Saturday, November 27, 2021

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 3

                                           கடம்பவனேஸ்வரர் தரிசனம்

முன் மண்டபம் 

சென்னையிலிருந்து கொங்குமண்டலம் செல்ல திருச்சி வழியாக செல்ல வேண்டியுள்ளதால் வழியில் உள்ள திருஈங்கோய்மலை, கடம்பந்துறை, ஐயர்மலை ஆகிய காவிரிக்கரைத் தலங்களை முதலில் தரிசித்தோம். அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டோம், வழியில் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு முசிறி வழியாக ஈங்கோய்மலையை அடைந்தபோது காலை 11 மணி ஆகி விட்டது.  முதலில் ஈங்கோய்மலை தரிசனத்தை முடித்து விடலாம் என்றெண்ணி மலை ஏற முடிவு செய்து மலை ஏற ஆரம்பித்த போது அடிவாரத்தில் உள்ள போகர் சன்னதியில் இருந்த அன்பர் கடம்பந்துறை ஆலயம் உச்சிக் கால பூசைக்கு பின்னர் அடைத்து விடுவர் எனவே முதலில் அங்கு சென்று தரிசனத்தை முடித்து விட்டு வந்து விடுங்கள் என்று அறிவுறுத்தினார். எனவே ஆற்றைக் கடந்து ஊருக்குள் சென்று கடம்பந்துறை சென்றோம். வாருங்கள் அவ்வாலயத்தை முதலில் தரிசிப்போம்.

மலைக்கோட்டை மாநகர் திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கே 33 கிலோ மீட்டர் தொலைவில் கரூர் நெடுஞ்சாலையில் உள்ள காவிரி பாயும் வளமான நகரம் குளித்தலை. அகண்ட காவிரியாம் பொன்னி நதியின் குளிர்ந்த அலைகள் கரையை மோதி  நீர்த்திவலைகளை காற்றில் மிதக்க விட்டு மேலும் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன. ஆதலால் குளிர்தண்தலை என்றும், குழித்த சோலைகளை உடையதால் குழித்தண்டலை என்றும்,  கடம்ப மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால் கடம்பந்துறை, கடம்பை, கடம்பவனம், கடம்பர் கோயில் என்றும், வடக்கு நோக்கிய சன்னதி கொண்ட தலம் என்பதால் காசிக்கு நிகரான தலம் என்பதால் தட்சிணகாசி என்றும் அழைக்கப்படுகிறது.    இங்குள்ள கடம்பவன நாதர் (கடம்பவனேஸ்வரர்) ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 65-வது திருத்தலம் ஆகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலம்.

‘துறை’ என்றால் ‘ஆற்றின் கரையோரம் அமைந்த ஊர்’ என்று பொருள்படும். எனவே கடம்ப மரங்கள் நிறைந்த காவிரிக்கரை ஊர் என்பதால் ‘கடம்பந்துறை’ என்றழைக்கப்படுகின்றது. பெயருக்கு ஏற்ப திருக்கோவிலின் வெளிச்சுற்றில் உள்ள நந்தவனம் முழுவதும் கடம்ப மரங்கள் நின்று அசைத்தாடுகின்றன. இத்தல கடம்பவன நாதருக்கு கடம்பமரம் தலவிருட்சமாக விளங்குகின்றது.

“முற்றிலா முலையாள் இவளாகிலும்

அற்றந்தீர்க்கும் அறிவில ளாகிலும்
கற்றைச் செஞ்சடை யான்கடம்பந் துறைப்
பெற்றம் ஊர்தியென்றால் எங்கள்
பேதையே”-  என்பது அப்பர் பெருமானின் தேவாரப் பதிகமாகும். இப்பதிகம் ஐந்தாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது.
கூரியகுணத் தார்குறி நின்றவன்
காரிகையுடை யான்கடம் பந்துறைச்
சீரியல்பத்தர் சென்றடைமின்களே

சீரியல்பத்தர் சென்றடைமின்களே  -  என்று பக்தர்களுக்கு இப்பதிகத்தில்  அப்பர் அறிவுறுத்துகிறார்.
"கடைமுடிகானூர் கடம்பந்துறை கயிலாய நாதனையே காணலாமே"
"மயிலாடுதுறை கடம்பந்துறை யாவடுதுறை
மற்றுந்துறையனைத்தும் வணங்குவோமே" என்ற மற்ற பாடல்கள் திருநாவுக்கரசர் வைப்புத்தலமாக (மற்ற ஆலயத்தின் பதிகத்தில் இவ்வாலயத்தையும் பாடுவது)  இத்தலத்தை பாடிய  பாடல்கள் ஆகும்.
"பரங்கூ ரெங்கள் பிரானுறையுங் கடம்பந்துறை" –என்ற  பாடல் சுந்தரர்  வைப்புத் தலமாக பாடிய பாடல் ஆகும் .


மேலும் காடவர்கோன் ஐயடிகளும் இத்தலத்தை பாடியுள்ளார். “கடம்பர் உலா” என்று இத்தலத்திற்கு ஒரு உலாவும் உள்ளது. இவ்வளவு சிறப்புப்பெற்ற தலத்தை வந்தடைந்தோம்.

பொருள்: எங்கள் பேதையாகிய இவள் முற்றாத இளமுலை உடையாள் ஆயினும், அற்றந் தீர்க்கும் அறிவில்லாதவள் ஆயினும், கற்றைச் செஞ்சடையானாகிய கடம்பந்துறைப் பெருமான் இவர்ந்து வரும் ஊர்தி இடபம் என்று கூறுகின்றாள்.  உலாப் போந்த தலைவனைக் கண்டு அவன் மேல் காதல் வயப்பட்ட தலைவி அவரது பண்புகளை கூறும் தலைவியின் நிலையைக் கூறும் செவிலித்தாயின்  கூற்றாக அப்பர் பெருமான் இப்பதிகத்தை அமைத்திருக்கின்றார்.

கடம் பந்துறை நண்ண நம்வினை யாயின நாசமே,  காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை நாம மேத்தநம் தீவினை நாசமே, கடம் பந்துறை மேலா னாஞ்செய்த வல்வினை வீடுமே   - என்று நம்  வினைகளை நாசம் செய்யும் இத்தலத்தை   நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே என்று அறுதியிடும் திருநாவுக்கரசர்

 

ஆரியந்தமி ழோடிசை யானவன்

"காவிரிசூழ் கடம்பந்துறை யுறைவார் காப்புக்களே."


 

அகண்டகாவிரித் துறையில் அருகருகே அமைந்துள்ள கடம்பந்துறை, வாட்போக்கி, ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களும் சோமாஸ்கந்த அம்சமாக அமைந்துள்ளன. இவற்றில் கடம்பந்துறை ஸ்கந்தன் அம்சமாகவும், வாட்போக்கி சிவாம்சமாகவும், ஈங்கோய்மலை சக்தி அம்சமாவும் திகழ்கின்றன எனவே  காலையில் கடம்பரையும், உச்சியில் சொக்கரையும் (ரத்னகிரீச்வரர்), மாலையில் திருஈங்கோய் மரகதாசலேச்வரரையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் சிறந்த பலன் கிட்டும் என்று தலபுராணமும்; இவர்களுடன் அர்த்த சாமத்தில் கருப்பத்தூர் சிம்மபுரீச்வரரையும் தரிசனம் செய்தால் அளவற்ற பலன் கிட்டும் என்று காவேரி ரஹஸ்ய புராணமும் கூறுகின்றன. ஒரே நாளில் தரிசிப்பதற்கு எல்லா நாள்களும் ஏற்றவை எனினும், கார்த்திகைச் சோமவாரம் சிறப்பான நாளாகச் சொல்லப்படுகிறது.


முன் மண்டபத்துள் நுழைந்து வடக்கு நோக்கியுள்ள ஐந்நிலை ராஜகோபுரத்தைத் தரிசித்து விட்டு உள்ளே நுழைந்தால், நந்தி தேவர் அமர்ந்திருக்க கருவறையின் உள் சிறிய சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார் கடம்பவனநாதர். இவர் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது ஒரு தனி சிறப்பு. தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிவாலயங்களில் சென்னை கோயம்பேடு குறுங்காலீசுவரரும், குளித்தலை கடம்பவனநாதர் இருவர் மட்டுமே வடக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பார்த்த லிங்கம் அமைந்துள்ள தலம் முக்தித்தலம் ஆகும்.

மூலவருக்குப் பின்புறம் கருவறையில் சப்த கன்னியர்கள் வீற்றிருப்பது எங்குமில்லாதச் சிறப்பாகும். இது பற்றி தல வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் தூம்ரலோசனன் என்ற அசுரன் துர்க்கா தேவியைப் போரிட்டு எதிர்த்தான். அசுரனது கணைகளால் தேவியானவள்  சோர்வுற்றபோது சப்த கன்னியர்கள் அசுரனை எதிர்த்து கோபாவேசத்துடன் போரிட்டனர். அவர்களை எதிர்க்க இயலாத அசுரன் புறம்காட்டி ஓடி, சூரியனை நோக்கித் தவம் புரியும் காத்யாயன முனிவரது ஆசிரமத்திற்குச் சென்று ஒளிந்திருந்தான். அரக்கனைத் தேடி வந்த சப்த மாதர் அங்குத் தவம் புரியும் முனிவரே அசுரனது மாயை எனக் கருதி, அவரைக் கொன்றனர். அதனால் அவர்களைப் பிரமஹத்தி தோஷம் பற்றியது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர். அம்பாளின் கூற்றுப்படி இத்தலத்தில் சிவனை வேண்டிக் கொண்டு சாப விமோசனம் பெற சப்தகன்னிகள் இங்கு வந்து தவமிருந்தனர்.

சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். அசுரனை அழித்தால் தங்களுக்கு மீண்டும் தோஷம் ஏற்படும் அன்று கருதிய சப்தகன்னியர், அசுரனை அழித்து தங்களைக் காக்கும்படி இறைவனிடர் முறையிட்டனர். சிவபெருமானும் அசுரனை அழித்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு இறைவன் பாதுகாப்பாக இருப்பதாக ஐதீகம். எனவே இத்திருக்கோவிலில் துர்க்கை அம்மன் திருமேனி இல்லை. சப்தகன்னியருள் ஒருவரான சாமுண்டியே இத்தலத்தில் துர்க்கையாக இருப்பதாகவும், அவருக்கே இராகுகால பூஜை நடைபெறுவதாகவும் கூறுகின்றனர். இராகுகால வேளையில் இவளுக்கும், சிவனுக்கும் விசேஷ பூஜைகளும் நடக்கிறது..


கடம்பவன நாதரை சப்தகன்னியர் மட்டுமில்லாது அகத்தியரும், கண்வ முனிவரும் வழிபட்டுள்ளனர். கண்வ முனிவருக்கு சிவபெருமான் கடம்ப மரத்தில் காட்சி தந்துள்ளார். முருகப்பெருமான் பூஜித்த தலம் என்பதால் ‘கந்தபுரம்’ என்றும், அசுரனிடம் இருந்து திருமால் வேதங்களை மீட்க இத்தல இறைவனை வழிபட்டதால் ‘சதுர்வேதபுரம்’ என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. முன் மண்டபத்தின் வலப்பக்கத்தில் அகத்திய முனிவரும், கண்வ முனிவரும் கடம்பவன நாதரை வழிபடும் சுதை சிற்பத்தை தரிசிக்கலாம்.

பிரம்மனும் அகத்தியரும் பூசித்த தலம்

முன்னம் ஒரு கற்ப காலத்தில், பிரம தேவனானவர் தான் ஓய்வின்றி சிருஷ்டித் தொழிலைச் செய்து வருதலால் மனம் வருந்தி, சிவபெருமானை வந்தித்துச் சிவானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டிக் கயிலை மலையை அடைந்து தனது உள்ளக் கருத்தைச் சிவபிரானிடம் விண்ணப்பித்தார். பிரமனது தோத்திரத்தால் மகிழ்ந்த இறைவன், பிரமனைத் தவம் செய்யுமாறு அருளவே, அதற்கான இடம் கடம்பந்துறை என்றும் திருவாய் மலர்ந்தருளினான்.

திருவருளை எண்ணி மகிழ்ந்த பிரமன், பல்வேறு தலங்களை வணங்கிப் பின் கடம்பவனத்தை அடைந்து, காவிரியில் நீராடி, கடம்ப மர நிழலில் பல்லாண்டுகள் தவம் புரிந்தான் . அதன் பலனாக, கடம்பவனநாதன் பிரமனுக்குக் காட்சி அளித்து, தனது திருக் கரங்களை அவனது முடி மேல் வைத்து, ”காவிரியை நோக்கி வட திசை நோக்கி இருக்கும் மகாலிங்கத்தில் நாம் எழுந்தருளி, உமாதேவியுடன் ஐந்தொழில் நடனங்கள் செய்து வருவதால் இங்கு நம்மை வழிபடும் அனைவரும் தாம் விரும்பிய அனைத்தையும் பெறுவர். அக்கினித் திக்கில் உள்ள தீர்த்தத்தைச் சீர் செய்து, கிழக்கு நோக்கியவாறு ஒரு சன்னதியை உமா தேவிக்கும் அமைத்துச் சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவமும் செய்வித்துப் பின்னர் சாயுச்சிய பதவியை அடைவாயாக ” என்று அருளி, அம்மகாலிங்கத்தில் மறைந்தருளினார். அதன்படியே பிரமனும் திருவிழா நடத்திப் பின்பு சிவானந்தம் பெற்றான்.

