Monday, January 3, 2022

மார்கழிப்பதிவுகள் - 19

                                                                                      உ

                         
திருசிற்றம்பலம் 


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான்! உனக்கொன் றுரைப்போம்கேள்!
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க;
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க;
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க;
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு? எமக்கேலோர் எம்பாவாய்!..........(19)



பொருள்: எங்கள் பெருமானே! "உன் கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம்" என்ற சொல் பழமையானது. அதை புதுப்பித்து கூற வேண்டிய அச்சம் எங்களுக்கு தோன்றியுள்ளது. ( இம்மண்ணில் பிறந்த யாவரும் இறுதியில் எம்பெருமானின் திருவடிக்கமலங்களில் தான் சென்று சேர்கின்றனர், அதுவல்லாமல் மீண்டும் பிறவி வேண்டாம் என்பதை இவ்வாறு கூறுகின்றனர்)

குழந்தைகளின் துன்பத்தை நீக்கி இன்பத்தை கொடுப்பவள் தாய் தான். நாங்கள் குழந்தைகள் நீயே தாய். எங்கள் விருப்பத்தை நீதான் நிறைவேற்ற வேண்டும். அந்த விண்ணப்பத்தை கேட்டு அருள்!

எங்கள் கொங்கைகள் உன் அன்பர் அல்லாதார்கள் தோளைத் தழுவாதொழிக. எங்கள் கைகள் உனக்கு அல்லாமல் வேறு எந்த பணிகளையும் செய்யாதொழிக. எங்கள் கண்கள் இரவும் பகலும் உன்னைத் தவிர வேறொன்றையும் காணாதொழிக.

எங்கள் தலைவனாகிய தாங்கள் அடிமைகளாகிய எங்களுக்கு இந்த வண்ணம் அருள் புரிந்தாயானால், கதிரவன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கென்ன குறை?


(மனம், காயம், வாக்கு ஆகியவற்றால் செய்யும்   எல்லா செயல்களும் அந்த சிவபெருமானுக்கே அர்ப்பணம் என்னும் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் பாடல்)

(பாவை நோன்பின் நோக்கமான நல்ல கணவனை அடைய வேண்டும் என்பதைக் கூறும் பாடல் என்பாருமுண்டு. )

**********


ஸ்ரீ:




ஆண்டாள் திருக்கல்யாணம்



குத்து விளக்கெரிய கோட்டுக்காற் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.
 ........ (19)


பொருள்: சுற்றிலும் குத்து விளக்குகள் ஒளி சிதற , யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால்களையுடைய சப்ர மஞ்ச கட்டிலில், மிருதுவான, வெண்மையான, குளிர்ச்சியான, வாசனை மிக்க, அழகான பஞ்சு மெத்தையில் வாசனை மிகுந்த கொத்து கொத்தான மலர்களை சூடிய நப்பின்னை பிராட்டியை அனைத்துக் கொண்டு உறங்கும் அகலகில்லேனிறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் மார்பா! மணிவண்ணா! கண்ணா! வாய் திறந்து பேசு.

மை எழுதிய கண்களையுடைய நப்பின்னையே! உன் கணவனின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று, உறங்கும் உன் கணவனை எழுப்ப உனக்கு மனமில்லையா? அவரை நீ சிறிது நேரம் கூட பிரிய மாட்டாயா? இது உனக்கு தகுதியன்று. அவ்வளவு தான் சொல்வோம். எங்கள் கோரிக்கையை ஏற்று கண்ணனை எழுப்பு அம்மா!



நப்பின்னை பிராட்டியாருக்காக கண்ணன் யாவராலும் அடக்க முடியாத ஏழு காளைகளை அடக்கி அவரைக் கைப் பிடித்தார் என்பது புராண வரலாறு.

     (பஞ்சனை என்பதற்கு அன்னத்தின் தூரிகை, இலவம் பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தோகை ஆகியவற்றால் ஆன மெத்தை என்பர்.)
          

No comments: