ஸ்ரீ:
திருப்பாவை # 29 (பரிபூரண சரணாகதி)
|
வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துக்கள்
போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள் |
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.............(29)
பொருள்:கோவிந்தா! விடியற்காலை வேளையில் வந்து உன்னை வணங்கி உன் பொற்பாதங்களை போற்றிப் பாடும் காரணத்தைக் கூறுகிறோம் கேட்டருள்க.
பசுக்களை மேய்க்கும் இடையர்கள் குலத்தில் பிறந்த நீ உன்னைச் சரணடைந்த உன் அடியவர்களை அடிமைகளாக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது தகுதியாகாது.
இன்று மட்டுமல்ல( இப்பிறவி) என்னும் எத்தனை ஜென்மம் நாங்கள் எடுத்தாலும் உன்னோடு கூடியிருப்போம், உனக்கே அடிமைகளாகி சேவை செய்வோம். மற்ற எந்த விருப்பங்களும் மனத்தில் எழாமல் ஆட்கொண்டு அருள் பரந்தாமா!
கோவிந்தன்: மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆநிரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை கூடாரை வெல்லுஞ் சீர் கோவிந்தா என்றும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை என்னும் இரண்டு பாடல்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.
திரௌபதி நிர்க்கதியாக கௌரவர் சபையில் தவித்தபோது அவளைக் காத்த இந்த "கோவிந்தன்" என்ற திருநாமத்தை 27ல் கூடாரை வெல்லும் கோவிந்தா, 28ல் குறையொன்றும் இல்லாத கோவிந்தா, 29ல் கோவிந்தா என்று அடுத்தடுத்த மூன்று பாசுரங்களில் போற்றியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.
பூரண சரணாகதி தத்துவத்தை , திருப்பாவையின் சாரத்தை விளக்கும் பாசுரம்.
********
உ
திருசிற்றம்பலம்
திருப்பள்ளியெழுச்சி # 9
உலகுக்குயிரானாய் பள்ளியெழுந்தருள்
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்படியோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும்பே! விரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே........(9)
பொருள்: வானுலகில் உள்ள தேவர்களும் அடைய முடியாத மெய்ப்பொருளே! இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்த வள்ளலே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த அரசே!
பரம்பரை அடியவர்களான எங்களுடைய கண்ணினுள்லே நின்று காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கும் தித்திக்கும் தேனே! பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் மெய்த்தொண்டர்களின் எண்ணத்துள் என்றும் நிறைந்தவனே. உலகம் அனைத்திற்கும் உயிரானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.
*********
திருப்பள்ளியெழுச்சி # 9
ஓலக்கமருள பள்ளியெழுந்தருள்
ஏதம் இல் தண்ணுமை எக்கம்
மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர்
கெருடர்கள்
கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர்
இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம்
அருள
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே. (9)
வாத்தியம், மத்தளம்,
வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றைக்கொண்டு திக்குகள் எங்கும் இசை கூட்டி பாட்டு பாடக்கூடியவர்களான
கின்னரர்களும், கருடர்களும், கந்தர்வர்களும், மகரிஷிகளும், தேவர்களும், யக்ஷர்களும்
மற்றும் சித்தர்களும் தேவரீருடைய திருவடித்தாமரைகளை சேவிப்பதற்காக இரவுப் பொழுது முழுவதும்
மயங்கிக்கிடந்தனர். அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருள பள்ளி எழுந்தருள்வாயாக.
No comments:
Post a Comment