Showing posts with label அரங்கத்தம்மா. Show all posts
Showing posts with label அரங்கத்தம்மா. Show all posts

Wednesday, January 12, 2022

மார்கழிப்பதிவுகள் - 28

 ஸ்ரீ:

குறையொன்றும் இல்லாத கோவிந்தன்



காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள்


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)



பொருள்: இறைவா! உன் அடிமைகளாகிய நாங்கள் இடையர்கள்! கன்று பசுக்களுடன் காட்டிற்கு சென்று அவைகளை மேய்ப்பவர்கள், அதில் களிப்புறும் அறிவற்றவர்கள். அப்படிப்பட்ட ஆய்குலத்தில் எங்களுடன் நீ பிறந்திருப்பதனால் நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்கின்றோம். நீ "ஸ்ரீ:ப்பதியாய் விளங்குவதால் "குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா" உன்னுடன் உண்டான இந்த உறவு இனி ஒரு பொழுதும் மாறாது. கள்ளமற்ற காரிகைகளாகிய நாங்கள்! அன்பு மேலீட்டால் உன்னை மற்ற சிறுவர்களை அழைப்பதைப் போல் உன்னையும் அழைப்பதனால் கோபம் கொள்ளாதே அருளாளா! எங்களை காத்து எப்போதும் உன் சேவகம் செய்யும் வரம் தருவாயாக.

குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா:

மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் வளர்ந்தவன் கண்ணன் என்பதால் கோவிந்தன் என்றும் பெரிய பிராட்டியாரையே தன் வல மார்பில் கொண்டுள்ளதால் குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் என்றும் பாடுகின்றார் ஆண்டாள். திருமால் திருமகளை அடைந்த கூர்ம அவதார வரலாற்றை  வரும்  முப்பதாம் பாசுரத்தில் காண்க.

***********
ara
 உ
திருசிற்றம்பலம் 

திருப்பள்ளியெழுச்சி # 8






முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
பந்தணை விரலியும், நீயும் நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெ
ருந்துறையுறை கோயிலுங் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!..........(8)





பொருள்: அனைத்திற்கும் முற்பட்ட முதலும், நடுவும், பிரளய காலத்திற்கு பின்னும் நிற்கும் முடிவும் ஆனவனே! அயன்,அரி,அரன் என்னும் மூவராலும் உன் தன்மையை அறிய முடியவில்லை என்றால் வேறு யாரால் தான் அறிய முடியும்?


இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற காந்தள் விரல்களையுடைய உமையம்மையுடன் நீவீரும் வந்து உன் அடியார்களாகிய எங்கள் பழமையான குடிசைகள் தோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம் பொருளே! எம்பெருமானே! கருணை வள்ளலே!

நெருப்பைப் போன்ற உன் சிவந்த திருமேனியைகாட்சியையும் தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த கோயிலையும் காட்டி, என் குரு மூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, என்னை ஆட்கொண்ட அமுதம் போன்றவனே! பள்ளி எழுந்தருள்க!

(குருந்த மரத்தடியில் குருவாய்,  எம்பெருமான் தானே வந்து மாணிக்கவாசகரை திருப்பெருந்துறையில் ஆட்கொண்ட எளிமையை இங்கே பாடுகின்றார் இப்பாடலில்).  


************
திருப்பள்ளியெழுச்சி # 8

அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருள்



வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க

      மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா

எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு

      ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்

தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ

      தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி

அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே (8)

 

பொருள்: தேவரீருக்கு சமர்பிப்பதற்காக சிறந்த மாநிதியான சங்கநிதி மற்றும் பத்மநிதிகளை கையிலே வைத்துக்கொண்டு தேவர்களும், காமதேனுவும், ஒளி பொருந்திய கண்ணாடி மற்றும் தேவரீருக்கு கண்டருள்வதற்கு உகக்கும் அனைத்து உபகாரங்களையும் எடுத்துக் கொண்டு மாமுனிகளும், தும்புருவும் நாரதரும் வந்து நின்றார்கள். கதிரவனும் தன்னுடைய ஒளியை எங்கும் பரவச் செய்து உதயமாக, இருளானது ஆகாயத்திலிருந்து நீங்கியது. அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருள்வாயாக.

இப்பாசுரங்களில் வரும் இருள் என்பது அஞ்ஞானத்தையும் சூரியன் தோன்றி இருள் விலகி ஒளி பரவுவது, அந்த அஞ்ஞானம் இறையருளால் விலகி அவனது திருவடிகளில் சரணம் அடைவதற்கு குறியீடு ஆகும். 

Tuesday, January 11, 2022

மார்கழிப்பதிவுகள் - 27

ஸ்ரீ:

 திருப்பாவை # 27 ( கூடார வல்லி)  




கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.   (27)


பொருள்: உன்னை கூடி மகிழாத ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வென்று அடிமைப்படுத்தும் குணக்குன்றே கோவிந்தா!

இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் கருணையினால் அவனி மக்கள் போற்றும் பரிசுகள் அனைத்தும் அடைந்திடுவோம்.

நோன்பிற்காக ஒதுக்கிய அலங்காரங்கள் அனைத்தும் மேற்கொள்வோம். தலையில் சூடாமணி சூடுவோம், தோள் வளையங்கள் அணிவோம், தோடணிவோம்,கைகளில் வளையல்கள் அணிவோம், செவிப்பூவால் சிறப்போம், கால்களில் பாடகம் அணிவோம் இப்படி பல ஆபரணங்களை அணிவோம். மலர் சூடுவோம், புது பட்டாடையணிவோம்.

இவையெல்லாம் எதற்காக தெரியுமா? எம்பெருமானே! பால் சோறு பொங்கி அதில் பசு நெய் கலந்து முழங்கை வழிய வழிய "குறையொன்றும் இல்லாத கோவிந்தன்" உன்னுடன் கூடி உண்ணவே. மனம் குளிர்ந்து நீ எங்களுக்கு அந்த பாக்கியத்தை அருள்வாயாக!

கோவிந்தன்:

மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை "பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" (பா. 29 ) என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை "கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா" என்னும் இப்பாசுரத்தின் வரிகளாலும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை (பா.15 ) என்னும் இரண்டு பாசுரங்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.



 "கூடார வல்லி" தன்னை கோபிகையாக பாவித்து கண்ணனை வேண்டி மற்ற கோபிகையர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்த குறை ஒன்றும் இல்லாத  கோவிந்தனுடன் கூடிய நாள். 

********



உ
திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 7

உத்தரகோச மங்கைக்கரசே பள்ளியெழுந்தருள்





அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
எளிதென அமரரும் அறியார்;
இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே
எங்களை ஆண்டு கொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தரகோச
மங்கையுள்ளாய்; திருப்பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளும் ஆறு? அது கேட்போம்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!........(7)




பொருள்: தேன் சொரியும் மலர்ச் சோலைகள் சூழ்ந்த திருவுத்தரகோச மங்கை திருத்தலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் சிவபெருமானே! திருப்பெருந்துறை அரசே!

பரம்பொருளாகிய பழச்சுவை போன்று தித்திப்பானதா? தேவாமிர்தம் போன்றதா? அறிய முடியாததா? எளிதானதா? என்று தேவர்களாலும் அறிய முடியாதது. ஆனால் " இதுவே அவனுடைய திருவுருவம், இவனே அந்த கருணைக்கடல் சிவ பெருமான்" என்று நாங்கள சுட்டிக் காட்டி சொல்லும்படி எளி வந்த கருணையினால் எங்களை அடிமையாக ஏற்றுக் கொண்டு இந்த மண்ணிலே எழுந்தருள்வாய்!

நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? எம்பெருமானே! அந்த முறைமையை நீ எங்களுக்கு அருளினால் அவ்வாறே நாங்களும் ஒழுகுவோம்! எம்பெருமானே எங்களுக்கு அருள பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!  


**********  

திருப்பள்ளியெழுச்சி # 7

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே   






அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ

      அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ

இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ

      எம்பெருமான் உன கோயிலின் வாசல்

சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க

      இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்

அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (7)

 

பொருள்: இதோ, இப்பக்கம் அமரர்கள் கூட்டம். அந்தப் பக்கம் பெரும் தவம் செய்யும் முனிவர்கள், மருதகணங்கள். இதோ, ஐராவதம் என்ற யானையுடன் இந்திரன் வந்திருக்கிறான். கந்தர்வர்கள், வித்யாதரர்கள், யட்சர்கள் என எல்லாரும் உன் திருவடிகளைத் தொழ வந்துள்ளார்கள். வானில், மண்ணில் எங்கும் இடமே இல்லாதபடி அவர்கள் நிறைந்துள்ளார்கள், அரங்கத்தம்மானே, பள்ளி எழுந்து அவர்களுக்கெல்லாம் அருள்வாயாக. 


Friday, January 7, 2022

மார்கழிப்பதிவுகள் - 23

திருப்பாவை # 23

                                                                              ஸ்ரீ:


சீரிய சிங்காதனத்திருத்தல்


திருவள்ளூர் வீரராகவர்





மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.  (23)


பொருள்:
மழைக் காலத்தில் மலைக்குகையில் அயர்ந்து உறங்கும் அபார சிங்கமானது, உறக்கம் களைந்து, அக்கினி பறக்கும் கண்களை அகல விரித்து, பிடரியை சிலிர்த்து, உடல் உதறி, சோம்பல் தொலைத்து நெஞ்சு நிமிர்த்தி, நீண்ட கர்ஜனை புரிந்து கம்பீரமாக புறப்படுவது போல்

காயா மலர் போல் கருமை நிறக் கண்ணா!நீயும் எழுந்து வந்து இவ்விடம் அடைந்து இந்த அழகிய சிங்காதனத்தில் அமர்ந்து திருவோலக்கம் அருளி, நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து அறிந்து எங்களுக்கு அருள்வாயா! ஏ மாதவா!

கூடாதவர்களுக்கு சிங்கமாக விளங்கும் கண்ணன் தனது அடியவர்களுக்கு பூவைப் பூ வண்ணனாக விளங்கும் நயத்தையும்,  தன் காரியத்தை எல்லாம் ஆராய்ந்து பக்தர்களுக்கு அருளும் திறத்தையும்  பாடுகின்றார் ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில். 


 **************

                                           இணையார் திருவடி காட்ட பள்ளியெழுந்தருள்

                                                                                                உ

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 3




கூவின பூங்குயில்; கூவின கோழி
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்கு
தேவ! நற் செறி கழற் றாளினை காட்டாய்;
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய்;
எம்பெருமான்; பள்ளி எழுந்தருளாயே!..........(3)



பொருள்: மஹா தேவா! மால் அயன் உட்பட யாராலும் முழுமையாக அறிய முடியாத அண்ணாமலையானே; உண்மையான அடியவர்களாகிய எங்களுக்கு அறிந்து அனுபவிப்பதற்கு எளியவனே! திருப்பெருந்துறையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சிவபெருமானே!

அழகிய குயில்கள் மெல்லிய குரலில் பாடுகின்றன; கோழிகள் கூவுகின்றன; நீர்ப் பறவைகள் ஒலிக்கின்றன; சங்கம் முழங்குகின்றது. நட்சத்திரங்கள் ஒளி மங்கின, சூரிய ஒளி அதிகரிக்கின்றது. இவையெல்லாம் விடியலை உணர்த்துகின்றன.

எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்வாயாக! திருவுள்ளத்தில் விருப்பம் கொண்டு அடியவர்களாகிய எங்களுக்கு வீரக் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் காட்டி அருள்வீர்களாக. 


 

*************

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே



திருப்பள்ளியெழுச்சி # 3




சுடர்-ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம்
      துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ
      பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின்
மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற
      வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல்-ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை
      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (3)
 

பொருள்: அனைத்து  திசைகளிலும் கதிரவனின் சுடரொளி பரவுகிறது. இருள் அகன்றுவிட்டது. நெருங்கிய நட்சத்திரங்களின் வெளிச்சம் சுருங்கியது. குளிர்ந்த சந்திரனின் நிலவொளியும் குறைந்துவிட்டது.  பசுமையான பொழில்களில் இருக்கும் பாக்கு மரங்களின் மடல்களைக் காலை நேரக்காற்று கீறுகிறது. அதனால் அவற்றின் மணம் எங்கும் கமழ்கிறது.  சிறப்பையும் ஒளியையும் கொண்ட சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய அரங்கத்தம்மானே, பள்ளி எழுந்தருள்வாய்! 


Tuesday, January 4, 2022

அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே

தொண்டரடிப்பொடியாழ்வார் 




தமேவமத்வா பரவாஸுதேவம்

ரங்கேசயம் ராஜவதர்கணீயம்-

ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்

பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.

 

பொருள்: ஸ்ரீவைகுண்டத்தில் வீற்றிருக்கும் பரவாசுதேவனாகிய எம்பெருமானே இராஜாதிராஜனாக திருவரங்கத்தில் வீற்றிருக்கிறான் என்பதை முழுமையாக உணர்ந்து, அவனைத் துயில் எழுப்பும் (திருப்பள்ளியெழுச்சி என்னும்) பாசுர மாலையை அருளிச்செய்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் போற்றி வணங்குகிறேன்.

 

மண்டங் குடியென்பர் மாமறையோர், மன்னியசீர்த் 

தொண்ட ரடிப்பொடி தொன்னகரம், - வண்டு 

திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி 

உணர்த்தும் பிரானுதித்த வூர்.

 

பொருள்: தேன் வண்டுகள் விரும்பி மீண்டும் மீண்டும் விஜயம் செய்யும் பூஞ்சோலைகள் நிரம்பிய திருவரங்கத்தில் உள்ள இறைவனைத் துயில் எழுப்பும் பாசுரங்களைப் படைத்தவரும், உன்னத குணங்கள் அமையப் பெற்றவருமான தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த நகரம் மண்டங்குடி. வேத விற்பன்னர்கள் நிறைந்த பாரம்பரியச் சிறப்புடைய ஊர். (அத்திருத்தலத்தைப் போற்றுகிறேன்.)

தொண்டரடிப்பொடியாழ்வார் மார்கழி மாத  கேட்டை நட்சத்திரத்தில் திருமண்டங்குடியில்  திருமாலின் வனமாலையின் அம்சமாக அவதரித்தவர். "அரங்கனைப் பாடிய வாயால் மற்றொரு குரங்கனைப் பாடேன்" என்று பரம வைராக்கியமாய் திருவரங்கனை மட்டுமே பாடிய ஒரே ஆழ்வார். இவர் பாடிய பாசுரங்கள் இரண்டு. ஒன்று திருமாலை, மற்றது திருப்பள்ளியெழுச்சி. திருமாலையை (பாசுரம்)  அறியாதார் திருமாலையே (மஹாவிஷ்ணு) அறியாதார் என்பது இப்பாசுரத்ததிற்கு உள்ள சிறப்பு.  நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை கூறுவதே இப்பிரபந்தத்தின் சாரம் ஆகும்.  திருபள்ளியெழுச்சி திருவரங்கத்தில் பாம்பணையில் யோகு துயில் கொள்ளும்  திருவரங்கனை பள்ளியெழுந்து பக்தர்களுக்கு அருள வேண்டும் பாடல்கள் கொண்ட பாசுரம்.

ஆழ்வார் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து அரங்கனுக்கு மாலை தொடுத்து சமர்ப்பித்து வந்தார். குறிப்பாக துளசி மாலை தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பிப்பதில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. இவ்வாறு துளசி மற்றும் புஷ்ப கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருந்த இவரை, அரங்கன் மாயம் செய்து சில நாட்கள் தேவதேவி என்ற ஒரு  தேவதாசிப்பெண்ணிடம் மயங்கச் செய்தான்.

