Tuesday, March 3, 2020

திருப்பாத தரிசனம் - 12


தியாகேசபெருமானுக்கே உரிய தனிப்பெரும் சிறப்புகள்

தியாகேசப்பெருமான்

சிவபெருமானுக்கு மகேசுவரன் என்றொரு திருநாமம் உண்டு. அதை மகத் ஐஸ்வர்ய:  அதாவது சகல ஐஸ்வர்யங்களும், மங்கலங்களும் நிறைந்தவர் என்று பொருள். இது தியாகராஜப்பெருமானுக்கு, சாலப்பொருந்தும் வாருங்கள் அன்பர்களே தியாகேசருக்கு உள்ள தனிப்பெரும் சிறப்புகள் எவை என்று விரிவாகக் காணலாம்.

இரத்தின சிம்மாசனம்;  முத்து விதானத்தின் கீழ்  தியாகேசர் எழுந்தருளும் சிம்மாசனம் ஸ்ரீபீடம், இரத்தின சிம்மாசனம், மந்திர சிம்மாசனம் என்றழைக்கப்படும் ஆசனம் ஆகும். யோகிகள் துவாதசாந்த மந்திர சிம்மாசனம் என்றும் அழைப்பர். தங்கத்தகடுகள் வேய்ந்த சந்தன மரத்தால் செய்யப்பட்ட இச்சிம்மாசனத்தில் கலை நயம் மிக்க நகாசு வேலைப்பாட்டைக் காணலாம். நான்கு சிம்மங்கள் தாங்கி நிற்பதால் சிம்மாசனம் எனப்படுகிறது.

பூமாலை- புஷ்ப விருஷ்டி: ஆராதனையின் போது தேவர்கள் தேவ துந்துபிகளை முழக்கி கற்பக மலர்களை மழை போலப் பொழிவர். இதனை மலர் மழை அல்லது புஷ்பவிருஷ்டி என்பர். இது தியாக கற்பர் விண்ணுலகத்தை விடுத்து பூவுலகம் வந்தவர்  என்பதை உணர்த்துகின்றது.  எனவே சிறப்பு பூசனையின் போது அர்த்தமண்டபம் தொடங்கி மகாமண்டபம் வரை மலர்ப் பந்தல் அமைக்கப்படுகின்றது. தற்போது தியாகேசர் பவனி வரும் போது பன்னீர் தெளித்தும் மலர்கள் தூவியும் வழிபடுகின்றனர்

புஷ்பாஞ்சலி: சுத்த நிருத்தம் என்னும் நடனத்திற்கு அப்புறம் பெருமான் மீது பூக்களைத் தூவி அஞ்சலி செய்தல் புஷ்பாஞ்சலி எனப்படும். தேவ கன்னிகை அரம்பையர்கள் தினமும் புஷ்பாஞ்சலி செய்வதாக ஐதீகம். முன்னாளில் பதியிலார் என்ற உருத்திரகணிகையர் இப்புஷ்பாஞ்சலியை செய்வது வழக்கமாக இருந்தது. 

வெண்கவரிகள்: மயிர் நீக்கின் உயிர் வாழாக் கவரிமானின் முடியினால் செய்யப்பெற்ற வெண்சாமரங்கள் அரசனின் சின்னம். எனவே அமரர்கள் துதிக்கும் இராஜாதிராஜனான  தியாகராஜனுக்கு வெண்கவரி கொண்டு வீசுவது வழக்கம். மாலை நேர பூசையின் போதும், பவனி வரும் போதும் வெண் கவரி வீசுகின்றனர்.

வீரகண்டயம்வாள்:  பெருமானின் முன்பாக சாய்வாக இரண்டு வாள்கள் வைக்கப்பெற்றுள்ளன. அவை வீரகட்கம், ஞான கட்கம் ஆகும் பெருமான் மாமன்னனாக சத்திரியராக எழுந்தருளியிருப்பதால் பெருமானின் பராக்கிரமத்தை காட்ட வீர வாள். அடியார்களின்  மும்மலங்களை அறுத்து  சாயுச்சியம் என்கிற மேலான பதவியை நல்குவது ஞானவாள். சரஸ்வதி பூசையன்று சிறப்பு அபிஷேகம் செய்வித்து பின் உறையிலிடுவர்.

பொதுவாக இறைவன் தேரில் வலம் வருவதை அருளல் என்பர். ஆனால் ஆருரில் ஆழித்தேரோட்டம் அழித்தல் என்னும் சம்காரத்தை உணர்த்துகின்றது. எனவே ஆழித்தேரோட்டத்தின் போது இவ்வாள்கள் தேரின் மையப்பகுதியில் வைக்கப்படுகின்றன.

தியாக பரிவட்டம்: தியாகராஜனுக்கு அணிவிக்கப்பெறும் நீண்ட துணியே பரிவட்டம், 21 பரிவட்டங்கள் கொண்டு உள் அலங்காரம் நடைபெறுகின்றது.  வெள்ளை வேட்டியில் ஐந்து கோடுகளை உடையது பரிவட்டம். ஒவ்வொரு சோமவாரத்தன்றும் இரகசிய அபிஷேகத்திற்குப்பின் இவை மாற்றப்படுகின்றது. தியாகராஜர் சிம்மாசனத்தின் மையப்பகுதியில் அமர்ந்துள்ளார், அவரது இடப்பக்கம் கொண்டிஅம்மை. வலப்புறம் பூமி தத்துவத்தை குறிக்க நீல நிறப்பட்டுத்துணியில் சரிகையால் ஒரு லிங்க வடிவம் பொறித்த பட்டு அணிவிக்கப்படுகின்றது.

குசுமப்பட்டும் மான்தோலும்: ஒரு காலத்தில் பெருமானுக்கு செம்பட்டாலான ஆடைகள் அணிவிக்கப்பட்டு வந்தன. இதனை குசுமப்பட்டு என்றழைத்தனர். குளிர் காலத்தில் மெல்லிய மான்தோலால் ஆன ஆடைகளும் பெருமானுக்கு அணிவிக்கப்பட்டன.

கிருஷ்ணகந்தம்தியாக விநோதம்: மாலையில் சுவாமி அணியும் கருஞ்சாந்தே கிருஷ்ணகந்தம். பதினெட்டு மூலிகைகள், சந்தனம், நெய் கொண்டு இது தயாரிக்கப்படுகின்றது. இச்சாந்தை பெருமானின் செவ்வந்தி தோடுகளில் பூசி அணிவிப்பர். திருவந்திக் காப்பின் முடிவில் அன்பர்களுக்கு வழங்கப்படும் விபூதியில் கலந்து வழங்குகின்றனர். இதை தியாக விநோதம் என்பர்.  ஆழி தேரோட்டத்திற்கு முதல் நாள் மாலையில் சிறப்பு பூசை செய்து அணிவிக்கின்றனர். இதற்கு திருச்சாந்து என்றழைக்கின்றனர்.

நறுந்திலகம்: பெருமானுக்கு தேவ சாயரட்சை என்கிற திருவந்திக்காப்பின் முன் பச்சை கற்பூரம், குங்குமப்பூ, சந்தனம் கலந்த செந்நிறத் திரவியத்தை திலகமாக அணிவிக்கின்றனர். அபிஷேக காலத்திலும் ஐயனுக்கு நறுந்திலகம் அணிவிக்கப்படுகின்றது.



தலைச்சீரா: இது பெருமானின் திருமுடியை அலங்கரிக்கும் ஒரு வகை அணியாகும். உயர்ந்த ஜாதிக்கற்களைப் பதித்து கலைநயத்துடன் சதுர வடிவில் உருவாக்கப்பட்ட அணிகலன். இது சூளாமணி என்றும் அழைக்கப்படுகின்றது. எனவே  திருநாவுக்கரசர் எம்பெருமானை சூளாமணி சேர் முடியான் என்று  பாடிப்பரவுகின்றார்.

கங்கையும் பிறையும்: தலைச்சீராவின் இருபுறமும் பிறைநிலவு போன்ற இரண்டு அணிகலன்கள் காணப்படுகின்றன.  இதில் ஒன்று பெருமானின் சடையில் இலங்கும் கங்கை. மற்றது வளரும் இளம்பிறை. ஆகவே அப்பர் பெருமான். நீரூரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலாத்திங்கள் துண்டத்தாய் என்று போற்றிப் பாடுகின்றார். கங்கையை தாங்கி பூமியை காத்த தியாகத்தையும்,  தட்சனின் சாபம் பெற்ற சந்திரனுக்கு அருளிய திறத்தையும் இவை உணர்த்துகின்றன. துவாதசாந்தத்தில் குவியும் சாதகனின் மனமும், அதனால் அவன் சிரசை சுற்றி விளங்கும் சோமவட்டம் ஒரு பிறை என்றும், யோகியின் சிரசில் விளங்கும் குண்டலினியே கங்கையாகிய மற்றொரு பிறையாகும் என்பர் பெரியோர்.

செவ்வந்தித் தோடு: பிறைகளுக்குக் கீழே மலர்களால் அமைக்கப்பட்ட இத்தோடு அணிவிக்கப்படுகின்றது. செவ்வந்தி கிடைக்காத காலத்தில் மல்லிகை, சண்பகம் மற்றும் பன்னீர் இலைகளால் இவை கட்டப்படுகின்றன. கிருஷ்ணகந்தம் இத்தோடுகளில் பூசி பெருமானுக்கு அணிவிக்கின்றனர். எனவே பெருமான் செவ்வந்தித் தோடழகர்  என்று போற்றப்படுகின்றார்.

திருப்பணி: பெருமானுக்கு அணிவிக்கப்படும் மாலைகள் ஆகும். முல்லை, மல்லிகை, ரோசா போன்ற நறுமணம் மிகுந்த மலர்களால் ஆனவை. செவ்வந்தித்தோடு, திருப்பணி இரண்டும் சேர்ந்து பூத்தோடு கரவாரம் என்பர். தியாகேசர் ஸ்ரீவித்யை நாதரானதால் மணங்கமழ் மலர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இண்டை மாலை என்றும் அழைக்கப்படும் இம்மாலைகளை திருவந்திக்காப்பின் போது சார்த்திக்கொண்டு அருள்பாலிக்கின்றார்.


சிரமாலை: தியாகராஜரின் மார்பை அலங்கரிக்கும் மாலை இது. கல் பதக்கங்களின்  இருபுறமும் இம்மாலை அலங்கரிக்கின்றது. இத்தலைகள் பிரம்மனின் சிரம் என்பது ஐதீகம். பிரம்மனின் காலம் முடிந்த பிறகு அவன் தலையை பெருமான் அணிந்து கொள்கிறார். இப்படி எண்ணிலடங்கா பிரம்மாக்களின் தலை ஐயனின் சிரமாலையில் உள்ளது.  பெருமான் தத்துவாதீதன் மட்டுமல்ல காலாதீதன் என்பதை இப்பிரம்மசிர மாலை உணர்த்துகின்றது. இதனை தலையுருவ சிரமாலை சூடினான் என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.






ஆழிவளைக் கையான்:  பெருமானின் திருக்கரங்களில் அணிகின்ற மோதிரங்களுக்கும் காப்புக்கும் ஆழிகள் என்று பெயர். எனவே பெருமானை ஆழிவளைக் கையானும் ஆரூர் அமர்ந்த அம்மான் என்று திருவாரூர் தேவாரம் போற்றுகின்றது.

செங்கழுநீர் பூக்கள்: சிவபெருமானுக்குரியவை செங்கழுநீர் பூக்களாகும். வடமொழியில் இது கல்ஹார புஷ்பம் என்றழைக்கப்படுகின்றது. இவ்வரிய மலர் பெருமானுடைய பூசைக்காகவே  பெருமானுடன் தேவருலகத்திலிருந்து திருவாரூர் வந்தததாம்.  பெருமானுக்கு பூசைக்கு பயன்படுத்த ஐந்து வேலி பரப்புடைய ஒரு ஓடை கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ளது. இக்குளத்தின் ஒரு பகுதியில் அம்பாள் தன் நாமம் கொண்ட நீலோத்பல மலரும் பயிரிடப்படுகின்றது.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றியைந்த ஓடையாக வ்வோடை  விளங்குகின்றது.

திருப்பணி சாத்துதலும் நிறைபணித் திருநாளும்: அனைத்து தலங்களிலும் எம்பெருமானின் திருமேனிக்கு மலர் மாலைகளையும், மலர்ச்சரங்களையும் சூட்டுதலே வழக்கம். ஆனால் தியாகருக்குரிய சிறப்பு திருப்பணி சாத்துதலாகும். இங்கு மல்லிகை, முல்லை, செவ்வந்தி, பவளமல்லி போன்ற சுகந்த மலர்களை மாலையாகவோ சரமாகவோ தொடுக்காமல், தியாகப்பெருமான் மீது மலர்களைத் தூவித் தூவி அலங்கரிக்கும் முறையே பணி சாத்துதலாகும். பணி சாத்துதலுக்கு என்றே ஒரு தனி விழா கூட நடைபெறுகின்றது. இதனை “நிறைபணி உற்சவம்” என்றழைப்பர். புரட்டாசி மாதம் பூரட்டாதி நாளன்று செங்கழுநீர் ஓடையிலிருந்து செங்கழுநீர்ப் பூக்கள் கொய்யப்பெற்று அவற்றைப் பல்லக்கில் வைத்து திருவாரூரின் பவனி வரச்செய்து, தியாகப்பெருமான் திருமுன்னர் கொண்டு சென்று பூஜைகள் செய்து பணி சார்த்தப்பெறும். அப்போது இத்திருக்கோயிலின் மரபுவழி மாலை தொடுப்பவரான “திருமாலைக்கட்டி” என்ற ஊழியர் கோயில் மரியாதையான பரிவட்டம் கட்டி கௌரவிக்கப்படுவார். இதுவே நிறைபணி உற்சவமாகும்.

அந்திக்காப்பு: தியாகராஜப்பெருமானுக்குரிய தனிப்பெரும் சிறப்புடைய பூசை திருவந்திக்காப்பு என்றழைக்கப்படுகின்றது. தேவர்கள் அமரருலகம் விடுத்து பூலோகம் வந்து பெருமானுடைய இப்பூசையில் பெருமானை தரிசிக்கின்றனர். திருவந்திக்காப்பின் போது  அலங்காரமும், உபச்சாரங்களும் விரிவாகவும் சிறப்பாகவும் அமைகின்றன. இதனால் பெருமானுக்கு அந்திக்காப்பழகர் என்பது சிறப்புப்பெயர். இப்பூசையின் போது அனைத்து சிவாலயங்களின் சிவ கலைகள் அனைத்தும் ஆரூர் பெருமானிடம் ஒடுங்குகின்றது என்பது ஐதீகம்.  

திருச்சாலகம்: தியாகேசர் திருவோலக்கம் கொண்டு எழுந்தருளியுள்ள கருவறையின் இரு புறமும் எதிரெதிராக தென்றல் தவழ்ந்து வர ஏதுவாக இரண்டு சன்னல்கள் உள்ளன, இத்திருச்சாலகம், திருச்சாளரம் எனப்படுகின்றது.

தேவாச்சிரியம்திருக்காவணம்: தியாகரை தரிசிக்க வரும் தேவர்கள் தங்கள் முறை வரும் வரை தங்கியிருக்கும் மண்டபம். எனவே சமயம் பார்த்து காத்திருக்கும் தேவாச்சிரிய மண்டபம் என்றழைக்கப்படுகின்றது. விரும்பி தங்கியிருத்தல் என்பது ஆச்சிரியம் எனப்படும். தற்போது இது ஆயிரங்கால் மண்டபமாக திகழ்கின்றது. வசந்த காலத்தில்பக்தர் காட்சிக்குஎழுந்தருளுவதற்கு முன்னர் இம்மண்டபத்தில் அபிஷேகம் கண்டருளுகின்றார்.

திருமருந்து: தியாகேசப்பெருமான் வீதிகளில் அஜபா  நடனமாடி  பவனி வந்து  ஆலயத்தில் எழுந்தருளியதும் அவரது அசதி நீங்க அவருக்கு சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் கலந்து தயாரிக்கப்பட்ட திருமருந்து நிவேதனம் செய்யப்படுகின்றது. இது போன்று தவளப்புளி, அம்பாரப்புளி என்ற மருந்துகளும் நிவேதனம் ஆகின்றன.

திருமந்திரம்: “முத்தி தருவது நீறு” என்று ஆளுடையப்பிள்ளை சம்பந்தப்பெருமான் போற்றிய திருநீறு. இவ்வாறு போற்றப்படும் திருநீறு திருவந்திக்காப்பு நிறைவு பெற்ற பின்னர் கிருஷ்ண கந்தம் கலந்து வழங்கப்படுகின்றது இது திருமந்திரம்  என்றழைக்கப்படுகின்றது.

