Saturday, March 21, 2020

திருப்பாத தரிசனம் - 16


அல்லியங்கோதை அம்பாள்


சிவாலயங்களின் தனி அம்மன் சன்னதிகள்  திருகாமக்கோட்டம் என்றழைக்கப்பட்டன. திருவாரூரில் இரண்டு திருகாமக்கோட்டங்கள் அமைந்துள்ளன. அவையான கமலாம்பாள் மற்றும் நீலோத்பலாம்பாள் சன்னதிகள் ஆகும்.   தண் செய் காவிரி பாய்ந்து பொன் கொழிக்கும் சோழ வள நாட்டின் மருத நிலத்தில் அமைந்திருப்பதால் இவ்வாலயத்தில் அம்மையின் பெயர்களும் இம்மருத நிலத்தில் மலரும் மலர்களின் பெயராகவே அமைந்துள்ளன. கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், என்ற திருநாமத்துடன் அம்மை இக்கோவிலில் ரு வடிவங்களில் அருள் வழங்குகிறாள்.  

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஓளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் – பூவே என்று சிறப்பித்துப் பாடப்பட்டுள்ள நீலோற்பவ மலரின் பெயரிலேயே நீலோத்பலாம்பாள் என்றும் அல்லியங்கோதை என்றும் அழைக்கப்பெறும் ஆதி சக்தி இரண்டாம் பிரகாரத்தில் தனி சன்னதியில் திருக்கரத்தில் கருங்குவளை மலரை ஏந்தி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள்.

 
நீலோத்பலாம்பாள் மகா மண்டபத்தில் உள்ள பரவை, சங்கிலி உடனாய சுந்தரர் ஓவியம்

வன்மீகர் மற்றும் ஸ்ரீதியாகராஜர் எழுந்தருளும் முதல் சுற்றுக்குச் செல்லும் அழகியான் கோபுரம் வாயில் எதிரே உள்ள கொடிமரத்திற்கு வடக்கே அமைந்துள்ளது அல்லியங்கோதை அம்பாள் சன்னதி. தெற்கு நோக்கிய திருமுகமண்டலத்துடன் உலகம்மை அருள் பாலிக்கின்றாள். மகாமண்டபத்தில் சீரிய தோற்றத்தில் சிங்காரவேலவன் கையில் வில் ஏந்தி அருள் பாலிக்கின்றார். மகா மண்டபத்திற்கு கிழக்கே நான்கு வேதங்களும் பூசித்த நான்கு சிவலிங்ங்கள்.

இம்மண்டபத்தின் உட்புறச்சுவரிலும் கூரையிலும் எழிலார்ந்த தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் காலத்து  ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. தியாகேசரை திருமாலும், முசுகுந்தனும் வணங்கும் கோலம், அவருக்கு நேர் எதிரே பரவை, சங்கிலி நாச்சியார்களுடன் சத்திரிய கோலத்தில் வண்தொண்டர் சுந்தரர், கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, துவாரபாலகர்கள், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், ஐயனின் சத்யோஜாத, வாமதேவம், தத்புருஷ, அகோர, ஈசான கோலங்கள், மாணிக்க நாச்சியார் வரலாறு, சோமாசி நாயனார் யாகத்திற்கு தியாகராஜர் நீசராக, உமையம்மை கள் கூடம் தாங்கி, விநாயகர் மற்றும் முருகர் இரு குழந்தைகளாக உடன் வர, நான்கு வேதங்களை நான்கு நாய்களாக பிடித்துக்கொண்டு தோளில் இறந்த கன்றுக்குட்டியுடன் மேளம் வாசித்துக்கொண்டு வரும் அம்பர் யாக ஓவியம், தியாகேசனை வழிபடும் மன்னர் சரபோஜி மற்றும் அரசியார் பாய்சாய்ப் ஓவியங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன அப்படியொரு கலை நுணுக்கம்.  உட்கூரையில் அற்புதமாக மலர்களின் ஓவியங்கள் கண்ணுக்கு விருந்து.

நீலோத்பலாம்பாள் மகா மண்டபத்தில் உள்ள அம்பர் யாக ஓவியக் காட்சி

பள்ளியறை இணைந்த அர்த்த மண்டபம்.  அதை அடுத்து இரண்டாம் நிலையில் சரவிளக்கு. அபிஷேக ஓடமேடை, அம்பிகையின் உற்சவத்திருமேனி. இதையடுத்து கருவறை சரவிளக்கு. ன்னை அல்லியங்கோதை உயிரோவியம், பார்க்கத் தெவிட்டாத திருமுகம். அம்பாளின் அருகில் தோழியானவள் பால முருகனை தோள் மீது சுமந்து நிற்க அம்மையின் இடத்திருக்கரம் பாலமுருகனின் விரலை பற்றியபடி இருக்கும், வலக்கரத்தில் நீலோத்பல மலரை (கருங்குவளை) வைத்துக்கொண்டு ஒயிலாக சாய்ந்து நிற்கும் அருமையான தோற்றம். அம்மை யோக முடிவாக கிரியா சக்தியாக   இல்லற மாண்பை விளக்குவதாக ஆதி சக்தியாக  அருள் பாலிக்கின்றாள்.  அல்லியங்கோதை அம்பாளை



தொல்லை மா ஞாலமாதித் தொகையிலா அண்டம் நல்கிச்
செல்வ, மான் கருணையாழுஞ் சிறகால் அணைத்துப் போற்றும்
மல்லச் செழுநீர் வாவி வண் கமலாலயத்துள்
அல்லியங்கோதை என்னும் அன்னத்தை அகத்துள் வைப்பாள்- என பக்தர்கள் பாடி துதிக்கின்றனர்.

அம்பிகையின் உற்சவத் திருமேனி மேலும் எழிலாய் அமைந்துள்ளது. நின்ற திருக்கோலம், சிரசில் அரசிக்கே உரிய மணிமுடி, மை தோய்ந்த இமையோடு  அருள் வழங்கும் சுடர்விழிகள், பிறை உதழில் திருநீற்றுக் கீற்று, செதுக்கி வைத்த நாசி, தீவினைகளை பொடியாக்கும் இதழ்முறுவல், சங்குக் கழுத்து, காதணி, மூக்கணி, மார்பு வடம், இடை மேகலை, சூடகம், வளையல், நீலோற்பல மலரேந்தும் வலத்திருக்கரம், வலத்திருக்கால் உந்தி, இல்லையென்னும் மின்னலிடை சற்றே ஒடிந்து இடத்திருப்பாதம் பதிந்து, சேடியின் இடத்தோளில் அமர்ந்த செல்லப்பிள்ளையாம் முருகப்பெருமானின் உச்சி நீவும் இடத்திருக்கரம்.  திருத்தமான முன் கொசுவம் வைத்து, தழைய உடுத்திய புடவை, முந்தானைத் தலைப்பினை முன் பக்கம் செருகி, ஐயன் அளந்த இரு நாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் வளர்க்கும் பெருமாட்டியாய் சிவானந்த தென்றலில் ஒசிகின்ற திருவுருவமாய், மங்கலப் பெண் கொடியாய் எழுந்தருளி அருள் பாலிக்கும் அற்புத திருக்கோலம். பிற சிவத்தலங்களில் காண முடியாத புதுமையான தத்துவத் திருக்காட்சி.

நீலோத்பலாம்பாள் மகா மண்டபத்தில் உள்ளமாணிக்க நாச்சியார் சரித ஓவியம்

நீலோத்பலாம்பிகை இடக்கரவிரலால் குமரக்குழந்தையின் உச்சி நீவும் பாவனை – ஆன்ம பரிபாலனம் என்னும் அனுக்கிரக முத்திரை எனக்கூறுவர் ஆன்றோர். சேடிப்பெண் பிருத்வி தத்துவம் என்றும், அம்பிகை துவாதசாந்தம் ஆகிய ஆகாயம் என்பது ஐதீகம். அன்னையின் பேரழகை முத்துசுவாமி தீட்சிதர் பல்வேறு இராகங்களில் கிருதிகள் பாடியுள்ளார்.

அர்த்தஜாம பூசைக்குப்பிறகு எம்பெருமான் நீலோத்பலாம்பாள் சன்னதிக்கு எழுந்தருளுகின்றார். பள்ளியறை பூசை இங்கு நடைபெறுகின்றது. தியாகேசர் சன்னதியிலிருந்து சுவாமி புறப்பட்டு சங்கம், கொம்பு, பிரம்மதாளம் மற்றும் நமசிவாய முழகத்துடன் நீலோத்பலாம்பாள் சன்னதி எழுந்தருளுகின்றார். அங்கு அர்த்த மண்டபத்தில் பொன்னூசல் கண்டருளுகிறார்.  அம்மையப்பருக்கு அலங்கார தீபாரதனை உபசாரம் சிறப்பாக நடக்கின்றது. பால் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.  அவனருளால் அடியேனுக்கு அர்த்தசாம பூசை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. ஆதிசக்தியாம் அல்லியங்கோதையை சேவித்தோம் அடுத்து கமலாம்பாளை சேவிக்கலாம் வாருங்கள் அன்பர்களே.

                                                           திருப்பாத தரிசனம் தொடரும் . . . . 

No comments: