Showing posts with label கரூர். Show all posts
Showing posts with label கரூர். Show all posts

Monday, January 31, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 10

                                                    கரூவூர் ஆநிலை தரிசனம் - 2 

வாருங்கள் இனி பிரம்மாண்டமான இவ்வாலயத்தை சுற்றி வலம் வந்து தரிசிக்கலாம்.  நெடிதுயர்ந்த 120 அடி உயர ஏழு நிலை கிழக்கு இராஜ கோபுரம் இந்த கொரோனா காலத்திலும் தரிசனம் செய்ய வரும் அன்பர்களே வாருங்கள் என்று வரவேற்றது. கோபுரத்தில் அற்புதமான திருவிளையாடல் புராண, தசாவதார சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. நெடிய மதில் சுவர் உள்ளது. இரகோபுரத்திற்குள் நுழைந்தால் கொங்கு நாட்டிற்கே உரிய கல் விளக்குத் தூண்(தீப ஸ்தம்பம்). எழிலாக உயர்ந்த நான்கு கால் மண்டபத்துடன் அமைந்துள்ளது. தீப ஸ்தம்பத்தின் ஒரு பக்கத்தில் இத்தலத்தின் ஐதீகமான காமதேனு தன் நாவால் இறைவனை நக்கியபடி பூஜை செய்யும் சிற்பமும், ஒரு பக்கம் புகழ் சோழர் ஒரு தட்டில் இறந்த சிவனடியாரின் தலையை தன் தலை மேல் வைத்தவாறு பூக்குழியில் இறங்கும் சிற்பமும், சுயம்பு சிவலிங்கத்திற்கு பசு பால் சொரியும் சிற்பமும் அலங்கரிக்கின்றன.   சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்பதால் ஆலயம் முழுவதும் புது வர்ணத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது.

இப்பிரகாரத்தின் வட கிழக்கில் புகழ் சோழர் மண்டபம் என்னும் நூற்றுகால் மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில் எழிலான சிற்பங்களை கண்டு களிக்கலாம். இம்மண்டபத்தின் முகப்பில் உள்ள சுதை சிற்பங்களும் நடன கோலத்தில் ஆடல் வல்லான்,  நர்த்தன கணபதி, நர்த்தன பால முருகன், நடனமங்கையர் என்று சிறப்பாக அமைந்திருக்கின்றது.  எதிரே ஐந்து நிலை இரண்டாவது இராஜகோபுரம். அதற்கு முன்பே ஒரு மண்டபம். இக்கோபுரத்திற்கு வலப்பக்கம் நால்வர் அரங்கம் என்னும் பிரவசன மண்டபம்.  இம்முதற்பிரகாரத்தில் நந்தவனமும் பராமரிக்கப்படுகிறது. இதன் கன்னி மூலையில் கருவூரரின் சன்னதி அமைந்துள்ளது.  பௌர்ணமி தோறும் மாலை ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் கருவூரருக்கு நடைபெறுகின்றது. இப்பிரகாரத்தை வலம் வரும் போது சுவாமி, மற்றும் இரண்டு அம்பாள்களின் விமானங்களை தரிசிக்கலாம்.

இப்பிரகார வலம் முடித்து இரண்டாவது கோபுரம் வழியாக இரண்டாவது பிரகாரத்தில் நுழைந்தவுடன் தூண்களுடன் கூடிய கல்யாண மண்டபம் அம்மண்டபத்தில் பலி பீடம்,   கொடி மரம், நந்தியெம்பெருமானை தரிசிக்கின்றோம். இம்மண்டபத்தில் எட்டுக்கரங்களுடன் அருள் பாலிக்கும் காலபைரவரையும் தரிசிக்கலாம். இவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் காலையும், மாலையும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் சிறு சன்னதிகளும் உள. மண்டபத்தின் கூரையில் அருமையான ஓவியங்கள். இப்பிரகாரத்தின் தெற்கு சுற்றில்   நடராஜர் சன்னதி, அறுபத்து மூவர்கள், இவர்களில் எறிபத்த நாயனாருக்கு தனி சன்னதி உள்ளது. மேற்கில் விநாயகர், கஜலட்சுமி, வன வல்லி, கஜ வல்லி சமேத சுப்பிரமணியர். ஆறு திருமுகங்கள், பன்னிருத் திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், மயில் மேல் சாய்ந்து நின்ற கோலத்தில் தேவியருடன் அருள் பாலிக்கின்றார் முருகப்பெருமான்.  இவரை அருணகிரிநாதர் ஏழு திருப்புகழ் பாடல்களினால் போற்றியுள்ளார் அவற்றுள் ஒருப்பாடல் இதோ

 

மதியால் வித்தனாகி - மனதாலுத்தமனாகி

 

பதிவாகிச் சிவஞான - பரயோகத் தருள்வாயே

 

நிதியே நித்தியமேயென் - நினைவேநற் பொருளாயோய்

 

கதியே சொற் பரவேளே - கருவூரிற் பெருமாளே.

 

பொருள்:   அழியாத செல்வமே! அழிவில்லாப் பொருளே!     எனது உள்ளத்தில் எப்போதும் நிலைத்து இருக்கும் தியானப் பொருளே!     சிறந்த பேரின்பப் பொருளானவனே! எனக்குப் புகலிடமே! அனைவராலும் புகழப்பெறும் மேலான செவ்வேளே,      கருவூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய பெருமையில் மிக்கவரே! அறிவு நிலையிலே அடியேன் ஒரு பேரறிவாளனாகத் திகழ்ந்து,      மனத்தளவில் நன்னெறியில் ஒழுகி,  சிறந்தவனாக விளங்கி,       சிவஞானத்தில் எனது சிந்தை பதிந்து இருப்பதாகி,  மேலான யோக நிலையிலே அடியேன் மாறாது இருக்க அருள் புரிவாயாக என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

 

வடக்கு சுற்றில் பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ளன. சுவாமி கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை அருள் பாலிக்கின்றனர்.   சுவாமி சன்னதி, மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்று மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது.  கருவறையில் சுயம்பு லிங்க ரூபத்தில், சற்றே வடக்கு பக்கம் சாய்ந்தவாறு, காமதேனுவின் குளம்புத் தழும்புடன் அருள் பாலிக்கிறார் ஆநிலையப்பர். (கருவூரருக்காகச் சுவாமி சாய்ந்து கொடுத்தார் என்பது ஐதீகம்). ஆவுடையார் சதுரமாக உள்ளது.

பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்

மங்கை யர்மணி நீல கண்டர்வான்

கங்கை யார்கரு வூரு ளானிலை

அங்கை யாடர வத்தெம் மண்ணலே.

 

பொருள் : தாமரை போன்ற திருவடியர். தம் திருமேனியின் பாதியாக உமையம்மையைக் கொண்டவர். நீல மணி போன்ற கண்டத்தினர் . ஆகாய கங்கையைத் தாங்கியவர் . அழகிய கைகளின் மேல் ஆடும் பாம்பை உடையவர், அவர் கருவூர் ஆனிலையில் விளங்கும் தலைவராவார்  என்ற நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தரின் பதிகம் பாடி கொரோனாவின் கொடுமையிலிருந்து அனைவரையும் காப்பாற்றி அருள வேண்டினோம்.

 இத்தலத்தில் இரு அம்பாள்கள் அருள் பாலிப்பதாலும் சுவாமி நித்ய கல்யாண பசுபதீஸ்வரர் என்பதாலும் இவருக்கு அனு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியபின் பெருமானுக்கு திருக்கல்யாணம் செய்து பார்த்து மகிழ்கின்றனர்.

ஐயனை தரிசித்த பின் கல்யாண மண்டபத்தின் வழியாக வடப்பக்கம் உள்ள அம்பாள் சன்னதிகளுக்கு செல்கின்றோம். இரண்டு அம்பாள்கள் அருள் பாலிப்பது இத்தலத்தின்  ஒரு சிறப்பு ஆகும். கிரியா சக்தியாகிய அலங்காரவல்லி அம்பாள் கிழக்கு நோக்கியும், இச்சா சக்தியாக சௌந்தரவல்லி  என்னும் கிருபா நாயகி தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர்.  அலங்காரவல்லி அம்பாள் ஆதி காலத்தில் இருந்து உள்ள அம்பாள். இவ்வம்மன் சன்னதி சுற்றி வந்து வழிபடுமாறு அமைந்துள்ளது.  அம்மனின் பீடம் எழிலாக, இரண்டடுக்கு எட்டுப்பிரிவுடன்,   சிம்மம் மற்றும் ஸ்ரீசக்கரத்துடன் சிறப்பாக அமைந்துள்ளது. இரு அம்மன் திருச்சிலைகளும் திருவாசியுடன் அமைந்துள்ளன. அம்பாள் இருவரும் நின்ற கோலத்தில் மேற்திருக்கரங்களில் மலர்களைத்தாங்கியும், கீழ்த் திருக்கரங்கள் அபய,வரத ஹஸ்தங்களாக விளங்க அருட்காட்சி தருகின்றனர். இருவரையும்

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்

பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்

குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க

இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே – என்று போற்றி வணங்கினோம்.

 


இரண்டாவது அம்பாளான சௌந்தரநாயகி, கரூருக்கு அருகில் உள்ள  அப்பிபாளையத்தை சேர்ந்த வடிவுடை என்பவர் சிறு வயதில் இருந்தே சிவபெருமானின் மீது பக்தி கொண்டு இருந்தார். ஆண்டாள் போல மணந்தால் இறைவனையே மணப்பேன் என்று வைராக்கியமாக இருந்தார். பெற்றோர் எவ்வளவோ முயன்றும் இவரது மனதை மாற்ற முடியவில்லை.   இவரது பக்திக்கு இரங்கி இறைவன் ஒரு நாள் கிராமம் முழுமையும்  பூமாரி பொழிவித்து மறு நாள் தெய்வீக மாலை அளித்து  தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.   இப்போதும் பங்குனிப் பெருவிழாவின் ஆறாம் திருநாள் சுவாமி இக்கிராமத்திற்கு எழுந்தருளி மறு நாள் சௌந்தரநாயகியுடன் ஆலயத்திற்கு எழுந்தருளுகிறார். அம்மன் இருவரையும் மனதார வணங்கி வெளியே வந்தோம்.

தொண்டர்தம் சிந்தை நீங்கி அந்நிலை அரனார் வாழ்வது  ஆனிலை என்னும் கோவில் என்னும் புகழ் பெற்ற இத்தலத்தில்  பங்குனி உத்திர திருவிழா. 13நாட்கள் மிக சிறப்பாக நடைபெறுகிறது. இதுதவிர மார்கழி ஆருத்ரா தரிசனம், பூக்குடலை திருவிழா, பிரதோச பூஜை, பவுர்ணமி பூஜைகள் நடைபெறுகின்றது.

"தீண்டரிய வெங்கருவூர் வஞ் வினைதீர்த்தவர் சூழ்ந்த

 நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே"  

பொருள்:   கருப்பை வாசம் கொடுமையானது. இறைவனின் கருணையால் நமக்கு அந்தத் துன்பம் மறைக்கப்படுகிறது. இவ்வாறு கருப்பையில் மீண்டும் அவதியுறா வண்ணம்  புண்ணியம் செய்த பெருந்தகையோர் சூழ்ந்து விளங்கும் இறைவன் கருவூர் ஈசன். அவன் எத்தகையவன்? நவரசங்கள் ததும்பும் பாடல்களுக்கு உரியவன். - என்று வள்ளலார் திருவருட்பாவில் பாடியுள்ள ஆநிலையப்பரை திவ்யமாக சேவித்தபின் அடுத்து கொடுமுடிக்கு விரைந்தோம்.

Wednesday, November 24, 2021

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 2

 

கொங்கேழ் தலங்களின் சிறப்புகள் 

கரூர்- காமதேனு வழிபட்டது

திருமுருகன் பூண்டி - முருகப் பெருமான் வழிபட்டது



முதலில் கொங்குமண்டலத்தை பற்றிய ஒரு சிறு முன்னுரை. சுற்றிலும் மலைகளால் சூழ்ந்த பகுதி. காவிரி மற்றும் அதன் துணையாறுகள் பாய்ந்து வளமாக்கும் பகுதி. பொலிவு மிகுந்த கொங்குநாடு செழித்தால் இப்புவியெங்கும் சுகம் அடையும் என்ற பழமொழிக்கேற்ப மாடு, கன்றுகள் விருத்தி கொண்ட பகுதி. முருக வேள் ஆலயங்கள், சிவாலயங்கள், அம்மன் ஆலயங்கள், திருமால் ஆலயங்கள் நிறைந்த பகுதி. பல்வேறு கலைஞர்கள், நாவலர்கள் நிறைந்த 24 நாடுகள் கொண்ட பகுதி என்று கொங்குநாடு சதகம் என்ற பாடல் இம்மண்டலத்தின் சிறப்பை எடுத்தியம்புகிறது.

சிவனடியே சிந்திக்கும் மூவர் பெருமக்களும், மாணிக்கவாசகர் மற்றும் மற்றும் பல அன்பர்களும் பாடிய திருமுறைத்தலங்கள் மொத்தம் – 274. பொதுவாக இவை தேவாரத்தலங்கள் என்றும் பாடல் பெற்ற தலங்கள் என்றும் போற்றப்படுகின்றன.  அவற்றுள்  காவரி வடக்கரைத்தலங்கள் - 127, தென்கரைத்தலங்கள் - 63, தொண்டைநாட்டுத்தலங்கள் - 32,  நடு நாட்டுத்தலங்கள் - 22, பாண்டிநாட்டுத்தலங்கள் - 14, கொங்குநாட்டுத்தலங்கள் 7, வடநாட்டுத்தலங்கள் 5, ஈழ நாட்டுத்தலங்கள் 2,  துளு நாடு மற்றும் மலைநாட்டுத்தலங்கள் 1.

 

அவற்றுள் கொங்கு நாட்டில் அமைந்துள்ள தலங்களையும் மற்றும் அவை செல்லும் வழியில் உள்ள சிறப்பு மிக்க கோவில்களையும் தரிசிக்க சென்ற யாத்திரை இது. முதலில் கொங்கேழ் தலங்கள் யாவை என்று  காணலாமா அன்பர்களே?.

ஆதி கருவூர் அதிவெஞ்ச மாக்கூடல்
நீதிமிகு கறைசை நீள்நணா – மேதினியில்
நாதன் அவிநாசி நன்முருகன் பூண்டித்திருச்
சோதிச்செங்கோடெனவே சொல்
– என்ற பழம் பாடல் கொங்கேழ் தலங்களை பட்டியலிடுகிறது.

கொங்கு நாட்டிற்குரிய ஏழு தலங்களில், மேல்கரையரைய  நாட்டில் உள்ள கொடுமுடியும் ஒன்று. மற்றவை கருவூரா நிலை (கரூர்), வெஞ்சமாங்கூடல், திருநணா (பவானி), அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) என்பனவாம்.

இத்தலங்கள் அனைத்தும் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் என்பது முதல் சிறப்பு. மும்மூர்த்திகளும் அருள் பாலிக்கும் தலம் பாண்டிக்கொடுமுடி. இத்தலத்தை தேவார மூவரும் பாடியுள்ளனர், அதில் சுந்தரரின் ஒரு பதிகம் நமச்சிவாயப் பதிகம் ஆகும். பவானி, திருச்செங்கோடு, மற்றும் கருவூர் மூன்றும் ஆளுடையப் பிள்ளையாரின் பாடல் பெற்ற பெற்றவை. மற்ற மூன்று தலங்களான அவிநாசி, திருமுருகன்பூண்டி, மற்றும் வெஞ்சமாக்கூடல் சுந்தரரால் பாடப்பெற்றவை. இம்மூன்று தலங்களிலும் சிவபெருமான் தன் தோழரான சுந்தரரிடம் திருவிளையாடல் புரிந்து பதிகம் பெற்றார். 

முதலை உண்ட பாலனை பதிகம் பாடி இறைவனருளால் உயிர்ப்பித்த அற்புதம் நடந்த தலம் அவிநாசி. 

இறைவனே பூதகணங்களை அனுப்பி சுந்தரரின் பொருட்களை கவர்ந்து திருவிளையாடல் புரிந்து சுந்தரரின் பாடல் பெற்று பொருளை அவருக்கு திருப்பியளித்த தலம் திருமுருகன் பூண்டி. 

எம்பெருமான் தன் பிள்ளைகளை ஈடாக வைத்து பொன் பெற்று, அதை  சுந்தரருக்கு வழங்கிய தலம் வெஞ்சமாக்கூடல். இத்தலம் அமராவதி மற்றும் சிற்றாறு  கூடும் கூடலில் அமைந்துள்ளது. 

பவானித்தலம் மூன்று ஆறுகள் கூடும் முக்கூடலில் அமைந்துள்ளது. 

கொடுமுடி, பவானி, திருச்செங்கோடு ஆகிய மூன்று தலங்கள் சைவ வைணவ ஒற்றுமையை விளக்கும் தலங்கள். பெருமாளுக்கு இத்தலங்களில் தனி சன்னதி அமைந்துள்ளது இவை மூன்று என்ற எண்ணுக்கும் இத்தலங்களுக்கும் உள்ள தொடர்புகள் சில.


                              

அவிநாசி - முதலை உண்ட பாலனை உயிருடன் வரச் செய்த அற்புதம்

கொடுமுடி - பிரம்மன் வழிபட்டது

அனைத்து தலங்களும் திருப்புகழ் பாடல் பெற்றவை. கொடுமுடி மற்றும் திருச்செங்கோடு தலங்கள் இரண்டும் வாயு தேவனுக்கும் மேரு மலைக்கும் நடைபெற்ற போட்டியுடன் தொடர்புடையத் தலங்கள்.

அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமான் அருள் பாலிக்கும் திருச்செங்கோடு மலை மேல் அமைந்த ஒரு தலம். திருச்செங்கோட்டில் ஆளுடையப்பிள்ளையார் பதிகம் பாடி இறையருளால் அன்பர்களின் விஷ ஜுரம் போக்கினார். இப்பதிகம் இன்றைய கொரோனா காலத்தில் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம் ஆகும்.

மற்ற ஆறு தலங்களும் காவிரி மற்றும் அதன் உப நதிகளின் கரையில் அமைந்துள்ளன.  

அவிநாசி மற்றும் திருச்செங்கோடு தலங்கள் உயரமான தேரைக் கொண்டவை எனவே இத்தலங்களின் தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தேவார பாடலாசிரியர் கருவூரர் மற்றும் நாயன்மார்களுள் ஒருவரான  புகழ் சோழ நாயனார் மற்றும் எறிபத்த நாயனார்  கருவூர் ஆலயத்தில் வழிபட்டவர்கள்.

இத்தலங்கள் அனைத்திலும் அம்பாளின் திருமூர்த்தம் கல் திருவாசியுடன் அமைந்திருப்பது ஒரு பொது தனி சிறப்பு.திருச்செங்கோட்டில் அம்மையும் அப்பனும் அர்த்தநாரீஸ்வரராக ஏக உருவிலும் மற்ற தலங்களில் அம்மையும் அப்பனும் தனி சன்னதிகளில் ஒரே திசை நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கொடுமுடியில் அம்பாள் சுவாமிக்கு வலப்புறத்தில் சன்னதி கொண்டுள்ளதால் அது கல்யாணக்கோலம் என்றழைக்கப்படுகிறது. கொடுமுடி மற்றும் அவிநாசியில் அம்பாளுக்கு எதிரே இராஜ கோபுரம் அமைந்துள்ள

வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட ஆலயம், பக்தர்களின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட தலம் வெஞ்சமாக்கூடல். இவ்வாலயத்தின் கருவறை கதவில் கொங்கேழ் தலங்களின் இறைவர்களையும் ஒன்றாக தரிசிக்கலாம்.


அவிநாசி விளக்குத்தூண்(மண்டபத்துடன்)

கொங்கு நாட்டுத் தலங்களின் மற்றொரு தனி சிறப்பு, கொடி மரம் மட்டுமல்ல சிறப்பாக தனி கல் விளக்குத் தூண் (தீப ஸ்தம்பம்) அமைந்திருப்பது. பல ஆலயங்களில் தீப ஸ்தம்பம் தனித் தூணாக இல்லாமல் பல் வேறு கற்சிற்பங்களுடன் கூடிய  நான்கு   கால்  மண்டபத்தில் சிறப்பாக விளங்குகின்றன. இத்தூண்களின் கீழ்ப்பகுதியில் உள்ள செவ்வகப்பகுதியில் அத்தலத்தின் வரலாறு சம்பந்தமான கற்சிற்பங்கள் நான்கு திசைகளிலும் இடம் பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக அவிநாசி தலத்தில் முதலை உண்ட பாலனை உயிருடன் மீட்ட வரலாறு சிற்பத்தை விளக்குத் தூ்ணில் காணலாம். கார்த்திகை தீபத்தன்று இத்தூணின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகின்றது.

ஒவ்வொரு ஆலயத்திலும் இறைவனின் கருணையினால் பல் வேறு திருவிளையாடல் நிகழ்ந்துள்ளன அவற்றையும் அத்திருக்கோவில்களின் வரலாற்றில் விரிவாகக் காணலாம்.

தற்போதைய கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்ட எல்லைகளுக்குள் இவ்வேழு தலங்களும் உள்ளன. ஒரே நாளில் இவ்வேழு தலங்களுக்கும் பயணித்துத் தரிசனம் செய்ய இயலும். சோமவாரங்களில் அதுவும் கார்த்திகை சோமவாரத்தில் தற்போது பக்தர்கள் இவ்வாறு தரிசிக்கின்றனர்.