Thursday, February 10, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 11

 

வெஞ்சமாக்கூடல் தரிசனம்




அடியோங்கள் வெஞ்சமாக்கூடல் இந்த யாத்திரையின் போது செல்ல இயலவில்லை, முழுமைக்காக இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள்  இடம் பெறுகின்றன. கரூருக்கு அருகில் இத்தலம் அமைந்துள்ளது என்பதால்  அதற்கு அடுத்தபடி இடம் பெறுகிறது. கொங்கேழ் தலங்களில் கிராமத்தில் அமைந்த தலம் என்பதால் சிறிது சிரமப்பட்டுத்தான் செல்ல முடியும். கரூரிலிருந்து பேருந்துகள் உள்ளன. கரூரிலிருந்து வண்டி வைத்துக்கொண்டும் செல்லலாம். கரூரிலிருந்து சுமார் 20  கி.மீ தூரத்தில் உள்ளது இத்தலம்.

1) கரூர் - அரவக்குறிச்சி சாலையில் 13 கி.மீ.சென்று, சீத்தப்பட்டி (அ) ஆறுரோடு பிரிவில் 8 கி.மீ.செல்ல வேண்டும்.

2) கரூர் - ஆற்றுமேடு நகரப் பேருந்து வெஞ்சமாங்கூடல் வழியாக செல்கிறது.

3) இதுதவிர, கரூரிலிருந்து திண்டுகல்லுக்குப் போகும் இரு பேருந்துகளும் இக்கிராமம் வழியாகப் செல்கின்றன.

வேடசந்தூர் பக்கத்திலுள்ள குடகனாறு  அணைக்கட்டு உடைந்து, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கினால் இக்கோவில் ஒரு தடவை முற்றிலும் சேதமடைந்தது. ஆலயத்தின் கருங்கற்கள் 2 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்டன என்பதிலிருந்தே வெள்ளப் பெருக்கின் நிலைமையை உணரலாம். ஊரும் அழிந்தது. இந்நிலை நேர்ந்த பல்லாண்டுகட்குப் பின்பு, 1982ல் ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தார் இக்கோவில் திருப்பணியைத் தொடங்கி, பெருமுயற்சி செய்து, பல லட்சங்கள் திரட்டி, திருக்கோயிலைப் புதியதாக எடுப்பித்து, 1986ல் மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர். இப்போது நாம் தரிசிப்பது புதிதாக கட்டப்பட்டக் கோவில்.

இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும், அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன் கூடுமிடத்தில் உள்ளதாலும் (கூடல்) வெங்சமாக்கூடல் என்றும் வெஞ்சமாங்கூடலூர் என்றும் பெயர் பெற்றது. கோயிலுக்குப் பக்கத்தில் ஓடும் சிற்றாறு, குடகனாறு, குழகனாறு, குடவன் ஆறு எனப்பலவாறு அழைக்கப்படுகிறது. தனது பதிகத்தில் ஆறு பாடல்களில் இந்த ஆற்றை  எம்பிரான் தோழர் சுந்தரர் பாடியுள்ளார்.




சுந்தரருக்கு சிவபெருமான் பொன் ஈந்த தலங்களுள் இதுவும் ஒன்று.  தன் தோழனுக்காக, அவன் பாடல் கேட்பதற்காக அவர் செய்த செயல் மிகவும் சுவையானது. தலம் தோறும் சென்று இறைவனை பாடிக்கொண்டு வந்த வன்தொண்டர் இத்தலத்தை அடைந்த போது அவர் கையில் பொருள் எதுவும் இருக்கவில்லை, எனவே அவர் பெருமானிடம் பொன் கேட்டார். பெருமான் என் கையில் பொன் ஒன்றும் இல்லை என்றார். சுந்தரர் எப்படியாவது எனக்கு பொன் கொடுங்கள் என்று வேண்ட, தன் பிள்ளைகள் விநாயகர், முருகர் இருவரையும் உமையே ஒரு முதிர்ந்த கிழவியாக வடிவு கொண்டு வீற்றிருக்க, சுந்தரர் பாட்டிற்கு மகிழ்ந்து தன் பிள்ளைகளை அக்கிழவியிடம் ஈடு காட்டிப் பொன் வாங்கிச் சுந்தரருக்கு அளித்தார் என்ற செய்தியைக் கொங்கு மண்டலச்சதகச் செய்யுள் தெரிவிக்கிறது. இச்செய்தி பெரிய புராணத்துள் இல்லை. அச்சதகப் பாடல் வருமாறு-

"கிழவேதி வடிவாகி விருத்தையைக் கிட்டி என்றன்

அழகாகும் மக்கள் அடகு கொண்டு அம்பொன் அருளாதி என்று

எழுகாதலால் தமிழ்பாடிய சுந்தரர்க்கு ஈந்தஒரு

மழுவேந்திய விகிர்தேசுவரன் வாழ் கொங்கு மண்டலமே."