வசந்தவிழா:  திருமால் தியாகேசரை பூசை செய்து பெற்ற மைந்தன் வசந்தன் என்னும் மன்மதன், அவன் போற்றி வழிபட்ட விழா வசந்த விழாவாகும்.  எனவே எம்பெருமானுக்கு வசந்த வைபவ தியாகராஜர் என்று திருநாமம்.  இரதியும், மன்மதன் என்னும் வசந்தனும், அவன் இளவல் சாமனும் இந்நாளில்  தியாகேசரை வழிபடுகின்றனர்.

பதிகம் பாடுதல்: பொதுவாக சிவாலயங்களில் திருமுறைகளைப் பாடுவதற்கு முன்னும் பின்னும் “திருச்சிற்றம்பலம்” என்று கூறுவது மரபு. ஆனால் திருவாரூரில் மட்டும் பதிகங்களைப்  பாடும் போதும் முடிக்கும் போதும் “ஆரூரா தியாகேசா” என்று  இரு முறை கூறப்படுவது சிறப்பு அம்சமாகும். ஏனெனில் திருவாரூர் திருத்தலம்  தில்லைக்கு முற்பட்ட தலம் என்பதால் இச்சிறப்பு. இத்தலத்தில் திருமுறைகளை இரண்டு பேர் பாடுகின்றனர். ஒருவர் பாடுவார் இன்னொருவர் அலரிப் பாடுவது இத்தலத்தின் தொன்மையாகும். 

ஆயிரம் பெயருடையான்: ஆரூர் பெருமான் ஆயிரம் பெயருடையான். ஆயிரம் என்பது அளவில்லாத என்கிற பெருமிதமான பொருளையும் குறிக்கும்.  அப்பர் பெருமான் இதை “எண்ணரிய திருநாமம் உடையான் தன்னை” என்று தமது திருவாரூர் பதிகத்தில் பாடுகின்றார்.



மேற்கு கோபுரம்


மாணிக்கத்தண்டு: தியாகராஜப்பெருமானின் அஜபா நடனத்தை நிகழ்த்த உதவும் வகையில் அமைந்ததே திருவாடு தண்டு, இது மாணிக்கத்தண்டு. என்றும் வாரை என்றும் பிள்ளைத்தண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. மூங்கில் வாரைகளில் திண்டுகளில் வைத்து சிம்மாசனத்தை வைப்பதைத் தவிர, இறுக்கிக் கயிற்றால் கட்டுகிற வழக்கமில்லை. இம்மணித்தண்டை வாரைகளில் ரகசிய கயிற்றால் பொருத்தி பிறர் காணா வண்ணம் விழிப்பரமர் என்ற மரபைச் சேர்ந்தவர்கள் பெருமான் பீடத்தோடு வாரைகளை இணைக்கின்றனர். இதனைத் பிள்ளைத் தண்டு இரகசியம் என்பர். இம்மணித்தண்டு சிவராஜயோகியின் முதுகுத்தண்டு (Spinal Cord) ஆகும். அஜபா நடனம் யோக நெறி பற்றியதல்லவா? அன்பர்களே.

விடங்கர்: பெருமான் திருமேனி இரகசியம் என்பதால் இவருக்கு செய்ய வேண்டிய அபிஷேகங்கள் இவரின் பிரதி உருவமான மரகத சிவலிங்கத்திற்கே நடைபெறுகின்றது. இவர் வீதிவிடங்கர் என்றழைக்கப்படுகின்றார்.  வீதி விடங்கர் மரகத மேனியர். சதுரவடிவ வெள்ளி ஆவூடையாரின் மேல் நிலைபடுத்தபட்டுள்ளார். இம்மரகத விடங்கர் வெள்ளிப் பேழையில் தியாகேசப்பெருமானுக்கு வலப்பக்கம் எழுந்தருளியுள்ளார். தினமும் மூன்று வேளை இவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. இவருக்கு சார்த்தப்பட்ட சந்தனம் மருத்துவ குணம் கொண்டது.

நின்ற  இடபம்: பொதுவாக சிவபெருமானின் சன்னதியில் நந்தியெம்பெருமான் அமர்ந்த கோலத்தில் அருள் பாலிப்பார். ஆனால் சப்த விடங்க தலங்களில்   நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். இறைவன் சத்திரியக் கோலத்தில்   எழுந்தருள்வதால்   ஆயத்த நிலையில் காட்சி தருகிறார் என்பது ஐதீகம். தியாகராஜபெருமானுக்கு முன்னால் படுக்கக்கூடாது என்ற மரியாதையின் நிமித்தம் இவ்வாறு நின்ற நிலையில் உள்ளார் என்றும்  கூறுவர்.  மேலும் தன் தோழன் சுந்தரருக்காக தன் பாத மலர்கள் நோக தூது சென்ற காரணத்தால், பெருமான் அவசரத்தில் நந்தி மேல் அமர்ந்து செல்லாமல், திருவீதியில் நடந்தே சென்றார். இனி இவ்வாறு நடக்கக்கூடாதென்று அவர் புறப்படும் போது பெருமானைத் தாங்கிச்செல்ல தானும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக   எழுந்து ஆயுத்தமாக நிற்கின்றது என்றும் கூறுவர். இவர் செம்பால் வார்க்கப்பெற்றவர் என்பதும் ஒரு சிறப்பு.

கட்டியங் கூறல்: மன்னர்களின் வருகையை உணர்த்துவதே கட்டியங்கூறல். இத்தலத்தில் தியாகவிநோதர் இராஜகோலத்தில் கொலு வீற்றிருப்பதால், அவர் பவனி வரும் போது தியாகராஜரின் வருகையை உணர்த்தும் கட்டியங்கூறும் முறை பல்லாண்டுகளாக ஆரூரில் போற்றப்பெறும் நெறி ஆகும்.

