Showing posts with label பாவை நோன்பு. Show all posts
Showing posts with label பாவை நோன்பு. Show all posts

Friday, December 24, 2021

மார்கழிப்பதிவுகள் - 9

 

திருசிற்றம்பலம்

திருவெம்பாவை # 9



முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!

உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;

அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்;

இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்

என்ன குறையும் இலோ மேலோர் எம்பாவாய்! .....(9)


(  இது வரை பெண்களை எழுப்பிய பாடல். இப்பாடலில் இருந்து பெண்கள் எல்லோரும் சேர்ந்து பாடும் பாடல்கள். )

பொருள்: 
இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் எம்பெருமானே, நீவிர் முன்னரே தோன்றிய பழமையான எல்லா பொருட்களுக்கும் முற்பட்ட பழம் பொருள். அவ்வாறே பின்னே தோன்றிய புதுமைப் பொருட்களுக்கெல்லாம் புதுமையாக தோன்றும் தன்மையன்.


உன்னை இறைவனாக பெற்ற நாங்கள்; உன் சிறந்த அடியார்களாவோம். ஆதலால் உன்னுடைய அடியார்களது திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம், அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலே அடிமைப் பணி செய்வோம்.
எங்கள் அரசே! இந்த வகையான வாழ்க்கையை எங்களுக்கு நீங்கள் அருளுவீர்களானால் எந்த குறையும் இல்லாதவர்களாவோம்! ஓம் நமசிவாய!

பாவை நோன்பின் ஒரு நோக்கமான பெண்கள் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டும் பாடல். 


திருசிற்றம்பலம்

***************

ஸ்ரீ:

திருப்பாவை # 9





 மாமாயன்  மாதவன்  வைகுந்தன்

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரே? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! .........(9)


பொருள்:


தூய மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம் அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர்கின்றன, அகில் முதலிய தூபம் மணக்கின்றன, சப்ர மஞ்ச கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்து உறங்கும் மாமன் மகளே! எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!

(மாமன் மகள் இவ்வாறு எழுப்பபட்டும் அவள் எழவில்லை;ஆதலால் அவள் தாயை அழைத்து அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்)

மாமியே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் ஏதும் சொல்லாததால் அவள் என்ன ஊமையா? அல்லது செவிடா? ; ஓயாத உறக்கமா? அல்லது ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கின்றாளா?


மாமாயனே! மதுசூதனே! மாதவனே! வைகுந்தனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம், அந்தப் பெருமானைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன்.

மாயம் என்பதற்கு பொது அர்த்தம் பொய் என்பது ஆனால் வைஷ்ணவ சம்பிரதாயத்தில்  ஆச்சர்யம் என்று பெரியோர்கள் பொருள் கூறுவர். பக்தர்களை தனது சௌலபியத்தால் ஆச்சிரிசியப்படுத்துவதால் அவன் மாமாயன்.  

இப்பாசுரத்தின் உட்கருத்து: இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த கிருஷ்ணனுக்கு பிரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.

இந்த பாசுரத்தில் பகவன் நாமாவிற்கு உள்ள மகிமை சொல்லபட்டு இருக்கிறது.பகவான் நாமத்துக்கு அவரை விட சக்தி அதிகமாம். திரௌபதியும் சரி,கஜேந்த்ரனும் சரி தங்களால் தங்களை காப்பற்றிக்கொள்ள முடியாது என்று தெரிந்தவுடன் அச்சுதா,அனந்தா,கோவிந்தா .சங்க சக்ர கதா பாணி என்றெல்லாம் அழைத்து பரிபூர்ண சரணாகதி அடைந்து விட்டார்கள்.அந்த க்ஷணமே அந்த நாமங்கள் காப்பாற்றினவாம்..அப்பேற்பட்ட சக்தி அவற்றுக்கு உண்டு. இங்கே மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று பல பேர்களால் சகஸ்ர நாமத்தினால் கூவி அழையுங்கள் என்கிறாள் ஆண்டாள்.
 





Friday, December 17, 2021

மார்கழிப்பதிவுகள் - 2

ஸ்ரீ:

திருப்பாவை # 2



பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!  (2)


பாவை நோன்பை நோற்கும்  முறை: ( செய்யக்கூடியவைகளும் செய்யக்கூடாதவைகளும்)

இந்த மண்ணுலகில் வாழ்பவர்களே! நாம் நல்ல மழை பெறவும், செல்வம் செழிக்கவும், நல்ல கணவனை அடையவும் செய்யும் நம் பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களை கேளுங்கள்!


திருப்பாற்கடலில் அரிதுயில் கொண்டுள்ள அரியின் திருவடிகளை எப்போதும்  பாடுவோம்.நெய், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதி காலை எழுந்து நீராடுவோம்; கண்களுக்கு மையிட்டு அலங்கரிக்கமாட்டோம், கூந்தலில் மலர் இட்டு அழகு செய்து கொள்ள மாட்டோம்; பெரியோர்களால் செய்யத்தகாதவை என்று கூறப்பட்டுள்ள செயல்களை செய்ய மாட்டோம், எவரிடமும் சென்று கோள் சொல்லமாட்டோம். அண்டி வந்து யாசிப்பவர்களுக்கு இல்லை எனாது தர்மம் செய்வோம். இவை யாவும் செய்வது நாம் கடைத்தேறும் வழிக்கே என்று நினைத்து மகிழ்வோம். பிறப்பினின்று உய்யும் வழியைக் கருதி பாவை நோனபை கடைப்பிடிப்போம்.

நோன்பு இருக்கும் போது தூய மனமும், தூய உணவும் தேவை, கோபம் கூடாது என்பதை உணர்த்தும் பாசுரம் இது.

சேஷத்வமே நமது குறிக்கோள் என்று முதல் பாசுரத்தில் கூறிய ஆண்டாள் அதை அடையும் மார்கத்தில் எதை செய்ய வேண்டும்  - எதை செய்யக்கூடாது என்று க்ருத்யா - அக்ருத்யா விவேகம் சொல்கிறாள். இதை செய்தால் அவனுக்கு உகக்கும் - இதை செய்வதால் நாம் பந்தத்தில் சிக்கி உழல்வோம் என்று விவரமாக இப்பாசுரத்தில்  ஆண்டாள் கூறுகிறாள்.

ஐயம் என்பது நம்மை விட உயர்ந்த ஆசார்யர்களுக்கும் சந்நியாசிகளுக்கும் சமர்ப்பணம் செய்வது. பிச்சை என்பது ஏழைகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் தர்மமாக தருவது. 


*************

 

திருசிற்றம்பலம்


திருவெம்பாவை # 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் தீராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோஏசும் இடமீதோ? விண்ணோர்கள்
ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கன்பார்? யாம் ஆரேலோர் எம்பாவாய் ......(2)

பொருள்:

எழுப்புபவள்: சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போது "யாவும் கடந்து நிற்கின்ற ஒளி வடிவினனான இறைவனுக்கே என் அன்பு" என்று சொல்லுவாயே அரிவையே! அந்த அன்பை இப்போது இந்த மலர்ப் படுக்கையின் எப்போது வைத்தாய் கண்மணி?

உறங்குபவள்: சிறந்த அணிகலன்களை நான் மட்டும் அணியவில்லை, தாங்களும் தான் அணிந்துள்ளீர்கள்! சீ! சீ! சிறிது நேரம் தூங்கியதற்கு தாங்கள் பேசிய இவை கொஞ்சமா? விளையாடி ஏசிக் கொள்ளும் இடம் இதுவா?

எழுப்புபவள்: தேவர்களும் வணங்குவதற்கு அரியதாகி அவர்கள் தங்கள் நிலைக்கு இரங்கி கூச்சப்படும் படி உள்ளவை அந்த பெருமானுடைய திருவடிகள், ஒளிமயமான அந்த திருவடிகள் மண்ணில் படும்படி வந்தருளி நாம் காணுமாறு தந்தருளுவான் அந்த சிவலோகன். நாம் அனைவரும் உய்ய தில்லை சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயிலும் ஆனந்த கூத்தன். நாம் யார்?  அவனது அடிமைகளே! அவனது புகழைப் பாட சீக்கிரம் எழுந்து வா பெண்ணே!

Thursday, December 19, 2013

திருவெம்பாவை # 7

 

திருசிற்றம்பலம் 




அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்ப சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா! என் னாமுன்னம் தீ சேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசே லோர் எம்பாவாய் .........(7)


பொருள்:பெண்ணே! நாங்கள் இது வரையும் கூறியவை கொஞ்சமோ? இறைவன் தேவர்கள் பலராலும் நினைத்து பார்க்கவும் அறியன், ஒப்பற்றவன்! பெரும் புகழையுடையவன்.

விடியற்காலையில் அந்த பெருமானுடைய இசைக் கருவிகளின் ஒலி கேட்டால் உடனே "சிவா", "சிவா" என்று வாய் திறப்பாயே. "தென்னா" என்று( தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி) அவர் பெயரை கூறும் முன்னாலேயே நெருப்பிலிட்ட மெழுகு போல் உள்ளம் உருகுவாயே! அத்தகைய உனக்கு என்ன நேர்ந்தது? இன்னும் விளையாடுகின்றாயா?

நாங்கள் எல்லோரும் சேர்ந்தும் தனித் தனியாகவும், "என் தலைவனே!, என் அரசனே! இனிய அமுதனே" என்று பலவாறாகவும் பாடும் பொழுதும் கொடிய மனமுடையவள் போல வாளா கிடக்கின்றாயே! உன் உறக்கத்தின் தன்மைதான் என்னே!