Saturday, January 1, 2022

மார்கழிப்பதிவுகள் - 17

                                                                

              

திருசிற்றம்பலம் 

அன்பர்கள் அனைவருக்கும்  இனிய ஆந்கில புத்தாண்டு வாழ்த்துகள் (2022). பிறக்கின்ற இந்த ஆண்டில்  அனைவருக்கும்  அனைத்து நலத்தையும்  வளத்தையும் அருள இறைவனை  பிரார்த்திக்கின்றேன். 


 





செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலாதக்
கொங்கண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமல பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(17)

பொருள்: நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர்.

நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல்.

பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக!

***********


ஸ்ரீ:






அம்பரமே,தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோ ரெம்பாவாய்!


பொருள்: உடுக்க நல் உடை, பருகும் நீர், உண்ணும் உணவு ஆகிய அனைத்தையும் எங்களுக்கு தாராளமாக அறமாக வழங்கும் எம்பெருமானே! கண்ணனின் தந்தையே! நந்தகோபாலா! எழுந்திரு.

வஞ்சிக்கொடிக் கொடி போன்ற ஆய் குலத்து பெண்கள் அனைவருக்கும் கொழுக் கொம்பாக விளக்கும் ஒளி விளக்கே! எம்பெருமாட்டியே யசோதையே! நீயும் துயில் எழாய்!

வாமனனாக வந்து வான் வெளியையும் கடந்து திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகத்தை தன் திருவடியால் அளந்த தேவதேவனே! கண்ண பெருமானே துயில் கொள்ளாமல் எழுந்திரு!

செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த செல்வா! பலதேவா! நீயும் உனது தம்பியும் உறங்காதீர்கள்.


அம்பரமூடுறுத்து ஓங்கி உலகளந்தவன்:

வாமன அவதாரத்தின் பெருமையையே இப்பாசுரத்தில் "அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே" என்று பாடுகிறார் ஆண்டாள் நாச்சியார். (பார்க்க மூன்றாம் பாசுரம்  .http://andalthiruppavai.blogspot.in/2007/12/3.html )

No comments: