Thursday, December 23, 2021

மார்கழிப்பதிவுகள் - 8

   

ஸ்ரீ:

திருப்பாவை # 8


மல்லரை மாட்டிய தேவாதி தேவன் 



கீழ்வானம் வெள்ளன் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்! ...........(8)


பொருள்:
மனமகிழ்ச்சியுடைய பாவையே! கிழக்கே வானம் வெளுத்து விட்டது. எருமைகள் எல்லாம் சிறிது நேரத்திற்கு முன்பே விடுதலை பெற்று மேய்ச்சலுக்கு சென்று விட்டன.


பாவை நோன்பு செய்யும் இடத்திற்கு நமது தோழிமார்கள் பலர் சென்று விட்டனர். மீதமுள்ளவர்கள் அங்கு செல்லும் நோக்கத்துடன் புறப்படுகின்றனர், அவர்களை போக விடாமல் தடுத்து உன்னை அழைக்க வந்து நின்றோம். காரிகையே! காலம் தாழ்த்தாமல் எழுந்து வா!

நம் பெருமான் குதிரை வடிவம் எடுத்து வந்த மாய அசுரனை வாயைப் பிளந்து மாய்த்தவர். மதுராபுரியிலே கொடிய கஞ்சன் அனுப்பிய மல்லர்களை வீழ்த்தியவர்.

அந்த தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவனை, கச்சிப் பதி மேவிய களிற்றை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால் நம்மீது இரக்கம் காட்டி" வா! வா!" என்று அழைத்து நாம் வேண்டும் வரத்தை அருளும் வரதராஜன் அவர். எனவே விரைவில் எழுந்து வா பெண்ணே!

இப்பாசுரத்தில் அவதாரப் பெருமை:

மாவாய்ப் பிளந்தான்:

கோகுலத்தில் வளரும் கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பியும் அவர்களே கண்ணன் கையில் வதம் ஆவது பற்றிக் கவலைப்படாமல் கம்சன் மேலும் கேசி என்னும் ஒரு அசுரனை அனுப்பினான். அவனும் குதிரை வடிவம் எடுத்து தன் குளம்பால் கண்ணனைக் கொல்ல வெகு வேகமாக ஓடி வந்தான். கண்ணன் அந்தக் குதிரையின் வாயைப் பிளந்து அவனையும் வதம் செய்தார் என்பதை "மாவாய்ப் பிளந்து" என்னும் பாசுர தொடரினால் பாடுகின்றார் ஆண்டாள்.


மல்லரை மாட்டியவன்:
மதுராவில் நடை பெறும் வில் விழாவிற்காக கண்ணனையும் பலராமரையும் வஞ்சனையாக அழைத்த கஞ்சன் அவர்கள் இருவரையும் கொல்ல சாணுரன், முஷ்டிகன் என்னும் மல்லர்களை ஏற்பாடு செய்திருந்தான். கண்ணன் அந்த மல்லர்களுடன் மல்யுத்தம் செய்து அனைவரையும் தோற்கடித்ததை ஆண்டாள் “மல்லரை மாட்டிய தேவாதி தேவனை" என்று பாடுகிறார்.

இப்பாசுரத்தின் உட்கருத்துகிழக்கு  வெளுப்பது என்பது  ஸத்வகுணம் தலையெடுப்பதற்கான அறிகுறி, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.. தமோ குணங்கள் விலகிப்போவதாகக் கூறுவது.


 

திருச்சிற்றம்பலம்






திருவெம்பாவை # 8


கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ?
வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைப்பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்! ......(8 )


பொருள்நற்காலை பொழுது விடிந்து விட்டது, கோழிகள் கூவுகின்றன, எங்கும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன; நாதசுரம் ஒலிக்கின்றது, எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. நாங்கள் அனைவரும் "தனக்குவமையில்லாத பேரொளியை, ஒப்பற்ற பேரருளை, மேலொன்றுமில்லாத மெய்ப் பொருளை, பரஞ்சோதியை பாடினோமே அது உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே வாழ்வாயாக! உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்.

அருட்பெருங் கடலாகிய எம்பெருமானுக்கு நீ அன்பு செய்யும் முறை இதுதானா? ஊழி காலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்ற தலைவனை, உமையொரு பாகனை, ஏழைப் பங்காளனை பாட வேண்டாமா? எழுந்திரு கண்ணே!


காலைக்காட்சியை அப்படியே கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் பதிகம். எம்பெருமான் ஏழைப் பங்காளன் என்று கூறும் பாடல். ஏழை என்பது ஏந்திழை என்று உமையம்மையை குறிப்பது. எனவே ஏழைப் பங்காளன் என்பது  அர்த்தநாரீஸ்வரராக எம்பெருமான் விளங்குவதை குறிக்கின்றது.  இப்பாடலில் தமிழுக்குரிய  சிறப்பு எழுத்தான "ழ" ஒன்பது முறை வந்திருப்பது சிறப்பு. 

2 comments:

Anuprem said...

ஆண்டாள் திருவடிகளே சரணம் ...

S.Muruganandam said...

//ஆண்டாள் திருவடிகளே சரணம் ...//

மிக்க நன்றி.