Friday, December 17, 2021

மார்கழிப்பதிவுகள் - 2

ஸ்ரீ:

திருப்பாவை # 2



பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!  (2)


பாவை நோன்பை நோற்கும்  முறை: ( செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்)

இந்த மண்ணுலகில் வாழ்பவர்களே! நாம் நல்ல மழை பெறவும், செல்வம் செழிக்கவும், நல்ல கணவனை அடையவும் செய்யும் நம் பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களை கேளுங்கள்!


திருப்பாற்கடலில் அரிதுயில் கொண்டுள்ள அரியின் திருவடிகளை எப்போதும்  பாடுவோம்.நெய், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதி காலை எழுந்து நீராடுவோம்; கண்களுக்கு மையிட்டு அலங்கரிக்கமாட்டோம், கூந்தலில் மலர் இட்டு அழகு செய்து கொள்ள மாட்டோம்; பெரியோர்களால் செய்யத்தகாதவை என்று கூறப்பட்டுள்ள செயல்களை செய்ய மாட்டோம், எவரிடமும் சென்று கோள் சொல்லமாட்டோம். அண்டி வந்து யாசிப்பவர்களுக்கு இல்லை எனாது தர்மம் செய்வோம். இவை யாவும் செய்வது நாம் கடைத்தேறும் வழிக்கே என்று நினைத்து மகிழ்வோம். பிறப்பினின்று உய்யும் வழியைக் கருதி பாவை நோனபை கடைப்பிடிப்போம்.

நோன்பு இருக்கும் போது தூய மனமும், தூய உணவும் தேவை, கோபம் கூடாது என்பதை உணர்த்தும் பாசுரம் இது.

சேஷத்வமே நமது குறிக்கோள் என்று முதல் பாசுரத்தில் கூறிய ஆண்டாள் அதை அடையும் மார்கத்தில் எதை செய்ய வேண்டும்  - எதை செய்யக்கூடாது என்று க்ருத்யா - அக்ருத்யா விவேகம் சொல்கிறாள். இதை செய்தால் அவனுக்கு உகக்கும் - இதை செய்வதால் நாம் பந்தத்தில் சிக்கி உழல்வோம் என்று விவரமாக இப்பாசுரத்தில்  ஆண்டாள் கூறுகிறாள்.

ஐயம் என்பது நம்மை விட உயர்ந்த ஆசார்யர்களுக்கும் சந்நியாசிகளுக்கும் சமர்ப்பணம் செய்வது. பிச்சை என்பது ஏழைகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் தர்மமாக தருவது. 


*************

 

திருசிற்றம்பலம்


திருவெம்பாவை # 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் தீராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோஏசும் இடமீதோ? விண்ணோர்கள்
ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார்? யாம் ஆரேலோர் எம்பாவாய் ......(2)

பொருள்:

எழுப்புபவள்: சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போது "யாவும் கடந்து நிற்கின்ற ஒளி வடிவினனான இறைவனுக்கே என் அன்பு" என்று சொல்லுவாயே அரிவையே! அந்த அன்பை இப்போது இந்த மலர்ப் படுக்கையின் எப்போது வைத்தாய் கண்மணி?

உறங்குபவள்: சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணியவில்லை, தாங்களும் தான் அணிந்துள்ளீர்கள்! சீ! சீ! சிறிது நேரம் தூங்கியதற்கு தாங்கள் பேசிய இவை கொஞ்சமா? விளையாடி ஏசிக் கொள்ளும் இடம் இதுவா?

எழுப்புபவள்: தேவர்களும் வணங்குவதற்கு அரியதாகி அவர்கள் தங்கள் நிலைக்கு இரங்கி கூச்சப்படும் படி உள்ளவை அந்த பெருமானுடைய திருவடிகள், ஒளிமயமான அந்த திருவடிகள் மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருளுவான் அந்த சிவலோகன். நாம் அனைவரும் உய்ய தில்லை சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயிலும் ஆனந்த கூத்தன். நாம் யார்?  அவனது அடிமைகளே! அவனது புகழைப் பாட சீக்கிரம் எழுந்து வா பெண்ணே!

2 comments:

Anuprem said...

இனிய தரிசனம் ...

S.Muruganandam said...

மிக்க நன்றி.