ஸ்ரீ:
குறையொன்றும் இல்லாத கோவிந்தன்
காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள்
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)
பொருள்: இறைவா! உன் அடிமைகளாகிய நாங்கள் இடையர்கள்! கன்று பசுக்களுடன் காட்டிற்கு சென்று அவைகளை மேய்ப்பவர்கள், அதில் களிப்புறும் அறிவற்றவர்கள். அப்படிப்பட்ட ஆய்குலத்தில் எங்களுடன் நீ பிறந்திருப்பதனால் நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்கின்றோம். நீ "ஸ்ரீ:ப்பதியாய் விளங்குவதால் "குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா" உன்னுடன் உண்டான இந்த உறவு இனி ஒரு பொழுதும் மாறாது. கள்ளமற்ற காரிகைகளாகிய நாங்கள்! அன்பு மேலீட்டால் உன்னை மற்ற சிறுவர்களை அழைப்பதைப் போல் உன்னையும் அழைப்பதனால் கோபம் கொள்ளாதே அருளாளா! எங்களை காத்து எப்போதும் உன் சேவகம் செய்யும் வரம் தருவாயாக.
குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா:
மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் வளர்ந்தவன் கண்ணன் என்பதால் கோவிந்தன் என்றும் பெரிய பிராட்டியாரையே தன் வல மார்பில் கொண்டுள்ளதால் குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் என்றும் பாடுகின்றார் ஆண்டாள். திருமால் திருமகளை அடைந்த கூர்ம அவதார வரலாற்றை வரும் முப்பதாம் பாசுரத்தில் காண்க.
***********
ara
உ
திருசிற்றம்பலம்
திருப்பள்ளியெழுச்சி # 8
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும், நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!..........(8)
பொருள்: அனைத்திற்கும் முற்பட்ட முதலும், நடுவும், பிரளய காலத்திற்கு பின்னும் நிற்கும் முடிவும் ஆனவனே! அயன்,அரி,அரன் என்னும் மூவராலும் உன் தன்மையை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும்?
இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற காந்தள் விரல்களையுடைய உமையம்மையுடன் நீவீரும் வந்து உன் அடியார்களாகிய எங்கள் பழமையான குடிசைகள் தோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம் பொருளே! எம்பெருமானே! கருணை வள்ளலே!
நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைகாட்சியையும் தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த கோயிலையும் காட்டி, என் குரு மூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, என்னை ஆட்கொண்ட அமுதம் போன்றவனே! பள்ளி எழுந்தருள்க!
(குருந்த மரத்தடியில் குருவாய், எம்பெருமான் தானே வந்து மாணிக்கவாசகரை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட எளிமையை இங்கே பாடுகின்றார் இப்பாடலில்).
************
திருப்பள்ளியெழுச்சி # 8
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருள்
வம்பவிழ் வானவர் வாயுறை
வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம்
காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர்
இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று
அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (8)
பொருள்: தேவரீருக்கு சமர்பிப்பதற்காக சிறந்த மாநிதியான சங்கநிதி
மற்றும் பத்மநிதிகளை கையிலே வைத்துக்கொண்டு தேவர்களும், காமதேனுவும், ஒளி பொருந்திய
கண்ணாடி மற்றும் தேவரீருக்கு கண்டருள்வதற்கு உகக்கும் அனைத்து உபகாரங்களையும் எடுத்துக்
கொண்டு மாமுனிகளும், தும்புருவும் நாரதரும் வந்து நின்றார்கள். கதிரவனும் தன்னுடைய
ஒளியை எங்கும் பரவச் செய்து உதயமாக, இருளானது ஆகாயத்திலிருந்து நீங்கியது. அரங்கத்தம்மா!
பள்ளி எழுந்தருள்வாயாக.
இப்பாசுரங்களில் வரும் இருள் என்பது அஞ்ஞானத்தையும் சூரியன் தோன்றி இருள் விலகி ஒளி பரவுவது, அந்த அஞ்ஞானம் இறையருளால் விலகி அவனது திருவடிகளில் சரணம் அடைவதற்கு குறியீடு ஆகும்.
No comments:
Post a Comment