ஸ்ரீ:
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்றவனந்த லிடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்! ..............(10)
பொருள் :விரதமிருந்து சுவர்க்கம் போகின்ற அம்மையே! நாங்கள் இவ்வாறு கூப்பிட்டும் கதவைத்தான் திறக்கவில்லை, பதிலும் கூடவா தர மாட்டாய். புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன் உறங்கும் போட்டியில் உன்னிடம் தோற்று அவனுடைய பேருறக்கத்தை உனக்கு கொடுத்தானோ?
ஆழ்ந்த உறக்கமுடையவளே! பெறர்கரிய ஆபரணம் போன்றவளே! வாசம் மிகுந்த துளசி மாலையை திருமுடியில் அணிந்துள்ள நாராயண மூர்த்தி நம் நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை நல்குவான். எனவே உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திறடி.
இராமாவதாரம்:
இப்பாசுரத்தில் இராம பெருமானின் வல்லமையை பாடுகின்றார் ஆண்டாள். இராமபிரானால் இறந்து பட்டவன் கும்பகர்ணன். உன் உறக்கத்திற்கு தோற்று, அவன் உறக்கத்தையும் உனக்கு தந்து விட்டானோ? எனப் பெண்கள் ஒருவரையொருவர் எள்ளி நகையாடும் வகையில் இதனை எடுத்துரைக்கின்றார் ஆண்டாள். "போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ" என்று பாடுகிறார் ஆண்டாள்.
கீதாசாரத்தை எடுத்துச் சொல்லி உலகத்திலே உள்ளவர்களை திருத்த பூமிப் பிராட்டி வராஹ அவதாரத்திலே எம்பெருமானின் மூக்கின் மேல் அமர்ந்திருந்த போது
. அவன் திருவடிகளில் புஷ்பத்தை இட்டு அர்ச்சனை செய்யவும்.
. அவன் திருநாமத்தை உரக்கச் சொல்லவும்
.அவன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் செய்யவும் செய்த சங்கல்பத்தை ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்த போது நிறைவேற்றுகின்றாள்.
இது வரை பார்த்த திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்களில் எம்பெருமானின் திருநாமங்களைப் போற்றி பாடியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் என்பது பெரியோர் வாக்கு.
***********
உ
திருசிற்றம்பலம்
திருசிற்றம்பலம்
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்
போதார்ப் புணை முடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழந் தொண்டருளன்
கோதில் குலத்தவன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்!
ஏதவன் பேர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்!..................(10)
பொருள்:
சிவபெருமானின் திருக்கோவிலை சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற்ப் பணிப் பெண்களே!
அரியும் அயனும் அடி முடி காண முடியா அனற்பிழம்பாக, திருவண்ணாமலையாக, லிங்கோத்பவராக எம்பெருமான் நின்ற எம்பெருமானின் வீரக் கழலணிந்த திருவடி மலர்ப் பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை, ஊமத்தை, சந்திரன், கங்கை அணிந்த அவரது திருமுடி மேலோர்க்கும் மேலாக, எல்லாவற்றிக்கும் மேலாக அண்டங் கடந்து விளங்குகின்றது.
அவன் மாதொரு பாகன், மங்கை கூறன், மாவகிடண்ண கண்ணி பங்கன், ஆதலால் திருமேனி ஒன்று உடையவனல்லன். எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளவன். அவன் மறைக்கும் முதல்வன். விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும், அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும் வரையறுத்து புகழ முடியாத உயிர்த்துணைவன்.
அந்தப் பெருமானின் ஊர் யாது? பேர் யாது? அவருக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவரைப் பாடும் தன்மை எப்படி? அன்புடன் கூறுவீர்களா?
திருசிற்றம்பலம்
2 comments:
நாற்றத்துழாய்முடி நாராயணன் - துளசியை அணிந்து அணிந்து பகவானின் தலைமுடி துளசி வாசத்துடன் விளங்குகிறதாம் , அத்தகைய எம்பெருமானை மனதால் நினைத்து வாயினால் பாடி மகிழ்வோம் ...
ஓம் நமோ நாராயணாய!ஓம் நமோ நாராயணாய!ஓம் நமோ நாராயணாய!
Post a Comment