ஒருமுறை அகத்திய முனிவர் இங்குத் தவம் செய்வதைக் கண்ட மற்ற முனிவர்கள் அவரை வணங்கி, ” இத்தலத்தைத் தரிசித்துக் கபிலைப் பசுவை தானம் செய்வது சிறப்பு ” என்கிறார்களே, அதன் மகிமையைத் தேவரீர் விளக்கி அருளவேண்டும் என்று வேண்ட,அகத்தியரும் கபிலை மான்மியத்தை எடுத்து உரைத்தார். கபிலைப் பசுவானது பருத்த கண்களும் சிவந்த உரோமமும் கொண்டது. அக்னி சம்பந்தப்பட்டது. ஆகவே ஆக்னேயி எனப்பட்டது. அதன் பால், தயிர் போன்றவற்றை உட்கொள்ளலாகாது. ஆனால் பஞ்சகவ்யத்தை உண்டால் அஸ்வமேத யாக பலனைப் பெறலாம். இதனை வலம் வந்தால், பூமி முழுதும் வலம் வந்த பலன் கிடைக்கும். இதன் கொம்புகளைக் கழுவி, தண்ணீ ரைத் தலையில் தெளித்துக்கொண்டால் இஷ்டசித்திகள் யாவும் பெறலாம். தானங்களில் சிறந்தது கபிலைப் பசுவைத் தானம் செய்வதே ஆகும். இப்பசுவில் பத்து வண்ண வகைகள் உண்டு. அவற்றுள் பொன்னிறம் கொண்டதே உத்தமம் என்பர். இதனைப் புண்ணியத் தலங்களில் தானம் செய்தால் சிவனருளைப் பெறுவார்கள்.

கபிலையின் பெருமையைக்கேட்ட முனிவர்கள் அகத்தியரை வணங்கி, ”முனிவர் பெருமானே, இங்கு தேவசர்மர் என்பவர் பல்வேறு பாவங்களால் பீடிக்கப்பட்டுச் செய்வதறியாது உழல்கிறார். அவர் ஒரு கபிலையத் தானம் செய்யச் சித்தமாக உள்ளார். அப்பசுவைப் பெறத் தகுதியானவர் தங்களைத் தவிர வேறு எவருமில்லை. எனவே தாங்கள் மனமிரங்கி அப்பசுவைப் பெற்றுக் கொண்டு தேவசர்மருக்கு அருள வேண்டும் ” என்று வேண்டினார்கள். அகத்தியரும் அவ்வாறு தானம் பெற்றவுடன் தேவசர்மர் தனது பாவம் யாவும் நீங்கப்பெற்று, முனிவர்கள் சூழ, கடம்பவன நாதர் சன்னதியை அடைந்து துதித்தனர். தேவ சர்மரின் பிரார்த்தனைக்கிரங்கிய பெருமான், முனிவர்கள் அனைவருக்கும் தாம் முன்னர் மதுரையில் தடாதகைப் பிராட்டியை மணந்த திருக் கோலத்தைக் காட்டி அருளினார். ஆதலால் இத்தலம் வடமதுரை என்றும் அறியப்படுகிறது. மதுரையைப் போலவே கடம்பவனம் என்பதாலும் வடமதுரை எனலாம்.

முன்னொரு காலத்தில் சோமுகன் என்ற அசுரன் ஒருவன் வேதங்கள் யாவற்றையும் கவர்ந்து கொண்டு பாதாள லோகம் சென்று விட்டான். இதனால் கலக்கமுற்ற விஷ்ணு முதலிய தேவர்கள் கடம்பவனத்தை அடைந்து பெருந்தவம் செய்தனர். அத்தவப்பலனாக விஷ்ணுவானவர் மச்சாவதாரம் எடுத்துப் பாதாளம் சென்று அசுரனை மாய்த்து, வேதங்களை மீண்டும் கொண்டு வந்து கடம்பவனத்தில் ஸ்தாபித்தருளியதால் இத்தலம் வேதபுரி எனப்பட்டது. கடம்பவனநாதருக்குரிய மந்திரத்தைப் புண்ணிய காலங்களில் ஜபித்தால் பெறுதற்கரிய பேறுகள் அனைத்தையும் இம்மையிலும் மறுமையிலும் பெறலாம் .

கயிலை மலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தபோது அதனை முறையாக உபதேசம் பெற்றுக் கேளாமல் மறைந்திருந்து முருகப்பெருமான் கேட்ட குற்றத்திற்காக ஊமை ஆயினார். பல்வேறு தலங்களிலும் வழிபட்ட முருகக்கடவுள் கடம்பந்துறையை அடைந்து தவம் செய்யவும், குற்றம் நீங்கப்பெற்றதோடு, ஊமைத்தன்மையும் நீங்கப்பெற்றார். குமாரக்கடவுளின் துதிகளால் மகிழ்ந்த சர்வேசுவரனும் உமையன்னையோடு காட்சி அளித்து சுப்பிரமணிய மூர்த்தியைத் தனது மடி மீதிருத்தி ஞானோபதேசம் செய்தருளினார். அதனால் இத்தலம் “ஞானோதயபுரி” எனப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்த மூர்த்தியைத் தரிசிப்போர் எல்லா நற்பலன்களையும் பெறுவர்.

சித்திரை வைகாசி மாதங்களில் பௌர்ணமி தினங்களில் இத்தலத்தில் வழிபடுவோர் பெறும் பலன் அளவிடற்கரியது. இங்கு அன்னதானம் செய்தால் பிற தலங்களில் செய்வதைக் காட்டிலும் அதிக பலனைப் பெறலாம்.

கிருத யுகத்தில் பிரமன் பூஜித்ததால் சுவாமிக்குப் பிரமேசுவரர் என்ற நாமம் ஏற்பட்டது. திரேதாயுகத்தில் சப்த கன்னிகைகள் பூசித்து நற்கதி பெற்றனர். துவாபரயுகத்தில் அகத்திய முனிவர் வழிபட்டுப் பேறு பெற்றார். கலியுகத்தில் புண்ணிய மூர்த்தியாகிய ஆறுமுகக் கடவுள் பூசித்தார்.

                    

 கோவில் அமைப்பு:

வடக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரமும், கோபுரத்திற்கு வெளியே 16 கால் மண்டபமும்  சுற்றியும் கடம்ப மரங்களை கொண்டு இவ்வாலயம் எழிலாக விளங்குகிறது. மண்டப முகப்பில் விநாயகர், ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள், முருகர் சுதை சிற்பம், கடம்பனனேஸ்வரர் ஆலயம்,  குளித்தலை என்ற பெயர்ப் பலகை நம்மை வரவேற்கின்றது. இம்மண்டபத்தின் மேற்கூரையில் மீன்சிற்பங்களை காணலாம்.  5 நிலை கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் ஒரு நீண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. இம்மண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

வெளிப் பிரகாரத்தின் வடமேற்குப் பகுதியில் இறைவி “முற்றிலா முலையம்மை சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.  வடமொழியில் பாலகுஜாம்பாள். திருவேணி என்ற திருநாமமும் உண்டு. அம்பிகைக்கு இரு மகன்கள் இருந்தாலும், அவர்களை கருவில் சுமந்து இறைவி பெறவில்லை என்பதால், முலைகள் இளமையானது என்று கூறுகின்றனர். அப்பர் முதல் பதிகத்தில் முதல் வரியிலேயே இந்த அன்னையைப்பாடுகிறார். நின்ற கோலத்தில் மேல் கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கி, கீழ்க்கரங்கள் அபய வரத கரங்களுடன் அன்னை எழிலாக அருள்பாலிக்கின்றார். அம்பாள் சன்னதிக்கு முன்புறம் "பரமநாதர்' காவல் தெய்வமாக இருக்கிறார். இவர் தனது வலது கையை நெற்றி மேல் வைத்து, மரியாதை செய்தபடி வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். இவருக்கு தேன் அபிஷேகம் செய்து, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவர்கள் குடும்பத்திற்கு சுவாமி பாதுகாப்பாக இருப்பார் என நம்புகிறார்கள். அம்பாளை

சிற்றிடையும் இருகரமும் சேவடியும் மலர் முகமும்

பற்றிடுவோர் வினையொழிக்கும் பரங்கருணை திருநோக்கும்

உற்றடியார் பணி கடம்ப வனமேவும் ஒரு தேவி

முற்றிலா முலையம்மை முளரீ மலர் அடி போற்றி – என்று போற்றி வணங்கினோம். அம்பாளுக்கு நவராத்திரி உற்சவம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

அடுத்த வாயிலைக் கடந்து சென்றால் இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் கடம்பவன நாதர் லிங்கத் திருவுரு இவருக்கு சுந்தரேசர், சௌந்தரேசர் என்கிற வேறு  பெயர்களும் உண்டு. சுவாமிக்கு பின்புறம் சப்த கன்னியர் உருவச் சிலைகள் இருக்கின்றன. 

சுவாமி வடக்கு நோக்கி இருப்பதால் எதிரே தெற்கு நோக்கியபடி ஆடவல்லான் நடராஜர் இருக்கிறார். அவரது காலடியில் முயலகன் இல்லை. பொதுவாக ஒரு ஆலயத்தை பிரகார வலம் வரும்போது, கருவறை கோஷ்டத்தின் பின்புறம் லிங்கோத்பவரோ, மகாவிஷ்ணுவோ இருப்பார்கள். ஆனால் இங்கே தட்சிணாமூர்த்தி இருக்கிறார் இவரது மண்டபத்தை சிம்மங்கள் தாங்குகின்றன.  அவர் எதிரே லிங்கோத்பவர் காட்சி தருகிறார்கள். திருமாலும், பிரமனும் பெருமானை வணங்கிய கோலத்தில் காட்சி தருகின்றனர். வழக்கமாக தெற்கு நோக்கி இருக்கும் சண்டிகேஸ்வரர் மேற்கு முகமாகவும், வடக்கு பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு முகமாகவும் இருக்கின்றனர்.

உள் பிராகாரத்தில் . கிழக்கு நோக்கியபடி விநாயகர், சுப்பிரமணியர் அருள்பாலிக்கின்றனர், நலக்கிரகங்கள், ஜேஷ்டாதேவி, நால்வர், 63 மூவருடைய மூல, உற்சவத் திருமேனிகள், விஸ்வநாதர், கஜலட்சுமி ஆகிய சந்நிதிகள் இச்சுற்றில் அமைந்துள்ளன. அறுபத்துமூவர் விழா திருமேனிகள் அழகு நிறைந்தவை. 

பிரகாரத்தில் உள்ள நவக்கிரக சன்னதியின் மேலே ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலிக்கின்றார். உற்சவர் ஒரு திருமுகத்துடன் மயில் மீதமர்ந்து காட்சி தருகிறார்.

புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங்

     கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும்

          புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் பெறிவேலும்

பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன்

     றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம்

          புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக்  குழைமோதிக்

குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும்

     படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங்

          கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக்  கணினார்பால்

குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந்

     த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங்

          குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற்  றமைவேனோ

துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும்

     புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந்

          தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத்  திருதோளுந்

தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும்

     பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந்

          துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப்  பதிவாழ்வாய்

கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங்

     குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங்

          கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக்  குருநாதா

கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன்

     குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங்

          கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப்  பெருமாளே.

என்று அருணகிரிநாதர் இத்தல முருகனை பாடியுள்ளார்.

பொருள் : (முதல் 9 வரிகள் விலைமாதர் கண்களை வர்ணிக்கின்றன). கடலும், மன்மதனுடைய பாணங்களும், வண்டும், கரிய கயல் மீனும், கெண்டை மீனும், யமனும், தாமரையும், புதிய நிலவை (சந்திரிகையை) உண்ணும் (சகோரப்) பட்சியும், விஷமும்,ம்கிரவுஞ்ச மலையைத் தூளாக்கிய (உனது) வேலும் ஒப்பாகும் என்னும்படி, பகை பூண்டதாய், அகன்றதாய், பல திசைகளில் சுழல்வதாய், மத்தியிலும், ஓரத்திலும் சிவந்ததாய், வஞ்சகமான எண்ணத்தை அடக்கியதாய், பூமியில் உள்ள இளைஞர்கள் முன்பு இனிமையை (திறமையுடன்) காட்டி, அழகிய பொன்னால் ஆன, அசைகின்ற குண்டலங்கள் மீது மோதி, ஆரவார நடிப்புடன் (காண்பவரின்) ஐம்பொறிகளும் துன்பம் காணும்படி கலகப் போர் செய்து,கொடிய வேதனைஉண்டாகும்படி எப்போதும் கொடுமை செய்யும் கொடி ஏந்தி உள்ளதும்,விஷம் தங்குவதுமான கடைக் கண் பார்வை கொண்டப்விலைமாதர்களிடத்தில், விளங்கும் பல வகையான செவ்விய பொருள்களை மீண்டும் மீண்டும் கொடுத்து மகிழ்ச்சி அடைகின்ற (மனம், வாக்கு, காயம் என்னும்) மூன்று வகையான கருவிகளும், கந்த வேளே, உனது செம்மை நிறைந்த திருவடியை அணுகுதற்கு, காலையும் மாலையும் உலகத் தொடர்பு நீங்கி ஒருமைப்பட்டு இருக்க மாட்டேனோ?

பூங்கொத்துக்கள் விரிந்த கடப்ப மரத்தின் மலர்களால் ஆகிய மென்மையான மாலையும், நிறைந்துள்ள புனுகும், மலையில் விளையும் பசுமையான சந்தனமும், குங்குமமும், கூட்டப்பட்ட கலவைச் சாந்தும் ஒன்று கூடி நெருங்கிப்  பொதிந்துள்ளனவும், எப்போதும் நன்மையே பாலிக்கும் பன்னிரண்டு தோள்களும், அழிவு இல்லாத உனது ஆறு முகங்களையும், உனது பூஜைக்கு உரிய நூல்களையும், மந்திரங்களையும், பழனி மலையையும், திருப்பரங்குன்றத்தையும், திருச்செந்தூரையும் துதி செய்து போற்றுகின்ற மெய் அன்பர்களுடைய மனத்தில் புகுந்தும், வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, கூட்டமான படங்களை உடைய பாம்பும், கங்கை நதியும், சந்திரனும், குரா மலரும், அறுகம் புல்லும், சிறிய தும்பையும், கொன்றை மலரும்,  நறுமணம் கமழும் சடையை உடைய சிவபெருமானும் வணங்கும் பெருமையைக் கொண்டுள்ள குரு நாதனே, சிறப்பு வாய்ந்த குடகில் உள்ள மலையினின்று வரும் காவிரி, சிவபெருமானை வழிபடும் குட்டை வடிவம் கொண்ட அகத்தியர் கொண்டு வந்த கமண்டலத்திலிருந்து முன்பு தோன்றி வெளி வந்த காவிரி நதி வந்து பொருந்தும் தென் கடம்பந்துறையில் வீற்றிருக்கும் பெருமாளே.


இக்கோவிலில் இரண்டு சோமஸ்கந்த மூர்த்திகள், இரண்டு நடராஜர் மூர்த்திகள் இருக்கின்றன. ஒரு நடராஜ மூர்த்தியின் காலடியில் யலகன் இருக்க மற்றொன்றில் இல்லை. 
ஒழுகும் பொழுதறிய வொண்ணா-கழகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் றென்பாற்
குழித்தண் டலையானைக் கூறு – என்று காடவர்கோன் தமது  திருவெண்பாவில் இத்தலத்தை பாடியுள்ளார்.
காலைக் கடம்பரை மதியம் தரிசிக்கும் வாய்ப்பே அவனருளால் வாய்த்தது ஆயினும் யாத்திரை அருமையாக துவங்கிய மகிழ்ச்சியில் அடுத்து ஈங்கோய்மலையாரை தரிசிக்க கிளம்பினோம்.

இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள விமானம் திரிதளம். கோஷ்டத்தின் பின்புறத்தில் தெட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்தபடி இருக்கிறார். பிரகாரத்தில் உள்ள நவக்கிரக சன்னதியின் மேலே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கு அதிபதியான முருகனையும், நவக்கிரகத்தில் செவ்வாயையும் வழிபடுகின்றனர். அருகே சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

அழகு திரிகுரம்பை யாங்கது விட் டாவி

இத்தலத்தின் தீர்த்தம் அக்னி தீர்த்தம் ஆகும். மாசி மாதத்தில் தேரோட்டத்துடன் 13 நாட்கள் பெருவிழாவும், தைப்பூசத் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.  வைகாசி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

கோயிலுக்கு எதிரே அகண்டகாவிரி ஓடுகிறது. சப்தகன்னிகளுக்கு சிவன், தைப்பூசத்தன்று காட்சி கொடுத்ததாக ஐதீகம். எனவே, அந்நாளில் இவர் காவிரியில், அம்பாளுடன் எழுந்தருள்கிறார்.  இவருடன் சுற்றுப்பகுதியில் உள்ள 7 சிவன்களும் எழுந்தருள்கின்றனர். அன்று ஒரே நாளில் 8 சிவன்களையும் தரிசிக்கலாம்.

 தைபூசத்தன்று மாலை 5.30 மணிக்கு குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் எல்லை முன்பு மற்ற 7 ஊர்  சாமிகளை வரவேற்று, பின்னர் காவிரி ஆற்றில் 8 சுவாமிகளும் பக்தர்களுக்கு அருள்பாலித்து 8 சுவாமிகளும் காவிரி ஆற்றில் மூழ்கி  தீர்த்தவாரி நடைபெறுகின்றது. இதன் பின் 8 சுவாமிகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் விடிய விடிய பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறனர்.

 

ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவில் தைப்பூசத்தன்று கடம்பந்துறை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேச்வரர், ரத்னகிரி கரும்பார் குழலி உடனுறை ரத்னகிரீச்வரர், ராஜேந்திரம் தேவ நாயகி உடனுறை மத்தியார்ச்சுனேச்வரர், பேட்டைவாய்த்தலை தேவநாயகி உடனுறை மத்தியார்ச்சுனேச்வரர். கருப்பத்தூர் சுகந்தகுந்தளாம்பாள் உடனுறை சிம்மபுரீச்வரர், திருஈங்கோய் மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாலேசுவரர், முசிறி கற்பூரவல்லி உடனுறை சந்திரமெளலீச்வரர், வெள்ளூர் சிவகாமியம்மை உடனுறை திருக்காமீச்வரர் ஆகிய எட்டு ஊர் இறைவன் இறைவிகள் காவிரிக்கரையில் முகாமிட்டு, தீர்த்தவாரி கொடுத்து, அன்று இரவு அவரவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள அலங்காரப் பந்தலில் கொலுவீற்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு காட்சி கொடுத்து மறுநாள் அவரவர்கள் ஆலயம் செல்லும் காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய காட்சி ஆகும்.   இரவு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

கல்வெட்டு கூறும் விவரங்கள்: பாகையென்பது தொண்டைநாட்டில் திருக்கூவமென்னும் தலத்துக்கு அருகில் உள்ளது பாகசாலை என்னும் ஊர். அவ்வூரின் பெருந்தனவந்தர் சரவண முதலியார் என்பவர் சற்றேறக்குறைய 200 வருடங்களுக்கு முன்பு திரிசிராப்பள்ளி நவாபிடம் மந்திரியாக இருந்தார். அவர் இத்தலத்தில் இருந்த திருவாவடுதுரை ஆதீனத்து மடத்தில் மடாதிபதியாக இருந்தவரிடம் நண்பராக இருந்தார். அவ்விருவரும் சேர்ந்து கடம்பந்துறைக்கோயிலை புதுப்பித்து திருத்தேர், திருவாபரணம் முதலியவை செய்து வைத்திருக்கின்றார்கள். பல ஜமீன்தார்கள் சரவண முதலியாரின் தெய்வபக்தி முதலியவற்றை உணர்ந்து இவருக்குப்பல கிராமங்களை செப்புச்சாசனம் மூலமாக அளித்திருக்கிறார்கள். சரவண முதலியாரின் உருவம் கடம்பந்துறைக்கோயில் தூணில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகின்றது.

காலைக் கடம்பரை மதியம் தரிசிக்கும் வாய்ப்பே அவனருளால் வாய்த்தது ஆயினும் யாத்திரை அருமையாக துவங்கிய மகிழ்ச்சியில் அடுத்து ஈங்கோய்மலையாரை தரிசிக்க கிளம்பினோம்.


6 comments:

Anuprem said...

மிக அருமையான தரிசனம் ....நிறைய தகவல்களை தெரிந்துக் கொண்டோம் ஐயா ...
அடுத்த முறை செல்லும் பொழுது நினைவில் வைத்து தரிசிக்க வேண்டும் ..

கோமதி அரசு said...

ரத்னகிரீச்வரரை பார்த்து இருக்கிறோம். நிறைய படிகள் ஏறி தரிசனம் செய்து இருக்கிறோம், பல வருடங்களுக்கு முன்.
பக்தியுலா மிக அருமை.
படங்கள் பாடல்கள், கோயில் தல வரலாறு என்று மிக அருமையாக இருக்கிறது.
தொடர்கிறேன்.

S.Muruganandam said...

//அடுத்த முறை செல்லும் பொழுது நினைவில் வைத்து தரிசிக்க வேண்டும் //

மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அக்கோவில் தொடர்புடைய பல செய்திகளை பதிவிடுகிறேன். உபயோகமாக இருந்தால் மகிழ்ச்சியே.

மிக்க நன்றி, அவசியம் அனைத்தையும் பொறுமையாக சேவியுங்கள்.

S.Muruganandam said...

//நிறைய படிகள் ஏறி தரிசனம் செய்து இருக்கிறோம்//

வரும் காலங்களில் ரோப் கார் மூலமாக செல்ல முடியும், ஆயினும் மலை ஏறுவதே ஒரு அலாதி அனுபவம்தான்.

மிக்க நன்றி தொடருங்கள் அம்மா.

கோமதி அரசு said...

கடம்பந்துறை முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேச்வரர்,
தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

S.Muruganandam said...

மிக்க நன்றி.