Tuesday, January 4, 2022

அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே

தொண்டரடிப்பொடியாழ்வார் 




தமேவமத்வா பரவாஸுதேவம்

ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-

ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்

பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.

 

பொருள்: ஸ்ரீவைகுண்டத்தில் வீற்றிருக்கும் பரவாசுதேவனாகிய எம்பெருமானே இராஜாதிராஜனாக திருவரங்கத்தில் வீற்றிருக்கிறான் என்பதை முழுமையாக உணர்ந்து, அவனைத் துயில் எழுப்பும் (திருப்பள்ளியெழுச்சி என்னும்) பாசுர மாலையை அருளிச்செய்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் போற்றி வணங்குகிறேன்.

 

மண்டங் குடியென்பர் மாமறையோர், மன்னியசீர்த் 

தொண்ட ரடிப்பொடி தொன்னகரம், - வண்டு 

திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி 

உணர்த்தும் பிரானுதித்த வூர்.

 

பொருள்: தேன் வண்டுகள் விரும்பி மீண்டும் மீண்டும் விஜயம் செய்யும் பூஞ்சோலைகள் நிரம்பிய திருவரங்கத்தில் உள்ள இறைவனைத் துயில் எழுப்பும் பாசுரங்களைப் படைத்தவரும், உன்னத குணங்கள் அமையப் பெற்றவருமான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த நகரம் மண்டங்குடி. வேத விற்பன்னர்கள் நிறைந்த பாரம்பரியச் சிறப்புடைய ஊர். (அத்திருத்தலத்தைப் போற்றுகிறேன்.)

தொண்டரடிப்பொடியாழ்வார் மார்கழி மாத  கேட்டை நட்சத்திரத்தில் திருமண்டங்குடியில்  திருமாலின் வனமாலையின் அம்சமாக அவதரித்தவர். "அரங்கனைப் பாடிய வாயால் மற்றொரு குரங்கனைப் பாடேன்" என்று பரம வைராக்கியமாய் திருவரங்கனை மட்டுமே பாடிய ஒரே ஆழ்வார். இவர் பாடிய பாசுரங்கள் இரண்டு. ஒன்று திருமாலை, மற்றது திருப்பள்ளியெழுச்சி. திருமாலையை (பாசுரம்)  அறியாதார் திருமாலையே (மஹாவிஷ்ணு) அறியாதார் என்பது இப்பாசுரத்ததிற்கு உள்ள சிறப்பு.  நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை கூறுவதே இப்பிரபந்தத்தின் சாரம் ஆகும்.  திருபள்ளியெழுச்சி திருவரங்கத்தில் பாம்பணையில் யோகு துயில் கொள்ளும்  திருவரங்கனை பள்ளியெழுந்து பக்தர்களுக்கு அருள வேண்டும் பாடல்கள் கொண்ட பாசுரம்.

ஆழ்வார் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து அரங்கனுக்கு மாலை தொடுத்து சமர்ப்பித்து வந்தார். குறிப்பாக துளசி மாலை தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பிப்பதில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இவ்வாறு துளசி மற்றும் புஷ்ப கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருந்த இவரை, அரங்கன் மாயம் செய்து சில நாட்கள் தேவதேவி என்ற ஒரு  தேவதாசிப்பெண்ணிடம் மயங்கச் செய்தான்.

அரங்கனை முற்றிலும் மறந்து தன்னையும்  பொருட்கள் அனைத்தையும்  அப்பெண்ணிடம் இழந்தார். முடிவில் பொருள் ஒன்றும் இல்லாத நிலையில் அவள்  ஆழ்வாரைக் கை விட்டாள். ஆனால் ஆழ்வார் தேவதேவியை மறக்க இயலாமல் வருந்தவே அரங்கன் ஒரு திருவிளையாடல் செய்தான். உயர்ந்த முனிவர்கள் போற்றும் பரந்தாமன், ஒரு சிறுவனாக உருமாறி, தன் சந்நிதியில் இருந்த பொன் வட்டிலை ஏந்திக் கொண்டு தேவதேவியின் வீட்டிற்கு சென்று விப்ர நாராயணர் அளித்ததாகக் கொடுத்தான். அவளும்  மிகவும் மகிழ்ந்து மறுபடி ஆழ்வாரை தன் வீட்டிற்கு உள்ளே வர அனுமதி அளித்தாள். மறுநாள் காலை, கோயிலில் அரங்கன் சந்நிதியில் பொன் வட்டிலைக் காணாமல், பட்டர் குழாம் அரசனிடம் முறையிட, அரசன் ஆட்களை ஏவி வட்டில் இருக்குமிடம் அறிந்து, ஆழ்வார் அதைத் திருடியதாக நினைத்து அவரை சிறையில் அடைத்தான்.

அன்றிரவு அரசனின் கனவில் அரங்கன் தோன்றி அனைத்தும் தன் திருவிளையாடல் என்பதை உணர்த்தி, ஆழ்வாரை உடனே விடுவிக்க கட்டளை இட்டான். (ஆழ்வாரது முன் வினையை நீக்கவும், சிற்றின்பம் எவ்வளவு கீழ்மையானது என்பதை உணர்த்தவும், காம குரோதமாகிய குற்றங்களை விலக்கி வாழ வேண்டும், இளமையில்  மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இறை நினைவுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்த எம்பெருமான் நடத்திய லீலை இது என்பர் பெரியோர்கள்) .  

அரசனும் அவ்வாறே செய்ய, ஆழ்வார் அரங்கனின் அருளை நினைந்து நெக்குருகி இனி தன் வாழ்நாள் எல்லாம் அரங்கனுக்கே ஆட்பட்டு இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டு பழையபடி புஷ்ப கைங்கரியத்தில் ஈடுபட்டார். இடையே அரங்கனை மறந்து உழன்றதன் காரணத்தினால் ஏற்பட்ட ஏக்கத்தினால் இனி அவரை மறக்ககூடாது என்ற பாரிப்பினால் பாடிய பாடல்களே திருமாலை பிரபந்தம்.திருமால் இராமனாக அவதாரம் செய்த பொழுது, விசுவாமித்திரர் யாகம் காக்க அவருடன் காட்டிற்கு செல்கிறார். இராம லக்ஷ்மணர்கள், விசுவாமித்திர ரிஷியுடன் இரவு பொழுதைக் காட்டில் கழிக்கின்றனர். விடியல் வேளையில், “கௌசல்யா சுப்ரஜா ராமா…உத்திஷ்ட” என்று விசுவாமித்திரர் இராமனை துயில் எழுப்புகிறார். இது போல அர்ச்சாவதாரத்தில் அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக, “திருப்பள்ளி எழுச்சி” என்னும் பிரபந்தத்தையும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளியிருக்கிறார்.

சிறு வயதில் அதிகாலைக் குளிரில் அடியேனின் ஊர் உடுமலைப்பேட்டையில், அருள்மிகு பிரசண்ட விநாயகர் கோவிலில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் செய்வோம். அப்போது தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும் சேவித்திருக்கிறோம். ஆயினும் இதுவரை இப்பாசுரங்களுக்கான பொருளை பதிவிடவில்லை என்பதால் இவ்வருட மார்கழிப்பதிவில்  நாளை முதல் சிவபெருமானின் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாராயணம் செய்யும் நேரத்தில் அரங்கனின் திருபள்ளியெழுச்சியையும் சேவித்து பாசுர விளக்கத்தையும்  காணலாம் அன்பர்களே.

 


No comments: