Wednesday, January 5, 2022

மார்கழிப்பதிவுகள் - 21

                                                                                  

திருசிற்றம்பலம்

எருதுக்கொடியையும் எம்மையும் உடையவனே பள்ளி எழுந்தருள்



திருப்பள்ளியெழுச்சி # 1



இறைவன் எங்கும் நிறைந்தவன், எல்லா பொருட்களிலும் அந்தர்யாமியாக எழுந்தருளி இருப்பவன், சகல வல்லமை கொண்டவன். அவர் உறங்குவதும் இல்லை விழிப்பதும் இல்லை, ஆனால் மானிட இயல்பினால் நாம் அந்த இறைவனை இரவு திருப்பள்ளிப்படுத்துகின்றோம், அவர் உறங்குவதாக பாவித்து, பிறகு காலையில் அவரை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புகின்றோம். ஓர் நாமம் ஓர் உருவம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நாம் ஆயிரம் நாமம் பாடி வணங்குவதைப் போன்றதே இதுவும்.

திருப்பள்ளியெழுச்சி என்பது இவ்வாறு இறைவனை துயில் எழுப்புவதாகவும் கொள்ளலாம், நம்மில் ஆன்மிக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி பரம கருணா  மூர்த்தி இறைவனின் கருணையை உணரச்செய்வதாகவும் கொள்ளலாம். "சுப்ரபாதம்" என்பது இதன் இணையான சமஸ்கிருத சொல்.

 அப்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை,  குருவாக வந்து தானே வந்து ஆட்கொண்ட வள்ளலை எழுப்பி அனைத்து வளங்களையும் நலங்களையும் வழங்க பிரார்த்திப்பது போல் அமைந்த பாடல்கள் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள்.  மாணிக்க வாசக சுவாமிகள் பாடிய பதிகம் இது.

எம்பெருமானே எங்களுக்கு சகல மங்களங்களையும் தந்து அருள்வீர்களாக என்று வேண்டும் வண்ணம் அமைந்தவையே இந்த திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள். மார்கழி மாதம் திருவெம்பாவையுடன் இப்பதிகங்களும் திருக்கோவில்களில் பாராயணம் செய்யப்படுகின்றன. வாருங்கள் அன்பர்களே இனி வரும் நாட்களில் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஒவ்வொன்றாக அனுபவிப்போம். 




திருசிற்றம்பலம்


மாணிக்கவாசக சுவாமிகள்
திருப்பெருந்துறையில் அருளியது
(திரோதன சுத்தி)


போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே!
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றி தழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ்
திருப்பெருந்துறை சிவபெருமானே!
ஏற்றுயர் கொடியுடையாய்! எம்மை உடையாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.........(1)



பொருள்:போற்றி! என் வாழ்விற்கு மூலப்பொருளே! சேற்றில் செந்தாமரை மலர்கள்  இதழ் விரிக்கும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் எம்பெருமானே! உயர்த்திய எருது கொடி உடையவனே! சிவபெருமானே போற்றி!

பொழுந்து விடிந்தது, உனது அழகிய மலர் போன்ற திருவடிகள் இரண்டிற்கும் ஒன்றுக்கொன்று ஒத்த மலர்கள் கொண்டு தூவினோம்; எங்களுக்கு அருள் புரியும் பொருட்டு உன் திருமுகத்தில் மலரும் அழகிய புன்னகையை எங்கள் உள்ளத்தில் நிறுத்தி உன் திருவடிகளை வணங்குகிறோம். எம்மை தொண்டனாக ஆட்கொண்ட எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க.


**********
ஸ்ரீ:

திருப்பாவை # 21




ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றாருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்...............(21)



பொருள்: பாத்திரங்கள் எல்லாம் பொங்கி பெருகி வழியுமாறு பாலைப் பொழிகின்ற வள்ளல் தன்மை பொருந்திய பசுக்களை உடைய நந்தகோபனின் திருமகனே கண்ணா! எழுந்திரு.

உன்னை அண்டியவர்களை காப்பவனே! எல்லாருக்கும் தலைவனே! ஒளிச்சுடராய் உலகமெங்கும் நிறைந்தவனே எழுந்திராய்!

பகைவர்கள் எல்லாரும் உன்னிடம் தோற்று, தங்களுடைய வலிமையெல்லாம் இழந்து, வேறு வழி இல்லாமல் உன் வாசல் தேடி வந்து உனது பொற் திருவடிகளில் விழுந்து சரணடைவது போல நாங்களும் உன் வாசலில் வந்து நின்று உன் புகழ் பாடுகின்றோம், நீ மகிழ்ந்து எழுந்து வந்து அருள்வாயாக!
****************
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருள்

 திருப்பள்ளியெழுச்சி # 1






கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்

      கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்

மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்

      வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி

எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

      இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலை-கடல் போன்றுளது எங்கும்

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (1)

 பொருள்: கிழக்கு திசையில் சூரியன்  உதித்து விட்டான். கரிய இருள் அகன்று விட்டது. காலைப் பொழுது மலர்கின்றது, அன்றலர்ந்த மலர்களில் தேன் ஒழுகுகிறது. தேவர்கள் வந்து எதிர் திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண் -பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலைபோல அதிர்கிறது. அரங்கனே பள்ளியில் எழுந்து  தொண்டர்களுக்கு  அருள்வாயாக.         


No comments: