Wednesday, December 15, 2021

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 7

சிந்தலவாடி நரசிம்மர் தரிசனம்

இரண்யனுக்கு அஞ்சி வேறு பகுதிகளில் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், இரண்ய வதத்திற்குப்பின் பகவானிடம் நரசிம்மத் திருக்கோலத்தைத் தங்களுக்குக் காட்டியருள வேண்டும் என்று வேண்டினர். அதற்கிசைந்த பெருமாள் அவ்வண்ணமே முனிவர்களுக்கு பல தலங்களில் சேவை சாதித்தார். அவ்வாறு காட்சி தந்த தலங்கள் தமிழகத்தில் எட்டு இடங்களில் உள்ளன.


இவற்றில் பூவரசன் குப்பம் நடுவில் இருக்க, இதைச் சுற்றி சோளிங்கர் நரசிம்மர், நாமக்கல் நரசிம்மர், அந்திலி நரசிம்மர், சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல் நரசிம்மர், சிங்கிரி கோவில் அமைந்துள்ளன. இவற்றுள் பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில் ஆகிய மூன்று தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இந்த 3 தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டால் நல்லது என்பார்கள்.


முதலில் அடியோங்கள் தரிசித்த சிந்தலவாடி தலத்தில் தானாக நரசிம்மர் எழுந்தருளிய வரலாற்றைக் காண்போம் பின்னர் மற்ற நரசிம்மர் ஆலயங்களின் சிறப்பைப் பற்றி  சுருக்கமாக பார்த்துவிட்டு நிறைவாக அடியோங்களுக்கு கிடைத்த தரிசனத்தைப் பற்றி காணலாம் அன்பர்களே.


சிந்தலவாடித்தலம் திருச்சி - குளித்தலை சாலையில் 45வது கி.மீ., குளித்தலையில் இருந்து 12 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.  திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில்  காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.


இங்கு மிகப் பின்னாளில்தான் நரசிம்மர் எழுந்தருளினார் என்பது சுவாரஸ்யமான சரிதம். அதற்கு முன்னால், காளிங்க நர்த்தன கிருஷ்ணர் மற்றும் அனுமன் ஆகியோர் இங்கு எழுந்தருளியிருந்தனர். இவர்களைப் பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீவியாசராஜர்.


ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த விக்கிரகங்களின் பெருமை திசையெங்கும் பரவ, பலரும் இங்கு வந்து தங்கி, இறைவழிபாடு நடத்தினர். அப்படி வந்த பக்தர்களில் ஒருவர் ஹரியாச்சார், அவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.


மறுநாள், ஆர்யாச்சார் திருக்காம்புலியூரிலிருந்து கருப்பத்தூருக்குச் சென்றார். கனவில் தெரிந்த வழிகளில் பயணம் தொடர, சலவைத் தொழிலாளர்கள் பணி செய்யும் இடம் வந்தது. குறிப்பிட்ட சலவைத் தொழிலாளியும் ஆர்யாச்சாரை அழைத்துச் சென்று அக்கல்லைக் காண்பித்தார். கல்லைத் திருப்பிப் பார்த்தபோது யோக நரசிம்மர் காட்சியளித்தார்.  ஸ்ரீ ஆர்யாச்சார் பக்தியாக, அந்த விக்கிரகத்தோடு மேற்கு நோக்கி நடந்தார். சிந்தலவாடி அருகே வந்தபோது, நடை நடுங்கியது; கல் பாரமாகத் தெரிய ஆரம்பித்தது.  ஸ்ரீ நரசிம்மரின் எண்ணம் பக்தருக்குப் புரிந்தது. அங்கேயே ஸ்ரீ யோக நரசிம்மரை இறக்கி, காவிரிக்கரையில் அக்கிராமத்தில் முன்பே இருந்த ஸ்ரீ காளிங்க நர்த்தனர் கோயிலில் ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்தார்.  அப்போது ஸ்ரீரங்கத்தில் இருந்த ஸ்ரீவியாசராஜர்  சிந்தாலவாடி வந்து ஸ்ரீயோக நரசிம்மரை பூஜித்தார்.  யோக நரசிம்மருக்கு இடப்புறத்தில் ஒரு சிறு சன்னதியில் அனுமனை (பிராண தேவரு) பிரதிஷ்டை செய்து வணங்கினார்.


ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் கரூர், குளித்தலை, திருச்சி, முசிறி பகுதிகளில் வாழும் மத்வ சம்பிரதாயக் குடும்பங்களின் குலதெய்வமாக இருந்து வருகிறது. தங்கள் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காது குத்துதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை இக்கோயிலில் நடத்துகிறார்கள்  மத்வ சம்பிரதாயப் படி தினசரி பூஜைகளும் உற்சவங்களும் இங்கு நடத்தப்படுகின்றன. இனி மற்ற அஷ்ட நரசிம்மர் தலங்களைப் பற்றி காண்போம்.


பூவரசங்குப்பம் : இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது


தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.


பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.


பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுவாதி தினத்தில் நரசிம்மர் ஜெயந்தி தின விழா கொண்டாடப்படுவது வழக்கம்.


சிங்கிரிக்குடி : பிரகலாதன் வேண்டு கோளுக்கிணங்கி, 16 கரங்களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம், 5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.
இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம் இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.கடலூர்-புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகபாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது


பரிக்கல் : இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.


யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிக்காலாசுரன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராகதோன்றி, பரிக்காலாசுரனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.சென்னை--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம்.


சோளிங்கர் : சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி, நரசிம்மர், யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தோசிதன்,    தாயார் அமிர்தவல்லி.
விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாக மலை மேலும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வேலூர் மாவட்டம் அரக்கோணம்-சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.


சிங்கப்பெருமாள் கோவில் : ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் பாடலாத்ரி நரசிம்மர்என்று அழைக்கப்படுகிறார். (பாடலம் என்றால் சிவப்பு, அத்ரி என்றால் மலை) என்று பொருள். சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறதுபொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்து வைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக நெற்றிக் கண்ணுடன் காட்சியளிக்கிறார். காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.


நாமக்கல் :  திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.


கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.


அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.


அந்திலி : நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.


எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார். திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத் திருக்கிறது அந்திலி திருத்தலம்.  இனி சிந்தலவாடியில் தரிசனம் எவ்வாறு கிட்டியது என்று காணலாமா அன்பர்களே.


மாலை 4 மணிக்கு அய்யர் மலை அடிவாரத்திலிருந்து கிளம்பினோம். 4:30  மணி அளவில் சிந்தலவாடி வந்தடைந்தோம். முக்கிய சாலைக்கு மிக அருகிலேயே கோவில் அமைந்துள்ளது. ஆலய முகப்பில் இரு புறமும் அனுமன் வணங்கும் யோக நரசிம்மர், இராம கிருஷ்ணர்கள், மத்வரும், வியாசராஜரும் வணங்கும் காளிய நர்த்தனர் ஆகிய   சுதை சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன. மூலவர் விமானம் புதுப் பொலிவுடன் திராவிட அமைப்பில் அமைந்துள்ளது.


ஆலயம் திறந்திருக்குமா? இல்லையா? என்று யோசித்துக்கொண்டே வந்தோம். நல்ல வேளையாக கோவில் வெளிக்கதவு  திறந்தே இருந்தது ஆனால் உள் கதவு சார்த்தியிருந்தது. உள்ளே செல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டு தயக்கத்துடன் நின்றிருந்த போது ஒரு அன்பர் உள்ளிருந்து வந்து சன்னதி திறந்திருக்கின்றது செல்லுங்கள் என்றார்.    உள்ளே நுழைந்தவுடன் ஒரு நீண்ட மண்டபம். அதன் கூரையில் அற்புதமான ஓவியங்கள். அதன் நடுநாயமாக மத்வ சம்பிரதாயத்தை துவக்கிய ஹரிவாயு குருவின் அவதாரங்களான அனுமன், பீமன் மற்றும் மத்வரும் ஒன்றாக இருக்கும் ஓவியம், மற்றும் தசாவதாரங்கள் மற்றும் கிருஷ்ண லீலை ஓவியங்கள்,  சமீபத்தில்தான் சம்ப்ரோக்ஷணம் ஆகி இருக்கின்றது. விமானம், முன் முகப்பு வளைவு ஓவியங்கள் எல்லாம் புது வர்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.


அம்மண்டபத்திலிருந்து பிரகாரத்தை சுற்றிக் கொண்டு யோக நரசிம்மர் சன்னதியை அடைந்தோம். கருவறையில் யோக நரசிம்மரும், காளிங்க நர்த்தன கோலத்தில் கிருஷ்ணரும் (கோபால கிருஷ்ண தேவரு) அருகருகாக சேவை சாதிக்கின்றனர். உற்சவ மூர்த்தியையும், சாளக்கிராமங்களையும் கருவறையில் சேவிக்கலாம். ஆச்சார்யார் எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார். ஆரத்தி காண்பித்து பிரசாதமும் அளித்தார்.

ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா - என்று போற்றி வணங்கினோம்.  நரசிம்மர் சன்னதிக்கு இடப்புறத்தில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் சன்னதி. பிராண தேவரையும்  வணங்கினோம். கர்ப்பகுடியின்  முகப்பில் அருமையான யோக நரசிம்மர் சுதை சிற்பம் அலங்கரிக்கின்றது. ஆச்சார்யர் ஒரு அன்பர் கல்யாண பத்திரிக்கை பெருமாளுக்கு வைக்க வந்ததால்தான் சன்னதி திறந்திருக்கின்றது என்று கூறிய போதுதான் நாளை என்பது நரசிம்மரிடத்தில் இல்லை என்பது புரிந்தது. அடியோங்களுக்காக எம்பெருமான் காத்திருந்த கருணையை உணர்ந்தோம். இத்தலம் ஒரு சிறந்த பிரார்த்தனை தலம் தங்கள் கோரிக்கைகளை நரசிம்மரிடம் வையுங்கள் அவர் நிச்சயம்
காக்க வைக்காமல் தரிசனம் அளித்த நரசிம்மரை

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ: சகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
யதோ யதோ வாபி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ: தேவாத் அபரம் கிஞ்சித்
தஸ்மாத் ந்ருஸிம்ஹ: சரணம் ப்ரபத்யே  என்று சரணாகதி அடைந்தோம்.

 வாயு தேவரு ( அனுமன், பீமன், மத்வர்)


பஞ்சாம்ருத அபிஷேகம் மற்றும் தீர்த்த பிரசாதம் ஆகிய சேவைகள் அன்பர்கள் உபயமாக  செய்யப்படுகின்றது. முன் பதிவு செய்து கொண்டு வர வேண்டும்.  வெளியூரிலிருந்து வருபவர்கள் தங்கிக்கொள்ள ஏதுவாக அருகில் ஒரு சிறு மண்டபம் உள்ளது, ஆலயத்திலும் இரண்டு அறைகள் உள்ளன. அருமையான நரசிம்மரின் தரிசனத்திற்குப்பின் அடுத்த தலத்திற்கு புறப்பட்டு சென்றோம் அது என்ன தலம் என்பதை இதோ சென்று சேர்ந்து விடுவோம் உடன்  வாருங்கள் அன்பர்களே.
 

2 comments:

கோமதி அரசு said...

நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தல தரிசனம் கிடைக்கபெற்றது . மகிழ்ச்சி.
தல வரலாறு அருமை.
தொடர்கிறேன்.

S.Muruganandam said...

மிக்க நன்றி, தொடருங்கள் அம்மா.