கொங்கேழ் தலங்களின் சிறப்புகள்
கரூர்- காமதேனு வழிபட்டது
திருமுருகன் பூண்டி - முருகப் பெருமான் வழிபட்டது
முதலில்
கொங்குமண்டலத்தை பற்றிய ஒரு சிறு முன்னுரை. சுற்றிலும் மலைகளால் சூழ்ந்த பகுதி.
காவிரி மற்றும் அதன் துணையாறுகள் பாய்ந்து வளமாக்கும் பகுதி. பொலிவு மிகுந்த
கொங்குநாடு செழித்தால் இப்புவியெங்கும் சுகம் அடையும் என்ற பழமொழிக்கேற்ப மாடு,
கன்றுகள் விருத்தி கொண்ட பகுதி. முருக வேள் ஆலயங்கள், சிவாலயங்கள், அம்மன்
ஆலயங்கள், திருமால் ஆலயங்கள் நிறைந்த பகுதி. பல்வேறு கலைஞர்கள், நாவலர்கள் நிறைந்த
24 நாடுகள் கொண்ட பகுதி என்று கொங்குநாடு சதகம் என்ற பாடல் இம்மண்டலத்தின் சிறப்பை
எடுத்தியம்புகிறது.
சிவனடியே சிந்திக்கும் மூவர் பெருமக்களும், மாணிக்கவாசகர் மற்றும் மற்றும் பல அன்பர்களும் பாடிய திருமுறைத்தலங்கள் மொத்தம் – 274. பொதுவாக இவை தேவாரத்தலங்கள் என்றும் பாடல் பெற்ற தலங்கள் என்றும் போற்றப்படுகின்றன. அவற்றுள் காவரி வடக்கரைத்தலங்கள் - 127, தென்கரைத்தலங்கள் - 63, தொண்டைநாட்டுத்தலங்கள் - 32, நடு நாட்டுத்தலங்கள் - 22, பாண்டிநாட்டுத்தலங்கள் - 14, கொங்குநாட்டுத்தலங்கள் 7, வடநாட்டுத்தலங்கள் 5, ஈழ நாட்டுத்தலங்கள் 2, துளு நாடு மற்றும் மலைநாட்டுத்தலங்கள் 1.
அவற்றுள்
கொங்கு நாட்டில் அமைந்துள்ள தலங்களையும் மற்றும் அவை செல்லும் வழியில் உள்ள
சிறப்பு மிக்க கோவில்களையும் தரிசிக்க சென்ற யாத்திரை இது. முதலில் கொங்கேழ் தலங்கள்
யாவை என்று காணலாமா அன்பர்களே?.
ஆதி கருவூர் அதிவெஞ்ச
மாக்கூடல்
நீதிமிகு கறைசை நீள்நணா – மேதினியில்
நாதன் அவிநாசி நன்முருகன் பூண்டித்திருச்
சோதிச்செங்கோடெனவே சொல் – என்ற
பழம் பாடல் கொங்கேழ் தலங்களை பட்டியலிடுகிறது.
கொங்கு நாட்டிற்குரிய ஏழு
தலங்களில், மேல்கரையரைய நாட்டில் உள்ள கொடுமுடியும் ஒன்று. மற்றவை கருவூரா
நிலை (கரூர்), வெஞ்சமாங்கூடல், திருநணா (பவானி), அவிநாசி, திருமுருகன்பூண்டி,
திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) என்பனவாம்.
இத்தலங்கள் அனைத்தும் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் என்பது முதல் சிறப்பு. மும்மூர்த்திகளும் அருள் பாலிக்கும் தலம் பாண்டிக்கொடுமுடி. இத்தலத்தை தேவார மூவரும் பாடியுள்ளனர், அதில் சுந்தரரின் ஒரு பதிகம் நமச்சிவாயப் பதிகம் ஆகும். பவானி, திருச்செங்கோடு, மற்றும் கருவூர் மூன்றும் ஆளுடையப் பிள்ளையாரின் பாடல் பெற்ற பெற்றவை. மற்ற மூன்று தலங்களான அவிநாசி, திருமுருகன்பூண்டி, மற்றும் வெஞ்சமாக்கூடல் சுந்தரரால் பாடப்பெற்றவை. இம்மூன்று தலங்களிலும் சிவபெருமான் தன் தோழரான சுந்தரரிடம் திருவிளையாடல் புரிந்து பதிகம் பெற்றார்.
முதலை உண்ட பாலனை பதிகம் பாடி இறைவனருளால் உயிர்ப்பித்த அற்புதம் நடந்த தலம் அவிநாசி.
இறைவனே பூதகணங்களை அனுப்பி சுந்தரரின் பொருட்களை கவர்ந்து திருவிளையாடல் புரிந்து சுந்தரரின் பாடல் பெற்று பொருளை அவருக்கு திருப்பியளித்த தலம் திருமுருகன் பூண்டி.
எம்பெருமான் தன் பிள்ளைகளை ஈடாக வைத்து பொன் பெற்று, அதை சுந்தரருக்கு வழங்கிய தலம் வெஞ்சமாக்கூடல். இத்தலம் அமராவதி மற்றும் சிற்றாறு கூடும் கூடலில் அமைந்துள்ளது.
பவானித்தலம் மூன்று ஆறுகள் கூடும் முக்கூடலில் அமைந்துள்ளது.
கொடுமுடி, பவானி, திருச்செங்கோடு ஆகிய மூன்று தலங்கள் சைவ வைணவ ஒற்றுமையை விளக்கும் தலங்கள். பெருமாளுக்கு இத்தலங்களில் தனி சன்னதி அமைந்துள்ளது இவை மூன்று என்ற எண்ணுக்கும் இத்தலங்களுக்கும் உள்ள தொடர்புகள் சில.
கொடுமுடி - பிரம்மன் வழிபட்டது
அனைத்து தலங்களும் திருப்புகழ்
பாடல் பெற்றவை. கொடுமுடி மற்றும் திருச்செங்கோடு தலங்கள் இரண்டும் வாயு
தேவனுக்கும் மேரு மலைக்கும் நடைபெற்ற போட்டியுடன் தொடர்புடையத் தலங்கள்.
அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமான்
அருள் பாலிக்கும் திருச்செங்கோடு மலை மேல் அமைந்த ஒரு தலம். திருச்செங்கோட்டில்
ஆளுடையப்பிள்ளையார் பதிகம் பாடி இறையருளால் அன்பர்களின் விஷ ஜுரம் போக்கினார்.
இப்பதிகம் இன்றைய கொரோனா காலத்தில் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம் ஆகும்.
மற்ற ஆறு தலங்களும் காவிரி
மற்றும் அதன் உப நதிகளின் கரையில் அமைந்துள்ளன.
அவிநாசி மற்றும் திருச்செங்கோடு
தலங்கள் உயரமான தேரைக் கொண்டவை எனவே இத்தலங்களின் தேரோட்டம் மிகவும் சிறப்பு
வாய்ந்தது.
தேவார பாடலாசிரியர் கருவூரர்
மற்றும் நாயன்மார்களுள் ஒருவரான புகழ் சோழ
நாயனார் மற்றும் எறிபத்த நாயனார் கருவூர்
ஆலயத்தில் வழிபட்டவர்கள்.
இத்தலங்கள் அனைத்திலும் அம்பாளின்
திருமூர்த்தம் கல் திருவாசியுடன் அமைந்திருப்பது ஒரு பொது தனி சிறப்பு.
வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட ஆலயம், பக்தர்களின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட தலம் வெஞ்சமாக்கூடல். இவ்வாலயத்தின் கருவறை கதவில் கொங்கேழ் தலங்களின் இறைவர்களையும் ஒன்றாக தரிசிக்கலாம்.
கொங்கு நாட்டுத் தலங்களின் மற்றொரு தனி சிறப்பு, கொடி மரம் மட்டுமல்ல சிறப்பாக தனி கல் விளக்குத் தூண் (தீப ஸ்தம்பம்) அமைந்திருப்பது. பல ஆலயங்களில் தீப ஸ்தம்பம் தனித் தூணாக இல்லாமல் பல் வேறு கற்சிற்பங்களுடன் கூடிய நான்கு கால் மண்டபத்தில் சிறப்பாக விளங்குகின்றன. இத்தூண்களின் கீழ்ப்பகுதியில் உள்ள செவ்வகப்பகுதியில் அத்தலத்தின் வரலாறு சம்பந்தமான கற்சிற்பங்கள் நான்கு திசைகளிலும் இடம் பெற்றுள்ளன. எடுத்துக் காட்டாக அவிநாசி தலத்தில் முதலை உண்ட பாலனை உயிருடன் மீட்ட வரலாறு சிற்பத்தை விளக்குத் தூ்ணில் காணலாம். கார்த்திகை தீபத்தன்று இத்தூணின் உச்சியில் தீபம் ஏற்றப்படுகின்றது.
ஒவ்வொரு ஆலயத்திலும் இறைவனின்
கருணையினால் பல் வேறு திருவிளையாடல் நிகழ்ந்துள்ளன அவற்றையும்
அத்திருக்கோவில்களின் வரலாற்றில் விரிவாகக் காணலாம்.
தற்போதைய கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்ட
எல்லைகளுக்குள் இவ்வேழு தலங்களும் உள்ளன. ஒரே நாளில் இவ்வேழு தலங்களுக்கும் பயணித்துத்
தரிசனம் செய்ய இயலும். சோமவாரங்களில்
அதுவும் கார்த்திகை சோமவாரத்தில் தற்போது பக்தர்கள் இவ்வாறு தரிசிக்கின்றனர்.
4 comments:
மிக சுவாரஸ்யமான தகவல்கள் ஐயா ...
தனி கல் விளக்குத் தூண் ..சிறப்பு
தொடர்கிறேன் ..
கல் விளக்குத் தூண் எங்கள் கொங்கு மண்டலத்தின் ஒரு சிறப்பு அம்சம் அம்மா. தொடருங்கள். மிக்க நன்றி.
அவிநாசியும், திருமுருகன்பூண்டியும் போய் இருக்கிறேன்.
என் கணவர் பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் தரிசனம் செய்து விட்டார்கள். நான் பார்க்க வேண்டியது இன்னும் பல கோவில்கள் இருக்கிறது.
படங்களும் வரலாறுகளும் பாடல்களும் அருமையாக பகிர்வது அருமை.
பார்க்க விரும்புவர்களுக்கு உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
//என் கணவர் பாடல் பெற்ற தலங்கள் எல்லாம் தரிசனம் செய்து விட்டார்கள்.//
சிவ சிவ. சிவனருள் முழுமையாக பெற்றவர், அவர் அடி போற்றுகின்றேன். அடியேனின் வணக்கத்தை அவருக்கு தெரிவியுங்கள் அம்மா.
// நான் பார்க்க வேண்டியது இன்னும் பல கோவில்கள் இருக்கிறது. //
அடியேனும் அப்படியே தரிசித்த ஆலயங்கள் குறைவு, இன்னும் தரிசிக்க வேண்டியவை பல.
//பார்க்க விரும்புவர்களுக்கு உதவியாக இருக்கும்.//
அந்த எண்ணத்தில்தான் பல்வேறு இடங்களிலிருந்து தகவல்களை தொகுத்து பதிவிடுகிறேன். மிக்க நன்றி.
Post a Comment