Friday, April 3, 2020

திருப்பாத தரிசனம் - 21


திருவிளமல்


வியாக்ரபாதருக்கும் பதஞ்சலிக்கும் திருப்பாத தரிசனம் அளித்த தலம்

மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
 ஒத்தக நகமணி மிளிர்வதொ ரரவின ரொளிகிளர்
 அத்தக வடிதொழ வருள்பெரு கண்ணொடு முமையவள்
வித்தக ருறைவது விரிபொழில் வளநகர் விளமரே -   என்று ஆளுடையப்பிள்ளையார் பாடிய தலம் திருவிளமல்.  சிவாலயங்களில் பாத தரிசனம் என்பது பக்தர்கள் இறைவனின் திருவடியைக் கண்டு வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டதாகும். இந்தப் பாத தரிசனம் பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய இரு ரிஷிகளுக்குத்தான் முதன் முதலில் கிடைத்தது. அப்படிக் கிடைத்த சிறப்புமிக்க ஆதி முதல் தலம் விளமல் என்றழைக்கப்படும் திருவிளமல்.

திருவாரூரில் தியாகராஜரின் திருமுக தரிசனம் காண்பவர்கள் 3 கி.மீ தொலைவில் உள்ள திருவிளமல் என்னும் சிவாலயத்தில் சென்று ருத்ரபாத தரிசனம் காண்பது சிறப்பு. வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவரும், பதஞ்சலி என்னும் பாம்பு முனிவரும் வணங்கிய தலம் திருவிளமல் ஆகும்.

இத்தலத்தை பதஞ்சலி மனோகரர் ஆலயம் என்பர். திருவாரூர் புராணத்தில் திருஞானசம்பந்தர் இக்கோயிலின் இலிங்கத்தை வியந்து பாடியுள்ளார். தேவாரத்தில் திருநாவுக்கரசர் கயிலாயநாதரை எங்கெங்கு காணலாம் என குறிப்பிடும் பாடலில் விளமலைப் பற்றிய குறிப்பு உள்ளது. மாணிக்கவாசகரும் தம் சிவபுராணத்தின் பல இடங்களில் விளமல் தலத்தின் புகழ் பாடுகிறார். திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கி.மீ தூரத்தில், தஞ்சை செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. 

பரந்தாமனை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு அன்றென்னவோ மகாவிஷ்ணு மிகுந்த பாரத்துடன் இருப்பதாகத்தோன்றியது. மகா விஷ்ணுவிடமே ஆதிசேஷன் விளக்கம் கேட்க, ‘‘கலி பிறப்பதற்கு முன்னால் சிவத்தின் மகிமையை ரிஷிகள் அனைவரும் உணர வேண்டும். அவர்களால் உலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக சிவபெருமான் பிச்சாண்டியாகவும், மகாவிஷ்ணுவாகிய நான் மோகினிப் பெண்ணாகவும் வேடமிட்டோம். ரிஷிகளை நான் மயக்கி அவர்கள் என் பின்னால் வந்த போது பிச்சாண்டியான சிவபெருமான் ஆனந்த நர்த்தனம் ஆடினார். அதைக் கண்டு நானும், முனிவர்களும், யோகிகளும் மெய்மறந்து நின்றுவிட்டோம். அக்காட்சியை நினைத்துக் கொண்டிருந்ததால் நான் உனக்கு பாரமாகத் தோன்றுகிறேன்‘‘ என பதில் அளித்தார்.




அக்னி தீர்த்தம்

உடனே, ஆதிசேஷன், தானும் சிவபெருமானின் நர்த்தனத்தைக் காண விரும்பித் தவம் இயற்றினார். சிவபெருமானும் அவர் முன் தோன்றி, அளித்த வரத்தின்படி அத்திரி முனிவர் - அனுசுயா தேவிக்கு பிள்ளையாக பதஞ்சலி என்ற பெயருடன் வியாக்ரபுரத்தில் பிறந்தார் ஆதிசேஷன். வியாக்ரபாதரோடு தில்லையில் மகாசிவனின் ஆனந்த நடனத்தைக் கண்டு பரவசப்பட்டார். பிறகு, பதஞ்சலியும் வியாக்ரபாதரும் சிவபெருமானிடம் அவருடைய அஜபா நடனத்தையும் ருத்ர தாண்டவத்தையும் காண விரும்புவதோடு, அவரது திருவடி தரிசனத்தையும் என்றென்றும் எல்லோரும் தரிசிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டார்கள். அதைக் கேட்ட சிவன், அவ்விருவரையும் ஸ்ரீபுரம் எனும் திருவாரூர் செல்லப் பணித்தார். இதன் பிறகு பதஞ்சலியும் வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள்.

