ஸ்ரீ:
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து
பாழியம் தோளுடைப் பற்பநா பன் கையில்
ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)
பொருள்: கடல் போன்ற பெருமையுள்ள மழையாகிய அருளாளனே! உனக்கென ஒரு துளி நீரையும் மறைத்து வைக்காதே! கடலுள் செல்! கடல் நீரை முகந்து கொள்! பேரொலியுடன் மேலே ஏறு! ஊழிக் காலத்தின் திருமாலின் கேடில்லா திருமேனி நிறத்தை ஒத்த கருமை நிறம் கொள்! பெருமையும் எழிலும் கொண்ட பத்மனாபனின் வலக் கையில் விளங்கும் சுதர்சன சக்கரத்தைப் போல் மின்னிட்டு விளங்கு! இடக்கரத்தில் உள்ள பாஞ்சசன்னியத்தைப் போல முழங்கு! அப்பெருமாளின் சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து எய்யும் அம்பு மழை போல இவ்வையகம் வாழவும், பாவைகளாகிய நாங்கள் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலந்தாழ்த்தாமல் மழையைப் பொழி!
பாவை நோன்பின் ஒரு முக்கிய நோக்கமான மழை பெய்ய வேண்டும் என்று வேண்டும் பாடல். மழை எவ்வாறு உருவாகின்றது என்று அன்றே பாடியுள்ளாள் கோதை.
இப்பாசுரத்தில் தமிழுக்கே சிறப்பான "ழ" என்ற எழுத்து ஆழி (3), மழை(2),ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து என்று பதினோரு முறை வருவது சிறப்பு.
ஒண்ணித்திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
எழுப்புபவள்:
படுக்கையிலிருப்பவள்:
எழுப்புபவர்:
************
உ
திருசிற்றம்பலம்
திருவெம்பாவை #4
ஒண்ணித்திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடி கசிந்துள்ளம்உள்நெக்கு
நின்றுருக யாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலோ ரெம்பாவாய்! ........(4)
எழுப்புபவள்:
ஒளி பொருந்திய முத்தினைப் போன்ற பற்களை உடைய பாவையே! உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா?
படுக்கையிலிருப்பவள்:
கிளி போல மிழற்றும் நம் தோழிகள் அனைவரும் வந்து விட்டனரோ?
எழுப்புபவர்:
எண்ணிப் பார்த்து உள்ளபடி சொல்கின்றோம்; ஆனால் நேரமாகும், அதுவரையும் கண் உறங்கி காலத்தை வீணாக்காதே! தேவர்களுக்கும் மருத்துவரான வைத்தீஸ்வரனை, மறைகள் பேசுகின்ற உயர்வான பொருளை, கண்களுக்கு இனியவனைப் பாடி மனம் கசிந்து உள்ளம் உடைந்து நின்று உருகும் நாங்கள் எண்ண மாட்டோம். நீயே வந்து எண்ணி, எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய் உறங்கு.
அநாதி காலமாக அறியாமையினால் உழலும் ஒரு ஜீவான்மாவை, பரமாத்மாவை அடைய வேண்டும் எழுந்து வா என்று அழைக்கும் ஒரு பாடல்.
4 comments:
//இப்பாசுரத்தில் தமிழுக்கே சிறப்பான "ழ" என்ற எழுத்து ஆழி (3), மழை(2),ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து என்று பதினோரு முறை வருவது சிறப்பு.//
அருமை.
வாழ்த்துக்கள்.
பாசுரங்களை படித்து விளக்கங்களை படித்து மகிழ்ந்தேன்.
தொடருங்கள்மிக்க மகிழ்ச்சி அம்மா.
இப்பாசுரத்தில் தமிழுக்கே சிறப்பான "ழ" என்ற எழுத்து ஆழி (3), மழை(2),ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து என்று பதினோரு முறை வருவது சிறப்பு.....
அரிய தகவல் ..மிக சிறப்பு
இப்பாசுரத்தில் பெரியாழ்வாரையும் மிஞ்சி விடுகிறாள் கோதை.
மிக்க நன்றி.
Post a Comment