அரங்கனை முற்றிலும் மறந்து தன்னையும்  பொருட்கள் அனைத்தையும்  அப்பெண்ணிடம் இழந்தார். முடிவில் பொருள் ஒன்றும் இல்லாத நிலையில் அவள்  ஆழ்வாரைக் கை விட்டாள். ஆனால் ஆழ்வார் தேவதேவியை மறக்க இயலாமல் வருந்தவே அரங்கன் ஒரு திருவிளையாடல் செய்தான். உயர்ந்த முனிவர்கள் போற்றும் பரந்தாமன், ஒரு சிறுவனாக உருமாறி, தன் சந்நிதியில் இருந்த பொன் வட்டிலை ஏந்திக் கொண்டு தேவதேவியின் வீட்டிற்கு சென்று விப்ர நாராயணர் அளித்ததாகக் கொடுத்தான். அவளும்  மிகவும் மகிழ்ந்து மறுபடி ஆழ்வாரை தன் வீட்டிற்கு உள்ளே வர அனுமதி அளித்தாள். மறுநாள் காலை, கோயிலில் அரங்கன் சந்நிதியில் பொன் வட்டிலைக் காணாமல், பட்டர் குழாம் அரசனிடம் முறையிட, அரசன் ஆட்களை ஏவி வட்டில் இருக்குமிடம் அறிந்து, ஆழ்வார் அதைத் திருடியதாக நினைத்து அவரை சிறையில் அடைத்தான்.

அன்றிரவு அரசனின் கனவில் அரங்கன் தோன்றி அனைத்தும் தன் திருவிளையாடல் என்பதை உணர்த்தி, ஆழ்வாரை உடனே விடுவிக்க கட்டளை இட்டான். (ஆழ்வாரது முன் வினையை நீக்கவும், சிற்றின்பம் எவ்வளவு கீழ்மையானது என்பதை உணர்த்தவும், காம குரோதமாகிய குற்றங்களை விலக்கி வாழ வேண்டும், இளமையில்  மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இறை நினைவுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்த எம்பெருமான் நடத்திய லீலை இது என்பர் பெரியோர்கள்) .  

அரசனும் அவ்வாறே செய்ய, ஆழ்வார் அரங்கனின் அருளை நினைந்து நெக்குருகி இனி தன் வாழ்நாள் எல்லாம் அரங்கனுக்கே ஆட்பட்டு இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டு பழையபடி புஷ்ப கைங்கரியத்தில் ஈடுபட்டார். இடையே அரங்கனை மறந்து உழன்றதன் காரணத்தினால் ஏற்பட்ட ஏக்கத்தினால் இனி அவரை மறக்ககூடாது என்ற பாரிப்பினால் பாடிய பாடல்களே திருமாலை பிரபந்தம்.திருமால் இராமனாக அவதாரம் செய்த பொழுது, விசுவாமித்திரர் யாகம் காக்க அவருடன் காட்டிற்கு செல்கிறார். இராம லக்ஷ்மணர்கள், விசுவாமித்திர ரிஷியுடன் இரவு பொழுதைக் காட்டில் கழிக்கின்றனர். விடியல் வேளையில், “கௌசல்யா சுப்ரஜா ராமா…உத்திஷ்ட” என்று விசுவாமித்திரர் இராமனை துயில் எழுப்புகிறார். இது போல அர்ச்சாவதாரத்தில் அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக, “திருப்பள்ளி எழுச்சி” என்னும் பிரபந்தத்தையும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளியிருக்கிறார்.

சிறு வயதில் அதிகாலைக் குளிரில் அடியேனின் ஊர் உடுமலைப்பேட்டையில், அருள்மிகு பிரசண்ட விநாயகர் கோவிலில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் செய்வோம். அப்போது தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும் சேவித்திருக்கிறோம். ஆயினும் இதுவரை இப்பாசுரங்களுக்கான பொருளை பதிவிடவில்லை என்பதால் இவ்வருட மார்கழிப்பதிவில்  நாளை முதல் சிவபெருமானின் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாராயணம் செய்யும் நேரத்தில் அரங்கனின் திருபள்ளியெழுச்சியையும் சேவித்து பாசுர விளக்கத்தையும்  காணலாம் அன்பர்களே.