திரைக்குப்பின் சுத்த மத்தளம்: தியாகப்பெருமான் திருவிழாவில் பதினெட்டு வகையான வாத்தியகோஷம் முழங்கும். குறிப்பிட்ட சில விழாக்களின் போது சுத்தமத்தளம் வாசிக்கும் கலைஞர்களுக்கு பட்டு பரிவட்டம் சூட்டி மரியாதைகள் செய்யப்படும். பின்னர் அவர் சுவாமிக்குப் பின்புறமாக நின்று கொண்டிருக்க திரை இடப்படும். உடன் சுத்தமத்தள வாத்தியம் முழங்கும். லயவடிவான இப்பூசை தியாகருக்கே உரிய ஒரு சிறப்பாகும். 

பூத நிருத்தம்: சந்திரசேகரர் திருவிழாவின் போது ஈசான திசைக்கு இறைவன் திருமேனி எழுந்தருளும் போது முட்டுக்காரர் சுத்த மத்தளத்தை தலையில் கட்டியுள்ள பரிவட்டத்தின் மேல்வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் உயர்த்திய வண்ணம் மத்தளத்தை வாசிப்பார். இதற்கு பூத நிருத்தம் என்று பெயர். இவ்வாறு வாசிக்கும் போது பூத கணங்கள் சந்திரசேகரர் முன்பு நிருத்தம் புரிவதாக ஐதீகம். எனவேதான் முட்டுக்காரர் தலைக்கு மேலாக மத்தளம் இசைக்கிறார்.

தியாகேசரின் கணங்கள்:  தியாகராசப் பெருமான் இராஜாதிராஜர் என்பதால் அவர் எப்போதும் தனியாக வீதிகளில் எழுந்தருளுவதில்லை.

அருமணி தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப்பாடியார்
உரிமையால் தொழுதெழுவார் உருத்திரப் பல் கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே 

இதில் முதலாவதாக சொல்லப்பட்டுள்ள அரம்பையர்கள் வானுலக மடந்தையர்கள். அவர்கள் பெருமானை பிரிய மனமின்றி பூவுலகில் பதியிலார் மரபில் தோன்றித் தியாகேசனையே பதியாக அடைந்தவர்கள் என்பார்கள். மற்றவர்கள் எம்பெருமானின் கணங்கள் ஆவர்.  1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுதெழுவார் – ஆதி சைவர், 3.உருத்திர பல்கணத்தார் – சிவ கணத்தார், 4. விரிசடை விரதிகள் – துறவிகள், 5. அந்தணர், 6. சைவர், 7. பாசுபதர் – சங்கிராந்த சமவாதி, 8. கபாலிகள் – ஆவேச சமவாதி.

தேவர் தொழு நாயகன்: வானுலக தேவர்கள் தினமும் அந்திக்காப்பின் போது பெருமானை வழிபடுகின்றார். மாலை கால பூசைக்கு சற்று முன்னதாகவே தேவாசிரிய மண்டபத்தில் அவர்கள் காத்திருப்பதால் அம்மண்டபத்திற்கு சமயம் பார்த்துக் காத்திருக்கும் தேவாசிரியம் என்று பெயர். எனவே எம்பெருமானுக்கு தேவர் நாயகன் என்று திருநாமம். அப்பர் பெருமானும் நாளும் வானோர் சிறப்பொடு பூசிக்கும் திருவாரூரில், அமரர்கள் தம்பெருமான், என்றெல்லாம் பாடுகின்றார். மேலும் எம்பெருமானுக்கு தேவநாயகன், தேவரகண்டர் முதலான திருநாமங்களும் உண்டு. இவை யாவும் தியாகேசரை ஓயாது தேவர்கள் பணிந்து மகிழ்வதைக் குறிக்கும் அருள் மொழிகளாகும்.   



சோமகுல இரகசியம்:  திருவாரூரில் இவ்வளவு சிறப்புகளுடன் எழுந்தருளியுள்ள தியாகேசரின் முழு மூர்த்தத்தையும் யாரும் கண்டதில்லை. தில்லை இரகசியம் போல திருவாரூர் இரகசியம் என்பது தியாகராஜ சுவாமியின் திருமேனியாகும். இதை சோமகுல இரகசியம் என்பர். சுவாமியின் மார்பை ஸ்ரீசக்கரம் அலங்கரிப்பதால் முழு திருமேனியையும் காண முடியாது.   நித்தியப்படி முக தரிசனம் மட்டுமே நமக்கு  கிட்டும். திருவாரூரில் முக தரிசனம் திருவிளமரில் பாத தரிசனம் என்பது ஐதீகம். திருப்பாத தரிசதனத்தன்று மட்டும் ஸ்கந்தனையும் சேர்த்து தரிசனம் பாக்கியம் நமக்கு கிட்டும். திருவாதிரையன்று வியாக்ர பாதருக்கும் பதஞ்சலிக்கும் ம்பெருமான் இடதுபாத தரிசனத்தை தந்து அருளியதால்  வருடத்தின் அந்த ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் பகல் 3 மணிவரை பிரம்மாவும், திருமாலும் காண முடியாத   வீரக்கழலணிந்த இடதுபாத தரிசனத்தை ஆதிஷேசன் மேல் வைத்த  நிலையில்  நாம் காணலாம் மேலும் கொலுசு, சிலம்பு அணிந்த அம்மையின் வலபாதத்தை தாமரை மலரின் மேல்  நாம் கண்டு ஆனந்தம் கொள்ளலாம். என்னே ஒரு அற்புதமான காட்சி அது அன்றே முழுதும் வைரங்களால் போர்த்தப்பட்ட ஸ்கந்தனையும் காணும் பேறு நமக்கு கிட்டும். பங்குனி உத்திரத்தன்று  பக்த ஜன சேவையின் போது  இவ்வாறே  வலது பாத தரிசனம் பெறலாம்.

அபிஷேகம்: எம்பெருமான் மஹா அபிஷேகம் கண்டருளும் புண்ணிய நாட்கள் சித்திரை முதல் நாள், ஆடி மாத ஐயனம், ஐப்பசி விஷு, மார்கழி திருவாதிரை, தை முதல் நாள், பங்குனி உத்திரம் ஆகும். விழாக் காலங்களில் தியாகேசர் தேரிலிருந்து இறங்கி ஆலயத்தின் உள்ளே வந்ததும் இராஜநாராயண மண்டபத்தில் அன்றிரவே பிராயச்சித்த அபிஷேகமும் பக்தர் காட்சிக்கு முன்பு பகலில் மகா அபிஷேகமும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவை தவிர கிரகண காலங்களில் பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். சோமவார அலங்காரத்திற்கு முன் உரிமையில் தொழுதெழுவார் ஆகிய நயனார்கள் இரகசிய அபிஷேகம் செய்கின்றனர்.

தியாகராஜருக்கு செய்யப்படும் அபிஷேகத்தை காண்பதே ஒரு அற்புத அனுபவம் என்றால் மிகையாகாது. பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், கருப்பஞ்சாறு, 108 சங்கு தீர்த்தம், வலம்புரி சங்கு தீர்த்தம், காண்டாமிருகத்தின் கொம்பில் நிரப்பப்பட்ட நீர், கும்ப நீர் ஆகியவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெறுகின்றது. அபிஷேகத்திற்குரிய நீரில் ஏலம், இலவங்கம், விளாமிச்சை வேர் கலக்கின்றனர். இவர் இரகசிய மூர்த்தி என்பதால் சுவாமி, அம்பாள், ஸ்கந்தனின் திருமேனிகள் துணியால் மறைக்கப்படுகின்றன. தலையில் உள்ள மகுடம் தெரியாதவாறு பன்னீர் இலைகளால் ஆன இண்டை அணிவிக்கப்படுகின்றது. பாதங்களை மறைத்து விடுகின்றனர். அபிஷேகத்தின் போதும் கூட  அன்பர்களுக்கு முக தரிசனம் மட்டுமே கிட்டுகின்றது.

திருப்பாத தரிசனம்: மார்கழி திருவாதிரை நாளில் இடது திருப்பாத தரிசனமும், பங்குனி உத்திர நாளிலும் வலது திருப்பாத தரிசனம் பெறலாம். உடன் உமையம்மையின் பாதத்தையும் தரிசிக்கலாம், பெருமானின் பாதத்தை ஆதி சேஷனும், அம்மையின் பாதத்தை தாமரையும் தாங்குவது போல அலங்காரம் செய்திருப்பார்கள். தாமரை – மூலாதார பத்மம்; நாகம் – குண்டலினி சக்தி. இந்நாட்களில் மட்டும் ஸ்கந்தரை வைர கவசத்தில் தரிசிக்கலாம். இதனை உருத்திர பாத தரிசனம் என்பர்.

ஆரூரன் சன்னதி போல் ஆருரன் ஆலயம் போல்
ஆரூரன் பாதத்து அழகு போல் – ஆரூர்
மருவெடுத்த கஞ்சமலர் வாவி போல் நெஞ்சே!
ஒரு இடத்தில் உண்டோ உரை? 

என்று ஒரு தனிச் சுவடிப் பாடல் ஆருரின் பெருமைகளில்   தியாகேசரின் திருப்பாத அழகையும் பட்டியலிடுகின்றது.
மார்கழித் திருவாதிரையன்று தில்லையில் சிவபெருமானின் இடது பாத தரிசனத்தைப் பெற்ற பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள், திருவாரூர் வந்து பங்குனி உத்திர தினத்தன்று பெருமானின் வலது  திருப்பாத தரிசனத்தைப் பெற்றனர் என்பது ஐதீகம். சிவராஜ யோகத்தில் சாதகனுக்கு ஏற்படும் ஆகாய சம்மியம் அல்லது நாத சம்மியம் என்கிற அனுபவமே பாததரிசனம் என்பர்.
திருவாரூரில் முகதரிசனம், விளமரில் திருப்பாத தரிசனம் என்பர்.  தியாகேசரின் பாத தரிசனம் விளமரில் கிட்டுகின்றது. எனவே திருப்பாத தரிசனத்தன்று விளமரிலிருந்து பதஞ்சலி வியாக்ரபாதர் உற்சவத்திருமேனிகள் திருவாரூர் எழுந்தருளுகின்றனர்.

பின்னழகு: பெருமானின் முன்னிலும் மும்மடங்கு பின்னழகு எழிலார்ந்த தோற்றம் உடையது. எழிலார்ந்த தங்கக்கவசம் சார்த்தியுள்ளனர். அழகாக சடை பின்னியுள்ளனர். மணிகள் இழைத்த இச்சடை பெண்ணுக்கு உரியது போல உள்ளது. மேலும் பெருமானின் முழங்கைகளையும் இறக்கைகளையும் தரிசிக்கலாம். சடைப்பின்னல் பெருமான் ஸ்ரீவித்யா தந்திரத்தோடு தொடர்புடையவர் என்பது குறியீடு. இறக்கை இவர் ஹம்ஸ மந்திர வடிவினர்   என்பதை குறிக்கின்றது. பெருமானின் பின்னழகு பேரழகு. இதனால் “முன்னிலும் மும்மடங்கு பின்னழகர்” என்று   போற்றப்படுகிறார்.  ஆழித்தேரிலும், பாத தரிசன நாட்களிலும் பெருமானின் பின்னழகை திவ்யமாக  தரிசிக்கலாம். 



கிண்கிணிக் காலழகர்: பெருமானின் பாதங்களில் கிண்கிணிகள் அணிவிக்கப் பெற்றுள்ளன. எனவே இவர் கிண்கிணிக் காலழகர் ஆயினார். இத்திருவடிகளை நாவுக்கரசர்
ஆடரவக் கிண்கிணிக்கா லன்னானோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே என்று பாடி பரவியுள்ளார்.

திருநாமம்: எம்பெருமானின் வடிவமோ இப்படியென்றால் நாமமோ எண்ணிலடங்காது. ஆதிரையான்,  கூத்துகந்தான், ஆடல் வல்லான், அசைந்தாடிய பெருமான், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், அந்தியும் சந்தியுமாடுவார், அசைந்தாடும் அப்பர்,  இரத்தின சிங்காதிபதி, இருந்தாடழகர், தக்கார்க்குத்தக்கான், தேவார கண்டப்பெருமான்,  கம்பிக்காதழகர், கமலேசர்,  கருணாகரத் தொண்டைமான், கிண்கிணிக் காலழகர்,  தியாகப் பெருமான், தியாக சிந்தாமணி, தியாக வினோதர், தேவ சிந்தாமணி, தேவ நாயகன், தேவரகண்டப் பெருமான், திருவந்திக்காப்பழகர், முன்னிலும் மும்மடங்கு பின்னழகர், செங்கழுநீர் அழகர், செவ்வந்தித் தோடழகர், வள்ளல், வீதி விடங்கப்பெருமான், தேர் ஊர்ந்த செல்வன், ஆழித்தேர் வித்தகன், பவனி விடங்கர்,  விடங்கராய் வீதி போந்தார், கமல ந்த தியாகர், வசந்த வைபோகத் தியாகர், செம்பொன் தியாகர், கனகமணித்தியாகர், கமல வசந்  நிறை செல்வத்தியாகர் என்பதெல்லாம் தியாகரின் காரணப்பெயர்கள்.

அற்புதமான இரத்தின சிங்காதனத்திலே இவர் அராகச்சையும், ஆடரவ கிண்கிணி காலையும், ஐந்து கோடுகளை உடைய பரிவட்டத்தையும், உடைவாளையும், உதர பந்தனத்தையும், வீரகண்டயத்தையும், ஞான கண்டயத்தையும், தலைச்சீராவுடன் தியாக விநோதமென்னும்  திலகத்துடனும், அற்புத காட்சி தருகின்றார்.  பாகம் பிரியா அம்மையின் நாமம் கொண்டியம்மன்.

தியாகராசப்பெருமானுக்கு உரிய அலங்கார மலர்கள்: எம்பெருமானுக்குரிய தனித்துவம் வாய்ந்தது செங்கழுநீர் மலர். மேலும் முல்லை, மல்லிகை, ரோஜா, சாமந்தி, சம்பங்கி, மருக்கொழுந்து மற்றும் வெட்டிவேர் ஐயனின் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது.

தியாகராஜப்பெருமானுக்கு உகந்நிவேதனம்: தூதுவளைக் கீரையும், பாகற்காய் கறியும் விருப்பமான நிவேதனம். நெய்யினால் மட்டுமே செய்யப்பட்ட பெரிய மூங்கில் தட்டு அளவிலான தேன்குழல், பெரிய அளவிலான வடை மற்றும் இனிப்பு சூயம் ஆகியவை  நிவேதனப் பொருட்களில் சிறப்பானவை. 

தியாகேசர் சன்னதியில் இசைக்கப்படும் இசைக் கருவிகள்: 1.சுத்த மத்தளம், 2.கர்ணா, 3.சங்கு, 4.எக்காளம், 5.கரா, 6.முகி (ட்டு முட்டு), 7.கிடுகிட்டி (கொடு கட்டி), 8.புல்லாங்குழல், 9.தாரை, 10.பாரி நாயனம், 11.பஞ்சமுக வாத்தியம், 12.தவண்டை, 13.பேரிகை, 14.பிரம்மதாளம், 15.வாங்கா, 16.திருச்சின்னம், 17.தப்பட்டை, 18.முகவீணை. இவற்றுள் திமிரி நாயனம், பாரி நாயனம், முகவீணை, யாழ், தவில் மத்தளம் ஆகியவற்றை இந்திரன் தியாகராஜ மூர்த்திகளை முசுகுந்த சக்கரவர்த்திக்கு அளித்த போது உடன் அளித்தான் என்பர்.

அர்ச்சனை: தியாகேசருக்கு திருமாலால் செய்யப்பட்ட ஆயிரம் நாமங்கள் கொண்டது முகுந்தார்ச்சனை. இந்திரன் செய்து மகிழ்ந்தது இந்திரார்ச்சனை. தியாகராஜரை இந்திரனிடன் பெற்றுத் திருவாரூர் தலம் திரும்பிய போது முசுகுந்தன் நடத்திய அர்ச்சனையே முசுகுந்த சகஸ்ரநாமாவளி. இம்மூன்றும் சிறப்புற அமைந்து பெருமானுக்கு பெருமை சேர்க்கின்றது. இவற்றில் முசுகுந்தார்ச்சனை தியாகேசரின் பரத்துவம், லட்சணம், குணம், லீலை, பக்தி மேம்பாடு, அடியவர்களிடம் காட்டும் பரிவு, சுவாமியின் திருநாமத்தில் உள்ள தியாகம் என்ற சொல் பற்றிய வேதாந்த ரகசியங்கள், அஜபா நடனம், திருவாரூர் திருத்தலத்தின் மகாத்மியம், கமலாலய திருக்குளம், தியாகேசரின் இரத்தின சிம்மாசனம், ஞான கட்கம், வீர கட்கம், திருச்சாலகம், ஆழித்தேர் பற்றிய செய்திகள் பற்றிய நாமாக்களைக் கொண்டுள்ளது.

திருவாரூர் தீவட்டிகள்: திருமலைக்கு குடை போல திருவாரூருக்கு தீவட்டி சிறப்பு. ஐந்தடி உயரமும், ல்ல பருமனும் உடையது இத்தீவட்டி. இத்தீவட்டியில் நெய் உபயோகப்படுத்தப்படுகின்றது. தியாகேசரின் வலப்பக்கமும், இடப்பக்கமும் முன்னும் பின்னுமாக நால்வர் இத்தீவட்டிகளை ஏந்திச் செல்கின்றனர். தீவட்டி கொழுந்துவிட்டெறிய நெய் வார்க்க பின்னால் ஒருவர் வெள்ளியினால் செய்த பன்னீர் சொம்பு போன்ற பாத்திரத்துடன் தொடர்ந்து வருவார். இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தது திருவாரூர் தீவட்டிகள்.

தியாகேசர் வழிபாட்டில் முத்திரைகள்: தியாகராஜ வழிபாட்டில் அனேக முத்திரைகள் இடம் பெறுகின்றன. முன்னாளில் பூஜை செய்யும் அர்ச்சகர் முத்திரைகளை மந்திர பூர்வமாகச் சொல்ல ஆலய ஆடற்பணிப் பெண்கள் முத்திரைகளை அபிநயத்துக் காட்டினர். முத்திரைகள் தெய்வத்தன்மை பொருந்தியதாகப் போற்றப்பட்டன. முத்திரைகளைக் காட்டுவதால் தேவர்கள் மகிழ்கின்றனர் என்று பூஜா பத்ததி நூல்கள் கூறுகின்றன. இதனால் இதனைக் காட்டும் பெண்கள் சிறப்புடன் போற்றப்பட்டனர். இவர்கள் 'கைகாட்டும் முறைக்காரிகள்' என்றழைக்கப்பட்டனர்.

தியாகேசரின் பணியாளர்கள்: தியாகேசனை தீண்டிப் பூசிக்கும் வழிவழி உரிமையுடையவர்கள் “உரிமையில் தொழுதெழுவார்” எனும் நயனார்கள் ஆவர். இவர்கள் துர்வாசரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதால் நயனார்கள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்களை அடுத்து   விழுப்பரமர்கள் எனப்படும் வம்சத்தைச் சார்ந்தவர்கள் தியாகேசர் அஜபா நடனம் புரியும் போது பெருமானைத் தாங்கும் பேறு பெற்றவர்கள்.

 திருவாரூரில் வாழ்ந்து வழிபாடு செய்த நாயன்மார்கள்: சைவக்குரவர்கள் என்று போற்றப்படுகின்ற நால்வர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்க வாசகர் நால்வருமே திருவாரூர்ப் பெருமானைப் போற்றிப் பாடியுள்ளனர். திருத்தொண்டர் தொகை பாடக் காரணமாக இருந்த விறன்மிண்ட நாயனார்,   கமலாலயக் குளத்தில் நீராடி கண் பார்வை பெற்ற தண்டியடிகள் நாயனார், எம்பெருமானின் பூசைக்குரிய மலரை முகர்ந்த அரசியின் மூக்கை அரிந்த செருந்துணை நாயனார், மனைவியே  ஆனாலும் சிவ அபராதத்திற்காக அரசியின் கரத்தை துண்டித்த கழற்சிங்க நாயனார், இறைவனின் தரிசனம் பெற்ற சோமாசிமாற நாயனார்,  தம்பிரான் தோழர் சுந்தரர்,    கழற்றறிவார் எனப் புகழ் பெற்ற சேரமான் பெருமாள் நாயனார், கமலாலயத்து நீரால் விளக்கேற்றிய  நமிநந்தியடிகள், எம்பிரான் தோழர் சுந்தரரின் பெற்றோர்களான சடையனார் மற்றும் இசைஞானியார், ஆரூர் பெருமான்  வடக்கு வாயில் வகுத்தருள அதன் வழி வந்து வழிபட்ட  திருநீலகண்ட யாழ்ப்பாணர் மற்றும் தொகையடியார்களில் திருவாரூர் பிறந்தார்கள் அனைவரும் திருவாரூரோடு தொடர்பு கொண்டவர்கள்.  இவையெல்லாம் மகேச்வரரான தியாகேசப்பெருமானுக்கே உரித்தான சிறப்புகள் ஆகும். வாருங்கள் அன்பர்களே இனி இவ்வரிய ஆலயத்தை வலம் வந்து இத்தலத்தில் உள்ள சன்னதிகளை தரிசிக்கலாம்.

                                                          திருப்பாத தரிசனம் தொடரும் . . . . . 




7 comments:

கோமதி அரசு said...

//தியாகேசருக்கு உள்ள தனிப்பெரும் சிறப்புகள் எவை என்று விரிவாகக் காணலாம்.//

விரிவாக தியாகேசருக்கு உள்ள தனிப்பெரும் சிறப்புகளை படித்து மகிழ்ந்தேன்.
தொடர்கிறேன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி. கோமதி அம்மா.

சங்கரன்என்எஸ்கே said...

மிக்க நன்றி

பொ.ஸ்ரீதரன் said...

தியாகேசர் பற்றிய குறிப்புகள் அருமை அருமை... மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

S.Muruganandam said...

மிக்க நன்றி ஸ்ரீதரன் ஐயா.

S.Muruganandam said...

மிக்க நன்றி சங்கரன் ஐயா.

Anonymous said...

அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி