Monday, December 20, 2021

மார்கழிப்பதிவுகள் - 5

                                                                                

திருசிற்றம்பலம்





மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்! ...........(5)

பொருள்: மாலும் அயனும் அறிய முடியா அருட்பெரும் மலை நமது திருவண்ணாமலையார், அந்த பரமேஸ்வரனை நாம் அறிந்து விட முடியும் என்பது போல் மற்றவர்கள் நம்பும்படியாக பொய்யை பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வந்து கதவைத் திற!


இறைவன் எம்பெருமான் விண்ணுலகினராலும், மண்ணுலகினராலும், மற்றும் உள்ள உலகினராலும் யாராலும் காணுதற்கு அருமையானவன். அந்த பெருமான் எளி வந்த கருணையினால் அவர் தம்முடைய திருக்கோலத்தையும் காட்டி, எளியவர்களான நம்மை ஆட்கொண்டு அருளி சீராட்டுகின்ற திறத்தையும் பாடுகின்றோம்! சிவனே! சிவனே! என்று உள்ளுருகி உரக்கப் பாடுகின்றோம்! அந்த ஒலி கேட்டும் நீ உணர்ந்தாயில்லை! உணர்ந்து விழித்தாயில்லை! மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுவோ உனது தன்மை போலும்.

எம்பெருமான் அக்னி ஸ்தம்பமாக அண்ணாமலையாராக நின்ற போது அகந்தை கொண்ட மாலும் நான்முகனும் அவரது திருமுடியையும், திருவடியையும் காண முடியாமல் நின்றதையும் அதே சமயம் எளி வந்த கருணையினால் அவர் தனது பக்தர்களுக்கு அருளுபவர் என்பதை     மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம் போலறிவோம்  என்பதன் மூலம் மாணிக்க வாசக சுவாமிகள்  விளக்குகின்றார். 


***********

ஸ்ரீ:






 தூயப் பெருநீர் யமுனைத் துறைவன்


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் வந்து தோன்றும் அணி விளக்கை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றளவும்
தீயினால் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய். ..........(5)


பொருள்:    கண்ணனது பெயர் சிறப்பு :

பாற் கடலில் பள்ளி கொண்ட பரமன் கண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை எனன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோரெல்லாம் புகழச் செய்த தாமோதரன்.

(என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தையெய்துவித்த இருடீகேசா! முலையுணாயே என்பது பெரியாழ்வாரின் பாசுரம்)

அந்த பெருமாளை நாம் தூய மனதுடன் நல்ல மலர் தூவி வணங்குவோம்; வாயினால் அயர்விலா அமரர்கள் ஆதிக் கொழுந்தே, ஆழிப் படையந்தணணே, உய்ய்க் கொள்கின்ற நாதனே என்று அவனதுப் புகழைப் பாடுவோம்; மனதினால் அவனது தன்மையை நினைப்போம், இவ்வாறு காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரும் பொருட்டிருக்கும் பிழைகளும் நெருப்பில் இட்ட தூசு போல் அழிந்து விடும் ஆகையால் அவனது புகழைப் பேசுவாமாக!


வராக அவதாரத்தில் பூமி தேவியாகிய தாயார் என்ன பிரதிக்ஞை செய்தாளோ அதை இப்பாசுரத்தில் மனதினால் சிந்தித்து, வாயினால் பாடி, தூமலர் தூவி தொழ வேண்டும் என்று நமக்கு வலியுறுத்துகிறாள் கோதை நாசியார்.

இவ்வைந்து பாசுரங்களும் மார்கழி நோன்புக்கான அவதாரிகை எனப்படும் முன்னுரையாகும். ஆறாவது பாசுரத்திலிருந்து தன் பத்து தோழியர்களை எழுப்பும் பாடல்கள் ஆகும்.

2 comments:

Anuprem said...

வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான்....

நாராயணா ....உன் திருவடிகளே சரணம் ..

S.Muruganandam said...

மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் அவனுக்கே கைங்கையம் செய்ய வேண்டும் பாசுரம்.

மிக்க நன்றி.