திருப்பாவை # 22
ஸ்ரீ:
அங்கண் மாஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்;
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் ................(22)
பொருள்:பெருமாளே! உன்னிடம் தோல்வியடைந்த அகிலத்து அரசர்கள் எல்லாம் தத்தம் ஆணவம் தொலைத்து உன் பஞ்சனைக்கு பக்கத்தில் வந்து உன்னடியில் காத்து நிற்கின்றனர். அது போல நாங்களும் உன்னைச் சரணடைந்து நீ கண் விழிப்பதற்காக வந்து நிற்கின்றோம்.
சலங்கை போன்று சற்றே வாய் பிளந்த வரதா! செந்தாமரை கண்களால் எங்களை பார்த்தும் பாராமல் சிறிது சிறிதாக விழித்துப் பாரேன்.
அவ்வாறு சூரிய சந்திரர்கள் போன்ற இரு விழிகளால் நீ எங்களை நோக்குவாயே ஆனால் எங்கள் பாவங்கள் அனைத்தும் அகலும். அருளாளா!
விபீஷணன் சரணாகதிக்காக வந்து நிற்பது போல வந்து நிற்கின்றோம், கண்ணா நீ மெல்ல மெல்ல கண் திறந்து இரட்சிக்க வேண்டும் என்று வேண்டும் பாடல்.
16ம் பாசுரம் முதல் இப்பாசுரம் வரை கோபியர்கள் அனைவரும் நந்தகோபன் மாளிகையின் முன் நின்று கண்ணனை துயிலெழுப்பிய பாசுரங்கள் ஆகும்.
*************
உ
திருச்சிற்றம்பலம்
திருப்பள்ளியெழுச்சி # 2
அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே பள்ளியெழுந்தருள்
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது; உதயம்நின் மலர்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர்மலர, மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன்; இவையோர்
திருப்பெருந்துறை சிவபெருமானே;
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே;
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே..........(2)
பொருள்: திருப்பெருந்துறையிலே கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! அன்பர்களுக்கு அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே! அலை கடல் போன்ற கருணை வள்ளலே!
கிழக்கே அருணோதயம் துவங்கி விட்டது இருள் அகன்று விட்டது; உன் திருமுகம் ஆன உதய கிரியில் உன் கருணையாகிய சூரியன் மேலே எழுந்தொறும் உன் கண்களாகிய மலர்கள் மலர்கின்றன.
அண்ணலாகிய தேனை நாடும் (அடியார்களாகிய) அறு கால வண்டுகளின் திரள்கள் முறையே தோத்திர முழக்கம் செய்கின்றன. எனவே எங்களுக்கு அருள பள்ளி எழுந்தருள்வாயாக எம்பெருமானே !.
***********
திருப்பள்ளியெழுச்சி # 2
ஆனையின் அருந்துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
கொழுங்கொடி முல்லையின்
கொழு மலர் அணவிக்
கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப்
பள்ளிகொள் அன்னம்
ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி
விழுங்கிய முதலையின்
பிலம் புரை பேழ்வாய்
வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர்
கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (2)
பொருள்:
கொழுத்த முல்லைக்கொடியின் மலர்களை அளைந்து கொண்டு கிழக்குத்திசையிலிருந்து காற்று வருகிறது.
மலர்ப்படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த அன்னங்கள், சொட்டும் பனியில் நனைந்த தங்கள்
பெரிய சிறகுகளை உதறிக்கொண்டு எழுகின்றன. முதலையொன்று தனது பெரிய வாயிலிருக்கும் வெள்ளைப்
பல்லால் கவ்வ, அதன் விஷத்தைத் தாங்க இயலாமல் தவித்த யானையின் அரிய துயரத்தைக் கெடுத்த
அரங்கத்தம்மானே, பள்ளி எழுந்தருள்வாய்!
வைஷ்ணவ சம்பிரதாயத்தின் முக்கிய கோட்பாடான சரணாகதி
தத்துவத்தை உணர்த்தும் கஜேந்திர மோட்ச வரலாறு இப்பாசுரத்தில் இடம் பெற்றுள்ளது
2 comments:
சிறப்பான தகவல்கள். தொடரட்டும் பாசுர அமுதம்.
மிக்க நன்றி. பாசுர அமுதம் அருந்த தொடர்ந்து வாருங்கள் வெங்கட் ஐயா.
Post a Comment