Saturday, December 18, 2021

மார்கழிப்பதிவுகள் - 3

 திருவெம்பாவை # 3 

திருசிற்றம்பலம்

முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளுறித்

தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!

பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ

எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?

சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். ......(3)

பொருள்:

எழுப்புபவள்முத்தினைப் போன்ற வெண்மையான பற்களை உடையவளே! முன்பெல்லாம் நீ, எங்களுக்கு முன்பாக எழுந்து எங்கள் எதிரே வந்து " என் அப்பனே! ஆனந்தனே! அமுதனே! என்று வாயூறி இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்வாய். இனியும் படுக்கையில் கிடப்பதேன். எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!

உள்ளே இருப்பவள்: நீங்கள் இறைவனிடம் பற்றுடையவர்கள்; இறைவனுடைய பழைய அடியார்கள்; அவனைப் புகழும் முறைமையை பெற்றவர்கள். நானோ புதிய அடிமை! உங்கள் பெருமையால் என்னுடைய சிறுமையை நீக்கி ஆட்கொள்ளலாகாதோ?

எழுப்புபவள்உன்னுடைய அன்புடைமை எங்களுக்கு தெரியாதா? அதை அனைவரும் அறிவோம். அழகிய மனமுடையவர்கள் நம்முடைய சிவபெருமானைப் பாடாமலிருப்பாரோ? உன்னை எழுப்ப வந்தோமே நாங்கள் எங்களுக்கு இவ்வளவு பேச்சும் வேண்டியதுதான்.

நம்முடைய சித்தம் ஸ்படிகம் போன்றது. அது நமது எண்ணத்தையே பிரதிபலிக்கும் எனவே சித்தத்தை இறைவனை நிறைத்தல் வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.

********

திருப்பாவை # 3

  ஸ்ரீ:
                                   


ஓங்கி உலகளந்த உத்தமன்



ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் லூடு கயலுகல
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். .........(3)


பொருள்:பாவை நோன்பின் பயன்:


வாமனனாக வந்து நெடியோன் திரிவிக்கிரமனாக ஓங்கி வளர்ந்து இந்த உலகத்தை ஓர் அடியால் அளந்த உத்தமன் திருமால்! அந்த பெருமாளின் திருநாமங்களை கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, இருடிகேசா ,பத்மநாபா, தாமோதரா, கோபாலா, வாமனா, மாமாயா, தேவ தேவா, பால கிருஷ்ணா, மணி வண்ணா, பூவண்ணா, புள்ளரையா, ஸ்ரீஹரி, பரமா, கண்ணா, மாதவா, வைகுண்ட நாதா என்று பாடி நாம் நம் பாவை நோன்பை நோற்பதன் பலன்கள் என்ன என்று தெரியுமா தோழி?

ஊர் செழிக்க தீமையில்லாமல் மாதம் மூன்று மழை தவறாமல் பெய்யும், அதனால் வயல்களில் செந்நெல் ப்யிர்கள் நெடு நெடுவென வளரும், அந்த பயிர்களின் ஊடே கயல் மீன்கள் துள்ளித் திரியும், நிரம்பியிருக்கும் நீர் நிலைகளில் கருங்குவளை மலர்களில் புள்ளிகளையுடைய அறுகால் வண்டினங்கள் தேனைக் குடித்து மெய் மறந்து உறங்கும். மாட்டுத் தொழுவத்தில் புகுந்து அழகிய பசுக்களின் மடியைப் பற்றி இழுத்தால் பாலை தேக்கி வைத்துக் கொள்ளாமல் வள்ளல்களைப் போல பாலைப் பொழிந்து குடங்களை நிறைக்கும். எப்போதும் அழியாத செல்வம் எங்கும் நிறைந்திருக்கும் அறி பெண்ணே!

இப்பாசுரத்தில் அவதாரப்பெருமை: வாமன அவதாரம்
 

இந்த மூன்றாம் பாசுரம், பதினேழாம் பாசுரம் மற்றும் இருபத்து நான்காம் பாசுரம் மூன்றிலும் ஆண்டாள், எம்பெருமானின் வாமன அவதாரத்தை போற்றுகின்றார். இப்பாசுரத்தில் "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி" என்னும் பதத்தினால் இவ்வவதார பெருமையை உணர்த்துகின்றார்.


வாமன அவதாரம்: பலி சக்கரவர்த்தி பிரகலாதரின் பேரன், விரோசனரின் புத்திரன், இந்திரப்பதவியை கைப்பற்றியதால் இந்திரனுடைய தாய் அதிதியின் கர்பத்தில் பெருமாள் வாமனனாக அவதரித்தார். "வாமன அவதாரம்" எடுத்து வந்து மஹாபலியிடம் சென்று தவம் செய்வதற்கு தன் காலடியில் மூன்றடி மண் தருமாறு யாசித்தார். மகா பலியும் தருவதற்கு இசைந்து , தாரை வார்த்து தர முற்படும் போது ஓங்கி திரிவிக்கிரமனாக வளர்ந்து, ஓரடியால் மண்ணுலகத்தையும், இரண்டாவது அடியால் விண்ணுலகத்தையும் அளந்து நின்ற நெடுமால், இன்னுமொரு அடிக்கு மண் எங்கே? என்று வினவ, மகாபலி தன் தலையை தாழ்த்தி வணங்கி நின்றான். பெருமாள் அவனது முடியில் தன் அடியை வைத்து பாதாளத்திற்க்கு அழுத்தி அவனது செருக்கை அடக்கினார்.

பாசுரத்தின் உட்கருத்துபக்குவமடைந்த ஜீவாத்மாக்கள் (பசுவின் மடியைப்பற்றுவதுபோல) குருவின் காலைப்பிடித்து ஞானப்பாலைப்பெற்று பருகினால் ஆனந்த வெள்ளமாம் அது! அவர்களின் இதயகமலத்தில் பகவான் பொறிவண்டுபோல படுத்து உறங்குவானாம். 

4 comments:

கோமதி அரசு said...

பாசுரத்தின் உட்கருத்து: பக்குவமடைந்த ஜீவாத்மாக்கள் (பசுவின் மடியைப்பற்றுவதுபோல) குருவின் காலைப்பிடித்து ஞானப்பாலைப்பெற்று பருகினால் ஆனந்த வெள்ளமாம் அது! அவர்களின் இதயகமலத்தில் பகவான் பொறிவண்டுபோல படுத்து உறங்குவானாம். //

அருமை அருமை.
வாழ்த்துக்கள்!

S.Muruganandam said...

மிக்க நன்றி அம்மா.

Anuprem said...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம் ...

S.Muruganandam said...

ஓம் நமோ நாராயணாய.

மிக்கநன்றி