Thursday, December 9, 2021

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 6


    இரத்தினகிரியார் தரிசனம் -2

சுரும்பார்குழலி உடனமர் இரத்தினகிரீசர்

அடுத்து உகந்தான் படி விநாயகர் சன்னதி, விநாயகரை வழிபட்டு சென்றால்  முதலில் நாம் காண்பது சோழபுரீசர் சன்னதி அதற்கு பின்னால்  அம்பாள் சன்னதி கீழ் தளத்தில் உள்ளது. அம்பாள் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன்,  நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். மேற்திருக்கரங்களில் தாமரை, கீழ்திருகரங்கள் அபய வரத ஹஸ்தங்கள்.  அம்மனின் திருமுகத்தை தரிசித்தவுடன்  மலையேறி வந்த களைப்பு காணாமல் போனது. அருகில் தல மரம் வேப்ப மரம் உள்ளது. சன்னதியில் இருந்த குருக்கள் முதலில் சுவாமியை தரிசித்து வந்து விடுங்கள் என்றார்,  எனவே மேலே சென்றோம்.

அம்பாள் விமானம்

அம்மன் சன்னதியை அடுத்து செங்குத்தான 20 படிகளை கடந்தால் ஐயன் சன்னதி வாயிலை அடையலாம். சுவாமி சன்னதி இரண்டு தளமாக  ஓம் என்னும் பிரணவ வடிவில் உள்ளது. கீழ் தளத்தில் நந்தியெம்பெருமான், பலி பீடம், கொடி மரம் அமைந்துள்ளது.  வட்ட வடிவ சுவற்றில் அறுபத்து மூவர் அருள் பாலிக்கின்றனர். எதிரே சுவர் உள்ளது அச்சுவற்றில் ஒன்பது துளைகள் உள்ள சாரளம் உள்ளது.


கீழ் தளத்தில் நந்தியெம்பெருமான், கொடிமரம், அறுபத்துமூவர்

இரத்தினகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தி, மேற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கின்றார். பிரகாரம் வட்ட வடிவமாக இருப்பதையும், சாளர அமைப்பையும் காணலாம்.  இங்கு அருள் பாலிக்கும் சிவபெருமான் இரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சை, சிவப்பு போன்ற கற்கள் நிறைய கிடைக்கின்றன. இம்மலையை சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே இருக்கும் ஒன்பதாவது பாறையில், சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மாசி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சூரிய கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு எதிரே உள்ள நவ துவாரங்களின் வழியாக இறைவனின் மீது விழுகிறது.



சுவாமி கோஷ்டத்தில் ஆரியமன்னன் உள்ளது ஒரு தனி சிறப்பு. தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரரும் கோஷ்டங்களில் அருள் பாலிக்கின்றனர். சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜர்,  சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. இத்தலத்து முருகனை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார் அதிலிருந்து ஒரு பாடல்

பத்தியால் யானுனைப்  பலகாலும்

     பற்றியே மாதிருப் புகழ்பாடி

முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்

     முத்தியே சேர்வதற்  கருள்வாயே

உத்தமா தானசற் குணர்நேயா

     ஒப்பிலா மாமணிக்  கிரிவாசா

வித்தகா ஞானசத்  திநிபாதா

     வெற்றிவே லாயுதப்  பெருமாளே.

பொருள்: அன்பினால் உன்னை உறுதியாக பல நாட்களாக விடாது பற்றிக்கொண்டு உயர்ந்த திருப்புகழைப் பாடி ஜீவன் முக்தனாகும் வழியிலே என்னை இடையறா இன்ப வாழ்வாம் சிவகதியை சேர்ந்து உய்வதற்கு திருவருள் புரிவாயாக உத்தம குணங்களைப் பற்றிக்கொண்டுள்ள நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே சமானம் இல்லாத பெருமை பொருந்திய ரத்னகிரியில் வாழ்பவனே பேரறிவாளனே திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே வெற்றியைத் தரும் வேலை ஆயுதமாகக் கொண்ட பெருமாளே. சன்னதியின்  நுழைவாயிலில் வைரபெருமாள் சன்னதி உள்ளது.


ஓம் வடிவில் உள்ளமண்டபம்

அடியோங்கள் சென்ற சமயம் மேலிருந்த அன்பர்கள் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். இப்பிரதேச பக்தர்கள் பொதுவாக வெயில் தாழ்ந்து பிறகு மாலை 3 மணிக்கு மேல்தான் மலை ஏறுவார்களாம். அடியோங்களுக்கு அது தெரியாததால் வெயிலிலேயே மலை ஏறி சென்று விட்டோம். அவர்கள் எங்களை அந்நேரத்தில் பார்த்தவுடன் வெளியூரிலிருந்து வருகின்றீர்களா? என்று கேட்டு, ஆம் சென்னயிலிருந்து வருகிறோம் என்றவுடன் இதைக் கூறினார்கள். ஆயினும் சன்னதியைத் திறந்து அருமையாக  தரிசனம் செய்து வைத்தார் குருக்கள். சுவாமிக்கு தீபாரதனை முடிந்தவுடன் அப்படியே மேலே ஆரத்தியை கொண்டு சென்று சுவாமிக்கு முன்னே உள்ள வைரப்பெருமாளுக்கு காண்பித்து விட்டு பின்னரே அடியோங்களுக்கு பிரசாதம் கொடுத்தனர். வைர பெருமாள் சரிதத்தையும் கூறினார்கள். ஐயனை அருமையாக தரிசனம் செய்தபின் வாட்போக்கி பதிகத்தை பாராயணம் செய்தோம், அப்பதிகத்தின் நிறைவாக அப்பர் பெருமான் இவ்வாறு கூறுகிறார்

இரக்கம் முன்அறி யாதுஎழு தூதுவர்

பரக்க அழித்தவர் பற்றுதன் முன்னமே

அரக்க னுக்குஅருள் செய்தவாட் போக்கியார்

கரப்ப துங்கரப் பார்அவர் தங்கட்கே.

பொருள் : இரக்கமென்பதை முன்னும் அறியாது எழுந்த எமதூதுவர்கள் பரவி வந்து அழித்துப் பற்றிக் கொள்வதற்கு முன்பே, வாட்போக்கி இறைவரை பற்றுங்கள். இராவணனுக்கு அருள்செய்த அவர் தம்மடியாரை காப்பாற்றுவார். அதாவது வாட்போக்கியாரை சரணமடைந்தவர்களுக்கு எம பயம் தேவையில்லை என்கிறார் அப்பர் பெருமான்.


சுவாமி சன்னதிக்கு செல்லும் படிகள்


சுவாமியை தரிசனம் செய்தபின் திரும்பி வரும் வழி 

ஐயனை அருமையாக தரிசனம் செய்த பிறகு கீழிறங்கி வந்து சுரும்பார்குழலி அம்பாளை தரிசித்தோம். வட மொழியில் அராள கேசி.  வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவள் என்பது அம்மனின் பெயருக்கு விளக்கம். இப்பெயரைக் கூறியவுடன் அபிராமி அந்தாதியில்  விண்முகில்கள் வெளிறெனக் காட்டிய கருங்கூந்தலும் என்ற பதம் மனதில் தோன்றியது, கருமை மட்டுமா? அம்பிகை ஞானப்பூங்கோதை அல்லவா, அவளது கூந்தல் இயற்கையிலேயே மணம் உள்ளது என்பதால் தானே எப்போதும் வண்டுகள் மொய்க்கின்றன.

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை(சுரும்பார் குழலியை) அண்டம்எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவி அடங்கக்
காத்தாளை அங்குச பாசம் குசுமம் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணி யைத்தொழு வார்க்கொரு தீங்கில்லையே.

என்று அம்பாளை வணங்கி, சன்னதியை வலம் வந்து தல விருட்சம் வேப்ப மரத்தையும் வணங்கி மெல்ல மெல்ல கீழிறங்கினோம்.




படிகளில் இறங்கும் போது தலையில் ஒரு குட நீரை சுமந்து மலையேறி வரும் அன்பரைப் பார்த்தோம். குடத்தை கைகளால் பிடிக்காமல்    ஒரு தவம் போல  படி ஏறி வந்து கொண்டிருந்தார். சிறு வயதில் பழனி மலை ஏறும் போது செங்குத்தாக ஏறாமல் குறுக்காக ஏறினால் கால் வலியும் இருக்காது களைப்பும் இருக்காது என்று பொற்றோர்  சொல்லி  கொடுத்திருந்தார்கள். அது போலவே இவர் அபிஷேக தீர்த்தத்தை தலையில் சுமந்து கொண்டு குறுக்காக அநாயாசமாக படி ஏறிக் கொண்டிருந்தார். மேலே இருந்து ஊரின் நடுவே உள்ள குளம் அருமையாக காட்சி அளித்தது.

 சுவாமிக்கும் அம்பாளுக்கும் பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மணி விளக்குகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர். இறைவனுக்கு தூய உலர்ந்த வேட்டி சாத்தி வழிபடலாம். பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதர்மம் செய்தல், வேள்வி புரிதல், தவம் செய்தல், தியானம் செய்தல் போன்றவற்றை இந்த ஆலயத்தில் செய்தால் பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

திருவண்ணாமலையை போல  மலையே சிவபெருமான் என்பதால் அய்யர் மலையும் கிரிவலத்திற்கு சிறப்பானதாகும். மாதந்தோறும் பௌர்ணமியன்று பக்தர்கள் மூலிகைகள் நிறைந்தஇந்த கிரியை வலம் செய்கின்றனர். அவ்வாறு வலம் வரும்போது காட்டுப் பிள்ளையார் கோயிலருகில் நின்று கொண்டு மாணிக்க மலையனே என்று உரக்க அழைத்தால் எதிரொலி கேட்கிறது. கார்த்திகை தீபத்தன்று கிரிவலப் பாதை முழுவதும் தீபம் ஏற்றுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 15 நாட்கள்  பெருவிழா. மூன்று நாட்களுக்கு நடைபெறும் தேரோட்டத்தின்போது பக்தர்கள் தேரோடும் வீதியிலும், மலை படிகளிலும், தமது வயல்களில் விளைந்த தானியங்களை தூவி வழிபட்டு செல்வர். இதனால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை. தேரோட்டத்திற்கு முதல் நாள் இரவு நடைபெறும் குதிரை தேர் புகழ்பெற்றதாகும். இவ்விழாவின்போது தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி தேரில் எழுந்தருள்வார்.

மலை மேலிருந்து எடுத்த படம்


மெல்ல மெல்ல மலை இறங்கி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் வாட்போக்கி கலம்பகத்தில் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடிய ஒரு பாடலைப் பார்ப்போம். இப்பாடலில் இத்தலத்தின் ஐதீகங்களையெல்லாம் அவர் எவ்வாறு இகழ்வது போல் புகழ்ந்துள்ளார் என்று பார்ப்போம்.

1.அடித்தழும்பு புறத்திருக்க வாரியர்கோ மகன்கொடுத்த

முடித்தழும்புங் கொண்டனைவெம் முலைத்தழும்பிற் சீரியதோ!

2. அருகாக முப்புவன மடங்கவெரித் தருளுநினக்

கொருகாக மெரித்தனையென் றுரைப்பதுமோர் புகழாமோ!

3. சீரியர்கைப் புனல்கொல்லோ திருந்துமைகைப் புனன்முடிமே

லாரியர்கைப் புனல்கொள்வா யடங்கநனைத் திடுங்கொல்லோ!

4. தருநிதிக்கோ விருக்கவொரு சார்வணிக ரொடுகலந்தாய்

பெருநிதிக்கோ வெனிற்பெருமான் பேராசை பெரிதன்றே !

5. தொடிமுழங்க மணியொலித்துத் துணைவிபுரி பூசைகோலோ

விடிமுழங்கப் புரிபூசை யெஞ்ஞான்று மினிதுவப்பாய் !

6. உனையடைந்தார் பயமகன்றின் புறுவரெனற் கணியுரகங்

கனையடைந்த விடிநோக்கி களித்துறைதல் கரியன்றே!

மாணிக்கவாசகருக்காக வைகையில் வெள்ளம் பெருக வைத்து, அவ்வெள்ளம் கரையை உடைக்க, அதை அடைக்க வந்தியின் கூலி ஆளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து ஒரு பித்தனைப் போல  அரிமர்த்தன பாண்டிய மன்னன் முதுகில் பிரம்பால் அடித்த தழும்பையும்,  கம்பா ஆற்றதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த அன்னை ஏகம்பரியை மணம் புரிய வேண்டி கம்பையாற்றில் வெள்ளம் பெருக்கி சிவலிங்கத்தை கரைக்க பாய்ந்த போது வஞ்சி உமையம்மை அஞ்சித் தழுவிய போது பெற்ற முலைத்தழும்பும், வளைத்தழும்பையும் விட பெரியதோ ஆரிய மன்னன் வீசிய வாளால் ஏற்பட்ட முடித்தழும்பு?

அன்று தேவர்களின் கர்வத்தை அடக்க தன் சிரிப்பாலேயே முப்புரங்களையும் எரித்த உன்னை ஒரு காகத்தை எரித்தனை என்று புகழ்வது ஒரு புகழா ?

உமையம்மையின் கரங்களிலிருந்து உருவான கங்கை நதியின் கர்வத்தை அடக்க அவளை சடாமுடியில் ஆபரணமாக அணிந்து கொண்டவரை ஆரிய மன்னன் காவிரியில் இருந்து கொணர்ந்த ஒரு குடம் நனைக்குமா?

செல்வத்திற்கதிபதி தங்கள் சகா குபேரனுக்கே அச்செல்வம் அனைத்தையும் நல்கிய குபேரரீஸ்வரர் தாங்கள். நீங்கள் போய் பூம்புகார் வணிகர்களின் பொன்னில் ஒரு பங்கு பெற்றீர்  உமக்கு என்ன பேராசையா?

வளையணிந்த உமையம்மை மணியொளித்து செய்யும்  பூசனையை ஏற்கும் தாங்கள் இந்திரன் மின்னல்  இடி ஒலித்து செய்யும்  பூசனையையும்  எக்காலத்திலும் இனிதே ஏற்று மகிழ்கின்றாயே,  அஃது எதற்காக?

உன்னைச் சரணடைந்தவர்கள், அச்சம் அகன்று இன்புறுவர் என்பதற்குக் கனைத்து அதட்டுவது போல் இடிகள் முழங்கிப் பூசை செய்வதை தங்களின் அணிகலன்களான நாகங்கள் அஞ்சாமல் கண்டு (இடியோசை கேட்டால் நாகங்கள் நடுங்கும் என்பது நம்பிக்கை) , மகிழ்ந்து உடனுறைவதே சாட்சியுரைக்கின்றனவே?

இப்படியாக இத்தலவரலாற்களை சிந்தித்துக்கொண்டே அடிவாரம் வந்து சேர்ந்தோம். மலையிறங்கிய பின் ஒரு தடவை வைரபெருமாளை தரிசனம் செய்தோம்.

காவிரிக்கரையின் மூன்று தலங்களின் தரிசனத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் மலையேற முடியாதவர்கள், வயோதிகர்கள் ஆகியோருக்கான ஒரு இனிய செய்தி. இம்மலையில் நடந்து வந்த இழுவை வண்டி (Rope Car) பணிகள் முடிந்து சோதணை ஓட்டமும் நிறைவு பெற்றன. இனி வரும் காலத்தில் இதன் மூலமாக முடியாதவர்கள் நேராக சென்று இரத்தினகிரீஸ்வரரை தரிக்க முடியும்.

இனி ஒரு கொசுறு செய்தி:  சென்னை  பெசன்ட் நகர் கடற்கரையில்  ஒரு  சிவலிங்கம் கண்டெடுக்கப் பெற்றது.  காஞ்சி மகாபெரியவர் திருவருளாணையால் அவ்விலங்கத்தை பிரதிஷ்டை செய்து  ஒரு ஆலயம் உருவானது,  அவ்வாலயம்    '' அருள்மிகு அராளகேசி உடனுறை  இரத்தின கிரீஸ்வரர்''  என்ற இத்தல இறைவன் இறைவியின் திருப்பெயர் கொண்டு  அமைந்துள்ளது.

இவ்விதம் அருமையான கடம்பர், சொக்கர், மரகதர் தரிசனத்திற்கு பிறகு கொங்கேழ் தலங்களில் ஒரு தலமான  கரூருக்கு கிளம்பினோம் வழியில் இரண்டு தலங்களை தரிசித்தோம் அவையென்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

 

2 comments:

கோமதி அரசு said...

//ஒரு இனிய செய்தி. இம்மலையில் நடந்து வந்த இழுவை வண்டி (Rope Car) பணிகள் முடிந்து சோதணை ஓட்டமும் நிறைவு பெற்றன.//

மிகவும் இனிய செய்தி சொன்னீர்கள்.
நன்றி.

எங்களுடன் முன்பு வந்த உறவினர்கள் பார்க்க முடியாமல் இருந்தது. அவர்களிடம் சொல்லவேண்டும் இந்த இனிய செய்தியை. மகிழ்ச்சி அடைவார்கள்.

தல வரலாறு படித்து திரும்புகழ் பாடி, பதிகங்கள் பாடி வணங்கி கொண்டேன்.
தொடர்கிறேன்.
வாழ்க வளமுடன்.
படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.

S.Muruganandam said...

//வாழ்க வளமுடன்.
படங்கள் செய்திகள் எல்லாம் அருமை.//

மிக்க நன்றி.