Wednesday, December 29, 2021

மார்கழிப்பதிவுகள் - 14

ஸ்ரீ:

திருப்பாவை # 14
  


ஸ்ரீ
:




சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 


உங்கள்புழைக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர்வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பினகாண்
செங்கற்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களைமுன்ன மெழுப்புவான்வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்
சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன்
பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பவாய்!.........(14)


பொருள்: உங்கள் வீட்டு புழக்கடை தோட்டத்திலுள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்கள் பூத்தன, ஆம்பல் மலர்கள் இதழ் குவிந்து வாய் மூடின. பொழுது விடிந்து விட்டதே உனக்கு விளங்கவில்லையா?

தாம்பூலம் தரியாததால் வெண் பற்களைக் கொண்ட தவசீலர்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோவில்களை திறக்க சென்று விட்டனர்.

முன்னரே வந்து உங்களை நானே வந்து எழுப்புவேன் என்று வாய் சவடால் பேசிய நங்கையே! எழுந்திரு! வெட்கமில்லாதவளே! நாவின் நீட்சியுடையவளே! சங்கு, சக்கரம் ஏந்திய நீண்டக் திருக்கைகளையும், தாமரைக் கண்களையும் உடைய அந்த எம்பெருமானை  கேசவா! மாதவா! நாராயணா! என்று பாடுவோமாக.

கொடுத்த  வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த பண்பை இப்பாசுரத்தில் நமக்கு அறிவுறுத்துகிறார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்.  

*************


 

திருச்சிற்றம்பலம்

திருவெம்பாவை # 14



காதார் குழையாடப் பைம்பூண் கலனாட
கோதை குழலாட வண்டின் குழாமாட
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதித் திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடேலோர் எம்பாவாய்!..........(14)


பொருள்: பெண்களே! நம் செவிகளில் அணிந்துள்ள தோடுகள் ஆட, உடலில் அணிந்துள்ள பசும் பொற்கலன்கள் ஆட, கருங்கூந்தலாட, அக்கூந்தலில் சூடியுள்ள மலர் மாலைகள் ஆட, அந்த மாலைகளில் மொய்க்கின்ற வண்டின் கூட்டங்கள் எழுந்து ஆடக் இக்குளத்தின் குளிர்ந்த நீரில் மூழ்குவோம்!

எம்பெருமான் ஆனந்த கூத்தாடும் திருச்சிற்றம்பலத்தைப் பாடி, மறைப்பொருளைப்பாடி, அம்மறைப்பொருள ஆமாறு(-ஆம் வண்ணம்) பாடி, முச்சுடர்க்கும் ஒளி வழங்கும் ஒளியாகிய இறைவன் திறங்களைப்பாடி, அவன் திருமுடியில் விளங்கும் பொன் கொன்றை மாலையைப் பாடி, அவன் எல்லா பொருளுக்கும் இறைமையாய் விளங்கும் முதன்மையும்பாடி,(அவரது முழு முதன்மையையும்), முடிவில்லா முடிவையும் பாடி ஏனைய உயிர்களினும் நம்மை வேறுபடுத்துச் சிறப்புற வைத்து மேல் நிலையில் எடுத்து அருள்கின்ற ஆனந்த நடராஜர், சிறந்த வளையல்களை அணிந்த தளிரன்ன கரங்களையுடைய சிவகாமி அம்மையின் ஆகியோரின் திருவடிச் சிறப்பையும் பாடிக் கொண்டே நீராடுவோமாக!

எளிதில் உணரமுடியாத வேதப்பொருளான இறைவனே எளி வந்த கருணையினால் சோதி ரூபமாக, நடராஜரூபமாக காட்சி தருவதையும்,  சிவசக்தி ரூபமாக அருள் பாலிப்பதையும் கூறும் அருமையான பாடல்.

நீராடும் போது மற்றவற்றைப் பற்றி எண்ணாமால் இறைவனைப் பற்றியே எண்ணவேண்டுமென்று மாணிக்கவாசகர் நமக்கு அறிவுறுத்துகிறார். 

No comments: