Showing posts with label அரங்கத்தம்ம. Show all posts
Showing posts with label அரங்கத்தம்ம. Show all posts

Friday, January 14, 2022

மார்கழிப்பதிவுகள் - 30

 ஸ்ரீ:



அன்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல்  நல்வாழ்த்துக்கள் 



வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!

பொருள்:பாற்கடலைக் கடைந்து அமுதளித்த மாலவனை, மாதவனை, கேசவனை, கோபாலனை, நிலவொத்த அழகு முக கோபியர்கள், அணி சூடிய அரிவையர்கள், மார்கழி நோன்பு முடித்து சென்று அந்த பெருமான் அருள் பெற்ற வரலாற்றை "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்" பாடியருளினாள்.


மாலை சூடிய ஸ்ரீ வில்லிபுத்தூர் பட்டர் பிரானின் திருமகளாம் கோதை பாடிய இந்த தூயதமிழ் பாசுரங்கள் முப்பதையும் தவறாமல் நாளும் சேவிப்பவர்கள், மலையன்ன தோளன், செந்தாமரைக் கண்ணன், செல்வக் கோமான் கோவிந்தன் அருள் பெற்று அளவிலா ஆனந்தமும் அடைவர்.


கூர்ம அவதாரம்

நாம் எல்லோரும் உய்ய எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் பத்து அவற்றில் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரத்தை இந்த பாசுரத்தில் பாடியுள்ளார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து கொண்டிருந்தது. அதனால் தங்கள் குலம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட்ட தேவர்கள் தங்கள் குறையை பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டனர், அவரும் தேவர்களை திருமாலிடம் அழைத்துச் சென்றார். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால் மரணமில்லா பெருவாழ்வு எய்தலாம் என்று மாலவன் கூறினார். தேவர்கள் மட்டும் பாற்க்கடலைக் கடைவது கடினம் என்பதால் அசுரர்களையும் இதில் கலந்து கொள்ளச் செய்ய முதிவு செய்யப்பட்டது. மந்தார மலையை மத்தாக்கவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முடிவு செய்யப்பட்டது. திருமால தந்திரமாக தேவர்களை வால் பக்கமும், அசுரர்களை தலைப்பக்கமுமாக இருந்து கடையச்செய்தார். இவ்வாறு பாற்கடலைக் கடைந்த போது திருமால் ஆமை வடிவம் எடுத்து மந்தார மலையைத் தாங்கினார் என்பது புராண வரலாறு.

தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்த போது முதலில் கடலில் இருந்து ஆலம் என்னும் விஷம் வந்தது, வலி தாங்காமல் வாசுகியும் விஷத்தைக் கக்கியது. இரண்டும் சேர்ந்து ஆலாலமாகி உலகம் முழுவதையும் சூழ்ந்து, தேவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு அவர் கழுத்திலே தாங்கி தேவர்கள் முதல் அனைத்து ஜீவ ராசிகளையும் காத்தார். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட திருமகளை மஹா விஷ்ணு ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வெளிப்பட்ட ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி,கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைர்வம் என்னுன் குதிரை ஆகியவற்றை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வந்தது மஹா விஷ்ணு, தன்வந்திரி வடிவில் ஏந்தி வந்தார். தேவரும், அசுரரும் அமுதம் முதலில் பெற குழப்பம் விளைவித்தனர், மோகினி வடிவம் எடுத்து, அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமிர்தம் அளித்தார் திருமால். இவ்வரலாற்றை இந்த நிறைவுப் பாசுரத்தில் "வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை " என்று பாடுகின்றார் ஆண்டாள்.


"கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல் பாடி நோன்பு நோற்பவர்கள் , திருமாலின் திருவருள் பெறுவர் என்று நூலின் பலனையும், நோன்பின் பயனையும் ஒருங்கே உணர்த்துவது போல், திருமால வங்கக் கடல் கடைந்து திருமகளைப் பெற்ற வரலாற்றுடன் திருப்பாவையை நிறைவு செய்கிறார் ஆண்டாள். 

இப்பாசுரம் சாற்று முறையாக, வாழ்த்துரையாக ஆண்டாள் பாடியது. முந்தைய இருபத்தொன்பது பாசுரங்களையும் ஒரு ஆய்ச்சி பாவனையில் பாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் தானான தன்மையில், பெரியாழ்வாரின் திருமகளாக, திருப்பாவை இயற்றிய கவியாக பலஸ்ருதி  கூறி தலை கட்டுகிறாள்.

’ நற்கன்னுக்கிரங்குந்தேனு தோற்கன்னுக்குமிரங்குமாபோலே…’ என்று வியாக்கியானத்தில் சொன்னபடி, நாம் ஆய்ப்பாடியை சேர்ந்தவர்கள் இல்லாவிட்டாலும், ஆழ்வார் ஆசார்யர்கள் ஆண்டாளைப்போல் இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், நல்ல கன்றைப்போலே, தோல் கன்றுக்குட்டிக்கும் பசு இரங்கி பால் சுரப்பது போல், பகவான் அருளுவன் என்று சொன்னார்கள்.
.
இந்த மார்கழியில், திருப்பாவையை சொன்னவர்கள், கேட்டவர்கள், படித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதையின் அருள், அவள் உகந்த செல்வத்திருமால் கண்ணனது அருள் தட்டின்றி கிடைக்கட்டும். வாழ்வில் எல்லா மங்களங்களும் அடைந்து எங்கும் அடியார்கள் ஆசார்யர்கள் தொடர்பும், சத்வ குணமும், ஐஸ்வர்யங்களும், பகவத் கிருபையும் பெற்று இன்புற வேண்டுமாய் ப்ரார்த்திகிறோம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்


திருப்பாவை முற்றும்


திருப்பாவை தனியன்கள்


கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.


பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


மாதங்களில் சிறந்த மார்கழியின் முப்பது பாசுரங்களையும்  வந்து வாசித்து இன்புற்ற அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் ஆண்டாள் திருவடிகளில் சமர்ப்பணம்.

***********

உ

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 10







 புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று " நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்! திருமாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்;
ஆரமு தே; பள்ளி எழுந்தருளாயே.........(10)



பொருள்:திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! எங்கும் நிறைந்த அமுதமே! எம்பெருமானே! நீவிர் உயிர்களுக்கெல்லாம் ஈடேற்றம் வழங்கி ஏற்றுக் கொள்வது, இந்த மண்ணுலகத்தின் வழியாகவே என்னும் உண்மையை உணர்ந்த திருமாலும் நான்முகனும், தாங்களும் இந்த மண்ணுலகத்தில் போய் பிறக்காததால் வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழிக்கின்றோம் என்று ஏங்குகின்றனர்.

இப்படி திருமால் விரும்பும்படியும், நான்முகன் ஆசைப்படும்படியாகவும் உன் மலர்ந்த மெய்க் கருணையும் நீயுமாக இம்மண்ணுலகத்திற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனே!  அன்பர்களுக்கு தெவிட்டாத ஆரமுதமானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!

திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி முற்றியது


குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் மாணிக்கவாசகரின் திருவடிகளில் சமர்ப்பணம்.

திருப்பள்ளியெழுச்சி # 10 

ஆட்படுத்தாய்  பள்ளியெழுந்தருள்




கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ

      கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ

துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்

      துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து

      தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும

அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு

      ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே            (10)


பொருள்: சத்தமிடும் கடலில் கதிரவன் எழுந்தான். ஆகவே, வாசனையுடைய தாமரைகள் மலர்ந்தன. துடிபோன்ற இடையை உடைய  பெண்கள் நீராடித் தங்களுடைய கூந்தலைப் பிழிந்து உதறி, ஆடை உடுத்திக்கொண்டு கரையேறினார்கள், உனக்காகத் தொடுக்கப்பட்ட துளசிமாலையைக் கையில் எடுத்துக்கொண்டு, தோளில் பூக்கூடையுடன் வருகிற தொண்டரடிப்பொடி என்கிற இந்த அடியவனுக்கு நீ அருளினாய். ‘இவன் இரக்கத்துக்குரியவன்’ என்றெண்ணி உன் அடியவர்களில் ஒருவனாகச் சேர்த்துக்கொண்டாய். அத்திருவரங்கத்தம்மானே பள்ளி எழுந்தருள்வாயாக.

 திருப்பளளியெழுச்சி சம்பூர்ணம்.

சுபம்

Thursday, January 13, 2022

மார்கழிப்பதிவுகள் - 29

 ஸ்ரீ:

திருப்பாவை # 29 (பரிபூரண சரணாகதி)

வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துக்கள்

போகிப் பண்டிகை   நல்வாழ்த்துக்கள்


சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.............(29)


பொருள்:கோவிந்தா! விடியற்காலை வேளையில் வந்து உன்னை வணங்கி உன் பொற்பாதங்களை போற்றிப் பாடும் காரணத்தைக் கூறுகிறோம் கேட்டருள்க.

பசுக்களை மேய்க்கும் இடையர்கள் குலத்தில் பிறந்த நீ உன்னைச் சரணடைந்த உன் அடியவர்களை அடிமைகளாக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது தகுதியாகாது.

இன்று மட்டுமல்ல( இப்பிறவி) என்னும் எத்தனை ஜென்மம் நாங்கள் எடுத்தாலும் உன்னோடு கூடியிருப்போம், உனக்கே அடிமைகளாகி சேவை செய்வோம். மற்ற எந்த விருப்பங்களும் மனத்தில் எழாமல் ஆட்கொண்டு அருள் பரந்தாமா!


கோவிந்தன்: மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆநிரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை கூடாரை வெல்லுஞ் சீர் கோவிந்தா என்றும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை என்னும் இரண்டு பாடல்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.

திரௌபதி  நிர்க்கதியாக கௌரவர் சபையில் தவித்தபோது அவளைக் காத்த இந்த "கோவிந்தன்" என்ற திருநாமத்தை 27ல் கூடாரை வெல்லும் கோவிந்தா, 28ல் குறையொன்றும் இல்லாத கோவிந்தா, 29ல் கோவிந்தா என்று அடுத்தடுத்த மூன்று பாசுரங்களில் போற்றியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.


பூரண சரணாகதி தத்துவத்தை , திருப்பாவையின் சாரத்தை விளக்கும் பாசுரம்.  


********

 உ
திருசிற்றம்பலம் 

திருப்பள்ளியெழுச்சி # 9

உலகுக்குயிரானாய் பள்ளியெழுந்தருள்




விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்படியோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும்பே! விரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே........(9)





பொருள்: வானுலகில் உள்ள தேவர்களும் அடைய முடியாத மெய்ப்பொருளே! இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்த வள்ளலே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்த அரசே!

பரம்பரை அடியவர்களான எங்களுடைய கண்ணினுள்லே நின்று காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கும் தித்திக்கும் தேனே! பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யும் மெய்த்தொண்டர்களின் எண்ணத்துள் என்றும் நிறைந்தவனே. உலகம் அனைத்திற்கும் உயிரானவனே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.

*********


திருப்பள்ளியெழுச்சி # 9

ஓலக்கமருள பள்ளியெழுந்தருள்




ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி

      யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்

      கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்

மாதவர் வானவர் சாரணர் இயக்கர்

      சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்

ஆதலில் அவர்க்கு நாள்-ஓலக்கம் அருள

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.             (9)

 

வாத்தியம், மத்தளம், வீணை, புல்லாங்குழல் ஆகியவற்றைக்கொண்டு திக்குகள் எங்கும் இசை கூட்டி பாட்டு பாடக்கூடியவர்களான கின்னரர்களும், கருடர்களும், கந்தர்வர்களும், மகரிஷிகளும், தேவர்களும், யக்ஷர்களும் மற்றும் சித்தர்களும் தேவரீருடைய திருவடித்தாமரைகளை சேவிப்பதற்காக இரவுப் பொழுது முழுவதும் மயங்கிக்கிடந்தனர். அவர்களுக்கு பகல் ஓலக்கம் அருள பள்ளி எழுந்தருள்வாயாக.

Monday, January 10, 2022

மார்கழிப்பதிவுகள் - 26

                                                                            ஸ்ரீ:

                                                               திருப்பாவை # 26

   


    




மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்............(26)


பொருள்: மாலவனே! கருமை நிறக் கண்ணா! மார்கழி நோன்பு நோற்று நீராட வந்த பாவையர்களுக்கு என்ன வேண்டுமென்று எடுத்துரைக்கிறோம். கேள்.

படைப்போர்புக்கு முழங்கும் உன் இடக்கையில் விளங்கும் பாஞ்சசன்னியத்தை போல் முழங்கும் சங்கம் வேண்டும். பெரும் முரசுகள் வேண்டும். உன்னைப் போற்றிப் பல்லாண்டு பாடும் கலைஞர்கள் வேண்டும். அழகிய மங்கள தீபங்கள் வேண்டும்.ஆடிப்பறக்கும் கொடிகள் வேண்டும்.பனி படாமல் எங்களைக் காக்க எங்கள் தலை மேல் கூரையும் வேண்டும்.பாலனாக ஆலிலையில் பள்ளிகொண்ட பரந்தாமா! இவற்றை எங்களுக்கு நீ அருள்வாயாக.

ஆலினிலையாய்: பிரளய காலத்தில் சகல அண்டங்களையும் தனது வயிற்றில் அடக்கி சிறு குழந்தையைப் போல ஆலிலையில் பள்ளி கொள்ளும் மாயன்.   


பாஞ்சசன்னியத்தின் கதை:  பஞ்சசன்யன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் சென்று மறைந்து கொண்டான். ஸ்ரீகிருஷ்ணர் சாந்தீபனி முனிவரிடம் மாணவராக சேர்ந்தார். குரு தட்சணையாக தன் மகனை கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் வேண்டும் என்று வேண்டினார். கிருஷ்ணனும் பிரபாச ஷேத்திரம் சென்று பஞ்சசனைக் கொன்று அவனை சங்காக்கி தன் திருக்கரத்தில் ஏந்தினார்.பிறகு எம லோகம் சென்று சாந்தீபனியின் மகனை பெற்று குருவுக்கு திருப்பி யளித்தார். அசுரசங்கு என்பதால் குருக்ஷேத்திர போர்களத்தில் அதை ஒலிக்கும் போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின. 




************

 உ
திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 6 

அணங்கின் மணவாளா பள்ளியெழுந்தருள்




பப்பற வீட்டிந் துணரும் நின் அடியார்
பந்தணை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப் பறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்ம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே!........(6)



பொருள்: மலையரசன் பொற்பாவை பார்வதி தேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலரும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!

பரபரப்பை அறவே விட்டு அகக்கண்ணில் உன்னையே கண்டுணரும் மெய்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக் கட்டுக்களை அறுத்த பலரும் கூட மானிட இயல்பினால் மாயையிலே அகப்பட்டு மை தீட்டிய கண்களை உடைய பெண்களாகிய நாயகி பாவம் கொண்டு உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர்.

இந்தப்பிறவிப் பிணியிலிருந்து எம்மை காத்து, முக்தியை தந்தருள, எம்மை ஆட்கொண்டு அருள் புரிய எம்பெருமானே! பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக.


பந்த பாசத்தை விட்டு அந்த இறைவன் திருவடியில் சரணடைந்து மாயையிலிருந்து விடுபட அவன் அருளால் மட்டுமே முடியும் என்பதை உணர்த்தும் பதிகம். 
 
*********

திருப்பள்ளியெழுச்சி # 6 

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருள்






இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ

      இறையவர் பதினொரு விடையரும் இவரோ

மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ

      மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி

புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்

      குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்

அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (6)

பொருள் : எம்பெருமானே, உன்னைத் தரிசிக்க அழகான, நீண்ட தேரிலே பன்னிரண்டு ஆதித்யர்களும் வந்திருக்கிறார்கள். உலகை நிர்வகிக்கும் பதினொரு ருத்ரர்களும் வந்திருக்கிறார்கள். மயில் வாகனத்தில் ஆறுமுகன் வந்திருக்கிறான். மருத்கணங்கள் ஒன்பது பேரும் வந்திருக்கிறார்கள். அஷ்டவசுக்களும் வந்திருக்கிறார்கள். இவர்களுடைய வாகனங்களான குதிரைகளும் தேர்களும் ஆடலும் பாடலுமாக நிற்கின்றன. தேவசேனைகள் வந்துள்ளன. பெரிய மலை போன்ற உன்கோயில் முன்னர் இவர்கள் எல்லாரும் வெள்ளமாகப் பெருகியிருக்கிறார்கள். அரங்கத்தம்மானே, பள்ளிஎழுந்து  அருள்வாயாக!

                    



Saturday, January 8, 2022

மார்கழிப்பதிவுகள் - 24

 ஸ்ரீ:

திருப்பாவை # 24




அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய். (24)

பொருள்:'
திரிவிக்கிரமனாக மூன்று அடிகளால் மூவுலகங்களையும் அளந்த திருவடியை போற்றி வணங்குகின்றோம். இலங்கையை அழித்த உனது திறமையைப் போற்றுகின்றோம். மாய வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து மாய்த்து உனது புகழைப் போற்றுகின்றோம். கன்றில் உருவத்தில் வந்த வத்ராசுரனை எறிந்து விளங்கனி விழ வைத்த உனது திறத்தைப் போற்றுகின்றோம். ஆயர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்த உன் கருணை குணத்தைப் போற்றுகின்றோம். பகைவர்களை அழிக்க உன் கையில் விளங்கும் உனது திவ்ய ஆயுதங்களை வணங்குகின்றோம். என்றென்றும் உனக்கு அடிமையாக இருந்து உன் சேவை புறப்பட்டு இன்று வந்தோம் எங்களுக்கு இரங்கி அருள் புரிவாயா! மதுசூதனா!


புராண வரலாறுகள்:

அன்றிவுலகமளந்தவன்: வாமன அவதாரத்தின் பெருமையே இப்பாசுரத்திலும் "அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி " என்னும் பாசுர வரிகளால் உணர்த்துகின்றார் ஆண்டாள் நாச்சியார். பார்க்க மூன்றாவது பாசுரம்.

சென்றங்கு தென்னிலங்கை செற்றவன்: மேலும் நாங்கள் தேடி வந்த இந்த திருவடிகள் முன்பு சீதா தேவியார் பொருட்டு, தென்னிலங்கை சென்று இராவணனை அழித்து அந்நகரை தீக்கு இரை ஆக்கிய திருவடிகள் என்னும் இராமாவதாரப் பெருமையும் "சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி" என்று போற்றுகின்றார் ஆண்டாள்.


பொன்றச் சகடம் உதைத்தவன்: கஞ்சனால் ஏவப்பட்ட வஞ்சப் பேய் மகள் கண்ணன் கையால் மாண்டதால் கோபம் கொண்ட அவன் மற்றொரு அசுரனை அனுப்பினான் கண்ணனைக் கொல்ல. அவனும் சகட(சக்கர) வடிவம் எடுத்து கண்ணனை ஏற்றிக் கொல்ல உருண்டு வந்தான் அதனை அறிந்த கண்ணன் தனது பிஞ்சுக் கால்களால் அவனை உதைத்து அவனை வதம் செய்தார். இந்த வரலாற்றையே சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் "பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!" என்று மங்களாசாசனம் செய்கிறாள்.


கன்று குணிலாய் எறிந்தவன்:
கண்ணனாகிய குழந்தையைக் கொல்ல கம்சனால் ஏவப்பட்ட அசுரர்கள் ஒவ்வொருவராக வந்து மாண்டதால், பின் இரண்டிரண்டாக வரத் தலைப்பட்டனர். கபித்தாசுரன், வத்ராசுரன் என்னும் இரு அரக்கர்கள் இவ்வாறு திட்டம் போட்டு வந்தனர். கபித்தாசுரன் விளா மரமாக நிற்க, கன்றுக் குட்டி போல வத்ராசுரன் உருவெடுத்து சென்று கண்ணனை போக்குக் காட்டி விளா மரத்திற்கு அருகில் வரச் செய்து, வேரோடு கண்ணன் மேல் சாய்ந்து அவரைக் கொல்ல திட்டம் தீட்டி வந்தனர். எல்லாம் அறிந்த மாய க்கண்ணன், மரம் அருகில் வந்து, கோபாலர்கள் விளாம் பழத்தைக் குறி வைத்து அடிக்க சிறு தடியை உபயோகிப்பது போல, கன்று போல வந்த அசுரனை தடியாக மாற்றி விளா மரத்தின் மேல் எறிந்து இருவரையும் வதம் செய்தார் என்ற புராண வரலாற்றை, "கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி" என்னும் பாசுர வரியில் எடுத்துக் காட்டுகின்றார் கோதை ஆண்டாள்.


குன்று குடையாய் எடுத்தவன்: திருவாய்ப்பாடியில் ஆயர்கள் எல்லாரும் கூடி மழையின் பொருட்டு, இந்திரனை வழிபட வழக்கபடி சமைத்தனர்; சமைத்த அச்சோற்றைக் கண்ணபிரான், இந்திரனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தன மலைக்கு இடச்சொல்லித் தானே ஒரு தெய்வ வடிவு கொண்டு அமுது செய்தருளினார். இதனையறிந்த இந்திரன் கோபங்கொண்டு, பல மேகங்களை ஏவிக் கண்ணன் விரும்பி மேய்க்கின்ற கன்றுகளுக்கும், பசுக்களுக்கும், இடையருக்கும், இடைச்சியர்களுக்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழு நாட்கள் இடைவிடாது பெய்வித்தான். அப்பொழுது, கண்ணன் கோவர்த்தனம் என்னும் அம்மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா உயிர்களையும் காத்தருளினார். அக்கருணையை னைத்து போற்றுகின்ற'ர் ஆண்டாள்"குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்ற இப்பாசுர வரிகளால்.
 

*********

உ
திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 4



இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!.........(4)



பொருள்:அடிமையான என்னையும் ஆண்டு கொண்டு அருள் புரியும் திருப்பெருந்துறையில் கோவில் கொண்ட சிவபெருமானே!

உனது சந்நிதியில் வணங்கும் அடியவர்கள்தான் எத்தனை விதம். இனிமையான இசையை பொழிந்து கொண்டிருக்கும் வீணையையுடையவர்கள் ஒரு பக்கம்; யாழினை உடையவர்கள் ஒரு பக்கம்; வேத மந்திரங்களுடன், துதிப்பாடல்களையும் பாடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம்; நெருங்க தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் ஏந்தி உனது தரிசனத்திற்காக காத்து நிற்பவர் ஒரு பக்கம்; தலை வணங்கி தொழுபவர்களும், அன்பு மேலீட்டால் அழுபவர்களும், மெய் மறந்து துவள்பவர்களும் ஒரு பக்கம்; தலையின் மீது இரு கைகளையும் குவித்து அஞ்சலி செலுத்துவோர்கள் ஒரு பக்கம்.

இவ்வாறு அடியார்களை ஆட்கொண்ட வள்ளலே! ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க.

எம்பெருமானைத் தரிசிக்கத் திருப்பெருந்துறைக்கு வந்திருக்கும் தொண்டர் கூட்டத்தையும் அவர்களுடைய பரவசத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறார் மாணிக்கவாசகர்.



**********
திருப்பள்ளியெழுச்சி # 4




அயோத்தியெம் அரசே பள்ளியெழுந்தருள்

 மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்

      வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்

ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்

      இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை

வாட்டிய வரிசிலை வானவர் ஏறே

      மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்

ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.             (4)

 

சிறந்த, இளைய எருமைகளை ஆயர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகிறார்கள். அவர்கள் ஊதும் புல்லாங்குழல் ஓசையும், எருதுகளின் கழுத்தில் கட்டியிருக்கிற மணியின் ஓசையும் சேர்ந்து எல்லாத் திசைகளிலும் கேட்கின்றன. வயலிலே வண்டுகள் ஆரவாரம் செய்கின்றன. இலங்கையிலிருந்த அசுரர்களின் குலத்தை வாட்டியவனே, வரிவில்லைக் கையில் ஏந்திய வானோர் தலைவனே, விஸ்வாமித்திர மாமுனியின் வேள்வியைக் காத்தவனே, அயோத்தியின் தலைவனே, எங்கள் அரசனே, அரங்கத்தம்மானே, பள்ளி எழுந்தருள்வாய்.




Thursday, January 6, 2022

மார்கழிப்பதிவுகள் - 22

 

திருப்பாவை # 22

ஸ்ரீ:








அங்கண் மாஞாலத்தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கமிருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்;
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் ................(22)


பொருள்:
பெருமாளே! உன்னிடம் தோல்வியடைந்த அகிலத்து அரசர்கள் எல்லாம் தத்தம் ஆணவம் தொலைத்து உன் பஞ்சனைக்கு பக்கத்தில் வந்து உன்னடியில் காத்து நிற்கின்றனர். அது போல நாங்களும் உன்னைச் சரணடைந்து நீ கண் விழிப்பதற்காக வந்து நிற்கின்றோம்.

சலங்கை போன்று சற்றே வாய் பிளந்த வரதா! செந்தாமரை கண்களால் எங்களை பார்த்தும் பாராமல் சிறிது சிறிதாக விழித்துப் பாரேன்.

அவ்வாறு சூரிய சந்திரர்கள் போன்ற இரு விழிகளால் நீ எங்களை நோக்குவாயே ஆனால் எங்கள் பாவங்கள் அனைத்தும் அகலும். அருளாளா!

விபீஷணன் சரணாகதிக்காக வந்து நிற்பது போல  வந்து நிற்கின்றோம், கண்ணா நீ  மெல்ல மெல்ல கண் திறந்து இரட்சிக்க வேண்டும் என்று வேண்டும் பாடல். 

16ம் பாசுரம் முதல் இப்பாசுரம் வரை கோபியர்கள் அனைவரும் நந்தகோபன் மாளிகையின் முன் நின்று கண்ணனை துயிலெழுப்பிய பாசுரங்கள் ஆகும்.

  

*************

உ
திருச்சிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 2


அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே பள்ளியெழுந்தருள்






அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
அகன்றது; உதயம்நின் மலர்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ நயனக்
கடிமலர்மலர, மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன்; இவையோர்
திருப்பெருந்துறை சிவபெருமானே;
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே;
அலைகடலே பள்ளி எழுந்தருளாயே
..........(2)


பொருள்: திருப்பெருந்துறையிலே கோயில் கொண்டுள்ள சிவபெருமானே! அன்பர்களுக்கு அருட்செல்வத்தை அருளும் திருக்கயிலைக்கரசே! அலை கடல் போன்ற கருணை வள்ளலே!

கிழக்கே அருணோதயம் துவங்கி விட்டது இருள் அகன்று விட்டது; உன் திருமுகம் ஆன உதய கிரியில் உன் கருணையாகிய சூரியன் மேலே எழுந்தொறும் உன் கண்களாகிய மலர்கள் மலர்கின்றன.

அண்ணலாகிய தேனை நாடும் (அடியார்களாகிய) அறு கால வண்டுகளின் திரள்கள் முறையே தோத்திர முழக்கம் செய்கின்றன. எனவே எங்களுக்கு அருள பள்ளி எழுந்தருள்வாயாக எம்பெருமானே !.


***********

திருப்பள்ளியெழுச்சி # 2




ஆனையின் அருந்துயர் கெடுத்த   அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே      

கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்

      கூர்ந்தது குண-திசை மாருதம் இதுவோ

எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்

      ஈன்பணி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி

விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்

      வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி

அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (2)

 

பொருள்: கொழுத்த முல்லைக்கொடியின் மலர்களை அளைந்து கொண்டு கிழக்குத்திசையிலிருந்து காற்று வருகிறது. மலர்ப்படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த அன்னங்கள், சொட்டும் பனியில் நனைந்த தங்கள் பெரிய சிறகுகளை உதறிக்கொண்டு எழுகின்றன. முதலையொன்று தனது பெரிய வாயிலிருக்கும் வெள்ளைப் பல்லால் கவ்வ, அதன் விஷத்தைத் தாங்க இயலாமல் தவித்த யானையின் அரிய துயரத்தைக் கெடுத்த அரங்கத்தம்மானே, பள்ளி எழுந்தருள்வாய்!

                     வைஷ்ணவ சம்பிரதாயத்தின் முக்கிய கோட்பாடான சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் கஜேந்திர மோட்ச வரலாறு இப்பாசுரத்தில் இடம் பெற்றுள்ளது