Monday, September 4, 2017

நவ துவாரகை யாத்திரை - 20

கிர்க் காடுகள்

 இத்தொடரின்  மற்ற  பதிவுகள் 

    1    2   3   4   5     6    7    8    9    10    11    12    13 


   14    15   16   17   18   19   21    21  22   23  24    25   26   27   28

தங்கிய விடுதி 

மது பாரத நாட்டில் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டுமே காட்டிற்கு அரசன் என்று அழைக்கப்படும் சிங்ங்கள் உள்ளன என்பது இம்மாநிலத்தின் தனி சிறப்பாகும் எனவே இந்த யாத்திரையின் போது கிர்  சிங்ங்களின் சரணாலயத்திற்கு சென்றோம். உலகில் ஆசிய சிங்ங்கள் குஜராத் மாநிலத்தின் இக்கிர்காடுகளில் மட்டுமே உள்ளன.   
கொடினாரிலிருந்து அகமதாபாத் செல்லும் போது முடிந்தால் பாவ்கர்(Bhavnagar) அருகே   கடலின் உள்ளே அமைந்துள்ள கடல் உள் வாங்கும் சமயத்தில்  அதாவது மதியம் சுமார் 3 மணியிலிருந்து இரவு சுமார் எட்டு மணி வரை  மட்டுமே சென்று தரிசிக்கக்கூடிய, மஹாபாரதப்போரில் தங்கள் சகோதரர்களான கௌரவர்களைக் கொன்ற களங்கம் தீர  பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த   நிஷ்களங்கேஷ்வரரை தரிசிக்கலாம் என்று ஒரு திட்டம் வைத்திருந்தோம்.   அதை வண்டி ஓட்டுரிடம் கூறிய போது அங்கு சென்று மறுபடியும் கிர் காடுகள் வருவதென்றால் பின் நோக்கி வர வேண்டும் மேலும் அகமதாபாத் செல்வதற்கு அது  சுற்றுப் பாதை என்பதால் ஒரு முழு  நாள் வேண்டும் என்றார்.  எனவே அத்திட்டத்தை கை விட்டு நேராக கிர் காடுகளுக்கு  வண்டியை செலுத்துமாறு  கூறினோம்.

                மான்  கூட்டம் 

காட்டுப் பகுதியில் நுழைய அனுமதி சீட்டு பெற வேண்டும். மிருகங்களின் டமாட்டம் இருப்பதால் அதிக வேகமாக செல்ல வேண்டாம், ஒலிப்பான்களை பயன்படுத்த வேண்டாம் அமைதியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். மெதுவாக காட்டிற்குள் பயணம் செய்து  காட்டிலாகா அலுவலகம் அருகில் சென்றோம். முன்னரே தங்கும் இடத்தை பதிவு செய்திருக்கவில்லையாதலால் அங்கு சென்றபின் காட்டின் உள்ளே உள்ள  சுக்சாகர் கிர் ரிசார்ட் (Sukhsagar Gir Resort)  என்ற விடுதியில் தங்கினோம்.







      கடா மான்                                                     சண்டையிடும் மான்கள் 

மறு நாள் காட்டிற்குள் சென்று மிருகங்களை பார்த்து வருவதற்காக ஜீப்பில் முன்பதிவு செய்ய காட்டிலாக்கா அலுவலகம் சென்றோம் ஆனால் சீட்டுகள் முழுவதும் முதலிலேயே பதிவாகி இருந்தது. தினமும் காலை 6 மணி, மதியம் 2:30 மணிக்கு ஒரு ஜீப்பில் அதிக பட்சம் ஆறு பேர் என்று மொத்தம் 15 பேருக்கு மட்டுமே காட்டுக்குள் செல்ல அனுமதி சீட்டு வழங்குகின்றனர். மொத்தம் 3 மணி நேரம் காட்டுக்குள் பயணம் செய்விக்கின்றனர். சிங்ங்கள் கண்ணில் பட்டாலும் படலாம் பல சமயம் கண்ணில் படாமலும் போகலாம். முதலிலேயே இணையதளம்  மூலம்  முன் பதிவு செய்திருக்க முடியும், அடியோங்கள் இணக்கமான யாத்திரையாக திட்டமிட்டதால் நாள் பிரகாரம் யாத்திரையை திட்டமிட்டிருக்கவில்லை எனவே முன் பதிவு செய்யவில்லை.

