வடிவமாகும், திருக்கயிலாயம் எல்லை கடந்த இமயத்தில் அமைந்துள்ளது. பெரிய இமயத்தின் தென் பகுதில் மற்ற இமய மலையின் புண்ய தலங்களான ரிஷகேசம், திருக்கேதாரம், பத்ரிகாச்ரமம். கங்கோத்ரி, யமுனோத்ரி முதலியவை உள்ளன.

உத்தரகாண்ட மாநிலத்தின் கிழக்குப்பகுதிக்கு குமோன் என பெயர் வரக்காரணம் விஷ்ணு பகவான் எடுத்த கூர்ம அவதாரம் ஆகும். இரண்டாவது அவதாரமாக கூர்ம அவதாரம் எடுத்த போது எம்பெருமான் இமயமலையில் இப்பகுதியில் மூன்று மாதங்கள் தங்கியதாக ஐதீகம். அவரது காலடித்தடம் இன்னும் இம்மலைகளில் உள்ளன, கூர்ம்மாச்சல் என்பதே மருவி குமூ ஆகி பின் குமோன் என்று இன்று அழைக்கப்படுகின்றது.

பாண்டவர்களுடன் தொடர்புடையது இமயமலை. இந்த இமயமலைப் பகுதியில்தான் அர்ஜூனன் தவம் புரிந்து சிவபெருமானுடன் விற்போரும், மல்யுத்தமும் புரிந்து பாசுபதாஸ்திரம் பெற்றான். பாண்டவர்கள் சொர்க்கம் புகுந்ததும் யமதர்மராஜன் அவர்களை நாய் ரூபத்தில் சோதித்தும் இம்மலைகளில்தான். வேதவியாசர் வேதங்களைச் சரிபார்த்து நான்கு ஆக்கிய நல்லிடம் இமயமலைப் பகுதியே. மகாபாரதம் எழுதப்பட்ட புனித இடம் இமயமலைப் பகுதிதான் என்று இமயமலையின் பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.


இவ்வாறு தாங்கள் இமயமலையின் சிறப்பைப் படித்துக்கொண்டிருப்பதற்குள் வண்டி டேராடூன் நகரில் நுழைந்து மலைகளின் அரசியானதும் சிறந்த மலை வாசஸ்தலமும் ஆன முசோரி நோக்கி சென்று கொண்டிருந்தது. டேராடூன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது அதன் அருகே உள்ள முசோரி மலையின் மேலே அமைந்துள்ளது. ஆகவே வண்டி மலை சிகரத்தை நோக்கி ஏறிக்கொண்டிருந்த போது சிவபுரி என்னும் ஊர் வந்தது. அங்கு வண்டியை நிறுத்தினார்கள் எதற்காக என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளதா இப்பதிவு சிறிது நீளமாகிவிட்டது எனவே அடுத்த பதிவு வரை பொறுத்திருங்கள் அன்பர்களே.

8 comments:

Logan said...

அருமையான ஒரு தொடரை ஒரு சேர படித்தேன், நான்கு பதிவுகளும் அருமை ஐயா.

Kailashi said...

இப்போதுதான் யாத்திரை தொடங்கியுள்ளது. இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் கூடவே வாருங்கள் Logan ஐயா.

! ஸ்பார்க் கார்த்தி ! said...

இமயத்தை பற்றி பல செய்திகளை தெரிந்து கொண்டேன், மேலும் தொடர்ந்து படிக்கிறேன்,,,,,,,,,

Kailashi said...

நிச்சயம் தொடர்ந்து வாருங்கள் ஸ்பார்க் கார்த்தி அவர்களே.

Unknown said...

இமயமலையில் ஸ்ரீ சங்கர பிடம் உள்ள இடம் எது?

s.p.shabin sajith s.p.shabin sajith said...


இமயமலையில் ஸ்ரீ சங்கரர் பிடம் உள்ள இடம் எது?

s.p.shabin sajith s.p.shabin sajith said...

இமயமலையில் ஸ்ரீ சங்கரர் பிடம் உள்ள இடம் எது?

Muruganandam Subramanian said...

பத்ரி மடம் என்று அழைத்தாலும், ஜோஷிர் மடத்தில் உள்ளது. தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிக்கவும்.