 தேவேந்திரன் அகலிகையின் மேல் கொண்ட மோகத்தால், கவுதம முனிவரின் சாபத்தால் மேனி முழுவதும் கண்ணாகப் பெற்றான். அச்சாபம் தீர பல் வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு இத்தலத்தில் இறைவனை வணங்கிய போது அவன் சாபம் நீங்கியது என்று தல வரலாறு கூறுகிறது.  பொன் பெற்ற சுந்தரர் பாடிய இத்தலத்தின்


இறைவன் - கல்யாண விகிர்தேஸ்வரர், விகிர்தநாதேஸ்வரர்.

இறைவி - மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை, விகிர்தநாயகி.
தீர்த்தம் - குடகனாறு.

தல விருட்சம் - வில்வம்.
பாடியவர்கள் - சுந்தரர், அருணகிரிநாதர்.


இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. கோபுரத்திற்கு முன்னர் இருபுறமும் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கோபுரத்திலிருந்து சுமார் 17  படிகள் கீழிறங்கிச் செல்ல வேண்டும்.  கீழே வலப்பால் சூரியனும் இடப்பால் சந்திரனும் உளர். சுவாமிக்கு எதிரே கொடிமரம், பலி பீடம், நந்தியெம்பெருமான். வெளி பிரகாரத்தில் நடராஜர் சபை, நவகிரகங்கள், பைரவர் சன்னதி, சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.

உட்பிரகாரத்தில் நால்வர், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார்,  அடுத்து அறுபத்து மூவர்கள், நாயன்மார்களின் மூர்த்தங்களின் கீழ், நாடு, மரபு, காலம், திருநட்சத்திரம் முதலிய விவரங்களும் எழுதப்பட்டுள்ளன. கன்னி மூலையில்  சித்தி விநாயகர். தொடர்ந்து பஞ்சலிங்கங்கள் உள்ளன. வள்ளி தெய்வயானை உடனாக ஆறுமுகப் பெருமாள் மயிலின் மீது காலை வைத்தூன்றிய நிலையில் எழிலாக தரிசனம் தருகிறார்.

வண்டுபோற் சாரத் தருள்தேடி

மந்திபோற் காலப் பிணிசாடிச்

செண்டுபோற் பாசத் துடனாடிச்

 சிந்தைமாய்த்தேசித் தருள்வாயே

தொண்டராற் காணப் பெறுவோனே

துங்கவேற் காணத் துறைவோனே

மிண்டராற் காணக் கிடையானே

வெஞ்சமாக் கூடற் பெருமாளே.

பொருள்: வண்டு எவ்வாறு மலர்களின் தேனைத் தேடிக் களிக்கிறதோ அவ்வாறு உனது அருளை நான் தேடிக் களிக்குமாறும், குரங்கு எவ்வாறு மரக்கிளைகளைத் தாண்ட வல்லதோ அவ்வாறே நானும் காலனின் பாசக் கயிற்றின் பிணிப்பைத் தாவும் வல்லமை பெறுமாறும், செண்டாயுதத்தை எறிந்தால் எவ்வாறு பகை மாய்க்கப்படுகிறதோ அவ்வாறு நான் பாசங்களுடன் போராடி வெல்லுமாறும், அலைந்து திரியும் என் மனத்தை மாய்த்து சும்மா இருக்கச் செய்து மெய்யறிவைத் தந்தருள்வாயாக. உன் அடியார்களால் காணப்பெறும் தன்மை உடையவனே, தூய்மையான தலமாம் திருவேற்காட்டில் வாழ்பவனே, ஆணவம் மிக்கவர்களால் காணக் கூடாதவனே, திருவெஞ்சமாக்கூடல் என்ற திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே என்று அருணகிரியார் இவரைப் போற்றுகின்றார்.





 இறைவன் சன்னதி கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மஹா மண்டபம் என்று முப்பிரிவாக அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்தில்சிறிய விநாயகர், நந்தி, கருவறையில் சுந்தரருக்கு பொன்தர வேண்டி தன் பிள்ளைகளை அடகு வைத்த ஐயன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார். விகிர்தர் என்றால் வேறுபட்டவர், விசித்திரமானவர் என்ற பொருள்கள் இருந்தாலும் இறைவன் என்பதையே இச்சொல் குறிக்கின்றதுசுவாமி சன்னதி கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை அருள் பாலிக்கின்றனர்.

 "பண்ணேர் மொழியாளை ஓர் பங்குடையாய்

படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்

தண்ணார் அகிலுந்நல சாமரையும் மலைத்

தெற்று சிற்றாறதன் கீழ் கரைமேல்

மண்ணார் முழவுங் குழலுமியம்ப

மடவார் நடமாடு மணியரங்கில்

விண்ணார் மதிதோய் வெஞ்சமாக்கூடல்

விகிர்தா அடியேனையும் வேண்டுதியே"

பொருள்: பண்  போலும் இனிமையான  மொழியினையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் உடையவனே, யாவரும் ஒடுங்குங் காட்டினிடத்தில் உள்ள ஒரு பற்றினை என்றும் நீங்காதவனே, இன்பத்தைத் தரும் அரிய அகிலையும், நல்ல கவரியையும் அலைத்துக்கொண்டு வந்து கரையை மோதுகின்ற சிற்றாற்றின் கீழ்க்கரைமேல் உள்ள, மண்பொருந்திய மத்தளமும், குழலும் ஒலிக்க, மாதர்கள் நடனம் ஆடுகின்ற அழகிய அரங்கின் மேல், வானத்தில் பொருந்திய சந்திரன் தவழ்கின்ற திரு வெஞ்சமாக்கூடலில் எழுந்தருளியிருக்கின்ற வேறுபட்ட இயல்பினையுடையவனே, அடியேனையும் உன் சீரடியாருள் ஒருவனாக வைத்து விரும்பியருள்   

என்று சுந்தரர் இத்தலத்தின் அம்பாளையும், ஐயனையும் தமது பதிகத்தில் போற்றியுள்ளார். சுவாமியை தரிசித்து விட்டு செல்லும் போது படியேற வேண்டும் எனவே இவரை தரிசித்தால் வாழ்வில் என்றும் ஏற்றம்தான்.

 அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலம். நாடொறும் தினமும் இரண்டு கால வழிபாடுகள் நடைபெறுகின்றன. வடமொழியில் மதுரபாஷிணி, விகிர்தநாதேஸ்வரி என்றும் அழைக்கப்ப்படுகின்றாள்கல்வெட்டில் இறைவன் பெயர் 'வெஞ்சமாக்கூடல் விகிர்தர்' என்றும் இறைவி பெயர் 'பனிமொழியார்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. தங்குமன வஞ்சமாக்கூடல் வரையாதவர் சூழும் வெஞ்ச மாக்கூடல் விரிசுடரே". என்று வள்ளலார் போற்றிய   பண்ணேர் மொழியாள் உடனுறை விகிர்தரை மானசீகமாக தரிசித்தோம்.  

கரூரில் தரிசனத்தை நிறைவு செய்து கிளம்பும் போதே இரவு மணி ஏழு ஆகிவிட்டது. அடுத்து அடியோங்கள் தரிசிக்க சென்ற தலம் கொடுமுடி. அத்தலம் கரூரிலிருந்து 25 கி. மீ தூரத்தில் அமைந்துள்ளது. கொரோனா காலம் என்பதால் எப்போது ஆலயம் திருக்காப்பிடுவார்கள் என்பது சரியாக தெரியவில்லை.  எனவே  “பாண்டிக்கொடுமுடி நற்றவா” உன் தரிசனம் கிடைக்கவேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டே கொடுமுடியை அடைந்தோம், ஒரு வாயில் திறந்திருந்தது. நடை இன்னும் அடைக்கவில்லை என்பது புரிந்தது. இறைவனுக்கு நன்றி கூறி நேரடியாக ஆலயத்திற்குள் சென்றோம் தரிசனம் எவ்வாறு இருந்தது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

No comments: