Saturday, March 19, 2022

கொங்கேழ் தலங்கள் பத்தியுலா - 15

 அவிநாசியப்பர் தரிசனம்- 2

அடுத்து அடியோங்கள் கருணையாத்தாளை தரிசித்தோம். அம்பாள் சன்னதியின்  முன்புறம் நந்தியும் கொடிமரமும் காட்சி தருகின்றன. அம்மன் சன்னதி  முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை எனப் பெரிய அளவில் அமைந்துள்ளது. இங்குள்ள முன்மண்டபத்தில் நாககன்னி சிலை உள்ளது. மகாமண்டப வாயிலின் இருபுறமும் வாயிற்காவல் தேவியர் காட்சி தருகின்றனர். மகா மண்டபத்தில் வடபால் பள்ளியறை உள்ளது. அர்த்தமண்டபத்தில் பிள்ளையார் வீற்றுள்ளார். இறைவியின் கருணை எல்லையற்றது என்பதை விளக்கும் வண்ணம் ‘பெருங்கருணையம்மை’ என்றும் அருளையே தனக்கு பெயராக கொண்டவளாக ‘கருணாம்பிகை’ என்றும்  அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் கொடுமுடி போலவே கல்யாணக் கோலத்தில் அருள் பாலி்க்கின்றாள் அம்பாள் பெருங்கருணை நாயகி. 


நல்லாற்றங்கரையில் தவம் செய்து ஐயனின் வலப்பக்கத்தில் அமர்ந்தாள்.  தனி இராஜகோபுரம், கொடிமரம் அம்பாளுக்கு இருப்பது சிறப்பு. அம்மனுக்கு வாகனமாக நந்தியெம்பெருமானே அமர்ந்திருக்கிறார்.  நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்களுடனும், கருணையைப் பொழியும் திருவிழிகளுடனும், மந்தகாச புன்னகையுடன் அம்பாள் எழிலாக தரிசனம் அளிக்கின்றாள். மேற்கைகளில் தாமரையும் நீலமும் விளங்குகின்றன. கீழ்க்கைகள் அபயவரதமாகத் திகழ்கின்றன. அழகும் அருளும் நிறைந்த சன்னிதியாக இவ்விறைவியின் சன்னிதி பொலிகிறது. கருணைச் செல்வியின் திருமுகத்தில் கருணை பொங்குகிறது. அன்னையின் தோற்றப் பொலிவு நம்மை அங்கேயே கட்டிப்போட்டு விடுகிறது. அருட்கடலாக விளங்கும் அம்மையின் அடித்தாமரைகளை அகங்குளிரப் போற்றி வணங்குகிறோம். கொங்குநாட்டு தலங்களில் உள்ள அம்பாள் திருமூர்த்தங்கள் கல்திருவாசியுடன் அருள் பாலிப்பது போலவே கருணாம்பிகையும் அருள் பாலிக்கின்றாள். சந்தனக் காப்பில் அம்பாளை தரிசிப்பதே ஒரு பரவசம்.  அம்பாளை

(கருணை) ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்

பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்

காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே   என்ற அபிராமி அந்தாதிப் பாடல்பாடி அம்பாளை துதித்தோம். அம்பாள் சன்னதியின்  பின் சுவரில் தேள் உருவம் உள்ளது. இப்பகுதியில் தேள் கடித்தால், அவர்கள் இங்கு வந்து வலம் வந்தால் விஷம் இறங்கி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. கனவில் விஷ ஜந்துக்கள் வராது என்பது நம்பிக்கை. விருச்சிக இராசிக்காரர்கள் தரிசிக்க  நன்மை.

                              

கயிலை தீர்த்தம்

அம்பாளை திவ்யமாக தரிசித்த பின் வெளி பிரகார வலத்தை தொடர்ந்தோம். அம்மன் சன்னதி கோஷ்டத்தில் விநாயகர், இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, துர்க்கை அருள் பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரிக்கும் தனி சன்னதி உள்ளது.ண்டிகேசுவரி சன்னதியை ஒரு தேவகோட்டத்தில் கொற்றவையும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. அம்மன் விமானமும் ஒரு கலசத்துடன் ஈஸ்வரி அம்சமாகவே விளங்குகிறது. அம்மன் விமானத்தில் சிவ-பார்வதி திருக்கல்யாண கோலம், அம்மன் தவம் செய்யும் சுதை சிற்பங்களை தரிசித்தோம். 

 இராஜகோபுரத்திற்கு அருகே இருக்கும் தெப்பக்குளம் கயிலை தீர்த்தம் என்றும், சிவ தீர்த்தம் என்றும், நாக கன்னி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் வாயிலில் பிரம்மாண்ட சுதை நந்தி சிலை அமைத்திருக்கின்றனர்.

மேற்கு பிரகாரத்தில் இருந்து சுவாமி, அம்பாள் விமானங்களுக்கு இடையே சிறிய முருகர் விமானம் சோமாஸ்கந்தரை நினைவூட்டியது. தலமரம் பாதிரி மரம் இப்பிரகாரத்தில் உள்ளது.  இம்மரம் பிரமோற்ஸவத்தின் போது மட்டுமே பூக்கும் தன்மையுடையது. மற்ற காலங்களில் பூக்காது. மரத்தின் இத்தகைய இயல்பானது, இறைவனின் மீது தலவிருட்சம் கொண்டுள்ள பக்தியை காட்டுகிறது என தலபுராணம் கூறுகிறது. ஆதி காலத்தில் மா மரமே தலவிருட்சமாக இருந்துள்ளது.

 

வெளிப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆடல்வல்லான் திருமேனி கொங்குநாட்டுப் பாணியில் விளங்குகிறது. நீள்வட்டமான திருவாசியும் அதன் ஒடுக்கமான அடிப்பகுதியில் இருபுறமும் அழகிய கிளி உருவங்களும் இத்திருவுருவில் அமைந்துள்ளன. திருவாசியில் ஐம்பத்தொரு நெருப்புக் கொழுந்துகள் காட்சி தருகின்றன. இருபத்தெழு சுடர்களே பெரும்பாலான திருமேனிகளில் இருக்கும். இங்கு ஐம்பத்தொரு எழுத்துகளை குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்துள்ளது. இருபத்தேழு சுடர்கள் இருந்தால் அவை இருபத்தேழு நட்சத்திரங்களைக் குறிப்பதாகக் கூறுவர். இப்பெருமானது மேற்கரங்கள் இரண்டும் படுக்கை வசமாக விரித்து வைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் உடுக்கையும் தீயும் உள்ளன. வீசிய திருக்கரம் சற்றுப் புதுமையாகக் காட்சி தருகிறது. சடைகள் கீழ்நோக்கித் தொங்குகின்றன. எனவே ஆடல் மிக மெதுவாக நடைபெறுவது விளங்குகிறது. அருகில் சிவகாமியம்மை காட்சி தருகிறார்.  மாணிக்கவாசகரும் எழுந்தருளியுள்ளார்.  அடுத்து வசிஷ்டரின் சனி தோஷத்தை போக்கிய சனி பகவானின் தனி சன்னதி. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக நல்ல பலன்கள் தந்து அருளுகிறார். சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள சனிபகவானை வழிபாடு செய்தால் தோஷத்தின் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.  அருகில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது.

 

அம்பாள் விமானம் மற்றும் இரு இராஜ கோபுரங்கள் தரிசனம்


இத்தலத்தில் 32 கணபதிகள் அருள்பாலிக்கின்றனர் சிவாலயங்களில் சிவனுக்கு பின்புறம் அருள்பாலிக்கும் விஷ்ணு, இத்தலத்தில் கொடிமரத்தின் அருகில் சிவனை பார்த்தபடி அருளுகிறார். சுவாமி இராஜகோபுரத்தின் தென்திசையில் தெட்சிணாமூர்த்தி நடனமாடும் கோலத்தில் உள்ளார். நர்த்தன கணபதிக்கு முன்னால் மூஞ்சூறு வாகனத்திற்கு பதில் சிம்ம வாகனம் உள்ளது.

தினமும் ஐந்து கால பூஜை நடைபெறுகின்றது. இக்கோவில் தேர் கொங்கு மண்டலத்திலேயே  மிகப்பெரியதும்,  திருவாரூருக்கு, அடுத்தபடியான இரண்டாவது மிகப்பெரிய திருத்தேராகவும் விளங்கும்  பெருமை பெற்றது.  சித்திரைப்பெருவிழாவின்  ஐந்தாம் திருநாள் அறுபத்து மூவர் திருவிழா,  ஆறாம் திருநாள் திருக்கல்யாணம், ஏழாம் திருநாள் தேரோட்டம், மற்றும் தெப்போற்சவத்துடன் சிறப்பாக நடைபெறுகின்றது.  வைகாசியில் வசந்தோற்சவம், ஆடிப்பூர உற்சவம், அம்மன் தபசு,  ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு, ஆவணி மூல பிட்டுத்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி பெருவிழா,  கார்த்திகை தீபப்பெருவிழா, மார்கழியில் திருவெம்பாவை – திருவாதிரைத் திருவிழா, தைப் பூசம், பங்குனியில் முதலை உண்ட பாலகன் விழா என்று வருடம் முழுவதும் கோலாகலம்தான் இத்தலத்தில்.


தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள்அம்மன் சன்னதியை சுற்றி வலம் வரும்போது சுவற்றில் கை வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். எல்லாத் தீமைகளும் நீங்கி, நவகிரக தோஷங்களும் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். இராகு காலத்தில் கருணாம்பாளுக்கு விளக்கேற்றி வழிபடும் போது நாம் நினைத்த காரியம் கைகூடும்.




தல விருட்சம் பாதிரி மரம்

கல்வெட்டுச் செய்திகள்: இத்திருக்கோயிலில் உள்ள பழைய கல்வெட்டுகளில் இத்தலம் தட்சிண வாரணாசி என்று குறிப்பிடப் பெறுகிறது. இவ்வூரில் கிடைத்த பதினேழாம் நூற்றாண்டுச் சாசனம் ஒன்று. 'பூலோக கயிலாசமான புக்கொளியூராகிய அவிநாசித்தலம்' என்று இத்தலத்தைக் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டுகளில் இத்தலத்து இறைவன், 'சகதாதிபதி திவ்விய ஸ்ரீகயிலாச நிவாச பார்வதி பிராணநாத எல்லாத்தேவர் வல்லபன்', 'தட்சிண வாரணாசி அவிநாசிலிங்கன்' என்று நீண்ட அடைமொழியோடு குறிப்பிடப் பெறுகிறார்.   மிகப் பழைய கல்வெட்டுகளில் இறைவன் பெயர், அவிநாசி ஆளுடைய நாயனார், அவிநாசியாண்டார், அவிநாசி ஆளுடையார் என்றெல்லாம் குறிப்பிடப் பெறுகிறது. இத்தலத்து இறைவியான கருணாம்பிகை அம்பிகையின் பெயர். திருக்காமக்கோட்டத்து நாச்சியார் பெருங்கருணைச் செல்வியார், பெருங்கருணாலயச் செல்வியார், பெருங்கருணை அம்மன் என்றெல்லாம் கல்வெட்டுகளிலும் சாசனத்திலும் குறிப்பிடப் பெறுகிறது. இங்கு தலமரமாக மாமரம் விளங்குகிறது. காஞ்சிபுரத்தில் மாமரத்தின் கீழ் உமையம்மை சிவவழிபாடு புரிந்ததைப் போலவே அவிநாசியிலும் அம்மை மாவடியில் விளங்கிய அவிநாசியப்பரைப் பூசித்தாள் என்று தலபுராணம் கூறும். எனவே அவிநாசியப்பரை ஒரு கல்வெட்டு, காஞ்சி தலத்து இறைவன் பெயரான திருவேகம்பமுடையார்' என்பதோடு இணைத்து 'திருவேகம்பமுடை யாரான மாதேவராண்டார்' என்று போற்றுகிறது.

 



இவ்வாறு அவிநாசி தலத்தின் அருமையான தரிசனத்திற்கு பிறகு, காலை சிற்றுண்டியை அவ்வூரிலேயே முடித்துக்கொண்டு பண்ணாரிக்கு கிளம்பினோம். அங்கு பண்ணாரி அம்மனின் தரிசனம் எவ்வாறு அமைந்தது என்று அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

No comments: