Showing posts with label மாயன். Show all posts
Showing posts with label மாயன். Show all posts

Friday, December 31, 2021

மார்கழிப்பதிவுகள் - 16

ஸ்ரீ:





(பாவையர்கள் எல்லோரும் திருக்கோவில் முன்சென்று பாடுகின்றனர்.)

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்...........(16)


உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்த கோபனுடைய திருக்கோவிலைக் காப்பவனே! கொடிகள் மற்றும் தோரணங்கள் மேவும் வாயிலைக் காப்பவனே! மணிக்கதவின் தாளைத் திறப்பாய்!

கோகுலத்தின் சிறுமியர்களாகிய எங்களுக்கு நோன்பு நிறைவதற்கான பலனை (பறை) தருவதாக , மாயவன், கருநீல மணிவண்ணன், கண்ணன், நேற்றே வாக்களித்தான்; அந்த எம்பெருமானை துயில் எழுப்ப பாடுவதற்கு, உள்ளும் புறமும் தூயவர்களாக நாங்கள் வந்தோம்.

உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்து சொல்லிவிடாதே அப்பனே! வாயில் நிலையோடு நேசமாகப் பொருந்தியிருக்கும் கதவை நீ, நீக்கி திறந்து விடு.


பிரமாணம், பிரமேயம், பிரமாதா ஆகிய மூன்றும் இப்பாசுரத்தின் உட்பொருளில் வெளிப்படுகிறது. பிரமாணம் - வேதம் முதலியவை, பிரமேயம் - எம்பெருமான், பிரமாதா - அவரை அடைய வழி காட்டும் ஆச்சார்யன். 

கோயில் காப்பான்  -  திருமந்திரம்.

கொடி தோன்றும் தோரண வாயில் காப்பான் - த்வயம்

நென்னலே வாய் நேர்ந்தான் - சரம ஸ்லோகம்.

சிஷ்யனானவன் ஓர் ஆச்சார்யனை அடைந்து உபதேசம் பெறத்தயாராகும் கணத்திலே எம்பெருமானின் கருணைக்கு பாத்திரமாகி விடுகிறான் என்ற உட்கருத்தை நென்னலே வாய் நேர்ந்தான் என்பது குறிக்கின்றது.

**********

 

திருசிற்றம்பலம் 



திருவெம்பாவை #16   


முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற சிலம்பித் திருபுருவம்
என்னச் சிலைக்குலவி தந்தெம்மை ஆளுடையான்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னியவன் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!.........(16)

பொருள்:
மேகமே! நீ கடலினை நெருங்கி அதன் நீரை முகந்து அக்கடலைக் குறைத்து, எங்களை ஆளாக உடைய அம்மை உமா தேவியின் சிற்றிடையைப் போல மின்னிப் பொலிவுற்று, எம்பெருமாட்டியின் திருவடிகளில் அணியப் பெற்ற பொற்சிலம்பைப் போல சிலம்பி, அம்மையின் வில்லைப்போன்ற திருப்புருவம் எனும்படி வானில் குலவி , நம்மையெல்லாம் அடிமையாக உடைய எம்பெருமாட்டியை விட்டுப்பரியாத எம்பெருமான் தன் அன்பர்களுக்கு பொழியும் இனிய அருளைப் போல நீ மழையைப் பொழிவாயாக!

மழை குறையாமல் பெய்தால்தான் பயிர்கள் செழித்து வளரும், அதன் மூலம் உயிரினங்கள் வாழும் என்பதால் பாவை நோன்பின் போது மாதம் மும்மாரி பொழிய வேண்டுவது மரபு. இப்பாடல் மழை வேண்டி பாடும் பாடல்.   

( மழை கற்குறைய பெய்தல்)

Monday, December 20, 2021

மார்கழிப்பதிவுகள் - 5

                                                                                

திருசிற்றம்பலம்





மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடி சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்! ...........(5)

பொருள்: மாலும் அயனும் அறிய முடியா அருட்பெரும் மலை நமது திருவண்ணாமலையார், அந்த பரமேஸ்வரனை நாம் அறிந்து விட முடியும் என்பது போல் மற்றவர்கள் நம்பும்படியாக பொய்யை பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வந்து கதவைத் திற!


இறைவன் எம்பெருமான் விண்ணுலகினராலும், மண்ணுலகினராலும், மற்றும் உள்ள உலகினராலும் யாராலும் காணுதற்கு அருமையானவன். அந்த பெருமான் எளி வந்த கருணையினால் அவர் தம்முடைய திருக்கோலத்தையும் காட்டி, எளியவர்களான நம்மை ஆட்கொண்டு அருளி சீராட்டுகின்ற திறத்தையும் பாடுகின்றோம்! சிவனே! சிவனே! என்று உள்ளுருகி உரக்கப் பாடுகின்றோம்! அந்த ஒலி கேட்டும் நீ உணர்ந்தாயில்லை! உணர்ந்து விழித்தாயில்லை! மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுவோ உனது தன்மை போலும்.

எம்பெருமான் அக்னி ஸ்தம்பமாக அண்ணாமலையாராக நின்ற போது அகந்தை கொண்ட மாலும் நான்முகனும் அவரது திருமுடியையும், திருவடியையும் காண முடியாமல் நின்றதையும் அதே சமயம் எளி வந்த கருணையினால் அவர் தனது பக்தர்களுக்கு அருளுபவர் என்பதை     மாலறியா நான்முகனும் அறியா மலையினை நாம் போலறிவோம்  என்பதன் மூலம் மாணிக்க வாசக சுவாமிகள்  விளக்குகின்றார். 


***********

ஸ்ரீ:






 தூயப் பெருநீர் யமுனைத் துறைவன்


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் வந்து தோன்றும் அணி விளக்கை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றளவும்
தீயினால் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய். ..........(5)


பொருள்:    கண்ணனது பெயர் சிறப்பு :

பாற் கடலில் பள்ளி கொண்ட பரமன் கண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை எனன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோரெல்லாம் புகழச் செய்த தாமோதரன்.

(என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தையெய்துவித்த இருடீகேசா! முலையுணாயே என்பது பெரியாழ்வாரின் பாசுரம்)

அந்த பெருமாளை நாம் தூய மனதுடன் நல்ல மலர் தூவி வணங்குவோம்; வாயினால் அயர்விலா அமரர்கள் ஆதிக் கொழுந்தே, ஆழிப் படையந்தணணே, உய்ய்க் கொள்கின்ற நாதனே என்று அவனதுப் புகழைப் பாடுவோம்; மனதினால் அவனது தன்மையை நினைப்போம், இவ்வாறு காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரும் பொருட்டிருக்கும் பிழைகளும் நெருப்பில் இட்ட தூசு போல் அழிந்து விடும் ஆகையால் அவனது புகழைப் பேசுவாமாக!


வராக அவதாரத்தில் பூமி தேவியாகிய தாயார் என்ன பிரதிக்ஞை செய்தாளோ அதை இப்பாசுரத்தில் மனதினால் சிந்தித்து, வாயினால் பாடி, தூமலர் தூவி தொழ வேண்டும் என்று நமக்கு வலியுறுத்துகிறாள் கோதை நாசியார்.

இவ்வைந்து பாசுரங்களும் மார்கழி நோன்புக்கான அவதாரிகை எனப்படும் முன்னுரையாகும். ஆறாவது பாசுரத்திலிருந்து தன் பத்து தோழியர்களை எழுப்பும் பாடல்கள் ஆகும்.