Showing posts with label மாலே. Show all posts
Showing posts with label மாலே. Show all posts

Monday, January 10, 2022

மார்கழிப்பதிவுகள் - 26

                                                                            ஸ்ரீ:

                                                               திருப்பாவை # 26

   


    




மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்............(26)


பொருள்: மாலவனே! கருமை நிறக் கண்ணா! மார்கழி நோன்பு நோற்று நீராட வந்த பாவையர்களுக்கு என்ன வேண்டுமென்று எடுத்துரைக்கிறோம். கேள்.

படைப்போர்புக்கு முழங்கும் உன் இடக்கையில் விளங்கும் பாஞ்சசன்னியத்தை போல் முழங்கும் சங்கம் வேண்டும். பெரும் முரசுகள் வேண்டும். உன்னைப் போற்றிப் பல்லாண்டு பாடும் கலைஞர்கள் வேண்டும். அழகிய மங்கள தீபங்கள் வேண்டும்.ஆடிப்பறக்கும் கொடிகள் வேண்டும்.பனி படாமல் எங்களைக் காக்க எங்கள் தலை மேல் கூரையும் வேண்டும்.பாலனாக ஆலிலையில் பள்ளிகொண்ட பரந்தாமா! இவற்றை எங்களுக்கு நீ அருள்வாயாக.

ஆலினிலையாய்: பிரளய காலத்தில் சகல அண்டங்களையும் தனது வயிற்றில் அடக்கி சிறு குழந்தையைப் போல ஆலிலையில் பள்ளி கொள்ளும் மாயன்.   


பாஞ்சசன்னியத்தின் கதை:  பஞ்சசன்யன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் சென்று மறைந்து கொண்டான். ஸ்ரீகிருஷ்ணர் சாந்தீபனி முனிவரிடம் மாணவராக சேர்ந்தார். குரு தட்சணையாக தன் மகனை கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் வேண்டும் என்று வேண்டினார். கிருஷ்ணனும் பிரபாச ஷேத்திரம் சென்று பஞ்சசனைக் கொன்று அவனை சங்காக்கி தன் திருக்கரத்தில் ஏந்தினார்.பிறகு எம லோகம் சென்று சாந்தீபனியின் மகனை பெற்று குருவுக்கு திருப்பி யளித்தார். அசுரசங்கு என்பதால் குருக்ஷேத்திர போர்களத்தில் அதை ஒலிக்கும் போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின. 




************

 
திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 6 

அணங்கின் மணவாளா பள்ளியெழுந்தருள்




பப்பற வீட்டிந் துணரும் நின் அடியார்
பந்தணை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா!
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப் பறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்ம்பெரு மான்; பள்ளி எழுந்தருளாயே!........(6)



பொருள்: மலையரசன் பொற்பாவை பார்வதி தேவியின் மணாளனே! செந்தாமரை மலர்கள் மலரும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!

பரபரப்பை அறவே விட்டு அகக்கண்ணில் உன்னையே கண்டுணரும் மெய்ஞானியர் பலரும், இந்த மண்ணுலகிற்கு வந்து பாசக் கட்டுக்களை அறுத்த பலரும் கூட மானிட இயல்பினால் மாயையிலே அகப்பட்டு மை தீட்டிய கண்களை உடைய பெண்களாகிய நாயகி பாவம் கொண்டு உன்னைத் தலைவனாகக் கொண்டு வணங்குகின்றனர்.

இந்தப்பிறவிப் பிணியிலிருந்து எம்மை காத்து, முக்தியை தந்தருள, எம்மை ஆட்கொண்டு அருள் புரிய எம்பெருமானே! பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக.


பந்த பாசத்தை விட்டு அந்த இறைவன் திருவடியில் சரணடைந்து மாயையிலிருந்து விடுபட அவன் அருளால் மட்டுமே முடியும் என்பதை உணர்த்தும் பதிகம். 
 
*********

திருப்பள்ளியெழுச்சி # 6 

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருள்






இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ

      இறையவர் பதினொரு விடையரும் இவரோ

மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ

      மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி

புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்

      குமர-தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்

அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே             (6)

பொருள் : எம்பெருமானே, உன்னைத் தரிசிக்க அழகான, நீண்ட தேரிலே பன்னிரண்டு ஆதித்யர்களும் வந்திருக்கிறார்கள். உலகை நிர்வகிக்கும் பதினொரு ருத்ரர்களும் வந்திருக்கிறார்கள். மயில் வாகனத்தில் ஆறுமுகன் வந்திருக்கிறான். மருத்கணங்கள் ஒன்பது பேரும் வந்திருக்கிறார்கள். அஷ்டவசுக்களும் வந்திருக்கிறார்கள். இவர்களுடைய வாகனங்களான குதிரைகளும் தேர்களும் ஆடலும் பாடலுமாக நிற்கின்றன. தேவசேனைகள் வந்துள்ளன. பெரிய மலை போன்ற உன்கோயில் முன்னர் இவர்கள் எல்லாரும் வெள்ளமாகப் பெருகியிருக்கிறார்கள். அரங்கத்தம்மானே, பள்ளிஎழுந்து  அருள்வாயாக!