Showing posts with label உலகளந்தான். Show all posts
Showing posts with label உலகளந்தான். Show all posts

Saturday, January 8, 2022

மார்கழிப்பதிவுகள் - 24

 ஸ்ரீ:

திருப்பாவை # 24




அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய். (24)

பொருள்:'
திரிவிக்கிரமனாக மூன்று அடிகளால் மூவுலகங்களையும் அளந்த திருவடியை போற்றி வணங்குகின்றோம். இலங்கையை அழித்த உனது திறமையைப் போற்றுகின்றோம். மாய வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து மாய்த்து உனது புகழைப் போற்றுகின்றோம். கன்றில் உருவத்தில் வந்த வத்ராசுரனை எறிந்து விளங்கனி விழ வைத்த உனது திறத்தைப் போற்றுகின்றோம். ஆயர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்த உன் கருணை குணத்தைப் போற்றுகின்றோம். பகைவர்களை அழிக்க உன் கையில் விளங்கும் உனது திவ்ய ஆயுதங்களை வணங்குகின்றோம். என்றென்றும் உனக்கு அடிமையாக இருந்து உன் சேவை புறப்பட்டு இன்று வந்தோம் எங்களுக்கு இரங்கி அருள் புரிவாயா! மதுசூதனா!


புராண வரலாறுகள்:

அன்றிவுலகமளந்தவன்: வாமன அவதாரத்தின் பெருமையே இப்பாசுரத்திலும் "அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி " என்னும் பாசுர வரிகளால் உணர்த்துகின்றார் ஆண்டாள் நாச்சியார். பார்க்க மூன்றாவது பாசுரம்.

சென்றங்கு தென்னிலங்கை செற்றவன்: மேலும் நாங்கள் தேடி வந்த இந்த திருவடிகள் முன்பு சீதா தேவியார் பொருட்டு, தென்னிலங்கை சென்று இராவணனை அழித்து அந்நகரை தீக்கு இரை ஆக்கிய திருவடிகள் என்னும் இராமாவதாரப் பெருமையும் "சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி" என்று போற்றுகின்றார் ஆண்டாள்.


பொன்றச் சகடம் உதைத்தவன்: கஞ்சனால் ஏவப்பட்ட வஞ்சப் பேய் மகள் கண்ணன் கையால் மாண்டதால் கோபம் கொண்ட அவன் மற்றொரு அசுரனை அனுப்பினான் கண்ணனைக் கொல்ல. அவனும் சகட(சக்கர) வடிவம் எடுத்து கண்ணனை ஏற்றிக் கொல்ல உருண்டு வந்தான் அதனை அறிந்த கண்ணன் தனது பிஞ்சுக் கால்களால் அவனை உதைத்து அவனை வதம் செய்தார். இந்த வரலாற்றையே சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் "பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!" என்று மங்களாசாசனம் செய்கிறாள்.


கன்று குணிலாய் எறிந்தவன்:
கண்ணனாகிய குழந்தையைக் கொல்ல கம்சனால் ஏவப்பட்ட அசுரர்கள் ஒவ்வொருவராக வந்து மாண்டதால், பின் இரண்டிரண்டாக வரத் தலைப்பட்டனர். கபித்தாசுரன், வத்ராசுரன் என்னும் இரு அரக்கர்கள் இவ்வாறு திட்டம் போட்டு வந்தனர். கபித்தாசுரன் விளா மரமாக நிற்க, கன்றுக் குட்டி போல வத்ராசுரன் உருவெடுத்து சென்று கண்ணனை போக்குக் காட்டி விளா மரத்திற்கு அருகில் வரச் செய்து, வேரோடு கண்ணன் மேல் சாய்ந்து அவரைக் கொல்ல திட்டம் தீட்டி வந்தனர். எல்லாம் அறிந்த மாய க்கண்ணன், மரம் அருகில் வந்து, கோபாலர்கள் விளாம் பழத்தைக் குறி வைத்து அடிக்க சிறு தடியை உபயோகிப்பது போல, கன்று போல வந்த அசுரனை தடியாக மாற்றி விளா மரத்தின் மேல் எறிந்து இருவரையும் வதம் செய்தார் என்ற புராண வரலாற்றை, "கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி" என்னும் பாசுர வரியில் எடுத்துக் காட்டுகின்றார் கோதை ஆண்டாள்.


குன்று குடையாய் எடுத்தவன்: திருவாய்ப்பாடியில் ஆயர்கள் எல்லாரும் கூடி மழையின் பொருட்டு, இந்திரனை வழிபட வழக்கபடி சமைத்தனர்; சமைத்த அச்சோற்றைக் கண்ணபிரான், இந்திரனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தன மலைக்கு இடச்சொல்லித் தானே ஒரு தெய்வ வடிவு கொண்டு அமுது செய்தருளினார். இதனையறிந்த இந்திரன் கோபங்கொண்டு, பல மேகங்களை ஏவிக் கண்ணன் விரும்பி மேய்க்கின்ற கன்றுகளுக்கும், பசுக்களுக்கும், இடையருக்கும், இடைச்சியர்களுக்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழு நாட்கள் இடைவிடாது பெய்வித்தான். அப்பொழுது, கண்ணன் கோவர்த்தனம் என்னும் அம்மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா உயிர்களையும் காத்தருளினார். அக்கருணையை னைத்து போற்றுகின்ற'ர் ஆண்டாள்"குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்ற இப்பாசுர வரிகளால்.
 

*********

உ
திருசிற்றம்பலம்

திருப்பள்ளியெழுச்சி # 4



இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே!.........(4)



பொருள்:அடிமையான என்னையும் ஆண்டு கொண்டு அருள் புரியும் திருப்பெருந்துறையில் கோவில் கொண்ட சிவபெருமானே!

உனது சந்நிதியில் வணங்கும் அடியவர்கள்தான் எத்தனை விதம். இனிமையான இசையை பொழிந்து கொண்டிருக்கும் வீணையையுடையவர்கள் ஒரு பக்கம்; யாழினை உடையவர்கள் ஒரு பக்கம்; வேத மந்திரங்களுடன், துதிப்பாடல்களையும் பாடிக்கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம்; நெருங்க தொடுக்கப்பட்ட மலர் மாலைகளை கைகளில் ஏந்தி உனது தரிசனத்திற்காக காத்து நிற்பவர் ஒரு பக்கம்; தலை வணங்கி தொழுபவர்களும், அன்பு மேலீட்டால் அழுபவர்களும், மெய் மறந்து துவள்பவர்களும் ஒரு பக்கம்; தலையின் மீது இரு கைகளையும் குவித்து அஞ்சலி செலுத்துவோர்கள் ஒரு பக்கம்.

இவ்வாறு அடியார்களை ஆட்கொண்ட வள்ளலே! ஒரு தகுதியும் இல்லாத அடியேனையும் ஆட்கொண்டு இனிய அருள் வழங்கும் எம்பெருமானே! பள்ளி எழுந்தருள்க.

எம்பெருமானைத் தரிசிக்கத் திருப்பெருந்துறைக்கு வந்திருக்கும் தொண்டர் கூட்டத்தையும் அவர்களுடைய பரவசத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறார் மாணிக்கவாசகர்.



**********
திருப்பள்ளியெழுச்சி # 4




அயோத்தியெம் அரசே பள்ளியெழுந்தருள்

 மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்

      வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்

ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்

      இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை

வாட்டிய வரிசிலை வானவர் ஏறே

      மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்

ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே

      அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.             (4)

 

சிறந்த, இளைய எருமைகளை ஆயர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகிறார்கள். அவர்கள் ஊதும் புல்லாங்குழல் ஓசையும், எருதுகளின் கழுத்தில் கட்டியிருக்கிற மணியின் ஓசையும் சேர்ந்து எல்லாத் திசைகளிலும் கேட்கின்றன. வயலிலே வண்டுகள் ஆரவாரம் செய்கின்றன. இலங்கையிலிருந்த அசுரர்களின் குலத்தை வாட்டியவனே, வரிவில்லைக் கையில் ஏந்திய வானோர் தலைவனே, விஸ்வாமித்திர மாமுனியின் வேள்வியைக் காத்தவனே, அயோத்தியின் தலைவனே, எங்கள் அரசனே, அரங்கத்தம்மானே, பள்ளி எழுந்தருள்வாய்.




Saturday, January 1, 2022

மார்கழிப்பதிவுகள் - 17

                                                                

              உ

திருசிற்றம்பலம் 

அன்பர்கள் அனைவருக்கும்  இனிய ஆந்கில புத்தாண்டு வாழ்த்துகள் (2022). பிறக்கின்ற இந்த ஆண்டில்  அனைவருக்கும்  அனைத்து நலத்தையும்  வளத்தையும் அருள இறைவனை  பிரார்த்திக்கின்றேன். 


 





செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலாதக்
கொங்கண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமல பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப்பூம் புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!..........(17)

பொருள்: நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர்.

நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல்.

பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக!

***********


ஸ்ரீ:






அம்பரமே,தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோ ரெம்பாவாய்!


பொருள்: உடுக்க நல் உடை, பருகும் நீர், உண்ணும் உணவு ஆகிய அனைத்தையும் எங்களுக்கு தாராளமாக அறமாக வழங்கும் எம்பெருமானே! கண்ணனின் தந்தையே! நந்தகோபாலா! எழுந்திரு.

வஞ்சிக்கொடிக் கொடி போன்ற ஆய் குலத்து பெண்கள் அனைவருக்கும் கொழுக் கொம்பாக விளக்கும் ஒளி விளக்கே! எம்பெருமாட்டியே யசோதையே! நீயும் துயில் எழாய்!

வாமனனாக வந்து வான் வெளியையும் கடந்து திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகத்தை தன் திருவடியால் அளந்த தேவதேவனே! கண்ண பெருமானே துயில் கொள்ளாமல் எழுந்திரு!

செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த செல்வா! பலதேவா! நீயும் உனது தம்பியும் உறங்காதீர்கள்.


அம்பரமூடுறுத்து ஓங்கி உலகளந்தவன்:

வாமன அவதாரத்தின் பெருமையையே இப்பாசுரத்தில் "அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே" என்று பாடுகிறார் ஆண்டாள் நாச்சியார். (பார்க்க மூன்றாம் பாசுரம்  .http://andalthiruppavai.blogspot.in/2007/12/3.html )