ஈங்கோய்மலையார் தரிசனம்
வரிசைக்கிரமமாக முதலில் ஐயர்மலையை
தரிசித்துவிட்டு அடுத்து ஈங்கோய்மலையை தரிசிக்கலாமா? என்ற எண்ணம் மனதில்
தோன்றியது, ஆயினும் படிகள் ஈங்கோய்மலையில் குறைவு என்பதால் முதலில் இங்கு தரிசனத்தை
முடித்து விட்டால், முடிந்தவர்கள் மட்டுமே ஆயிரம் படிகள் கொண்ட அடுத்த மலையை ஏறலாம் என்று முடிவு செய்து
ஈங்கோய்மலைக்கே திரும்பி சென்றோம்.
புராண மற்றும் சரித்திர சிறப்புகள் பெற்றதும்
தென் கயிலாயம் என்று அறியப்படும் இத்தலத்தின்
இறைவர் திருப்பெயர் :மரகதாசலேசுவரர், மரகதாசலர், திரணத்ஜோதீஸ்வரர், ஈங்கோய்நாதர்.
இறைவியார் திருப்பெயர் : மரகதாம்பிகை, லலிதா,
மரகதவல்லி.
தல மரம் : - புளியமரம்.
தீர்த்தம் : - -அமிர்த தீர்த்தம்.
வழிபட்டோர் : அம்பிகை, அகத்தியர் (ஈ வடிவில்), சுந்தரர், பிருகு முனிவர்.
தேவாரப் பாடல்கள் :-திருஞானசம்பந்தர், நக்கீரர்.
மலை அடிவாரத்தில் உள்ள போகர் சன்னதி
இத்தலத்தின் தனி சிறப்புகள் :
இத்தல இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இவரை ஈங்கோய்மலையெம் எந்தாய் போற்றி என்று மணிவாசகப் பெருமான்
பாடியுள்ளார்.
அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த
மலை.
அகத்தியர் ஈ உருவத்தில் இங்குள்ள இறைவனை வழிபட்டதால் ஈங்கோய்மலை என்று பெயர்
வந்தது.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும்.
ஒவ்வொரு வருடமும், சிவராத்திரி அல்லது அதற்கு முதல்
நாளன்று, ஆதவனின் கதிர்கள், இம்மரகத நாதர் மீது படிவது, இத்திருத்தலத்தில் பெரும் சிறப்பு.
மலைமேல் கோயில் 560 படிகள்.
சுந்தரருக்கு சொர்ணபுளியங்காய் ஈந்த தலம்.
திருஞான சம்பந்தர், இத்தலத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் பன்னிரு சைவத் திருமுறைகளில் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.
நக்கீரர் இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் ஞானநூலாகப் பாடியுள்ளார். அப்பர் பெருமானும், மாணிக்கவாசகரும், பட்டினத்தாரும்
வைப்புத்தலமாக பாடியுள்ளனர்.
மலைத்
தலம் : சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில்
காவிரிக்கரையில் அமைந்த தலங்கள் 190.
இவற்றுள் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது(நிறைத் தலம்) சிவத்தலமாகும்
இத்தலம். குன்று இருக்கும் இடமெல்லாம்
குமரன் இருக்கும் இடம் என்பதற்கிணங்க பெரும்பாலான குன்றுகளில் முருகன்
ஆலயம் அமைந்திருப்பதால் கயிலை மலையானாம் சிவபெருமானுக்கு
மலை மீது அமைந்த தலங்கள் மிகக்குறைவு.
அதில் ஒன்று ஈங்கோய்மலை. எனவே மலைக்கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது. தொலைவில்
இருந்து நோக்கினால் இரட்டை மலை போல
தோற்றமளிக்கிறது எனவே சிவசக்தி வடிவம் என்று
சொல்லுமாறு இரட்டை மலையாக விளங்குகிறது.
திருச்சி மாவட்டத்தில் மேலும் திரிசிராப்பள்ளி, இரத்தினகிரி,
திருகற்குடி மலை (உய்யக்கொண்டான் மலை), திருஎறும்பியூர் மலை ஆகிய நான்கு மலைக்
கோயில்கள் உள்ளன.
தற்போது இத்தலம் திருவீங்கநாத மலை, திருவீங்கிநாத மலை,
திருவேங்கிநாத மலை, திருவங்கிநாத மலை என்றும் அழைக்கப்படுகின்றது.
வானத்துயர்தண் மதிதோய்சடைமேன் மத்த மலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவி பாகமாக்
கானத்திரவி லெரிகொண்டாடுங் கடவு ளுலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய் மலையாரே.
விளக்குதூண் (கம்பத்தடி கருப்பு)
சக்திமலை: அம்பாளுக்கு, சிவன் தன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் இம்மலையை "சக்திமலை' என்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக முன்மண்டபத்திலும், மலையிலும் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் உள்ளன. பிருகு முனிவர் சிவனை மட்டுமே வணங்கும் வழக்கம் உடையவர். ஆனால், அம்பாளைக் கண்டு கொள்ளவே மாட்டார். பக்தர்களின் வழிபாட்டில் அம்பாளுக்கும் முக்கியத்துவம் வேண்டும் எனக்கருதிய சிவன், அவளைக் கோபப்படும்படி செய்தார். அம்பாள், பூலோகம் வந்து இத்தலத்தில் தவம் செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தன் உடலின் இடப்பாகத்தை தருவதாக இத்தலத்தில் உறுதியளித்தார்
.
மரகதாசலம்: ஒரு சமயம் ஆதிசேஷனுக்கும்,
வாயுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என போட்டி
வந்தது. வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசச்செய்தார். ஆதிசேஷன் மேரு
மலையை இறுக சுற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில்
தெறித்து விழுந்தன. ஒரு சமயம் ஆதிசேஷனின் பிடி சற்று தளர்ந்த போது மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு, மரகதம் (பச்சைக்கல்) வீழ்ந்த இடமே, திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார். ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திருஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.
மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர்
என்பதால், "மரகதாசலேஸ்வரர்' என்ற பெயர் பெற்றார். இவருக்கு
"திரணத்ஜோதீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு.
அகத்தியர் ஈயாக வழிபட்டது: முனி வர்களால் வணங்கப்பெறும்
அகத்தியர் தன் சிஷ்யர்களாகிய பிற முனிவர்களோடு
ஒரு சமயம் தீர்த்த யாத்திரையாக திருக் கேதாரம் முதல் திருராமேசுவரம் வரை சென்று கொண்டிருக்கும்போது
வழியில் கடம்பவனத்தை அடைந்து காவிரியிலிருந்து பன்னிரண்டு குடம் நீர் எடுத்து வந்து
கடம்பவன நாதருக்கு அபிஷேகம் செய்து, மலர்களால் அர்ச்சனை செய்து வந்தார். பின்னர், அருகிலுள்ள
இரத்தினகிரிக்குச் சென்று, சூரிய தீர்த்தத்தில் நீராடிவிட்டு, காவிரியிலிருந்து புனிதநீரை
மூன்று குடங்களில் எடுத்துவந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து, மலர்களால்
அலங்காரமும் அர்ச்சனையும் செய்து வேதகீதங்களால் துதித்து, ஆலயத்தை மும்முறை வலம் வந்து,
மீண்டும் கடம்பவனத்தை அடைந்தார். மாலைக் காலம் வருவதறிந்த அகத்தியர், காவிரியைக் கடந்து,
மரகதாசலத்தை அடைந்தார். அவ்வேளையில், கோயில் அர்ச்சகர்கள் பூஜையை முடித்துக் கொண்டு,
ஆலயக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு, சென்று விட்டனர். இதனை அறிந்த அகத்தியர், இறைவனைத்
தரிசிக்க முடியாமல் போனது பற்றி மிக்க வருத்தமடைந்தார். அப்போது ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது: " மாபாதகங்களையும் தீர்த்து அருள் புரியும்
இம்மலையை அடைந்தபிறகும் ஏன் துயரம் அடைகிறாய் ? பசுக்கள்,பக்ஷிகள், மிருகங்கள் ஆகியவை
எந்தக் காலத்தில் இங்கு வந்தாலும் குற்றமில்லை.
அவற்றிலும், காற்று, ஈ, பசு, அக்கினி, நெய், நெல், யோகி, அந்தணர் ஆகியோர் எக்காலத்திலும்
அசுத்தமாவதில்லை. ஆகவே நீ இப்போது ஈ உருவில் உள்ளே சென்று இறைவனை வழிபடுவாயாக. இறைவனருளால்
அவரது திருமேனியில் தங்கிய தக்ஷகன் என்னும் நாகராஜன் இம்மலையின் மேற்புறம் சர்ப்ப நதி
வடிவில் இருக்கிறான். அங்கு ஸ்நானம் செய்பவர்கள் தாம் விரும்பிய வடிவைப் பெறுவார்கள். ஆகவே நீ அத்தீர்த்தத்தை நாடிச் சென்றால்
உன் கருத்து நிறைவேறும் " என்று கூறியவுடன் , மகிழ்வுற்ற அகத்தியர், இறைவனைத்
துதித்தார். பெருமானது கருணையினால், அவரது கண்டத்தில் இருந்த தக்ஷகன் , நதி ரூபமாக
ஆகிக் காவிரியோடு கலந்தது. அச்சங்கமத்தில்
ஸ்நானம் செய்து ஈ வடிவம் பெறுமாறு அகத்தியருக்கு அசரீரி வாக்கு அருளியபடியே சர்ப்ப நதியும் காவிரியும் கூடுமிடத்தில் அகத்தியர்
நீராடியவுடன் ஈயுருவம் பெற்றார். இவ்வடிவுடன் ஆலயத்தினுள் சென்று, பெருமானைக் கண்ணாரத்
தரிசித்தார். மனத்தினால் அனைத்து பூஜைகளையும் செய்தார். பிறகு வெளியில் வந்து சர்ப்ப
நதியில் ஸ்நானம் செய்தவுடன் முந்திய முனிவடிவம் பெற்றுத் தனது இருப்பிடம் சென்றடைந்தார்.
அது முதல் இம்மலை ஈங்கோய் மலை எனப் பெயர் பெற்றது. மாசி
மாதப் பௌர்ணமியில் அகத்தியர் சித்திகள் பெற்றதால், அவ்வாறு அந்தநாளில் சர்ப்ப நதியில்
ஸ்நானம் செய்து இயன்ற அளவு தானங்கள் செய்தால் பாவங்கள் நீங்கப்பெற்று, விரும்பிய
சித்திகள் அனைத்தும் கைகூடும்.
சுந்தரர்
பொன் பெற்றது: இத்தல
விருட்சம் புளிய மரம். ஒரு காலத்தில் இத்தலம் திந்திடி (திந்திரிணி) வனம்
என்றழைக்கப்பட்டது. சிவனின் நண்பரான சுந்தரர், தான் விரும்பிய நேரங்களில்
சிவனிடம் பொன் கேட்டுப் பெற்றுக் கொள்வார். அவர் இத்தலத்திற்கு வந்து சிவனிடம்
பொன் வேண்டும் என கேட்டார். சுந்தரரிடம் விளையாட வேண்டும் என நினைத்த சிவன்,
இங்கிருந்த ஒரு புளியமரத்திற்குள் ஒளிந்து கொண்டார். அப்புளிய மரம் ஆதிசேஷன்
அம்சம், சிவ சொரூபம். சுந்தரர், சிவனை
எவ்வளவோ அழைத்தும் அவருக்கு காட்சி தரவில்லை. ஒரு தங்க புளியங்காயை மட்டும்
அவருக்கு கிடைக்கும்படி செய்தார்.
சுந்தரர் அதனை எடுத்தபோது, புளியங்காய் மறைந்து விட்டது. தன்னிடம் சிவன்
விளையாடுவதை உணர்ந்து கொண்ட சுந்தரர், கோபத்தில் "எனக்கு கிடைக்காத புளி
யாருக்கும் கிடைக்காமல் போகட்டும்,' என சொல்லிவிட்டு திரும்பி விட்டார்.
தலவிருட்சம் புளியமரமாக இருந்தாலும், சுந்தரர்
புளி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று சபித்துவிட்டதால் இங்கு புளியமரம் இல்லை. இம்மலைப்
பகுதியில் உள்ள புளிய மரங்களில் காய்க்கும் காய்களில் வித்துக்கள் இருப்பதில்லை
அவை காய்ந்து தீய்ந்துவிடுகின்றன.
தேனாபிஷேக
மகிமை: அகத்திய முனிவர் எம்பெருமானை வழிபட்ட போது
தேனால் அபிஷேகம் செய்தார் என்பதும் தற்போதும் தேனால் அபிஷேகம் செய்து வருகிறார்
என்பதும் ஒரு நம்பிக்கை. வைகாசி,
கார்த்திகை மாதங்களில் தேனாபிஷேகம் செய்தால் சிவபெருமான் அருள் கிட்டும். முன்பொரு
சமயம் ஒரு குரங்கானது இங்குள்ள புளிய மரத்தின் மீதிருந்த தேன் கூட்டை இழுக்கும்
போது, தேனீக்கள் அக்குரங்கை கொட்டின, எனவே அக்குரங்கு அத்தேன் கூட்டை கை
நழுவவிட்டது. அதிலிருந்த தேன் சுவாமிக்கு அபிஷேகம் ஆகியது. அப்புண்ணியத்தால்
அக்குரங்கானது மறுபிறப்பில் சுப்பிரபன் என்ற மன்னனாக பிறப்பெடுத்தது. சுப்பிரபன்
ஈங்கோய்மலையை அடைந்து தானங்கள் பல செய்து, திருப்பணிகள் செய்து தினமும் தேனால்
அபிஷேகம் செய்து வந்தான். ஒரு சமயம் தேன் கிடைக்காமல் போகவே, மனம் நொந்து தன்
காதுகளை வாளினால் அறுக்கத் தொடங்கினான். கருணைக் கடவுளான சிவபெருமான் ரிஷப
வாகனத்தில் அம்பாளுடன் காட்சி அளித்து அவனை கயிலை மலையில் சிவ கணங்களுக்கு அதிபன்
ஆக்கினார்.
இதுவரை இத்தலத்துடன் தொடர்புடைய சில வரலாறுகளைக்
கண்டோம், வாருங்கள் அன்பர்களே மலையேறி மரகதாம்பாள் உடனாய மரகதசலேசுவரரை
தரிசிக்கலாம்.
சுவாமி விமானம் - தக்ஷிணாமூர்த்தி சன்னதி
மலைக்கு மேலே செல்ல தெற்கு அடிவாரத்திலிருந்து படிகள்
உள்ளன. குன்றின் உயரம் சுமார் 900 அடிகள். ஐநூறுக்கு மேற்பட்ட படிகள் உள்ளன. மலை ஏறும் படிகள் ஒரே சீராக இல்லை என்பதாலும், வழியில்
இளைப்பாற ஒரே ஒரு மண்டபத்தைத் தவிர வேறு வசதி இல்லாததாலும், நிதானமாகத் தான்
மலையேற வேண்டும். காவி வெள்ளை வர்ணம் படிகளுக்கு பூசப்பட்டுள்ளது. மலைக்கோவில்
என்பதால் அதிகாலை திறப்பதில்லை, பொதுவாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலயம்
திறந்திருக்கும் எனவே முடிந்தால்
குருக்கள் உள்ளாரா? என்று விசாரித்துக் கொண்டு மலையேறுவது நல்லது.
அடிவாரத்தில் போகருக்கு ஒரு சன்னதி உள்ளது. முதலில்
அவரை தரிசித்து மலை ஏறுவதற்கு அவரது அனுமதி பெற்றோம். அச்சன்னதியை பராமரிக்கும்
அன்பரிடம் போகர் சன்னதி இங்கிருப்பதற்கான காரணம் என்னவென்று வினவினோம். அதற்கு
அவர் போகர் இம்மலையில் இருந்து தான் நவபாஷாணத்தால் மூன்று முருகன் சிலையை
உருவாக்கினார். அவற்றுள் ஒன்றை பழனியிலும், மற்றொன்றை கொடைக்கானலுக்கு அருகேயும்
பிரதிஷ்டை செய்தார். மூன்றாவது சிலை இம்மலையில் உள்ள பாலதண்டாயுதசாமி என்றார். இது
அவர் கூறிய செய்தி சரியான தகவல்தானா என்று தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் பரணி
நட்சத்திரத்தன்று போகருக்கும் மலை மேல் உள்ள பாலதண்டாயுதபாணிக்கும் சிறப்பு
பூசைகள் நடைபெறுகின்றன.
போகர் சன்னதியை தாண்டியவுடன் கொங்கு நாட்டுத்
தலங்களைப் போன்று ஒரு கல் விளக்குத் தூண் உள்ளது. இக்கல் கம்பத்தில் ஒரு கருப்பு
தேவதை உள்ளது இங்குள்ளவர்களின் நம்பிக்கை. இவரை கம்பத்தடி கருப்பு, கம்பத்தடியான் என்று கிராமத்தினர் வழிபடுகின்றனர். எனவே கல்
தூணுக்கு அருகில் வேல் கம்புகள் நடப்பட்டுள்ளதை காணலாம். கருப்பை வணங்கி
மலையேறுவதற்கு துணைவர வேண்டி மலையேற்றத்தை துவங்கினோம்.
