Saturday, December 4, 2021

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 5

                                         இரத்தினகிரியார் தரிசனம் -1 

இரத்தின கிரி - ஐயர் மலை


அடுத்து நாம் தரிசிக்க செல்கின்ற தலம்  “ஆடல் பாடல் வாட்போக்கியை பாடியேத்த நம் வாட்டம் தவிருமே” என்று திருநாவுக்கரசர் பாடிய தலம் ஆகும். சோழநாட்டின் காவிரி கரையில், உள்ள பாடல்பட்ட தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையின் முதல் தலமாகவும் விளங்கும், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை சுரும்பார்குழலி உடனாய இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அத்தலம். அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை.

குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் 8 கி. மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. தொடர்வண்டி மூலமாகவும் குளித்தலையை அடையலாம். குளித்தலை இரயில் நிலையம் திருச்சி – ஈரோடு இருப்புப்பாதை மார்கத்தில் உள்ளது.

வாயுவிற்கும், ஆதி சேஷனுக்கும் நடைபெற்ற போட்டியின் போது விழுந்த மாணிக்கமே இம்மலை என்பது ஐதீகம், எனவே இம்மலை இரத்தினகிரி என்றழைக்கப்படுகின்றது

யாவருக்கும் மேலாகிய தலைவர் (ஐயர்) இங்கு கோயில் கொண்டிருப்பதால் ஐயர்மலை என்ற பெயர் எழுந்தது. பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்ததாகவும், அதனால் இந்த மலைக்கு ‘ஐவர்மலை’ என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவே நாளடைவில் ‘ஐயர்மலை’ என்றானதாக சொல்கிறார்கள். பாண்டவர்கள் இங்கு தங்கியிருந்ததற்கு சான்றாக, மலையின் நடுப்பகுதியில் உள்ள சிறிய குகையில் 5 படுக்கைகள் உள்ளன. இந்த மலையின் பின்பகுதியில் உள்ள மற்றொரு சிறிய குகையில் கற்களால் வெட்டப்பட்ட மூன்று படுக்கைகள் காணப்படுகின்றன. இங்கு சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.

இத்தலத்தில் சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதும், 1,178 அடி உயரமும் கொண்டதுமான மலையின் மீதுள்ள ஆலயத்தில் இரத்தினகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவரை வாட்போக்கிநாதர், ராஜலிங்கமூர்த்தி என்ற பெயரிலும் அழைக்கிறார்கள். அதே போல் இந்த ஊரும், சிவாயமலை, ரத்தினகிரி, ரத்தினாசலம், மணிகிரி, ரத்தின வெற்பு, சிவதை, மாணிக்க மலை, வாட்போக்கி மலை, பஞ்சாட்சர மலை உள்ளிட்ட பெயர்களில் அறியப்படுகின்றது.  சிறந்த சிவன் கோயில் அமைந்திருக்கும் சிவாயம் என்னும் சிற்றூருக்கருகே இம்மலை இருப்பதால் சிவாயமலை என்றும், மலையேறி செல்லும்படி வழியும், மலை மேற்கோயிலுள்ள பிரகாரங்களும் ஓம் என்ற பிரணவ எழுத்து போலவும் சிவ மகாமந்திரமான ஐந்தெழுத்தின் வடிவமாகவும் அமைந்திருத்தலால் சிவாயமலை என்றும் அழைக்கப்பட்டதாக கூறுவர்.


                              

                                 

தேவாரம், தல புராணம், கலம்பகம் இவைகளில் வாட்போக்கி என்றும், திருப்புகழ் சிவதைபுரி, ரத்தினவெற்பு என்றும் ரத்தினகிரி உலாவில் ரத்தினகிரி என்றும், கோயிலில் காணப்பெறும் பழங்கால கல்வெட்டுகளில் திருமாணிக்கமலை, திருவாட்போக்கி என்றும் கூறப்பட்டு வருகிறது. சங்ககாலத்தில்  அயிரை மலை  என்ற பெயரில்  இம்மலை வழங்கியது,

கால பாசம் பிடித்தெழு தூதுவர்

பால கர்விருத் தர்பழை யாரெனார்

ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் .

சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே என்று திருநாவுக்கரசர்  பாடிய வாட்போக்கி தலத்தின்

 

மூலவர் : இரத்னகிரீஸ்வரர், வாட்போக்கிநாதர், முடித்தழும்பர்

அம்மன் : கரும்பார் குழலி, அராள கேசரி

தல விருட்சம் : வேம்பு

தீர்த்தம் : காவேரி தீர்த்தம்

வழிபட்டோர் : இந்திரன், சூரியன், சயந்தன், வாயு, ஆதி சேஷன், அகத்தியர், உரோமச முனிவர்,  சப்த கன்னியர்.

தேவாரப் பாடல்கள்: அப்பர்

பல்வேறு பிறவிகளிலும் புண்ணியம் செய்தோருக்கே இத்தலத்தின் தரிசனம்  கிடைக்கும் என்பது உண்மை. முறைப்படி தேவ தீர்த்தமாடி, மலைக் கொழுந்தாய் எழுந்தருளியுள்ள ரத்னகிரீசுவரரையும் சுரும்பார் குழலி அம்பிகையையும் வணங்கித் தொழுது விட்டு அங்குள்ள வேப்ப விருக்ஷத்தடியில் பஞ்சக்ஷர  ஜபம் செய்தால் எல்லாத் தீங்குகளும் நீங்கும். வறுமை, கொடிய நோய்கள் ஆகியவை நீங்கும். ஞானமும் சித்தியும் கைகூடும்.

இந்திரன் வழிபட்டது: இனி இத்தலத்தின் சில வரலாறுகளைப் பற்றி காணலாமா அன்பர்களே?.  முன்னர் ஒரு சமயம் அகலிகையை விரும்பிய பாவம் தீர, வியாழ பகவானின் அறிவுரைப்படி, இந்திரன் இரத்தினாசலத்தை அடைந்து தேவியின் சன்னதியில் வேப்ப மர பிரதிஷ்டை செய்தான். மலை உச்சியில், தனது வஜ்ஜிராயுதத்தால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கி தினமும் காலையில் திரியம்பக மந்திரத்தை உச்சரித்து அதில் நீராடி, சுவாமிக்கும் அம்பிகைக்கும் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த மணம் மிக்க மலர்களால் அர்ச்சித்து வணங்கினான். தான் ஸ்தாபித்த தீர்த்தத்தின் அருகிலுள்ள குகையில் அமர்ந்து பஞ்சாக்ஷர ஜபம் செய்து வந்தான். இதனால் அவனது பாவம் நீங்கிற்று. இந்திரனது பூஜையால் மகிழ்ந்த பரமசிவனும், தேவர்கள் சூழ முடியில் சந்திரனைத் தரித்தவராகவும், வெண்ணீறு அணிந்தவராகவும் அம்பிகையோடு ரிஷப வாகனத்தில்எழுந்தருளி அவனுக்குக் காட்சி அளித்தார். சித்திரை பிரமோற்சவத்தில் ஐந்தாம் நாள் விழாவில் இவ்வரலாறு இடம் பெறுகிறது


வாட்போக்கி நாதர் : ஆரிய நாட்டில் மங்கலமா நகரில் ஆரியராசன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். ஒரு முறை அரசனின் நவரத்தின கிரீடம் காணாமல் போக்கும்படி செய்தார், இரத்தினகிரீஸ்வரர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அரசனின் முன்பாக தோன்றிய வேதியன் ஒருவன், “உன்னுடைய கிரீடம் இரத்தினகிரீஸ்வரர் வசம் உள்ளது” என்று கூறினான். இதையடுத்து மன்னன், இரத்தினகிரீசுவரரிடம் வந்து தமது மணிமுடியை தருமாறு வேண்டினான். அப்போது முதியவர் வடிவில் வந்த இறைவன் “இங்குள்ள கொப்பரையை முழுமையாக காவிரிநீர் கொண்டு நிரப்ப வேண்டும். அப்போதுதான் மணி முடியை உன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இறைவன் கூறியிருக்கிறார்” என்றார்.

மன்னன் எவ்வளவோ முயன்றும் கொப்பரையை நீர் கொண்டு நிரப்ப முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபம் கொண்ட மன்னன், முதியவரை நோக்கி வாளை வீசினான். அப்போது முதியவர் சிவலிங்கத்திற்குள் சென்று மறைய, சிவலிங்கத்தின் மீது வாள் பட்டு, அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. தெய்வ குற்றத்துக்கு ஆளானதை எண்ணி அஞ்சிய மன்னன், தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள முயன்றான். அப்போது அவனை, இறைவன் தடுத்தாட்கொண்டு, மணிமுடியையும் வழங்கி அருளினார்.  இதனால் இறைவன் வாட்போக்கி நாதர் என்னும் திருநாமம் பெற்றார். இத்தலமும் வாட்போக்கி என்றழைக்கப்படுகிறது. இதற்கு சாட்சியாக இப்போதும், சிவலிங்கத்தின் மீது வெட்டு தழும்பு உள்ளதைக் காணலாம்.


இந்நிகழ்வுக்குப் பின்னர் இரத்தினகிரீஸ்வரரை வழிபட்ட ஆரியராசன், தன் குலத்தினர் பரம்பரை பரம்பரையாக தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் நடைமுறையை கொண்டு வந்தான். தற்போதும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக, சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து நாள்தோறும் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்து, மலை உச்சியில் உள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்விக்கப்படுவது தனிச்சிறப்பாகும். (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார்" என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)

இதே வரலாற்றை இன்னொரு விதமாகவும் இவ்வாறு கூறுகின்றனர்.  ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். “மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமென்றால் என் முன்னர்  உள்ள பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டியை காவிரி நீரால் நிரப்ப வேண்டும்” என்று ஒரு தொட்டியை இறைவன், அரசனிடம் காண்பித்தார். அந்த தொட்டியில் எவ்வளவு தான் நீரினை ஊற்றினாலும் நிரம்பவில்லை. இதனால் கோபமடைந்த மன்னன் அவனது வாளை எடுத்து இறைவனிடத்தில் வீசினான். அந்த சமயம் இறைவன் மாணிக்கக் கற்களை மன்னனுக்கு தந்து அருள் பாவித்தார். இறைவனை காயப்படுத்தியதில் வருத்தமடைந்த மன்னன், அந்த கோவிலிலேயே இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்கிறது வரலாறு. அந்த மன்னனால், இறைவன் வெட்டு பட்டதால், இத்தளத்தில் சிவனுக்கு ‘முடித்தழும்பர்’ எனும் பெயரும் உண்டு. இன்றளவும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இந்த வடு காணப்படுகிறது. சிவலிங்கத்தின் முன்பு அந்த மன்னனால் நிரப்பப்படாத தொட்டி தற்போதும் பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டியாக இருக்கின்றது.

குலதெய்வம்:  குலதெய்வம் தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரரை குலதெய்வமாக வழிபடலாம். திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் உண்டு. மலைமேல் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகை காற்றை சுவாசிப்பதால் இது தவிர மூட்டு வலி, இதய நோய், ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கோவிலின் மலையை ஒருமுறை ஏறி வந்தால் மாற்றத்தை உணர முடியும் என்று கூறுகின்றனர்.

காகம் பறவா மலை:  குளித்தலையிலிருந்து இடையர் ஒருவர் தினமும் இங்கு வந்து ஒரு குடம் பாலை அபிஷேகத்திற்கு அளித்து வந்தார். ஒரு நாள் அப்பால் குடத்தை ஒரு காகம் கவிழ்த்தது. அவர் மனம் வருந்தி தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். அப்போது இறைவன் அவர் முன் தோன்றி இம்மலையே சிவ சொரூபம்தான், எனவே சிந்திய பாலே எனக்கு அபிஷேகித்தது போலாகும் என்றார். இனி மேல் இம்மலை மேல் காகம் பறக்காது என்று சாபமும் கொடுத்தார். அன்று முதல், அய்யர்மலைக்கு மேலே காகங்களால் பறக்க முடியாது. அப்படியே பறந்து வர நினைத்தாலும், மின்சாரம் தாக்கியதுபோல் காகங்களுக்கு ஆகிவிடும்னு கூறுகிறார்கள்.  


பொன்னிடும் பாறை

சுந்தரருக்காக பொன் சொரிந்தது: சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரர், இந்த மலையை இரத்தின மலையாகவும், ஈசனை இலிங்க வடிவமாகவும் கண்டு வழிபட்டதோடு, பொன் வேண்டி பாடியிருக்கிறார். தொடர்ந்து இறைவனின் ஆணைப்படி பூத கணங்கள், பாறையின் மேல் பொன்னை சொரிந்ததாகவும், இங்குள்ள ஒன்றுபாதி என்ற இடத்தில் இரத்தினகிரீஸ்வரர், சுந்தரருக்கு  ஜோதிர் லிங்கமாகவும் மலை முழுவதும் மாணிக்கமலையாகவும் காட்சி கொடுத்ததாகவும் தல வரலாறு சொல்லப்படுகிறது. சுந்தரருக்கு பொன் அளிக்கப்பட்ட இடம் தற்போது ‘பொன்னிடும் பாறை’ என்று அழைக்கப்படுகிறது. பொன்னிடும் பாறைக்கு முன்பு அமைந்துள்ள கற்கம்பத்தை சுற்றி நூலால் கட்டி, பில்லி, சூனியம், ஏவல், மற்றும் பல்வேறு தடங்கல் நீங்க பிரார்த்தனை செய்யப்படுகிறது.

பால் தயிராக மாறும் அதிசயம்: இக்கோவிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்த பச்சைப்பால் மாலை வரை கெட்டுப்போகாது. அபிஷேகம் செய்த பால் பின்னர் கெட்டியான சுவை மிகுந்த தயிராக மாறிவிடுகிறது. இது இக்கோவிலில் இன்றுவரை நடக்கும் அதிசயமாகும்.  

இடி பூசை : பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திரன் இடி பூசை செய்கின்றான். அப்போது கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படுவதில்லை என்கின்றனர். (திருக்கழுகுன்றம் மலைக்கோவிலிலும்  இது போன்று 12 வருடத்திற்கு ஒரு முறை இடி பூசை நடக்கின்றது என்ற ஐதீகம் உள்ளது)

வைரப்பெருமாள்:  இத்தலத்தின் நாட்டார் தெய்வம் ஆவார் இவர். இக்கதை தொண்டை நாட்டில் காஞ்சிபுரம் என்ற சிவப்பதியில் முதலியார் இனத்தில் பிறந்த வைரப்பெருமாள் (வைராக்கிய பெருமாள்) என்ற பெயருடைய சிவனடியாரின் கதையாகும். இவர் தனது தங்கைக்கு பலகாலம் குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் அய்யர்மலை சென்று இறைவனிடம் குழந்தை வரம் கேட்டு, இதற்கு நேர்த்திக் கடனாக தம் தலையை கொய்து கொள்வதாக வேண்டிக்கொண்டதையும், பழுத்த சிவனடியாராக வாழ்ந்து வந்த அவருடைய வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றி சோதிக்க எண்ணியதையும், இதன் பலனாக அவரின் தங்கை அழகிய குழந்தைக்குத் தாயானதையும் பற்றி கூறுகிறது. வேண்டுதலை முடிக்க எண்ணிய வைரப்பெருமாள் அய்யர்மலை வந்து பதினெட்டாம் படியில் நின்றபடி தம் தலையை தானே வாளால் அறுத்துக் கொண்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றிய செயல் மக்களிடையே இவரை நாட்டார் தெய்வமாக உயர்த்தி உள்ளது. மலைக்கு கீழே பாதமும், மேலே சிரசும் உள்ளது. தாம் வேண்டிக்கொண்டபடி வாக்கில் பிறளாது சிரசை கொய்து கொண்ட சிவனடியாரின் பக்தியால் உளமகிழ்ந்து தேவர்கள் பூமாரி பொழிந்தனராம். விண்ணில் வேத வாத்தியங்கள் முழங்கினவாம். சிவபெருமான் தம் சிவனடியார் முன் தோன்றி அவருடைய பக்தியினை மெச்சி வரமருள சித்தமானார்.

இறைவனின் சித்தமறிந்த வைராக்கிய பெருமாள் இறைவனிடம் மூன்று வரங்களைக் கேட்டுப் பெற்றார்:

1.         இறைவனுக்குச் சூடிய மாலைகள் முதலில் இவருக்கே சூட்டப்படும்.

2.         இறைவனுக்கு காட்டிய கற்பூர ஆரத்தி பின் முதல் மரியாதையாக இவருக்குத்தான் காட்டப்படுகிறது.

3.         அம்மனுக்கு படைத்த தளிகை இவருக்கே அளிக்கப்படுகிறது.

தேனும் தேங்காய்ப்பாலும் மட்டும்தான் இவருக்கு அபிசேகம். இத்தலத்தில் இவர் மிகவும் விசேசமானவர்.

இத்தல இறைவனை, நான்முகன், திருமால், இந்திரன், வாயு, ஆதிசேஷன், சூரியன், அக்கினி, துர்க்கை, சப்த கன்னியர்கள், அகத்தியர், ஆரிய மன்னன், வைரப் பெருமாள், சிற்றாயர் போன்றோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

அப்பரின் தேவாரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலம். மேலும் திருவாட்போக்கி புராணம், வாட்போக்கி கலம்பகம், இரத்தினகிரி உலா ஆகிய நூல்களும் இத்தலத்தின் சிறப்பை இயம்புகின்றன.  சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீக்ஷிதர் “பாஹிமாம் ரத்னாசல நாயகா” என்று ஒரு கீர்த்தனை பாடியுள்ளார்.

கார்த்திகை சோமவார விழா, பவுர்ணமி கிரிவலம், பிரதோஷ வழிபாடு, சித்திரைத் தேர்திருவிழா, பங்குனி தெப்போற்சவம் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள். கார்த்திகை 1ம் தேதி மாணிக்கம் பதித்த விலை உயர்ந்த கிரீடம் சூட்டி இறைவன் காட்சி தருவார். மாதப்பிறப்புகள், தமிழ், ஆங்கில வருடப்பிறப்புகள், தீபாவளி, பொங்கல், சனிப்பெயர்ச்சி, பவுர்ணமி போன்ற நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. வாருங்கள் இனி மலை ஏறி  சுரும்பார் குழலி உடனாய இரத்தினகிரீஸ்வரரை தரிசிப்போம்.

அடியோங்கள் வாட்போக்கியை அடைந்த போது முதலில் கண்ணில் பட்டது தூண்களுடன் கூடிய ஒரு  நீண்ட மண்டபம், அதன் மேற்புறத்தில் பல சுதை சிற்பங்கள். அம்மண்டபத்தில் பக்தர்கள் பலர் அமர்ந்திருந்தனர். பின்னர் வெயில் தாழ்ந்த பின் மலையேறலாம் என்று அவர்கள் காத்திருந்தனர் என்று தெரிய வந்தது. ஒரு சிறுமிக்கு மொட்டை அடித்து காது குத்திக் கொண்டிருந்தனர்.

இம்மண்டபத்தின் முகப்பில் முழுமுதற்கடவுள் விநாயகர் அருள்பாலிக்கின்றார்.  ஐங்கரனை முதலில் வணங்கி விட்டு இம்மண்டபத்தில் உள்ள தண்டபாணி, மற்ற நாட்டார் தெய்வங்களான வைரப்பெருமாள் மற்றும் கோடங்கிநாயக்கர் ஆகியோரை  வணங்கினோம். வைரபெருமாளின் பாதம் மட்டுமே அடிவாரத்தில் இருந்தது. திருவிழாக்காலங்களில் பஞ்சமூர்த்திகள் கிரி வலம் வருகின்றனர் என்பதால் வாகன அறையும் அடிவாரத்தில் உள்ளது. அதிகார நந்தி தேவர் தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் அவரிடம் அனுமதி கேட்டு மலையேற்றத்தை துவங்கினோம்.

கடல் மட்டத்திலிருந்து 1178 அடிகள் உயரத்தில் உள்ள மலை உச்சிக்கு சென்று சுவாமியை வழிபட 1017 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலையேறும் பாதையில் மொத்தம் 21  மண்டபங்கள் உள்ளன எனவே மெதுவாக அங்கங்கே இளைப்பாறிக் கொள்ளலாம். மேலிருந்து இயற்கை அழகை இரசிக்கலாம். மந்தி பல   மகிழ்ந்தாடும் வாட்போக்கி என்று அப்பர் பெருமான் பாடியபடி  இம்மலையில் நிறைய குரங்குகள் உள்ளன. வழி நெடுகிலும் உயர்ந்த பாறைகள், மூலிகைச் செடிகள், குரங்குக் கூட்டங்கள் என்பவற்றைப் பார்த்துக் கொண்டே மேலே சென்றால் இரத்தினகிரீசுவரரின் ஆலயத்தை  எளிதாக அடையலாம்.

 அப்பர் பாடிய கின்னரங் கேட்கும் வாட்போக்கியை தரிசிக்க செல்ல அம்மலைப்படிகள் ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு எட்டு கால் மண்டபம் உள்ளது  அதன் முகப்பில் பஞ்ச மூர்த்திகளின் சுதை சிற்பம். பொதுவாக சுவாமியை ரிஷபாரூடராக அமைப்பர், ஆனால் இங்கு லிங்க ரூபமாக அமைத்துள்ளனர். இம்மண்டபத்தின் மத்தியில் உண்டியல்.   அடுத்து விளக்கு கல் தூண் . இக்கம்பத்தடியில் பில்லி, சூனியம் நீங்க கயிறு கட்டி வழிபடுகிறனர்.


சகுனக்குன்று

வலப்பக்கத்தில் சகுனக்குன்று என்னும் பாறை, உருண்டையான இப்பாறை எப்போது விழுந்து விடுமோ போல உள்ளது.  சகுன குன்றின் கீழ் அமர்ந்து, காரியங்களைத் தொடங்குவதற்கான நற்சகுனம் பார்க்கவும் பிரார்த்தனை செய்கிறார்கள். வறட்சி காலங்களில் சகுனக்குன்று விநாயகருக்கு பூஜை செய்தால் மழை பெய்கிறது.

அடுத்து பொன்னிடும் பாறை, சுந்தருக்காக இறைவன் பொன் சொரிந்த பாறை. இதன் மேல் எம்பிரான் தோழர் அவிநாசியில் இறையருளால் முதலையுண்ட பாலனை மூன்று வருடங்களுக்குப்பின் உயிருடன் வரவழைத்த வரலாற்றின் சுதை சிற்பம் அமைத்துள்ளனர். பூம்புகாரை நீங்கிய பதினோரு செட்டிமார்கள் இங்கு வந்து பொன்னிடும் பாறையருகே அமர்ந்து அதனைப் பிரிக்க முற்பட்டபோது அது பன்னிரண்டு பங்காகப் பிரியக் கண்டு அதிசயித்து அப்பன்னிரண்டாவது பங்கை இறைவனுக்கே அளித்தனர். எனவே பன்னிரெண்டாம் செட்டியார் என்று இறைவனை வழங்குவர்.

இடப்பக்கத்தில் ஒரு வித்தியாசமான மண்டபம். அதில்  மேலே உள்ள இறையவரை நோக்கியவாறு வினை தீர்க்கும் அதிகார நந்திகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இம்மண்டபத்தின் சிறப்பு மூன்று தூண்கள்தான் உள்ளன எனவே மூன்று கால் மண்டபம் என்றும் அழைக்கப்படுகின்றது. நான்காவது கால் என்னாயிற்று  என்று யோசிக்கின்றீர்களா? மலையின் ஒரு பாறையையே தூணாக மாற்றி இருக்கின்றார் ஸ்தபதி.


மூன்று கால் மண்டபம் 

பொன்னிடும் பாறையில் இருந்து திருப்புகழ் சபை மண்டபம் முதலான மண்டபங்களை கடந்து  103 படிகள் மேல்நோக்கி ஏறினால், பதினெட்டு படிகள் வரும். இந்த பதினெட்டு படிகளும் சிறப்பு வாய்ந்தவை. பதினெட்டு படிகளின் நடுவில் ஒரு மலர் செதுக்கப்பட்டுள்ளது. வழக்கு மற்றும் பிரச்சினைகள் ஏற்படும் போது, நியாயம் உள்ளவர்கள் இந்த படிகளில் சூடம்  ஏற்றி ‘நான் குற்றமற்றவன். என் பிரச்சினையை தீர்த்து வை இறைவா’ என்று பிரார்த்தித்தால், உடனடியாக தீர்வு கிடைக்குமாம். அதே நேரம் பொய் சத்தியம் செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்பது கண்கூடாக நடைபெறும் நிகழ்வுகளாம். அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய இப்படிகளை பக்தர்கள் புனிதமானவை என்று போற்றுகின்றனர்.

சப்த கன்னியர்

தொடர்ந்து இலட்சதீப மண்டபம், ஏகாலியர் மண்டபம், காக்கை மண்டபம், வசந்த மண்டபம் ஆகிய மண்டபங்கள் உள்ளன. இது வரை பாதி தூரம் வந்து விட்டோம். இங்கு செங்குத்தான பாறைகள் உள்ளன. இவற்றின் இடையில் சப்த கன்னியர், விநாயகர், காளி அருள் பாலிக்கின்றனர். துர்க்கைக்கு தோஷம் நீங்கியதால் இரு பாறைப் பிளவுகளும், அருகில் வாள் போன்ற பாறையும்,சப்த கன்னிகைகளும் இருப்பதை பார்க்கலாம். கன்னியர் எழுவர் பலத்த மழைக்கு ஒதுங்க இடமின்றித் தவித்தபோது இறைவன் இங்கு பாறை இடையே குகை போன்ற அமைப்பை ஏற்படுத்தித் தஞ்சம் அளித்தார் என்றும் கூறுவர்.

சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்

சிவ சிவ என்னச் சிவகதி தானே  - என்று சிவ மந்திரத்தை ஜெபித்துக்கொண் டே மலையேறினோம்.

 



படியேறி செல்லும் வழியில் சசீராஜன் குன்று என்ற பாறையின் கீழே இரண்டு படிகள் உள்ளன. இன்னொரு சுவாரசியமான பாறையையும் கவனித்தோம். அதில்  நாகப்பாம்பிற்கு இறைவன் முக்தி கொடுத்த மலை என்று எழுதியுள்ளது. அதற்கு மேலே உகந்தான்படி விநாயகர் சன்னதி உள்ளது. இவ்வாறு மலையெங்கும் உள்ள பாறைகளுக்கு தனி சிறப்பு உள்ளது.

அடுத்து உகந்தான் படி விநாயகர் சன்னதி, விநாயகரை வழிபட்டு சென்றால்  முதலில் நாம் காண்பது சோழபுரீசர் சன்னதி அதற்கு பின்னால்  அம்பாள் சன்னதி கீழ் தளத்தில் உள்ளது. அம்பாள் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன்,  நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றாள். மேற்திருக்கரங்களில் தாமரை, கீழ்திருகரங்கள் அபய வரத ஹஸ்தங்கள்.  அம்மனின் திருமுகத்தை தரிசித்தவுடன்  மலையேறி வந்த களைப்பு காணாமல் போனது. அருகில் தல மரம் வேப்ப மரம் உள்ளது. சன்னதியில் இருந்த குருக்கள் முதலில் சுவாமியை தரிசித்து வந்து விடுங்கள் என்றார்,  எனவே மேலே சென்றோம்.

4 comments:

கோமதி அரசு said...

//ரத்னகிரீசுவரரையும் சுரும்பார் குழலி அம்பிகையையும் வணங்கித் தொழுது விட்டு அங்குள்ள வேப்ப விருக்ஷத்தடியில் பஞ்சக்ஷர ஜபம் செய்தால் எல்லாத் தீங்குகளும் நீங்கும். வறுமை, கொடிய நோய்கள் ஆகியவை நீங்கும். ஞானமும் சித்தியும் கைகூடும்.//

ரதங்கிரீசுவரரை தரிசனம் செய்த அந்த நாளை மறக்கவே முடியாது. உறவினர்கள் நிறைய பேர் பாதியிலேயே திரும்பி விட்டார்கள், இன்னும் படிகள் இருக்கா என்று கேட்டு மலைத்து போய்.


இறைவன் அருளாள் படிகளை கடந்து இறை தரிசனம் கிடைத்தது.

கோமதி அரசு said...

ஸ்வாமி முன் அமர்ந்து தேவராங்கள் பாடினோம். தங்கை பேரனுக்கு பிறந்த நாள் விழா அங்கு நடந்தது, அபிசேகத்திற்கு கொடுத்து இருந்தார்கள். அபிசேகத்திற்கு நீர் கொண்டு வருபவர்தான் எப்படி படிகள் ஏற வேண்டும் என்று சொல்லி தந்தார் நேரே ஏறாமல் இந்த பக்கமும் அந்தபக்கமும் மாறி மாறி வளைந்து ஏற வேண்டும் என்று.

கோமதி அரசு said...

கோவில் வரலாறு கொஞ்சம் தான் எனக்கு தெரியும், உங்கள் பதிவின் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். ஒவ்வொன்றையும் படிக்கும் போது கண்ணில் நீர் அரும்புகிறது.

சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்

சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்

சிவ சிவ என்னச் சிவகதி தானே -

S.Muruganandam said...

// இறைவன் அருளாள் படிகளை கடந்து இறை தரிசனம் கிடைத்தது.//

அழைத்து தரிசனம் அளிப்பவர் அவர், அவரை வேண்டினால் எந்த மலையையும் ஏறலாம்.

//பேரனுக்கு பிறந்த நாள் விழா அங்கு நடந்தது//

சிவனருள் முழுமையாக கிட்ட அவர் தாள் இறைஞ்சுகின்றேன்.

//அபிசேகத்திற்கு நீர் கொண்டு வருபவர்தான் எப்படி படிகள் ஏற வேண்டும் என்று சொல்லி தந்தார் நேரே ஏறாமல் இந்த பக்கமும் அந்தபக்கமும் மாறி மாறி வளைந்து ஏற வேண்டும் என்று.//

சிறு வயதில் பழனி மலை அவ்வாறுதான் ஏறுவோம், இறங்குவோம்.

//கோவில் வரலாறு கொஞ்சம் தான் எனக்கு தெரியும், உங்கள் பதிவின் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். ஒவ்வொன்றையும் படிக்கும் போது கண்ணில் நீர் அரும்புகிறது.//

சிவ சிவ

இப்பதிவு எழுதியதின் பலனைப் பெற்றேன்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்குதல் சிவனடியார் லட்சணம்.