Friday, January 7, 2022

மார்கழிப்பதிவுகள் - 23

திருப்பாவை # 23

                                                                              ஸ்ரீ:


சீரிய சிங்காதனத்திருத்தல்


திருவள்ளூர் வீரராகவர்





மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.  (23)


பொருள்:
மழைக் காலத்தில் மலைக்குகையில் அயர்ந்து உறங்கும் அபார சிங்கமானது, உறக்கம் களைந்து, அக்கினி பறக்கும் கண்களை அகல விரித்து, பிடரியை சிலிர்த்து, உடல் உதறி, சோம்பல் தொலைத்து நெஞ்சு நிமிர்த்தி, நீண்ட கர்ஜனை புரிந்து கம்பீரமாக புறப்படுவது போல்

காயா மலர் போல் கருமை நிறக் கண்ணா!நீயும் எழுந்து வந்து இவ்விடம் அடைந்து இந்த அழகிய சிங்காதனத்தில் அமர்ந்து திருவோலக்கம் அருளி, நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து அறிந்து எங்களுக்கு அருள்வாயா! ஏ மாதவா!

கூடாதவர்களுக்கு சிங்கமாக விளங்கும் கண்ணன் தனது அடியவர்களுக்கு பூவைப் பூ வண்ணனாக விளங்கும் நயத்தையும்,  தன் காரியத்தை எல்லாம் ஆராய்ந்து பக்தர்களுக்கு அருளும் திறத்தையும்  பாடுகின்றார் ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில். 


 **************

                                           இணையார் திருவடி காட்ட பள்ளியெழுந்தருள்

                                                                                                உ

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 3




கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்கு
தேவ! நற் செறி கழற் றாளினை காட்டாய்;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!..........(3)



பொருள்: மஹா தேவா! மால் அயன் உட்பட யாராலும் முழுமையாக அறிய முடியாத அண்ணாமலையானே; உண்மையான அடியவர்களாகிய எங்களுக்கு அறிந்து அனுபவிப்பதற்கு எளியவனே! திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சிவபெருமானே!

அழகிய குயில்கள் மெல்லிய குரலில் பாடுகின்றன; கோழிகள் கூவுகின்றன; நீர்ப் பறவைகள் ஒலிக்கின்றன; சங்கம் முழங்குகின்றது. நட்சத்திரங்கள் ஒளி மங்கின, சூரிய ஒளி அதிகரிக்கின்றது. இவையெல்லாம் விடியலை உணர்த்துகின்றன.

எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக! திருவுள்ளத்தில் விருப்பம் கொண்டு அடியவர்களாகிய எங்களுக்கு வீரக் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் காட்டி அருள்வீர்களாக. 


 

*************

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே



திருப்பள்ளியெழுச்சி # 3




சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
      துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
      பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
      வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (3)
 

பொருள்: அனைத்து  திசைகளிலும் கதிரவனின் சுடரொளி பரவுகிறது. இருள் அகன்றுவிட்டது. நெருங்கிய நட்சத்திரங்களின் வெளிச்சம் சுருங்கியது. குளிர்ந்த சந்திரனின் நிலவொளியும் குறைந்துவிட்டது.  பசுமையான பொழில்களில் இருக்கும் பாக்கு மரங்களின் மடல்களைக் காலை நேரக்காற்று கீறுகிறது. அதனால் அவற்றின் மணம் எங்கும் கமழ்கிறது.  சிறப்பையும் ஒளியையும் கொண்ட சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய அரங்கத்தம்மானே, பள்ளி எழுந்தருள்வாய்! 


No comments: