Tuesday, October 28, 2008

கந்தன் கருணை -3

பழனி முருகன்

சென்னை சைதை காரணீஸ்வரர் ஆலயம் திருமுருகன் அருட்கோலம்
சென்னை சைதை சிவசுப்பிரமணிய சுவாமியின் கருணைக் கோலங்கள்
மேலே வில் கொண்டு சூர சம்ஹாரம் செய்ய புறப்படும் கோலம்
தேவியருடன் பௌர்ணமி புறப்பாடுகந்த கோட்டம் முத்துக்குமார சுவாமி

மேஷ ( ஆட்டுக்கிடா) வாகனத்தில்
முத்துக்குமார சுவாமியின் எழிற் கோலம்

முருகனுக்கு சூரனான மயில் மட்டுமா வாகனம் இல்லை , இல்லை தெய்வாணை அம்மையின் தந்தையான இந்திரன் அளித்த ஐராவதமாம் வெள்ளை யாணையும் திருமுருகனுக்கு ஒரு வாகனம். நாரதர் செய்த ஒரு வேள்வியின் போது மந்திர மாறுதல் காரணமாக ஒரு ஆட்டுக்கிடா தோன்றியது அது விண்ணையும் மண்ணையும் கதி கலங்கச்செய்தது. தேவர்கள் தேவ சேனாபதியாம் முருகனிடம் முறையிட வீரபாகுவை அனுப்பி முருகன் முன் கொண்டு வரச்செய்து அதன் திமிரை அடக்கி வாகனமாக கொண்டார். எனவே எங்கள் கொங்கு மண்டலத்தில் முருகன் சூர சம்ஹாரத்திற்கு சப்பரத்தில் வர வீரபாகுத்தேவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளுவார். அதே தஞ்சை மண்டலத்தில் சூர சம்ஹாரத்திற்க்கு முருகன் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளுவார். சிக்கல் சிங்கார வேலவர் தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளுவதைக்காண கண் கோடி வேண்டும்.
தொண்டை மண்டலத்தில் பல ஆலயங்களில் சூர சம்ஹாரத்திற்க்கு முருகன் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகின்றார்.

-------------------------------------------------------------

இன்று சென்னை சைதை செங்குந்த கோட்டத்தில் கந்தர் சஷ்டி உற்சவம் எவ்வாறு நடைபெறுகின்றது என்று பார்ப்போமா? தினமும் காலை தொட்டி உற்சவம், வீரபாகுவுடன் வீதி வலம் வருகின்றார் கந்த வேள், காலையிலும் மாலையிலும் லட்சார்ச்சனை. மூலவர் சிவ சுப்பிரமணிய சுவாமி, சண்முகர், உற்சவர் சிங்காரவேலவர் ஆகியோருக்கு ஏக காலத்தில் அர்ச்சனைகள் நடைபெறுகின்றது. அர்ச்சனை முடிந்த பின் குமரஸ்தவம், பின் தீபாரதனை. மாலையில் சிவிகை உற்சவம். கந்தர் சஷ்டியன்று பகலில் 108 பாற்குட அபிஷேகம், பின் இளங்காளியம்மனிடம் சக்தி வேல் வாங்குதல், மாலை புஷ்பத்தேரில் சூர சம்ஹாரத்திற்கு எழுந்தருளுகின்றார் கந்த சுவாமி, போருக்கு செல்லும் போது வில் தாங்கி எழுந்த்ருலுகின்றார். தண்ணீர் தொட்டியருகில் சூர சம்ஹாரம், முருகன், நாரதர், வீரபாகு, நவ வீரர்கள், சூரன் வேடத்துடன் அன்பர்கள் கந்த புராணத்தை நாடமாக நடிக்க ஒவ்வொரு சூரனாக முருகம் சம்ஹாரம் செய்கின்றார். பின் சூரபத்மனை முருகன் சக்தி வேலால் சம்ஹாரம் செய்ய அவன் மயிலாகவும் சேவற் கொடியாகவும் மாற முருகன் திருக்கரத்தில் இருந்த வில் மரைந்து சேவற்கொடி தாங்கி மயில் வாகனத்துடன் தீபாராதனை . மறு நாள் தெய்வயாணை அம்மை திருக்கல்யாணம், அப்போது அன்பர்களுக்கு அன்னதானம் நடைபெறுகின்றது. பின் மயில் வாகனத்தில் புறப்பாடு, விழா நிறைவாக கந்தப்பொடி உற்சவம் என்று கோலாகலமாக ஸ்கந்த சஷ்டி உற்சவம் நதைபெறுகின்றது சிவ சுப்பிரமணிய சுவாமிக்கு.

***********

காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும் கனலோப முழு மூடனும் கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட கண்கெட்ட ஆங்காரியும்

ஏமம் அறு மாச்சரிய விழனனும் கொலை என்றியம்புபா தகனுமாம் இவ்
வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும் எனைப்பற்றிடாமல் அருள்வாய்

சேமமிகு மாமறியின் ஓம் எனும் அருட்பதத்திரள் அருள் மலய முனிவன்
சிந்தனையின் வந்தனை வந்தமெய்ஞ் ஞானசிவதேசிக சிகா ரத்னமே.

தாமம் ஒளிர் சென்னையில்கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உன்முகச் சைவ மணி சண்முகத் தெய்வமணியே


ஆசை என்னும் உட்பகைவனும்,
சினம் என்னும் பொல்லாதவனும்..
உலோபம் என்னும் அறிவீனனும் ( ஈயாமை)
பெண்ணாசை என்ற பயனற்றவனும்
செருக்கு என்னும் குருட்டுத்தனமான ஆங்காரியும்
மாச்சர்யம் என்னும் இழிந்தவனும் (பொறமை)
என்னை வந்து அணுகாமல் அருள் வாய் கீர்த்திமிகு சென்னைப்பதியில் உரைகின்ற கந்த கோட்ட வேலவனே என்று வேண்டுகிறார் வள்ளலார் சுவாமிகள் .


வேலும் மயிலும் துணை.

கந்தன் கருணை தொடரும்.............

7 comments:

Anonymous said...

கந்தன் காசினி எங்கும் வலம் வரட்டும்
வளம்மிக்க வாழ்வு தனை அனைவர்க்கும் வழங்கட்டும்,

ஜீவா (Jeeva Venkataraman) said...

இந்த ஆட்டுக்கிடாவை தகர் என்பார். மயில், ஆடு, யானை என்ற வாகனங்களுள் மூன்றையும் வாகனங்களாக கொண்டதற்கு பொருள் மூன்று மலங்களையும் (ஆணவம், மாயை, கன்மம்) அடக்கி ஆளுதலைக் குறித்தலாம்!

ஜீவா (Jeeva Venkataraman) said...

படங்கள் வழக்கம்போல் அருளினைப் புரிந்தன. அருமையாக மிளிர்கின்றன. தருவித்தமைக்கு நன்றிகள்.

Kailashi said...

//கந்தன் காசினி எங்கும் வலம் வரட்டும்
வளம்மிக்க வாழ்வு தனை அனைவர்க்கும் வழங்கட்டும்//

ஓம் சரவணபவ, ஒம் சரவணபவ

Kailashi said...

//இந்த ஆட்டுக்கிடாவை தகர் என்பார். மயில், ஆடு, யானை என்ற வாகனங்களுள் மூன்றையும் வாகனங்களாக கொண்டதற்கு பொருள் மூன்று மலங்களையும் (ஆணவம், மாயை, கன்மம்//

அருமையான தகவல் நன்றி ஜீவா சார். வரும் நாட்களிலும் வந்து முருகனருள் பெறுங்கள்.

cheena (சீனா) said...

அன்பின் கைலாஷி

வழக்கம் போல படங்கள் நிறைந்த - விளக்கங்களுடன் கூடிய பதிவு - பழனி முருகனில் இருந்து சைதை முருகன் வரை கந்தனின் திருக்கோல புகைப்படங்கள் மனதைக் கவர்கின்றன. நேரில் பார்க்க இயலாத அன்பர்களுக்கு நேரில் பார்ப்பது போன்ற உணர்வினை ஊட்டியது பாராட்டத் தக்கது.

முருகனெனில் மயில்வாகனம் நினைவிற்கு வர - இதர வாகனங்களாகிய யானை ஆடு ஆகியவற்றைப் பற்றி விளக்கியது அருமை. குதிரை வாகனம் கேள்விப்படாத ஒன்று.

சென்னை சைதை கந்த சஷ்டி விலா நேரடி ஒலிபரப்பு அருமை அருமை.

வள்ளலாரின், பதவுரையுடன் கூடிய பாடல் அருமை அருமை.

நண்ப, சஷ்டியில் அருமையான படைப்புகளைத் தந்து எங்களையும் கந்தனின் கருணை மழையில் நனைய வைத்தமைக்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள்

Kailashi said...

//நண்ப, சஷ்டியில் அருமையான படைப்புகளைத் தந்து எங்களையும் கந்தனின் கருணை மழையில் நனைய வைத்தமைக்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள்//

எல்லாம் அவன் செயல், தரிசனம் தருபவரும் அவரே அதை காமிராவில் வர அனுமதிப்பவரும் அவரே, பின் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள செய்பவரும் அவரே.

கந்தா சரணம், கந்தா சரணம்.