திருக்கேதாரம்
ஜோதிர்லிங்க ஸ்தலம்
ஆளுடையப் பிள்ளையும்
எம்பிரான் தோழரும் பாடிப்பரவிய
தேவாரத்தலம்
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மிந்தடங் கண்ணான் மலரோனும்
கீழ்மேலுற நின்றான் திருக் கேதாரமெனீரே!
இரவில் திருக்கேதாரத்தின் அழகு
நாங்கள்
சன்னதியை அடைந்த நேரம் லேசாக மழை தூறியது. எங்கும் மேகமயமாகி விட்டதால்
ஹெலிகாப்டர் இயக்கமும் நிறுத்தப்பட்டது. திரு. தேஷ்பாண்டே குடும்பத்தினர் குளி
அதிகமாகி விட்டதால் இரவு இங்கு தங்க வேண்டாம் என்று முடிவு செய்து சீக்கிரமாக
தரிசனம் செய்து விட்டு கிளம்பினர். நாங்கள் முன்னரே திட்டமிட்டிருந்தபடி இரவு
அங்கேயே தங்க முடிவு செய்தோம். என்னுடன் பணிபுரியும் அன்பர் கபுர்வன் அவர்கள்
அவருடைய உறவினர் ஒருவர் கோவிலின் அருகிலேயே கடை வைத்துள்ளார் ஏதாவது உதவி தேவையென்றால் அவரை கலந்து
கொள்ளவும் என்று கூறியிருந்தார். அந்தக்கடையில் விசாரித்தோம்.நரேந்திர உபாத்யாய்
என்னும் அவ்வன்பரை கலந்து கொண்டோம். தங்குவதற்கான இடமும் மற்றும் பூசைக்கும்
ஏற்பாடு செய்து தந்தார். நடந்து வருபவர்கள் வந்து சேரும் போது மணி இரண்டிற்கு மேலே
ஆகிவிட்டது. காலையில் இருந்து மதியம் மூன்று மணி வரை ஐயன் நிர்வாண தரிசனம் என்னும்
எந்த அலங்காரமும் இல்லாமல் மலை உச்சியாகவே
தரிசனம் அளிக்கின்றார். நாமே நமது கையால் அபிஷேகம் செய்து கொள்ளலாம். கட்டி
அனைத்துக்கொள்ளலாம். அவர் மேலேயே தலைவைத்து வணங்கலாம். எங்களுக்கும் அந்த அரிய
வாய்ப்பு கிடைத்தது.
நர நாராண சிகரங்கள்
நாங்கள் உள்ளே சென்ற சமயம் நிர்வாண தரிசனம் முடியும் சமயம்.
திரு உபாத்யா அவர்கள் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். அவர் அக்கோவிலின்
பூசாரியும் ஆவார். மிகவும் திருப்தியாக
திரு. முட்கல் கொண்டு வந்திருந்த மானசரோவர் தீர்த்தம், வைத்தி அண்ணன்
கொண்டு வந்திருந்த திருநீறு, சந்தனம், சென்ற வருடம் யமுனோத்ரியில் சேகரித்த யமுனை
தீர்த்தம், கங்கோத்ரியில் சேகரித்த கங்கை தீர்த்தம் ஆகியவற்றால் ஆண்டளக்கும் ஐயனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக அபிஷேகம் செய்தோம்.
திருக்கேதார நாதருக்கு நெய்யபிஷேகம் மிகவும் பிரியம் என்பதால் இங்கிருந்தே நெய்
எடுத்துச் சென்றிருந்தோம் அந்த ஆவின் ( பசுவின் - சென்னை பால் பண்ணையின் பெயர் )
நெய் கொண்டு ஐயனின் மனம் குளிர அபிஷேகம்
செய்தோம். பின்னர் வி்ல்வம் மற்றும்
பிரம்மகமல் சார்த்தி அலங்காரம் செய்து, கர்ப்பூர தீபம் காட்டி மனதார நன்றி கூறி
வணங்கினோம்.