சுமார் பத்துப்படிகள் ஏறிய பின் இடப்பக்கம் ஒரு புது சன்னதி கட்டிக்கொண்டிருந்தார்கள், வெளியே விக்னங்களைக் களையும் விநாயகரின் சிலை இருந்தது, முழு முதல் கடவுளை வணங்கி மலையேற்றத்தை தொடர்ந்தோம். படிகள் சில இடங்களில் பழுதடைந்திருந்ததால் “ஓம் நமசிவாய” என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபித்துக் கொண்டே மெதுவாகவே ஏறினோம். இடையில் உள்ள நாலுகால் மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறி விட்டு ஒரே மூச்சாக உச்சி வரை ஏறினோம். ஏறு வெயில் என்பதால் படிகள் அவ்வளவாக சுடவில்லை. படிகளின் இரு புறமும் தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக பிறைக்குழிகள் செதுக்கியுள்ளதை கவனித்தோம்.
உச்சியை நெருங்கும் போது ஒரு நுழைவாயிலும் அதன்
மேல் விநாயகர், சுவாமி, முருகர் சுதை சிற்பங்களும் மதில் சுவரும் கண்ணில் பட்டது.
வாயிலை நெருங்கியவுடன் இடப்பக்கம் அரிகண்டம் செய்யும் ஒரு வீரனின் சிலையைக்
கண்டோம். வாயிலில் நுழைந்து உள்ளே சென்றவுடன் மூன்று நிலை இராஜகோபுரத்தை
தரிசித்தோம். தெற்கு நோக்கிய இராஜகோபுரம் என்பதால் தென் முகக் கடவுளையும், சிவ
பாலர்கள் இருவரையும் இராஜகோபுரத்தில் தரிசித்தோம். பத்துப்படிகள் ஏறி இராஜ
கோபுரத்தின் உள்ளே நுழைந்தால் பிரகாரத்தில் நிற்கின்றோம். எதிரே கோஷ்ட விநாயகரை
தரிசிக்கின்றோம். பிரகார வலத்தை தொடர்ந்தால் அடுத்து தக்ஷிணாமூர்த்தி சன்னதி,
சிம்மம் தாங்கும் மண்டபத்தில் அருள் பாலிக்கின்றார் சனகாதியருக்கு அன்று மௌனத்தால்
ஞானம் அருளிய ஆதி குரு. சுவாமியின் மூன்று
நிலை நாகர விமானத்தில் நின்ற கோல வீணா தக்ஷிணாமூர்த்தியையும், பத்மாசன தக்ஷிணாமூர்த்தியையும்
தரிசிக்கின்றோம்.
கன்னி மூலையில் கணபதி சன்னதி அவரை வணங்கி அடுத்து கிழக்கு நோக்கிய தனி சன்னதியில்
வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியரை
வணங்கினோம். சுவாமி கோஷ்டத்தில் தென்புறம் வல்லப கணபதி, தக்ஷிணாமூர்த்தி அருள்
பாலிக்கின்றனர் பின்புறம் லிங்கோத்பவரும், வடக்கு புற கோஷ்டங்களில் பிரம்மாவும், துர்க்கையும்
அருள் பாலிக்கின்றனர். சுவாமி சன்னதிக்கு அருகில் தெற்கு நோக்கி சண்டிகேஸ்வரர்
சன்னதி.
அம்பாள் விமானம் மூன்று கலசங்களுடன் கோபுர அமைப்பில் உள்ளது. அம்பாள் சன்னதி கோஷ்டத்தில் பார்வதி, மனோன்மணி, விஷ்ணு துர்க்கை அருள் பாலிக்கின்றனர். சுவாமி மற்றும் அம்பாள் சன்னதி இரண்டும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இடையில் பால தண்டாயுதபாணி சன்னதியுடன் சோமாஸ்கந்த வடிவில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. பிருங்கி முனிவர் சிவபெருமானை தனியாக வணங்கியதால், அவ்வாறு ஏற்படாமலிருக்க இரு சன்னதிகளையும் இணைக்கும் வகையில் ஸ்கந்தன் சன்னதி அமைந்துள்ளது. வலம் வரும் போது இரு சன்னதிகளையும் சேர்த்துத்தான் வலம் வர முடியும். பிரகாரம் சுவாமி சன்னதியின் மஹா மண்டபத்தின் ஊடே செல்லும் விதமாக அமைந்துள்ளது, மலைக் கோவில் என்பதாலோ?
பிரகார வலமாக வரும்போது கோயிலின் விசாலமான பழைமையான திறந்தவெளி அமைப்பைக் காண
முடிகிறது. மலை மேலிருந்து காவிரி, சர்ப்ப நதி, இரத்தினகிரி மலை , தலை மலை, கொல்லி
மலை, திரிசிர மலை, கடம்பர் கோவில் ஆகியவற்றை
தெளிவாகக் காணலாம்.
வலம் செய்து அம்பாள் சன்னதியில் பிரவேசித்தோம்.
அம்மன் சன்னதி கர்ப்பகிரகம் மற்றும் மஹா மண்டபத்துடன் அமைந்துள்ளது. கருவறையில்
புன்முறுவலுடன், எழிலாக நின்ற கோலத்தில்
மேற்கரங்களில் தாமரை மலர் தாங்கி, கீழ்க்கரங்கள் அஞ்சேல் என்னும் அபய
கரமாகவும், வேண்டுவனவற்றை அருளும் வரத கரமாகவும் விளங்க மரகதாம்பாள் அருட்காட்சி
நல்குகின்றாள். வடப்பக்கத்தில் மஹா மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விநாயகர்
அருளுகின்றனர். துவார சக்திகள் காவல்
உள்ளனர்.
மணியே(மரகதமே) மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - என்று அம்பாளை
மனதார வேண்டி வணங்கிவிட்டு ஐயன் சன்னதிக்கு சென்றோம். அம்பாளுக்கும்
சுவாமிக்கும் தனித்தனியே கொடிமரங்கள் உள்ளன.
ஐயன் சன்னதி கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம்,
ஸ்நபன மண்டபம், மஹா மண்டபம் என்று விரிவாக அமைந்துள்ளது. குருக்கள் சுவாமிக்கு
அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார் எனவே மஹாமண்டபத்தில்
அமர்ந்திருந்தோம்.
ஸ்நபன மண்டபத்தில் நந்தியும் அருகில் அம்பாளுக்கு இறைவன்
இடப்பாகம் அளித்த அர்த்தநாரீஸ்வரரும் அருள்பாலிக்கின்றார். திருமுறைக்கோவிலும்
உள்ளது. வாயிலில் துவாரபாலகர்கள்.
மஹா மண்டபத்தில் இடபக்கத்தில் பால தண்டாயுதபாணி
சன்னதி உள்ளது. சுவாமிக்கு வலப்பக்கம் வல்லப கணபதி, அடுத்து அம்மையின்
ஞானப்பாலுண்ட ஆளுடைய பிள்ளையார் அருளிய ஈங்கோய்மலைத்தல பதிக கல்வெட்டு , வடக்கு
பக்கம் நால்வர் சன்னதி. கிழக்கு பக்கம் ஈ வடிவில் வந்து ஈசனை தரிசித்த அகத்திய முனிவரை
தரிசிக்கின்றோம். அவருக்குப் பின்னே, முத்தமிழ் சங்கத்தின் தலைமைப் புலவர்
நக்கீரதேவ நாயனார் அருளிய ஈங்கோய்மலை எழுபது பாடல்கள்
கல்வெட்டு.
இந்நூல் வெண்பாக்களால் ஆன நூல், பதினொன்றாம்
திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளது. நக்கீரர், திருஈங்கோய் மலையின் செழிப்பில் மனத்தைப் பறிகொடுத்தார் போலும். அதனால்தான் அந்த மலையில் விளையும் பலா, தேன், பழங்கள் அதை வேட்டையாடும் குரங்குகள், மலையில் வசிக்கும் தேனீக்கள், மான்கள், மயில்கள், யானைகள், மலையில் வாழும் வேடர்கள், குறத்திகள் ஆகிய அனைத்தையும் தொடர்புபடுத்தி மிக அற்புதமாக திருஈங்கோய்மலை எழுபது என்ற ஞானநூலை அருளியிருக்கிறார்.
எழுபது பாடல்களின் இறுதியிலும் `மலை' என்றே பொருள் வரும் விதம் ஆனால் வேறு வேறு வார்த்தைகளான மலை, சிலம்பு, வெற்பு, பொருப்பு, குன்று, கடறு, வரை போன்றவற்றை உபயோகப்படுத்தியுள்ளது சிறப்பு. அதிலிருந்து ஒரு பாட்டு
அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும் பாய்ந்தேறி நொடியுங்கால்
இன்ன தென அறியா ஈங்கோயே - ஓங்காரம்
மன்ன தென நின்றான் மலை
பொருள்: திருமாலும் பிரம்மனும் பரம் பொருளின் அடிமுடியைக் காண வேண்டி பூமியைப் பிளந்து சென்றும் வானத்தை கிழித்துச் சென்றும் தேடியும் காண முடியாது நொடிந்தனர். என்னவென்று அறியாமல் அவர்கள் தவித்த போது, அதுவே ஓங்காரம் என்று உணர்த்தும் முகமாக நின்றிருந்தது இந்த மலையே. ஓங்காரத்தின் ரூபமாக இந்த மலை விளங்குவதாக பாடுகிறார் நக்கீரர்.
சுவாமிக்கு எதிரே நந்தி, பலி பீடம், கொடி மரம்
அமைந்துள்ளது, கிழக்கு சுவரின் மத்தியில் ஒரு
சாளரம், சிவராத்திரி சமயம் மூன்று நாட்கள் இச்சாளரத்தின் வழியாகத்தான் அதிகாலை
நேரத்தில் சூரியக்கதிர் இறைவன் மேனியில் விழுகின்றது. அச்சமயம் இலிங்கம் பல வண்ணத்தில்
காட்சி அளிப்பதைக் காணலாம். இவ்வொளி சிறப்பைத்தான் மாணிக்கவாசகரும் ”ஈங்கோய்மலைதனில் எழிலது
காட்டியும் “ என்று பாடினாரோ?
சூரிய ஒளியில் பைரவர் தரிசனம்
இம்மண்டபத்தின் வடக்குப்பக்கம் நவக்கிரகங்கள், பைரவர்,
தெற்கு நோக்கி சூரியனை தரிசிக்கலாம். அடியோங்கள் அங்கு அமர்ந்து பதிகம் மற்றும்
எழுபது படித்துக்கொண்டிருந்த சமயம் ஒரு அற்புதமான தரிசனம் கிட்டியது. பைரவருக்கு மேலே கூரையில் இருந்த ஒரு வட்ட வடிவ துளையின் வழியே சூரிய கதிர்
நுழைந்து அவரை பாதத்திலிருந்து தலை வரை வழிபடுவதை தரிசிக்கும் பாக்கியம்
கிட்டியது.
அடுத்து ஈங்கோய்மலையாருக்கு நடைபெறும்
அபிஷேகத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. பால், தயிர், வாசனைப் பொடிகள்,
தேன், மஞ்சள், சந்தனம், பன்னீர் ஆகிய திரவியங்களால் மரகதசலேஸ்வரருக்கு அபிஷேகம்
செய்தார் குருக்கள். மூலவர் மரகதாலேஸ்வரர் பெயருக்கு ஏற்றாற் போல மரகதம் போன்று பச்சை
நிறத்தில் அமைந்துள்ளார். சிவனுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக்
கண்டோம்.
ஈன்ற குழவிக்கு
மந்தி இறுவரை மேல்
நான்ற
நறவத்தை தான் நணுகித் – தோன்ற
விரலால்
தேன் தோய்த் தூட்டும் ஈங்கோயே நம் மேல்
வரலாம் நோய்
தீர்ப்பான் மலை – என்ற நக்கீரர் பாடலிலிருந்து அக்காலத்தில் இம்மலையில்
இருந்த புளிய மரங்களில் தேன் கூடுகள் செறிந்திருந்ததும், ஈங்கோய் மலையார் நம்
நோய்களை எல்லாம் தீர்க்க வல்லவர் என்பதும் புலனாகிறது.
மரகத லிங்கத் திருமேனியருக்கு தேனால் அபிஷேகம்
செய்த தேனை உட்கொண்டால் தீராத நோய்களும் தீரும் என்பதால் ஒரு அன்பரின்
வேண்டுதலுக்காக சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது, அதைக்காணும் பாக்கியம் அடியோங்களுக்கு
கிட்டியது. அலங்காரம் முடித்து அருமையாக தீபாரதனையும் செய்து வைத்தார் குருக்கள்.
(செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது
சம்பந்தப்பெருமனால் பாடப்பெற்ற திருவடிசூலம் என்றழைக்கப்படும் திருஇடைச்சுரம்
தலம், அத்தலத்திலும் சிவப்பரம்பொருள் மரகத மேனியர், அப்பெருமானுக்கு அபிஷேகம்
செய்த தேனை சுவீகரித்து நோய் தீர்ந்ததை அடியேன்
அறிவேன்)
மலையின் உச்சியில் எழுந்தருளியிருப்பதால் சுவாமி
மலைக்கொழுந்தீசர் என்றும், திருமால் பூசித்ததால் அச்சுதேசுரர் என்றும், நான்முகன்
பூசித்ததால் பிரமேசுரர் என்றும் தேவேந்திரன் பூசித்ததால் இந்திரேசுரர் என்றும்
அழைக்கப்படும் மரகதலேஸ்வரரை
வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான்
தலையோடனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே
என்று பாடி வணங்கினோம்.
பின்னர் குருக்கள் அம்பாள் சன்னதிக்கு அழைத்து சென்று அங்கும்
தீபாரதனை செய்து வைத்து பிரசாதமும் அளித்தார். முத்தாய்ப்பாக கிளம்பும் சமயம்
அடியோங்களில் இருவரை அழைத்து சுவாமியின் நிர்மால்ய மாலை அணிவித்து வாழ்த்தினார்.
அதை குருக்கள் மூலமாக இறைவன் கொடுத்த ஆசீர்வாதமாகவே
எடுத்துக்கொண்டோம். மஹா மண்டபத்தின் மேற்கு நுழைவாயிலில் மேலே கஜலக்ஷ்மியும் இரு
பக்கமும் துவாரபாலகர்களும் உள்ளதை கவனித்தோம். தினமும் இருகால பூசை
நடைபெறுகின்றது.
ஆடி பதினெட்டாம் பெருக்கன்றும், தைபூசத்தன்றும்
சுவாமி அம்பாளுடன் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, மாசி கிருத்திகை சிறப்பாக
கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகை
மற்றும் பௌர்ணமி தினங்களிஉல் பக்தர்கள் கிரி வலம் வருகின்றனர்.
மாதப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, கிரகண காலங்கள்,
ஆடி பதினெட்டாம் பெருக்கு, கார்த்திகை
தீபம், மார்கழித் திருவாதிரை, தை பூசம், மஹா சிவரத்திரி, மாசி மகம் ஆகிய நாட்களில்
காவிரியிலோ அல்லது சர்ப்ப நதியிலோ நீராடி, மலையை கிரி வலம் வந்து மலையேறி
மரகதவல்லியையும் ஈங்கோய் மலையாரையும் தரிசித்து நெய் விளக்கு ஏற்றி வழிபட இம்மை,
மறுமை பலன் கிட்டும்.
மலை மேலிருந்து அகண்ட காவிரியின் காட்சி
மலைக்கு கிழக்கே ஒரு ஈங்கோய்மலை என்று ஒரு கிராமம்
உள்ளது. அவ்வூரின் நடுவில் கருணாகடாட்சி உடனுறை கயிலாயநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில்
அடிவாரக் கோயில் என்றழைக்கப்படுகின்றது. மலைக்கோவில் உற்சவர்கள் இங்கு அருள்
பாலிக்கின்றனர்.
நெருப்பனைய
திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் உள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பனை
வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை
இடைமருதோ(டு) ஈங்கோய் நீங்கா
இறையவனை எனை ஆளும் கயிலை என்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே – என்று அப்பர் பெருமான் போற்றிய, அருமையான தரிசனம் அளித்த மரகதாம்பாளையும்,
ஈங்கோய்மலையாரையும் மற்றொரு முறை தரிசித்து விட்டு மெல்ல மெல்ல கீழிறங்கி வந்து
குளித்தலைக்கு திரும்பி வந்து மதிய உணவருந்திவிட்டு ஐய்யர் மலை தரிசனம் செய்ய
புறப்பட்டோம்.
4 comments:
//அடியோங்கள் அங்கு அமர்ந்து பதிகம் மற்றும் எழுபது படித்துக்கொண்டிருந்த சமயம் ஒரு அற்புதமான தரிசனம் கிட்டியது. பைரவருக்கு மேலே கூரையில் இருந்த ஒரு வட்ட வடிவ துளையின் வழியே சூரிய கதிர் நுழைந்து அவரை பாதத்திலிருந்து தலை வரை வழிபடுவதை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது.//
ஞாயிறு பைரவர் வழி பாடு சிறப்பு. இன்று உங்கள் பதிவின் மூலம் பைரவரின் அற்புத தரிசனம் கிடைத்தது, நன்றி.
ஈங்கோய்மலையெம் எந்தாய் போற்றி !
//வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே//
நானும் பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
//ஞாயிறு பைரவர் வழி பாடு சிறப்பு. இன்று உங்கள் பதிவின் மூலம் பைரவரின் அற்புத தரிசனம் கிடைத்தது, நன்றி.//
மிக்க நன்றி அம்மா.
ஈங்கோய்மலையெம் எந்தாய் போற்றி !
பாங்கார் பழனத்து அழகா போற்றி !
சிவ சிவ
மிக்க நன்றி.
Post a Comment