Friday, January 14, 2022

மார்கழிப்பதிவுகள் - 30

 ஸ்ரீ:



அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல்  நல்வாழ்த்துக்கள் 



வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!

பொருள்:பாற்கடலைக் கடைந்து அமுதளித்த மாலவனை, மாதவனை, கேசவனை, கோபாலனை, நிலவொத்த அழகு முக கோபியர்கள், அணி சூடிய அரிவையர்கள், மார்கழி நோன்பு முடித்து சென்று அந்த பெருமான் அருள் பெற்ற வரலாற்றை "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்" பாடியருளினாள்.


மாலை சூடிய ஸ்ரீ வில்லிபுத்தூர் பட்டர் பிரானின் திருமகளாம் கோதை பாடிய இந்த தூயதமிழ் பாசுரங்கள் முப்பதையும் தவறாமல் நாளும் சேவிப்பவர்கள், மலையன்ன தோளன், செந்தாமரைக் கண்ணன், செல்வக் கோமான் கோவிந்தன் அருள் பெற்று அளவிலா ஆனந்தமும் அடைவர்.


கூர்ம அவதாரம்

நாம் எல்லோரும் உய்ய எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் பத்து அவற்றில் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரத்தை இந்த பாசுரத்தில் பாடியுள்ளார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து கொண்டிருந்தது. அதனால் தங்கள் குலம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட்ட தேவர்கள் தங்கள் குறையை பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டனர், அவரும் தேவர்களை திருமாலிடம் அழைத்துச் சென்றார். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால் மரணமில்லா பெருவாழ்வு எய்தலாம் என்று மாலவன் கூறினார். தேவர்கள் மட்டும் பாற்க்கடலைக் கடைவது கடினம் என்பதால் அசுரர்களையும் இதில் கலந்து கொள்ளச் செய்ய முதிவு செய்யப்பட்டது. மந்தார மலையை மத்தாக்கவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முடிவு செய்யப்பட்டது. திருமால தந்திரமாக தேவர்களை வால் பக்கமும், அசுரர்களை தலைப்பக்கமுமாக இருந்து கடையச்செய்தார். இவ்வாறு பாற்கடலைக் கடைந்த போது திருமால் ஆமை வடிவம் எடுத்து மந்தார மலையைத் தாங்கினார் என்பது புராண வரலாறு.

தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்த போது முதலில் கடலில் இருந்து ஆலம் என்னும் விஷம் வந்தது, வலி தாங்காமல் வாசுகியும் விஷத்தைக் கக்கியது. இரண்டும் சேர்ந்து ஆலாலமாகி உலகம் முழுவதையும் சூழ்ந்து, தேவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு அவர் கழுத்திலே தாங்கி தேவர்கள் முதல் அனைத்து ஜீவ ராசிகளையும் காத்தார். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட திருமகளை மஹா விஷ்ணு ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வெளிப்பட்ட ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி,கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைர்வம் என்னுன் குதிரை ஆகியவற்றை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வந்தது மஹா விஷ்ணு, தன்வந்திரி வடிவில் ஏந்தி வந்தார். தேவரும், அசுரரும் அமுதம் முதலில் பெற குழப்பம் விளைவித்தனர், மோகினி வடிவம் எடுத்து, அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமிர்தம் அளித்தார் திருமால். இவ்வரலாற்றை இந்த நிறைவுப் பாசுரத்தில் "வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை " என்று பாடுகின்றார் ஆண்டாள்.


"கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல் பாடி நோன்பு நோற்பவர்கள் , திருமாலின் திருவருள் பெறுவர் என்று நூலின் பலனையும், நோன்பின் பயனையும் ஒருங்கே உணர்த்துவது போல், திருமால வங்கக் கடல் கடைந்து திருமகளைப் பெற்ற வரலாற்றுடன் திருப்பாவையை நிறைவு செய்கிறார் ஆண்டாள்

இப்பாசுரம் சாற்று முறையாக, வாழ்த்துரையாக ஆண்டாள் பாடியது. முந்தைய இருபத்தொன்பது பாசுரங்களையும் ஒரு ஆய்ச்சி பாவனையில் பாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் தானான தன்மையில், பெரியாழ்வாரின் திருமகளாக, திருப்பாவை இயற்றிய கவியாக பலஸ்ருதி  கூறி தலை கட்டுகிறாள்.

’ நற்கன்னுக்கிரங்குந்தேனு தோற்கன்னுக்குமிரங்குமாபோலே…’ என்று வியாக்கியானத்தில் சொன்னபடி, நாம் ஆய்ப்பாடியை சேர்ந்தவர்கள் இல்லாவிட்டாலும், ஆழ்வார் ஆசார்யர்கள் ஆண்டாளைப்போல் இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், நல்ல கன்றைப்போலே, தோல் கன்றுக்குட்டிக்கும் பசு இரங்கி பால் சுரப்பது போல், பகவான் அருளுவன் என்று சொன்னார்கள்.
.
இந்த மார்கழியில், திருப்பாவையை சொன்னவர்கள், கேட்டவர்கள், படித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதையின் அருள், அவள் உகந்த செல்வத்திருமால் கண்ணனது அருள் தட்டின்றி கிடைக்கட்டும். வாழ்வில் எல்லா மங்களங்களும் அடைந்து எங்கும் அடியார்கள் ஆசார்யர்கள் தொடர்பும், சத்வ குணமும், ஐஸ்வர்யங்களும், பகவத் கிருபையும் பெற்று இன்புற வேண்டுமாய் ப்ரார்த்திகிறோம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்


திருப்பாவை முற்றும்


திருப்பாவை தனியன்கள்


கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.


பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


மாதங்களில் சிறந்த மார்கழியின் முப்பது பாசுரங்களையும்  வந்து வாசித்து இன்புற்ற அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் ஆண்டாள் திருவடிகளில் சமர்ப்பணம்.

***********



திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 10







 புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று " நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்! திருமாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்;
ஆரமு தே; பள்ளி எழுந்தருளாயே.........(10)



பொருள்:திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! எங்கும் நிறைந்த அமுதமே! எம்பெருமானே! நீவிர் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக் கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையை உணர்ந்த திருமாலும் நான்முகனும், தாங்களும் இந்த மண்ணுலகத்தில் போய் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோம் என்று ஏங்குகின்றனர்.

இப்படி திருமால் விரும்பும்படியும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும் உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே!  அன்பர்களுக்கு தெவிட்டாத ஆரமுதமானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி முற்றியது


குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் மாணிக்கவாசகரின் திருவடிகளில் சமர்ப்பணம்.

திருப்பள்ளியெழுச்சி # 10 

ஆட்படுத்தாய்  பள்ளியெழுந்தருள்




கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ

      கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ

துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்

      துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து

      தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும

அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு

      ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே            (10)


பொருள்: சத்தமிடும் கடலில் கதிரவன் எழுந்தான். ஆகவே, வாசனையுடைய தாமரைகள் மலர்ந்தன. துடிபோன்ற இடையை உடைய  பெண்கள் நீராடித் தங்களுடைய கூந்தலைப் பிழிந்து உதறி, ஆடை உடுத்திக்கொண்டு கரையேறினார்கள், உனக்காகத் தொடுக்கப்பட்ட துளசிமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு, தோளில் பூக்கூடையுடன் வருகிற தொண்டரடிப்பொடி என்கிற இந்த அடியவனுக்கு நீ அருளினாய். ‘இவன் இரக்கத்துக்குரியவன்’ என்றெண்ணி உன் அடியவர்களில் ஒருவனாகச் சேர்த்துக்கொண்டாய். அத்திருவரங்கத்தம்மானே பள்ளி எழுந்தருள்வாயாக.

 திருப்பளளியெழுச்சி சம்பூர்ணம்.

சுபம்

2 comments:

கோமதி அரசு said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

பதிவை நிதானமாக படிக்க வேண்டும்.
மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் . குறை சொல்ல முடியாது. நிறைவுதான்.
வாழ்த்துக்கள். இறை அருளால் அவன் பணி தொடர வாழ்த்துக்கள்.

S.Muruganandam said...

மிக்க நன்றி கோமதி அம்மா.