ஈசானேஸ்வரர் சன்னதி
திருக்கேதார
ஜோதிர் லிங்கத்தின் மேற்குப்பகுதி சிவபெருமான், வடக்கு நோக்கி தும்பிக்கையுடன்
கணேசர், மற்றும் ஸ்ரீசக்ர வடிவில்
கௌரியன்னை பார்வதி ஆகிய மூவரும் ஒன்றாக காத்சி தருகின்றனர். ஸ்ரீ சக்கரத்தின் மேல்
தலை வைத்து வணங்குமாறு திரு உபாத்யா அவர்கள் கூறினார். மலையரசன் பொற்பாவையின் அருளைப் பெறும் போது
மனதில் இந்த நினைப்பு வந்தது. இன்றைய தினம் சாரதா நவராத்திரியின் மஹா அஷ்டமி
அல்லவா? இன்றைய தினம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் அல்லவா இன்று தரிசனம் தர வேண்டும் என்றுதான் சென்ற வருடம் தரிசனம்
தராமல் திருப்பி அனுப்பி விட்டாயா தாயே! உன் கருணை என்ன என்று மனம் உருகி அன்னையை
வணங்கினோம். மிச்சமிருந்த நெய்யை தெற்குப்பக்கம் இருந்த அகண்ட தீபத்தில்
சேர்த்தோம். இந்த தீபம்தான் திருக்கோவில்
பனிக்காலத்திற்காக மூடப்பட்டு ஆலயம் பின் அக்ஷய த்ரிதியையன்று
திறக்கப்படும் போது எரிந்து கொண்டு
இருக்குமாம்.
ஆதி சங்கர பகவத் பாதாள்
ஸ்படிக லிங்கம்
ஆதி சங்கரர் சமாதி
திருக்கேதாரம் பின்னழகு
(வைத்தி அண்ணன்)
நர நாராயண சிகரங்களின் முன்னர்
திருக்கேதாரம்
கோவிலுக்குப்
பின்னே ஆதி சங்கரரின் சமாதி உள்ளது. விஜய கொடியுடன் அவருடைய தண்டத்தை இங்கு அமைத்துள்ளனர்.அதற்கு பின் லங்கார் எனப்படும் அன்னம் பாலிக்கும்
இடம். அதற்காவும் மழை மற்றும் வெயிலில் இருந்து தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும்
அன்பர்களை காக்க அமைத்திருக்கும் கூரைகளும் உள்ளன. பின்னர் ஆதி சங்கரர் திருக்கயிலையில் கொண்டு வந்து
ஸ்தாபிதம் செய்த ஸ்படிக லிங்கம் தரிசனம் செய்தோம்.
இவ்வாலயத்தில் ஆதி சங்கரர், சுக்ராச்சாரியார் மற்றும் அனுமன் சிலைகளும் உள்ளன. அங்கு தரிசனம் செய்து விட்து வரும்
போது இருட்டிவிட்டதால் கோபுரத்தில் விளக்குகள்
போடப்பட்டது. அந்த காத்சி மிகவும் அருமையாக இருந்தது. பின்னர் அறைக்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டோம்.
திரு கபுர்வன் அவர்கள் இரவில் திருக்கேதார கோவில் சோடியம் விளக்கு வெளிச்சத்தில் மிகவும்
அருமையாக காட்சியளிக்கும், எனவே அங்கு தங்குங்கள்
என்று கூறியிருந்தார் அந்த அற்புத காட்சியைக் கண்டு களித்தோம். ஆனால் குளிர்தான்
மிகவும் அதிகமாக இருந்தது.
திருக்கேதாரம் முக்தி ஸ்தலமாகவும் கருதப்படுகின்றது. இங்கு இறந்தால் புனர் ஜன்மம் கிடையாது. திருக்கோவிலின் பின்புறம் ஈசானேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு பூஜை முறையை ஆதி சங்கரர் வகுத்தார் எனவே மலபாரை சார்ந்த
லிங்காயத் பிராம்மணர்களே பூஜை செய்கின்றனர். அவர் ராவல் எனப்படுகின்றார். அவருடைய சிஷ்யர்கள்
பூஜை செய்கின்றனர்.
பைரவர்
பைரவர் காவல் தெய்வம் என்பதால் அவருக்கு கோவில் எதுவும் கிடையாது வெட்ட வெளியில் இருந்து கேதார்நாத் கோவிலைக் காத்துக்கொண்டிருக்கிறார். ஒரு சமயம் கோவில் மூடப்படும் போது கோவிலை பூட்ட மறந்த போது பைரவர் வந்து பூசாரிகளை நடக்க விடாமல் செய்து பின்னர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார்களாம்.
பைரவர் கோவிலிருந்து பறவைப் பார்வையில்
திருக்கேதாரம்
படத்தை பெரிதாக்கி நடுவில் திருக்கேதார தலத்தை தரிசிக்கலாம். இப்படத்தில் உள்ளவர்தான் திரு. ராகேஷ் குமார் கபுர்வன் ( Shri Rakesh Kumar Kapurwan). இவர்தான் திருக்கேதாரத்தைப் பற்றிய பல அரிய தகவல்களை அடியேனுக்கு கூறியவர் . இப்பதிவில் உள்ள பல படங்கள் அவருடையது.
பீமன் பாதம்
திருக்கேதாரத்தை சுற்றிலும்
எட்டு திசைகளிலும் எட்டு ஆலயங்கள் உள்ளன. ரேதஸ் குண்டத்தின் தீர்த்தம் பருகினால் இந்த புனித யாத்திரை பூர்த்தி அடைவதாக ஐதீகம். இந்த தீர்த்தத்தை உட்கொள்பவர்களின் இருதயத்தில் நான் அமிர்தமாக அமர்வேன்
என்று பார்வதி தேவியிடம் சிவபெருமான் இந்த தீர்த்தத்தின் மஹிமையை விளக்கியதாகவும், இங்கிருந்து தான் ஐயன் ஜோதிர்லிங்கமாக எழுந்தருளியதாகவும் ஐதீகம்.
திருக்கேதாரத்தில் தினமும் அதிகாலை 4மணிக்கு நடை
திறக்கின்றது. அது முதல் நிர்வாண தரிசனம் நாமே அபிஷேகம் செய்து கொள்ளலாம். அப்போது
பால் போக், மஹா அபிஷேகம், ருத்ராபிஷேகம் நடைபெறுகின்றது. மாலை சிவ அஷ்டோத்திரம், அஷ்டோத்திரம்,
சிவ நாமாவளி, சிவ மஹிமா ஸ்தோத்திரம். மாலை நான்கு மணியளவில் முழு அலங்காரத்துடன் தரிசனம்
வெள்ளிக்கிரீடத்துடன்ம் பட்டாடையுடன், மலர் மாலைகளுடன் அற்புத தரிசனம். ஏகாந்த தரிசனம்
கண்டு களித்தோம். இரவி 8 மணியளவில் ஆரத்தி. ஐயனின் ஆரத்தி தரிசனம் கண்டு களிக்கும்
வாய்ப்பு கிட்டியது. முதலில் கேதாரீஸ்வர்ரருக்கு ஆரத்தி பின்னர் பரிவார தேவதைகளுக்கு ஆரத்தி ஆகி பின்னர் சன்னதி தெரு வழியாக ஆரத்தி மந்தாங்கினி
மாதா சனன்தி வரை வருகின்றது. பின்னர் திரும்பி வௌம் போது ஆரத்தியை தொட்டு நாம் வணங்கலாம். மிகுந்த மனமகிழ்ச்சியுடன் அறைக்கு வந்தோம். திரு
உபாத்யா அவர்கள் சுடச்சுட ரொட்டி (சப்பாத்தி) கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார். சுடு
தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். இரவு மிகவும் குளிராக இருந்தது, இரண்டு
ரஜாய் போர்த்திக் கொண்ட பிறகுதான் குளி கொஞ்சம் மட்டுப்பட்டது. மலையேறியதால் கால் வலி இருந்ததால் சரியாக தூக்கமும்
வரவில்லை. காலை 4 மணிக்கே தரிசனம் செய்து விட்டு கீழிறங்கலாம் முடிவு செய்தோம்.
திரு நரேந்த்ர உபாத்யாய் அவர்கள்
திருக்கேதாரத்தின்
எதிரே சுமார் 1.5 கி.மீ ஏறிச்சென்றால் பைரவர்
ஆலயம் உள்ளது. எங்களால் போக முடியவில்லை. திரு கபுர்வன் அவர்கள் ஒரு தடவைச் சென்றிருந்தார்
அந்தப் படங்கள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன. ஹெலிகாப்டர்
தளமும் அருகில்தான் உள்ளது. அதற்கு சிறிது மேலே பீமன் பாதம் உள்ளது. இங்குதான்
பீமன் காளை வடிவில் இருந்த சிவபெருமானை பிடித்ததாக ஐதீகம் . மேலும் காந்தி சரோவரும்
கேதாரில் பார்க்க வேண்டிய ஒரு இடம்.
அதிகாலை எழுந்து
ஐயனின் அற்புத தரிசனம் செய்தோம். வெளிநாட்டவர் பலர் முற்றத்தில் சிவ நாமம் பாடி ஆடியது
அருமையாக இருந்தது. சீதோஷ்ண நிலை மாறி விட்டதால் இரண்டு நாட்களில் பனி பெய்ய வாய்ப்பு
உள்ளது என்று உபாத்யா அவர்கள் கூறினார்.
பின்னர்
இமயமலையில் தமிழ் பாசுரங்கள்
பின்னர்
ஆழ்ந்து காணார் உயர்ந்து எய்தகில்லார் அலமந்தவர்
தாழ்ந்த தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பது
வீழ்ந்து செற்று நிழற்கு இறங்கும் வேழத்தின் வெண் மருப்பினன்று
கீழந்து
சிங்கம் குருகு உண்ண முத்து உதிரும் கேதாரமே
என்று
ஆளுடையப்பிள்ளை
அவர்கள் பாடிய திருக்கேதாரத்தில் ஜோதிர் லிங்கமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானை, தேவ தேவனை, மஹா தேவனை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை, சகல புவன ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹார காரணனை தியாகராஜனை
உள்ளன்போடு வழிபட திருமணம் கூடுகிறது. ஒழுக்கமான வாழ்வு கிடைக்கின்றது மனக்கவலை நீங்குகின்றது, ஐயனை தரிசித்தவர்களுக்கு கனவில் கூட துன்பம் வாராது என்பது ஐதீகம். பத்ரியிலும் கேதாரத்திலும் இறைவனை வழிபடுபவர்களுக்கு சம்சார பந்தம் விலகும், கேதாரத்தில் தானம் செய்பவர்கள் சிவரூபம் பெறுவர் என்பது திண்ணம்.
திருக்கேதாரத்தில் மஹா சங்கராந்தி, வசந்த பஞ்சமி,
சிவராத்திரி,. நந்த அஷ்டமி, ஹோலி, பைசாகி, ரக்ஷ‘பந்தன், தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது சிறப்பு வழிபாடுகள்
செய்யப்படுகின்றது. இமய
மலையின் உயரத்தில் கோவில் கொண்ட,
யோகிகளும், முனிவர்களும், சித்தர்களும், அசுரர்களும், தேவர்களும் மஹா நாகமும் வழிபடுகின்ற என் ஐயனே உனக்கு ஆயிரம் நமஸ்காரம் என்று ஆதி சங்கர பகவத் பாதாள் போற்றிய திருக்கேதார நாதனையும், கௌரியம்மையும் மஹா அஷ்டமி மற்றும்
மஹா நவமியன்று தரிசனம் செய்த மன மகிழ்ச்சியுடன் மலையிறங்கி , களைப்பு தீர கௌரி குண்டத்தில்
(வெந்நீர்) நீராடி பின்னர் சீதாபூர் வந்தடைந்தோம். திரு தேஷ்பாண்டே அவர்கள் குடும்பத்தினர் அதிகாலையிலேயே கிளம்பி பத்ரிநாத்
சென்று விட்டிருந்தனர். நாங்கள் சீதாபூரை விட்டு கிளம்பும் போது மணி 11 எனவே பத்ரிநாத்
செல்வது கடினம் முடிந்தவரை பயணம் செய்து நடுவில்
எங்காவது தங்கிக்கொள்ளலாம் என்று ஓட்டுநர் சதீஷ் அவர்கள் கூறினார் எனவே ஐயனை தரிசித்த
மகிழ்ச்சியுடன் பத்ரிநாத்திற்கு புறப்பட்டோம்.
7 comments:
ஐயனுக்கு அபிஷேகம் செய்யும் இன்பத்தை உணர்வுபூர்வமாக உரைநடையில் விவரித்துள்ளீர்கள் ஐயா.
கட்டுரைக்கும், புகைபடங்களுக்கும் நன்றி ஐயா.
எல்லாம் அவர் கருணை LOGAN ஐயா. நாளை திருக்கயிலாய யாத்திரை செல்கின்றேன். தங்களுக்காகவும் வேண்டி வருகிறேன்.
நன்றி ஐயா, தங்கள் யாத்திரை இனிதே நிறைவடைய இறைவனை வேண்டுகிறேன்
மிக்க நன்றி LOGAN ஐயா. அவனருளாலே அவன் தாள் வணங்கி, கிரி வலமும் முடித்து இன்றுதான் நலமாக திரும்பி வந்தேன்.
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஐயா
அவனருளால் அவன் தாள் வணங்க இரண்டாவது முறையும் வாய்ப்புக்கிட்ட்டியது. இந்தத் தடவையும் நல்ல தரிசனம் கிட்டியது.
மிக்க நன்றி ஐயா.
Post a Comment