ஸ்ரீ:
திருப்பாவை # 25
தேவகி
ஸ்ரீபாலகிருஷ்ணர்
யசோதை - நந்தகோபன்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கில னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்............(25)
பொருள்: வடமதுரையில் தேவகியின் மகனாகப் பிறந்து ஒரு இரவிற்குள்ளாகவே கோகுலத்தில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்த எம் கண்ணனே! கேடு நினைத்த கம்சனுக்கு நெருப்புப் போல இருந்தவனே! உன் அடிமைகளாகிய நாங்கள் உன்னை வேண்டி வந்துள்ளோம். எங்களுக்கு தேவயானவற்றை அளிப்பாயாக. அவ்வாறு நீ எங்களை ஆட்கொண்டால் உனக்கு சேவை செய்து உன் புகழ் பாடி வருத்தம் தீர்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.
தேவகி மைந்தன் யசோதையின் மகன் ஆனது:கண்ணன் பிறப்பு, வளர்ப்பு, செயல்கள் அனைத்துமே இனியவை. அவன் தேவகியின் மகனாய் பிறந்தவன். இறைவனையே பிள்ளையாகப் பெற அவள் பெற்ற பேறு பெரியது, ஒப்பற்றது. அவள் பிள்ளை பெற்ற அந்த இரவும் ஒப்பற்றது. சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படவேண்டிய கண்ணனின் பிறப்பு சிறைக்குள் நிகழ்ந்தது. கண்ணனை ஓர் இரவு கூட மதுராவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. இரவோடு இரவாக பால கிருஷ்ணரை நந்த குலத்திற்கு எடுத்து சென்றார் வசுதேவர்.விழித்திருந்த காவலர்கள் அனைவரும் மாயையால் உறங்கினர்; சிறைக்கதவுகள் தானாக திறந்து கொண்டன. வெள்ளம் கரை புரண்டு பய்ந்த யமுனை நதி இரண்டாகப் பிளந்து வசுதேவருக்கு பாதை அமைத்தது. மழையிலிருந்து கண்ணனைக் காப்பாற்ற ஆதி சேஷன் வந்து குடைப் பிடித்தான்.பெண் குழந்தை பெற்ற யசோதை தன் உணர்வின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். கண்ணனை அங்கு விட்டு, வசு தேவர் அந்த பெண் குழந்தையை எடுத்து சிறை திரும்பி வந்தார்; சிறைக்கதவுகள் பூட்டிக் கொண்டன. மாயை விலகி காவலர்கள் விழித்துக் கொண்டனர். அந்தக் குழந்தை அழுதது. குழந்தை பிறந்த செய்தி மன்னனுக்கு பறந்தது. ஆசையுடன் வரவேண்டிய தாய் மாமன் ஆயதத்துடன் வந்தான். ஈவு இரக்கமில்லாமல் பெண் குழந்தை என்றும் பாராமல் கொல்ல முற்பட்டான் . குழந்தை மாயாவாக மாறி உன்னைக் கொல்லப்பிறந்தவன் கோகுலத்தில் உள்ளான் என்னும் உண்மையை உணர்த்தி மறைந்தது.இத்தனையும் நிகழ்ந்தது ஓர் இரவில் அந்த இரவு ஒப்பற்ற இரவு.
கண்ணனை தன் கண்ணின் மணியாக வளர்த்தாள் யசோதை. கண்ணன் ஒளிர்ந்து வளர்வதை அறிந்த கம்சன் அவனைக் கொல்ல கருதி, சகடம், கொக்கு, கன்று, குதிரை, விளாமரம், குருந்த மரம், பூதனை முதலிய பல அசுரர்களை அனுப்பினான் அனைவரும் கண்ணால் வதம் செய்யப்பட்டனர். வில் விழாவிற்கு கண்ணனையும், பலராமரையும் அழைத்து, மல்லர்களையும், குவலயாபீடத்தியும் ஏவி கொல்ல முயற்சி செய்தான் அதுவும் வீணானது. இவ்வாறு கம்சனைன் அனைத்து செயல்களையும் முறியடித்து அவனையும் கண்ணன் வதம் செய்து அவன் வயிற்றில் நெருப்பாக நின்றான் என்பதை பட்டர் பிரான் கோதை
"ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென நின்ற நெடுமாலே" என்று அழகு தமிழில் பாடுகின்றார் இப்பாசுரத்தில்.
*************
உ
திருசிற்றம்பலம்
திருப்பள்ளியெழுச்சி # 5
திருப்பெருந்துறை மன்னா பள்ளியெழுந்தருள்
"பூதங்கள் தோறுநின் றாய்" எனின் அல்லால்
"போக்கிலன் வரவிலன்" எனநினைப் புலவோர்
கீதங்கள்பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரி யாய்! எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே! ............(5)
பொருள்: குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசே! எண்ணத்திற்க்கும் எட்டாதவனே!
உன்னை ஞானியர்கள் நிலம், நீர், நெருப்பு,காற்று, வானம் என்னும் ஐந்து பூதங்களில் கலந்து நிற்கின்றாய் என்கின்றனர். உனக்கு தோற்றமுமில்லை, அழிவும் இல்லை என்று புலவர்கள் உன்னை புகழ்ந்து ஆடிப்பாடுகின்றனர். ஆனால் உன்னைக் நேராகக் கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதாலும் கேட்டு அறிந்திலோம்.
சிவபெருமானே! எங்கள் கண் முன்னே வந்து உனது திருக்காட்சியை வழங்கி எங்கள் குற்றங்களையெல்லாம் நீக்கி, எங்களை அடிமையாக ஏற்று அருள் செய்கின்ற எம்பெருமானே! பள்ளி எழுந்து அருள்வாயாக!
***********
திருப்பள்ளியெழுச்சி # 5
இலங்கையர்கோன் வழிபடும் எம்பெருமான் பள்ளி எழுந்தருள்
புலம்பின புட்களும்
பூம் பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக் கனைகடல்
அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல்
கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்கோன் வழிபாடு
செய் கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. (5)
பொருள்: இரவு பொழுது கழிந்து, காலை பொழுது வந்தாயிற்று. கிழக்கு திசையில் :கடலினுடைய ஓசை கலந்தது. தேனைப்பருகும் வண்டுகள் சப்தியா நிற்கும், பல வகையான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை தேவரீருடைய திருவடிகளிலே சமர்பிப்பதற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து நிற்கின்றனர்.
அதனால் இலங்கையர் கோன் என்ற விபீஷணன் வழிபாடு செய்கின்ற திருவரங்கக்தில் பாம்பணையில்
கண் வளர்ந்து அருளுகிற சுவாமியே! பள்ளி எழுந்தருளாய்.
முன் பாசுரத்தில் வண்டுகள் உணர்ந்தமை கூறப்பட்டது. இப்பாசுரத்தில்
சோலைகளில் பொழுது விடிந்தது கூட அறியாமல் மிகவும் சுகமாக உறங்கிக் கொண்டிருந்த பறவைகள்
பொழுது விடிந்ததை கண்டு உணர்ந்தமை தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment