ஸ்ரீ:
திருப்பாவை # 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்;
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிற வாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!...........(18)
பொருள்:ஆயர் குலத்தின் தலைவன் நந்தகோபாலன், மதம் பொழிகின்ற யானைகளையுடையவன், பகைவர்களைக் கண்டு பின் வாங்காத தோள் வலிமை கொண்டவன், அவனுடைய மருமகளே! நப்பின்னை பிராட்டியே! மணம் கமழும் கூந்தலை உடையவளே! கதவை திறவம்மா!
பொழுது விடிந்து விட்டது, பொற்கோழிகள் கூவுகின்றன, மாதவிப் கொடிகள் படர்ந்திருக்கும் பந்தலின் மேல் பல குயில்கள் கூவுகின்றன. பந்து பொருந்துகின்ற மெல்லிய காந்தள் போன்ற விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனின் புகழை உன்னுடன் சேர்ந்து நாங்களும் பாட வந்திருக்கின்றோம், தாமதம் செய்யாமல் செந்தாமரை போன்ற உன் கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்கும் வண்ணம் வந்து கதவைத் திறவாயாக தாயே!
விடையேழும் அடக்கிய வரலாறு: கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ் செய்து கொள்வதற்காக அவர் தந்தை குறித்தபடி, யாவருக்கும் அடங்காத ஏழு எருதுகளையும் ஏழு திருவுருவங் கொண்டு சென்று வலியடக்கித் தழுவினான் என்பது வரலாறு. சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் ஒரு வலிமை மிக்க காளையை அடக்கி நப்பின்னை பிராட்டியை கண்ணன் மணந்த செய்தி குறிப்பிடப்படுகின்றது. நந்த கோபரின் மருமகளாக நப்பின்னைப் பிராட்டி விளங்குவதை " உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன், நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்" என்று இப்ப்பாசுரத்தில் ஆண்டாள் நாச்சியார் பாடுகின்றார்.
திருப்பாவை ஜீயர்: ஒரு நாள் பகவத் இராமனுஜர் பெரிய நம்பிகள் திருமாளிகைக்கு பிக்ஷைக்கு எழுந்தருளினார். அப்போது அவர் இப்பாசுரத்தை அனுசந்தித்துக்கொண்டு இருந்தார். சரியாக சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் என்று நினைக்கும் அதே சமயத்தில் பெரிய நம்பிகளின் புத்ரி அத்துழாய் கதவை திறந்து பிக்ஷையிட வந்தார். உடனே இராமானுஜர் மூர்ச்சையடைந்து விட்டார். அத்துழாய் துணுக்குற்று உள்ளே சென்று தன் திருதகப்பனாரை அழைத்து வந்தார். அவரும் வந்து இரானுஜரை எழுப்பி உந்து மதக்களிற்றன் அனுசந்தானமோ என்றார். இராமனுஜரும் ஆம் என்றார். இவ்வாறு எந்நேரமும் திருப்பாவையை அனுசந்திப்பதால் பெரிய நம்பிகள் இராமனுஜரை திருப்பாவை ஜீயர் என்றழைத்தார்.
***********
உ
திருசிற்றம்பலம்
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கி தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாகி அலியாய் பிறங்கொளி சேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே! இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(18)
பொருள்: பெண்ணே! திருவண்ணாமலையில் எம்பெருமான் மாலும் அயனும் அரிய ஒண்ணா அருள் மலையாய், அருட்சோதிப்பிழம்பாய், எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். அவர் திருவடியில் விழுந்து வணங்கும் தேவர்களின் மகுடங்களில் உள்ள பல்வேறு இரத்தினங்களின் ஒளியானது எம்பெருமானின் திருவடி பேரொளியின் முன் வீறற்று விடுகின்றன, அவை போல கதிரவன் எழுந்ததும் விண் மீன்கள் தங்கள் ஒளி இழந்து மறைந்து விட்டன, பொழுதும் விடிந்து விட்டது.
எம்பெருமான், பெண்ணானவன், ஆணானவன், அலி மூன்றுமானவன். ஒளிதரும் கதிரவனும், மதியும் சுடருமான முக்கண்ணனானவன். விண்ணாகவும், மண்ணாகவும், மற்றுமுள்ள வேறாக உள்ள அனைத்துமானவன். அவன் நம் கண் முன்னே அருட்காட்சி தரும் நிறைந்த அமுதமுமாகி நிற்கின்றான். அந்த பெருமானுடைய பொற்திருவடிகளைப் பாடிப்பரவி, நாம் உய்ய மலர்கள் நிறைந்த இந்த நீரிலே பாய்ந்து நீராடுவோமாக.
அண்ணாமலையார் மகிமை காண செல்லுங்கள் முதல் பதிகம்
http://thiruvempavai.blogspot.in/2007/12/1.html
No comments:
Post a Comment