Monday, January 31, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 10

                                                    கரூவூர் ஆநிலை தரிசனம் - 2 

வாருங்கள் இனி பிரம்மாண்டமான இவ்வாலயத்தை சுற்றி வலம் வந்து தரிசிக்கலாம்.  நெடிதுயர்ந்த 120 அடி உயர ஏழு நிலை கிழக்கு இராஜ கோபுரம் இந்த கொரோனா காலத்திலும் தரிசனம் செய்ய வரும் அன்பர்களே வாருங்கள் என்று வரவேற்றது. கோபுரத்தில் அற்புதமான திருவிளையாடல் புராண, தசாவதார சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. நெடிய மதில் சுவர் உள்ளது. இரகோபுரத்திற்குள் நுழைந்தால் கொங்கு நாட்டிற்கே உரிய கல் விளக்குத் தூண்(தீப ஸ்தம்பம்). எழிலாக உயர்ந்த நான்கு கால் மண்டபத்துடன் அமைந்துள்ளது. தீப ஸ்தம்பத்தின் ஒரு பக்கத்தில் இத்தலத்தின் ஐதீகமான காமதேனு தன் நாவால் இறைவனை நக்கியபடி பூஜை செய்யும் சிற்பமும், ஒரு பக்கம் புகழ் சோழர் ஒரு தட்டில் இறந்த சிவனடியாரின் தலையை தன் தலை மேல் வைத்தவாறு பூக்குழியில் இறங்கும் சிற்பமும், சுயம்பு சிவலிங்கத்திற்கு பசு பால் சொரியும் சிற்பமும் அலங்கரிக்கின்றன.   சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்பதால் ஆலயம் முழுவதும் புது வர்ணத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது.

இப்பிரகாரத்தின் வட கிழக்கில் புகழ் சோழர் மண்டபம் என்னும் நூற்றுகால் மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில் எழிலான சிற்பங்களை கண்டு களிக்கலாம். இம்மண்டபத்தின் முகப்பில் உள்ள சுதை சிற்பங்களும் நடன கோலத்தில் ஆடல் வல்லான்,  நர்த்தன கணபதி, நர்த்தன பால முருகன், நடனமங்கையர் என்று சிறப்பாக அமைந்திருக்கின்றது.  எதிரே ஐந்து நிலை இரண்டாவது இராஜகோபுரம். அதற்கு முன்பே ஒரு மண்டபம். இக்கோபுரத்திற்கு வலப்பக்கம் நால்வர் அரங்கம் என்னும் பிரவசன மண்டபம்.  இம்முதற்பிரகாரத்தில் நந்தவனமும் பராமரிக்கப்படுகிறது. இதன் கன்னி மூலையில் கருவூரரின் சன்னதி அமைந்துள்ளது.  பௌர்ணமி தோறும் மாலை ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் கருவூரருக்கு நடைபெறுகின்றது. இப்பிரகாரத்தை வலம் வரும் போது சுவாமி, மற்றும் இரண்டு அம்பாள்களின் விமானங்களை தரிசிக்கலாம்.

இப்பிரகார வலம் முடித்து இரண்டாவது கோபுரம் வழியாக இரண்டாவது பிரகாரத்தில் நுழைந்தவுடன் தூண்களுடன் கூடிய கல்யாண மண்டபம் அம்மண்டபத்தில் பலி பீடம்,   கொடி மரம், நந்தியெம்பெருமானை தரிசிக்கின்றோம். இம்மண்டபத்தில் எட்டுக்கரங்களுடன் அருள் பாலிக்கும் காலபைரவரையும் தரிசிக்கலாம். இவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் காலையும், மாலையும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிறு சன்னதிகளும் உள. மண்டபத்தின் கூரையில் அருமையான ஓவியங்கள். இப்பிரகாரத்தின் தெற்கு சுற்றில்   நடராஜர் சன்னதி, அறுபத்து மூவர்கள், இவர்களில் எறிபத்த நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கில் விநாயகர், கஜலட்சுமி, வன வல்லி, கஜ வல்லி சமேத சுப்பிரமணியர். ஆறு திருமுகங்கள், பன்னிருத் திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், மயில் மேல் சாய்ந்து நின்ற கோலத்தில் தேவியருடன் அருள் பாலிக்கின்றார் முருகப்பெருமான்.  இவரை அருணகிரிநாதர் ஏழு திருப்புகழ் பாடல்களினால் போற்றியுள்ளார் அவற்றுள் ஒருப்பாடல் இதோ

 

மதியால் வித்தனாகி - மனதாலுத்தமனாகி

 

பதிவாகிச் சிவஞான - பரயோகத் தருள்வாயே

 

நிதியே நித்தியமேயென் - நினைவேநற் பொருளாயோய்

 

கதியே சொற் பரவேளே - கருவூரிற் பெருமாளே.

 

பொருள்:   அழியாத செல்வமே! அழிவில்லாப் பொருளே!     எனது உள்ளத்தில் எப்போதும் நிலைத்து இருக்கும் தியானப் பொருளே!     சிறந்த பேரின்பப் பொருளானவனே! எனக்குப் புகலிடமே! அனைவராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே,      கருவூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே! அறிவு நிலையிலே அடியேன் ஒரு பேரறிவாளனாகத் திகழ்ந்து,      மனத்தளவில் நன்னெறியில் ஒழுகி,  சிறந்தவனாக விளங்கி,       சிவஞானத்தில் எனது சிந்தை பதிந்து இருப்பதாகி,  மேலான யோக நிலையிலே அடியேன் மாறாது இருக்க அருள் புரிவாயாக என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

 

வடக்கு சுற்றில் பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ளன. சுவாமி கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை அருள் பாலிக்கின்றனர்.   சுவாமி சன்னதி, மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்று மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது.  கருவறையில் சுயம்பு லிங்க ரூபத்தில், சற்றே வடக்கு பக்கம் சாய்ந்தவாறு, காமதேனுவின் குளம்புத் தழும்புடன் அருள் பாலிக்கிறார் ஆநிலையப்பர். (கருவூரருக்காகச் சுவாமி சாய்ந்து கொடுத்தார் என்பது ஐதீகம்). ஆவுடையார் சதுரமாக உள்ளது.

பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்

மங்கை யர்மணி நீல கண்டர்வான்

கங்கை யார்கரு வூரு ளானிலை

அங்கை யாடர வத்தெம் மண்ணலே.

 

பொருள் : தாமரை போன்ற திருவடியர். தம் திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர். நீல மணி போன்ற கண்டத்தினர் . ஆகாய கங்கையைத் தாங்கியவர் . அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர், அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார்  என்ற நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தரின் பதிகம் பாடி கொரோனாவின் கொடுமையிலிருந்து அனைவரையும் காப்பாற்றி அருள வேண்டினோம்.

 இத்தலத்தில் இரு அம்பாள்கள் அருள் பாலிப்பதாலும் சுவாமி நித்ய கல்யாண பசுபதீஸ்வரர் என்பதாலும் இவருக்கு அனு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியபின் பெருமானுக்கு திருக்கல்யாணம் செய்து பார்த்து மகிழ்கின்றனர்.

ஐயனை தரிசித்த பின் கல்யாண மண்டபத்தின் வழியாக வடப்பக்கம் உள்ள அம்பாள் சன்னதிகளுக்கு செல்கின்றோம். இரண்டு அம்பாள்கள் அருள் பாலிப்பது இத்தலத்தின்  ஒரு சிறப்பு ஆகும். கிரியா சக்தியாகிய அலங்காரவல்லி அம்பாள் கிழக்கு நோக்கியும், இச்சா சக்தியாக சௌந்தரவல்லி  என்னும் கிருபா நாயகி தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.  அலங்காரவல்லி அம்பாள் ஆதி காலத்தில் இருந்து உள்ள அம்பாள். இவ்வம்மன் சன்னதி சுற்றி வந்து வழிபடுமாறு அமைந்துள்ளது.  அம்மனின் பீடம் எழிலாக, இரண்டடுக்கு எட்டுப்பிரிவுடன்,   சிம்மம் மற்றும் ஸ்ரீசக்கரத்துடன் சிறப்பாக அமைந்துள்ளது. இரு அம்மன் திருச்சிலைகளும் திருவாசியுடன் அமைந்துள்ளன. அம்பாள் இருவரும் நின்ற கோலத்தில் மேற்திருக்கரங்களில் மலர்களைத்தாங்கியும், கீழ்த் திருக்கரங்கள் அபய,வரத ஹஸ்தங்களாக விளங்க அருட்காட்சி தருகின்றனர். இருவரையும்

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்

பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்

குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க

இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – என்று போற்றி வணங்கினோம்.

 


இரண்டாவது அம்பாளான சௌந்தரநாயகி, கரூருக்கு அருகில் உள்ள  அப்பிபாளையத்தை சேர்ந்த வடிவுடை என்பவர் சிறு வயதில் இருந்தே சிவபெருமானின் மீது பக்தி கொண்டு இருந்தார். ஆண்டாள் போல மணந்தால் இறைவனையே மணப்பேன் என்று வைராக்கியமாக இருந்தார். பெற்றோர் எவ்வளவோ முயன்றும் இவரது மனதை மாற்ற முடியவில்லை.   இவரது பக்திக்கு இரங்கி இறைவன் ஒரு நாள் கிராமம் முழுமையும்  பூமாரி பொழிவித்து மறு நாள் தெய்வீக மாலை அளித்து  தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.   இப்போதும் பங்குனிப் பெருவிழாவின் ஆறாம் திருநாள் சுவாமி இக்கிராமத்திற்கு எழுந்தருளி மறு நாள் சௌந்தரநாயகியுடன் ஆலயத்திற்கு எழுந்தருளுகிறார். அம்மன் இருவரையும் மனதார வணங்கி வெளியே வந்தோம்.

தொண்டர்தம் சிந்தை நீங்கி அந்நிலை அரனார் வாழ்வது  ஆனிலை என்னும் கோவில் என்னும் புகழ் பெற்ற இத்தலத்தில்  பங்குனி உத்திர திருவிழா. 13நாட்கள் மிக சிறப்பாக நடைபெறுகிறது. இதுதவிர மார்கழி ஆருத்ரா தரிசனம், பூக்குடலை திருவிழா, பிரதோச பூஜை, பவுர்ணமி பூஜைகள் நடைபெறுகின்றது.

"தீண்டரிய வெங்கருவூர் வஞ் வினைதீர்த்தவர் சூழ்ந்த

 நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே"  

பொருள்:   கருப்பை வாசம் கொடுமையானது. இறைவனின் கருணையால் நமக்கு அந்தத் துன்பம் மறைக்கப்படுகிறது. இவ்வாறு கருப்பையில் மீண்டும் அவதியுறா வண்ணம்  புண்ணியம் செய்த பெருந்தகையோர் சூழ்ந்து விளங்கும் இறைவன் கருவூர் ஈசன். அவன் எத்தகையவன்? நவரசங்கள் ததும்பும் பாடல்களுக்கு உரியவன். - என்று வள்ளலார் திருவருட்பாவில் பாடியுள்ள ஆநிலையப்பரை திவ்யமாக சேவித்தபின் அடுத்து கொடுமுடிக்கு விரைந்தோம்.

2 comments:

கோமதி அரசு said...

ஆநிலையப்பரை திவ்யமாக சேவித்தபின் அடுத்து கொடுமுடிக்கு விரைந்தோம்.//

நானும் தொடர்கிறேன், கொடுமுடிக்கு.
ஆநிலையப்பர் கோயில் தரிசனம் அருமை.
இறைவனை மணக்க விரும்பிய வடிவுடை அம்மாவைப்பற்றி அறிந்து கொண்டேன். இது புது தகவல் எனக்கு.

S.Muruganandam said...

மிக்க நன்றி கோமதி அம்மா.