Tuesday, December 28, 2021

மார்கழிப்பதிவுகள் - 13



                                                                       

திருசிற்றம்பலம்  










பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து நம்
சங்கந் சிலம்ப சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க
பங்கயப் பூம்புனல் பாய்ந் தாடேலோ ரெம்பாவாய். .....(13)


எம்பெருமானுக்கும், எம் பிராட்டிக்கும்( தனித் தனியாக) பொங்கு மடுவிற்கும் சிலேடை

1. பைங்குவளைக் கார்மலரால்:
கருமையான குவளை மலர்கள் நிறைந்திருப்பதால் எம்பிராட்டி போன்று இசைந்த மடு.(குவளைக் கண்ணி கூறன் காண்க)

செங்கமலப் பைம்போதால்:
 செந்தாமரை மலர்கள் நிறைந்திருப்பதால் எம்பெருமான் போன்று இசைந்த மடு.( செய்யான் காண்க)

2.அங்கங் குருகினத்தால்

அங்கம் - அம்பிகையின் திருமேனியில், திருக்கைகளில் அணிந்துள்ள வளையல் கூட்டத்தால் எங்கள் பிராட்டி போன்று போன்று இசைந்தபொங்கு மடு.

அங்கு அம் - அவ்விடத்தில் அழகிய குருகு இனத்தால்- பறவைக் கூட்டத்தினால் பொங்கும் மடு.

அங்கு அங்கு உருகும் இனத்தால்: அன்பின் மிகுதியால் அங்கே அங்கே உருகும் தொண்டரினத்தால் எங்கோனும், எம்பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.


3. பின்னும் அரவத்தால்: 

எம்பெருமான் திருமேனியில் அணிந்துள்ள பாம்புகள் பின்னுவதால் எம்பெருமான் போன்று இசைந்த பொங்கு மடு.

பின்னும் பின்னும் தொடர்ந்து அலையும் திரையால் பொங்கும் மடு.

4. தங்கண் மலம் கழுவார் வந்து சார்தலினால்:

தங்களுடைய உடம்பு அழுக்கை(மலம்) கழுவ வந்து சேர்பவர்களினால் இசைந்த பொங்கு மடு.

தங்களுடைய ஆணவம் முதலிய மலங்களை நீக்க வந்து சேர்பவர்களினால் எம்கோனும் எம் பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.

இத்தகைய எங்கோனும் எங்கள் பிராட்டியும் போன்ற  பொங்கு மடுவில் பாய்ந்து, பாய்ந்து கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும், கொள்ளும் கைகள் பூரிப்படையவும், அந்த கைகளால் குடைகின்ற பொய்கை நீர் மேலோங்கவும், இந்த தாமரைப் பூங்குளத்து நீரில் பாய்ந்து நீராடுவோம் எல்லோரும் பாவை விளையாட்டு.

நம் மன அழுக்கு நீங்க இறைவன் திருவடியே சரணம் என்பதை உணர்த்தும் அற்புதமான சிலேடைப்பாடல். மும்மல கலப்பினால் தூங்குகின்ற ஜீவான்மா விழித்து எழுந்து  மலம் நீங்கி சிவனுடன் இணைவதே  பாவை நோன்பின் தாத்பரியம்.

************

ஸ்ரீ:


                                                                                                       


 

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகளெள்ளாரும் பாவை களம் புக்கார்
வெள்ளியெழுந்து வியாழம் முழங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக்கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்!...............(13)


பொருள்:


நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா இராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர்.

விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழன் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வாடி என் கண்ணே!


புள்ளின் வாய்க் கீண்டான்:

இப்பாசுரத்தில் கிருஷ்ணர் செய்த லீலையான பகாசுர வதம் கூறப்பட்டுள்ளது. பூதனை, சகடாசுரன் முதலியோரை அனுப்பியும் கிருஷ்ணரை ஒன்றும் செய்ய முடியாத கம்சன் அடுத்து பகாசுரன் என்னும் அசுரனை ஏவினான். அவனும் கொக்கின் வடிவம் கொண்டு சென்று யமுனை நதிக் கரையில் கண்ணனை விழுங்கினான். அவனது நெஞ்சத்தில் அந்த மணி வண்ணன் மாயக் கண்ணன் நெருப்பைப் போல எரிக்கவே, அவன் பொறுக்க மாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து தன் அலகால் குத்தத் தொடங்கினான். கண்ணன் அவனது வாய் அலகுகளைப் தனது கைகளால் பற்றி இரண்டாக கிழித்து எறிந்து அவனை வதம் செய்தார். இதை "புள்ளின் வாய் கீண்டான் " என்னும் பாசுர வரிகளினால் விளக்குகின்றார் கோதை நாச்சியார்.


பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்:
பொங்கி வந்த கோபத்தினால் தென்னிலங்கைக்கு அதிபதியாகிய இராவணனை வதம் செய்தவர், மனதுக்கு இனியவரான இராமபிரான் என்னும் இராமாவதார பெருமையை "... பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை" என்று பாராட்டுகிறார் ஆண்டாள் நாச்சியார்.




3 comments:

Anuprem said...

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை... ராமா ராமா ...

Anuprem said...

மனத்துக்கினியான் ....ராமர் தம் உயர்ந்த குணங்களால் தங்கள் மனம் கவர்ந்தவராக,சிந்தனைக்கு இனியனாக இருப்பதை "மனத்துக்கு இனியான்" என்கிறார்கள்...அத்தகைய ராமனை நினைத்து பாடுவோம் ...

S.Muruganandam said...

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்

ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம்