Thursday, December 16, 2021

மார்கழிப்பதிவுகள் - 1


 திருசிற்றம்பலம்


மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவெம்பாவை

திருவண்ணாமலையில் அருளியது
(சக்தியை வியந்தது)


ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்
சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ! வன்செவியோ ? நின் செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்! .......(1)

மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம். ஒரு ஜீவாத்மா, இந்த உலக மாயையில் சிக்குண்டு, இறைவனை மறந்து தூங்கும் மற்றொரு ஜீவாத்மாவை இறைவனின் புகழ் பாட அழைக்கும் படி அமைந்த பாடல்கள்.

பொருள்: திருவண்ணாமலையார் ஆதியும் அந்தமும் இல்லாதவர்! பிரமனும், நெடுமாலும் அடியும், முடியும் காண முடியா அனற் பிழம்பாய், அருட்பெருஞ்சோதியாய் நின்றவர், அந்த தியாகராஜருடைய திருவடி பெருமைகளை நாங்கள் அனைவரும்( ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி! என்று) பாடுகின்றோம்.

ஆனால் வீதியிலே எம்பெருமானின் திருநாமங்களை கேட்டவுடனே விம்மி விம்மி மெய் மறந்து இறைவனில் ஒன்றிவிடுகின்ற , வாள் போன்ற கூரிய கண்களைக் கொண்ட பெண்ணே! இப்போது அந்த வாழ்த்தொலிகளை கேட்ட பின்னும், செவிட்டு மங்கையைப் போல் உறங்குகின்றாயோ, உனது செவிகளுக்கு என்ன ஆயிற்று?

எம்பெருமானை மறந்து விட்டு இந்த பஞ்சு மெத்தை சுகத்திற்கு ஆளாகி தூங்குகின்றாயா? இதுதான் தூக்கத்தின் பரிசா பாவையே? அதை விடுத்து எழுந்து வா இறைவனின் புகழ் பாடி மார்கழி நீராடுவோம், அவரது திருவருளைப் பெறுவோம்.

அண்ணாமலையார் மகிமை:
தான் என்னும் அகந்தை மட்டும் யாருக்கும் இருக்கக் கூடாது. தெய்வங்களுக்குக் கூட இது பொருந்தும் என்ற அரிய தத்துவத்தை மாந்தருக்கு உணர்த்த முப்பெருந்தெய்வங்களூம் ஒரு நிகழ்வை நிகழ்த்திக் காட்டினர் திருவண்ணாமலையில் அந்த நாடகம் இதோ. ஒரு சமயம் திருமாலை விடவும் தானே பெரியவர் என்ற அகந்தை பிரம்மாவிற்கு ஏற்பட்டது. திருமாலிடம் சென்ற அவர் . 'உம்மிடமிருந்து பிறந்திருந்தாலும் நானே பெரியவன். நான் படைப்பதால்தான் உம்மால் காத்தல் தொழிலை செய்ய முடிகிறது என்று கர்வத்துடன் பேசினார். திருமால் அவரிடம், 'உனது தொழிலுக்கு ஆதாரமான வேதங்களையே உன்னால் காத்துக் கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கையில் நீ எப்படி பெரியவன் ஆக முடியும் , நானே பெரியவன் என்று அவர் வாதிட்டார். வாதம் தொடர்ந்தது இருவரும் யார் பெரியவர் என்று முடிவெடுக்க சிவபெருமானிடம் சென்றனர். சிவபெருமான் அப்போது ஒரு சோதிப்பிழம்பாய் வானமும் பாதாளமும் கடந்து நின்றார். இருவரில் பெருமானது அடியையோ அல்லது முடியையோ யார் முதலில் காண்கின்றார்களோ அவர்க பெரியவர் என்றார் திருக்கயிலைவாசர்.

உடனே திருமால் பன்றி வடிவம் எடுத்து பூமியைக் குடைந்து பெருமானுடைய திருவடியைக் காண புறப்பட்டார். பிரம்மதேவர் அன்ன வடிவம் எடுத்து எம்பெருமானுடைய திருமுடியைக் காண மேலே பறந்து சென்றார் இவ்வாறு பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின் வழியில் எம்பெருமானின் திருமுடியில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றை பிரம்மதேவர் கண்டார், எம் பெருமானின் திருமுடி எங்குள்ளது என்று பிரம்மன் கேட்க அந்த தாழம்பூ நான் சிவனாருடைய சடையிலிருந்து நழுவி 40000 வருடம் கீழே பயணம் செய்திருக்கின்றேன் என்று கூறியது பிரம்ம தேவர் திருமுடியைக் காணும் முயற்சியை கை விடுத்து அந்த தாழம்பூவை தான் எம்பெருமானின் முடியைக் கண்டதாக சாட்சி கூறுமாறு வேண்டினார் தாழம்பூவும் ஒத்துக் கொண்டது. மாயவனும் திருவடி காணாமல் திரும்பி வந்தார். அவர்கள் சிவபெருமானை அடைந்து இந்த உண்மையைக் கூறினர். பொய் கூறிய பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் கோவில் இல்லாமல் போகட்டும் என்று சாபம் கொடுத்தார் எம்பெருமான், படைப்புக் கடவுளின் மன்றாடலுக்கு மனமிரங்கி , ஆணவமும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத தன்மையும் இருக்கக் கூடாது என்று பிரம்மாவிற்கு உபதேசம் செய்து கோவிலின் அபிஷேகத் தீர்த்தம் வரும் இடத்தில் ஓரமாக பிரம்மா ஒதுங்கிக் கொள்ள சம்மதித்தார் அந்த கருணாலயன். பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உபயோகப்படுத்தபடக் கூடாது என்றும் சாபம் கொடுத்து லிங்கோத்பவராக இருவருக்கும் அருட்காட்சி தந்தார் எம்பெருமான். தங்கள் பிழையை உணர்ந்த மாலும் அயனும் பின் லிங்க பூசை செய்தனர்.

பிரமன்அரி என்று இருவரும் தம் பேதமையால்பரம் யாம்
பரமம் என்றவர்கள் பதைப்பு ஒடுங்க
அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து
பரமாகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ

என்று திருவாசகத்தில் மணி வாசக சுவாமிகள் பாடியபடி திருமாலும் பிரம்மனும் தான் என்னும் அகந்தை நீங்கிட அடி முடி காணாமல் ஜோதிப்பிழம்பாய் எம்பெருமான் நின்ற ஸ்தலம் திருவண்ணாமலை, நாளோ மஹா சிவராத்திரி, ஆயினும் பிரம்மனுக்கும், மாலுக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்கி கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு சோதி மலை நுனியில் காட்டா நிற்போம் என்று அருளிய படி கார்த்திகை மாதம் கார்த்திகை நாளன்று திருவண்ணாமலை உச்சியில் தீப தரிசன காட்சி தருவதாக ஐதீகம். ஜோதி ரூபமாககாட்சி தரும் சிவபெருமானை, அண்ணாமலையானைக் காண தேவர்களும், மகரிஷ’களும், சித்தர்களும், ஞானிகளும் திருக்கார்த்திகையன்று இத்தலத்திற்கு வருவதாக ஐதீகம்.


*****************

ஸ்ரீ:
ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


நீளா துங்க ஸ்தந கிரி தடீம் ஸுப்த  முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம்  ஸ்வம் ச்ருதி சத ஸிர: ஸித்தம் அத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய:

அன்ன வயற்புதுவையாண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் - இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.



சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே! தொல் பாவை
பாடியருள வல்ல பல்வளையாய்! - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற விம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு.


திருப்பாவை #1





ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் 

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யாசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கு பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

மார்கழி மாதத்தின் சிறப்பு:

பொருள்: கோபியரே! கோபியரே! கொஞ்சும் இளம் வஞ்சியரே! பொருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்களே! கண்ணனின் அருட்செல்வம் நிறைந்திருக்கின்ற திருஆய்ப்பாடியின் செல்வச் சிறுமிகளே!

நம் கண்ணன் (நாராயணன்) , கூர்மையான வேலுடன் சென்று பகைவர்களை வெல்லும் நந்தகோபனின் திருக்குமரன், அழகிய கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம், கருவுடை முகில் வண்ணன், காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், செந்தாமரையை ஒத்த கண்களையுடையவன், குளிர்ச்சி பொருந்திய முகிழ்கின்ற முழுமதி திருமுகத்தினன். அந்த ஸ்ரீமந் நாராயணனே நமது பாவை நோன்பிற்கு வேண்டிய அனைத்தையும் வழங்குவான் (இம்மை இன்பங்களை மட்டுமல்ல மறுமையில் வைகுண்டப்பதவியையும்) வாருங்கள்! வஞ்சியரே! இந்த மாதங்களில் சிறந்த மார்கழியில், முழுமதி நன்னாளில் கோவிந்தன் பெயரைச் சொல்லி உலகத்தோர் போற்றும் வண்ணம் மார்கழி நீராடுவோம். ( எம்பெருமான் அனுபவத்தில் திளைப்போம். )என்று தன்னை ஒரு ஆயர்குலப்பெண்ணாகவும், திருவில்லிபுத்தூரை ஆய்ப்பாடியாகவும், வடபத்ர சாயியை கண்ணனாகவும் பாவித்து பாவை நோன்பை அனுசரிக்க ஆண்டாள் நாச்சியார் அழைக்கின்றார். 

திருப்பாவையின் இம்முதல் பாசுரம் எம்பெருமானிடம் பறை என்னும் கைங்கரியத்தை வேண்டும் பாசுரமாக அமைந்துள்ளது.  சேஷத்வமே நமது குறிக்கோள் என்கிறாள் ஆண்டாள்.

4 comments:

கோமதி அரசு said...

திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களும், விளக்கமும் மிக அருமை.

உங்கள் பதிவை தொடர்கிறேன்.

Anuprem said...

அற்புதமான விளக்கங்கள் ...

படிக்க படிக்க தெவிட்டாத தேன் சுவை பாசுரங்கள் ...

S.Muruganandam said...

மிக்க நன்றி.

S.Muruganandam said...

மிக்க நன்றி, தொடருங்கள் அம்மா.