கிளம்பியது சிங்கம் 

காட்டிற்குள் செல்ல முடியாமல் போனதே என்று சிறிது ஏமாற்றமாக இருந்தது. அதற்கு அவர்கள் 15 கி.மீ ஒரு இயற்கை விலங்கியல் பூங்கா உள்ளது அங்கு சென்றால் தாங்கள் சிங்ங்களை காண முடியும் என்று கூறினார்கள் எனவே மறு  நாள் அந்த Interpretation Zone  செல்லலாம் என்று முடிவு செய்து விடுதி திரும்பி கத்யவார் சமையலின் டோக்ளா (கடலை மாவில் நீராவியில் வேகவைக்கப்படும் ஒரு சிற்றுண்டி) சேவ் டமேடார் (தக்காளியும் ஓமப்பொடியும் சேர்ந்த ஒரு கறி) பேகன் பராத்தா (கத்திரிக்காய் கறி) பாஜ்ரா பாக்ரி (சோளத்தில் செய்யப்பட்ட ஒரு வடை) சுவைத்தோம் நன்றாக உறங்கினோம்.


மறு நாள் காலை எழுந்து காட்டின் இடையே பறவைகளின் கீசு, கீசு பேசிய பேச்சரவத்தை கேட்டோம். சூரிய உதயத்தை இரசித்தோம். பின்னர் சிங்ங்களை காண விலங்கியல் பூங்கா (Interpretation Zone) சென்றோம். ஒரு பேருந்து மூலம் அச்சரணாலயத்தை சுற்றிப் பார்க்க அழைத்து சென்றனர். கட்டணமாக ரூ 75/- வசூலித்தனர்.  பாதையின் இரு புறமும் புற்கள் எரிக்கப் பட்டிருந்ததை பார்த்தோம். மிருகங்களை தெளிவாகப் பார்க்க இவ்வாறு செய்திருக்கலாம் என்று நினைத்தோம். வண்டி ஓட்டுனரிடம் கேட்ட போது இல்லை,  புற்கள் காய்ந்து விட்டதால்  பேருந்தில் செல்பவர்கள் பீடித்துண்டு போன்றவற்றை வீசினால் தீப்பிடித்து விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக   காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க இவ்வாறு சரணாலய அதிகாரிகளே சுமார் 10 அடி தூரத்திற்கு இவ்வாறு  தீயிடுவதாக கூறினார். சுமார் அரை மணி நேரம் பயணம் செய்திருப்போம் மான்கள் மட்டுமே கண்ணில் பட்டன, புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக  புல் மேய்ந்து கொண்டிருந்தன. இரண்டு நீல்காய் ஆண் மான்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.



வண்டி ஓட்டுநர் செல் பேசி மூலம் மற்ற வண்டி ஒட்டுநர்களிடம் பேசி எப்பகுதியில் சிங்ங்கள் உள்ளன என்று விசாரித்து அப்பக்கம் சென்றார் ஒரு மரத்தின் நிழலில் இரு சிங்ங்கள் ஓய்வெடுத்துக் கொண்டிந்தன. இரண்டும் பெண் சிங்கங்கள் ஒன்றுக்கு மூன்று குட்டிகள், இன்னொன்றுக்கு இரண்டு குட்டிகள்  உள்ளன என்றார்.   சிறிது நேரம் சென்ற பின் அவற்றுள் ஒன்று எழுந்து கம்பீரமாக நடந்து வர ஆரம்பித்தது. வண்டியில் இருந்த அனைவரும் ஆர்வத்துடன் தங்களுடைய புகைப்படக் கருவியை அப்பகுதிக்கு திருப்பி அதை புகைப்படம் பிடிக்க ஆரம்பித்தோம். வண்டு ஓட்டுனர் சத்தம் ஏற்படுத்தாமல் இருங்கள் இல்லாவிட்டால்  சிங்கம் திரும்பிச் சென்று விட வாய்ப்புள்ளது என்றார். எனவே அனைவரும் அமைதியாக புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டிருந்தோம்.

கம்பீர நடை 

கம்பீரமாக நடந்து வந்த சிங்கத்தைப் பார்த்த போது ஆண்டாள் நாச்சியார் தனது திருப்பாவையில் பாடிய 
மாரிமலை முழஞ்சில் மன்னிகிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத்தீவிழித்து
வேரிமயிர்பொங்க எப்பாடும்பேர்ந்துதறி
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமாபோலே நீபூவைப்பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனேபோந்தருளி கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம்வந்த
காரியமாராய்ந்தரு ளேலேலோரெம்பாவாய். என்னும் பாசுரம் தான் மனதில் தோன்றியது..

பாதையை நெருங்கி விட்டது

சிங்கம் வண்டி நின்றிருந்த பாதையை கடந்து அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் சென்று நீர் அருந்த ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இன்னுமொரு சிங்கமும் அதனுடன் சேர்ந்து கொண்டது. வண்டி  ஒட்டுநரிடம் விசாரித்த போது இது ஒரு விலங்கியல் பூங்கா இரண்டு ஆண் சிங்ங்கள்,  இரண்டு பெண் சிங்கங்கள்  குட்டிகளுடன் உள்ளன. இவற்றுடன்  சிறுத்தைப் புலிகளும்  உள்ளன இரவில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் இவை பகலில் சுதந்திரமாக் சுற்ற அனுமதிக்கப்படுகின்றன. பசி எடுக்கும் போது இவை கூண்டிற்கு வந்து விடும். எனவே இப்பூங்காவில் சிங்ங்களை சுற்றுலா பயணிகள் சிங்ங்களை காண வாய்ப்பு அதிகம் என்றார்.   மையத்தில் இருந்த கூண்டுகளுக்கு அருகில் அழைத்துச் சென்றார் சிங்ங்களுடன் ஒரு சிறுத்தைப் புலியும் இருந்தது. புள்ளி மான்கள் மற்றும் கடாமான்கள்  மயில்கள், குயில்கள் மற்றும் பல விதப் பறவைகளை கண்ணுற்றோம்.

நீர்  அருந்துகின்றன

அச்சிங்ங்களைப் பார்த்தபோது அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே. என்று சிங்கப்பெருமானை நினைத்து வணங்கினோம். பின்னர் பூங்காவின் விற்பனை நிலையம் சென்றோம் தேன், மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், சிங்கப் படத்துடன் கூடிய பனியன்கள், தேநீர் கோப்பைகள், காடுகளைப் பற்றிய புத்தகங்கள் ஆகிய உள்ளன. அருகில் இரண்டு சந்தன மரங்கள் இருந்தன. இவ்வாறு சிங்கங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அகமதாபாத் நோக்கி புறப்பட்டோம்.

குரங்குகள் கண்ணில் படவில்லை. இலந்தை மரங்கள், முட்புதர்கள் அதிகமாகக் காணக் கிட்டின. நெடிதுயர்ந்த புல் காய்ந்து கிடந்தது.  காட்டைக் கடந்து தேசிய நெடுஞ்சாலையை அடைந்தோம். அகமதாபாத் நோக்கி பயணம் செய்தோம்.

பிஸ்கட் சாப்பிடும் அணில் 
சந்தன மரம் 

கிர்க்காடுகளிலிருந்து  அகமதாபாத் பயணம் எப்படி இருந்தது என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே. 
                                                                                                         நவ துவாரகை யாத்திரை தொடரும் . . . 

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

முன்னரே இணையதளத்தின் மூலம் பதிவு செய்தால் நல்லது. நானும் சில நண்பர்களும் அப்படி பதிவு செய்திருந்ததால் வனத்தினுள் சென்று இயற்கையான முறையில் உலவும் விலங்குகளைக் காண முடிந்தது. நாங்கள் சென்றபோது ஒரு சிங்கக் குடும்பத்தினை [எட்டு சிங்கங்கள்] பார்த்தோம் - வெகு அருகில்!

தொடர்கிறேன்.

S.Muruganandam said...

உண்மைதான் ஐயா.

அடியோங்கள் இந்த யாத்திரையின் போது எந்த முன்பதிவும் செய்யவில்லை எங்கு செல்கின்றோமோ அங்கு கிடைக்கும் அறைகளில் த்ங்கிக்கொண்டோம். எனவே அனைத்து ஆலயங்களயும் தரிசிக்க முடிந்தது. ஒரு நாள் மிச்சமானது அன்றைய தினம் அகமதாபாதை சுற்றிப் பார்த்தோம்.

முன்பதிவு செய்து கொண்டு சென்றால் சில சமயம் சில ஆலயங்கள் மூடி இருந்தால் தர்சிக்க முடியாமல் போய்விடும் என்பதால் இத்தடவை இவ்வாறு சென்றோம்.