ஊர் முழுவதும் சிவலிங்க சொரூபமாக இருப்பதைக் கண்டு பூரிப்படைந்த அவர்கள், திருவாரூர் கமலாம்பாளை வணங்கும் பொருட்டு பதஞ்சலி தன் உடலைப் பாம்பு வடிவமாகவும், வியாக்ரபாதர் புலிக் கால் கொண்டவராகவும் மாறினார்கள். சிவலிங்கங்கள் நிறைந்த ஊரில் தங்கள் பாதம் படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு உருமாறினார்கள். அப்போது கமலாம்பாள் கூறியபடி, விளமல் என்னும் இடத்தில் பதஞ்சலி விமலாக்க வைரம் என்ற தேவலோக மண்ணால் லிங்கத்தைப் பிடித்து வைக்க, அவர் முன் சிவன் தோன்றினார். உடனே பதஞ்சலி தேவகாந்தாரி ராகத்தில் பாட, அப்பாடலுக்கு சிவன் ‘அஜபா’ நடனம் ஆடி, இரு முனிவர்களுக்கும் திருவடி தரிசனம் தந்தார். இதனை மகாவிஷ்ணு, பிரம்ம தேவர், முசுகுந்த சக்ரவர்த்தி, தேவாதி தேவர்கள் அனைவரும் புடை சூழ நின்று தம் நிலை மறந்து கண்டு களித்தார்கள். “
பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக “ என்று மாணிக்கவாசகர் போற்றுகின்றார்.   இவ்வாறு முனிவர்கள் இருவரும் திருப்பாத தரிசனம் கண்ட தலம் விளமல் தலத்தின்

இறைவர்: பதஞ்சலி மனோகரர், விளமல் விமலன்.
இறைவி: மதுரபாஷினி – யாழினும் தேன் மொழியம்மை
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்,
தலவிருட்சம்: வில்வம்
பாடியவர்: திருஞானசம்பந்தர்.
சிறப்பு: சிவபாத தலம், சக்தி பீடங்களில் ஸ்ரீவித்யா பீடம்.

தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி வழிபாடு செய்த தலங்களுள் ஒன்று. சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார். மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது லிங்கம் தீபஜோதியாய் ஒளிரும்.



திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலம் 


சிவபெருமான் காட்டிய ருத்ர பாதத்திற்கு இன்றளவும் தினமும் பூசைகள் அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தலம் திருவடித் க்ஷேத்திரம், சிவபாத தலம் என்றும் அழைக்கப்படுகின்றது.  குருக்கள் அனைத்து தலங்களின் சிவபெருமானின் நாமங்களையும் கூறி ருத்ரபாதத்திற்கு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்யும் தலம். 

ஆலய முகப்பிலேயே அக்னி தீர்த்தத்தை காணலாம். விளமலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசையன்று பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பு. திங்கட்கிழமை, அமாவாசை அல்லது சஷ்டி தினங்களில் தம்பதி சமேதராய் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு நெய்யிட்டு அன்னம் சாத்தி வழிபட்டால், புத்திர பாக்கியம் கிட்டும். திக்குவாய் உள்ள குழந்தைகள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள், அக்னி தீர்த்தத்தில் நீராடி அம்பாளையும், ஈசனையும்  வழிபட சர்வ விமோசனம் பெற்று சகல சௌபாக்கியங்களும் பெறுவர். இத்தலத்தில் ஒரு பிடி அன்னதானம் செய்தால் பல அசுவமேத யாகம் செய்த பலனைப் பெற முடியும். இவ்வாலயம் சோழ மண்டலத்தில் அன்னதானக் கட்டளையாக தொன்று தொட்டு விளங்கி வந்துள்ளது.

நுழைவாயிலின் இருபுறமுள்ள விநாயகர், சுப்ரமணியரை வணங்கி விட்டு வெளிப் பிரகாரத்தில் நுழைகிறோம். அங்கேயுள்ள நந்தி சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்து ஆடிய  வடகிழக்கு திசை நோக்கி இருப்பதைக் காணலாம். பிரகாரம் நந்தவனமாக உள்ளது. பிரகாரத்தில் சனீஸ்வரன், சந்திர, சூரியர், விநாயகர், கஜலட்சுமி, சன்னதிகள் அமைந்துள்ளன. முன்மண்டபத்தில் பதஞ்சலியின் திருவடிவமும் மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் திருவடிவமும் உள்ளன. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். 

அதைக் கடந்து உள்பிராகாரம் சென்றால் தென்திசை நோக்கி க்ஷேத்ரபால பைரவர் அருளுகிறார்.  இந்த க்ஷேத்ரபால பைரவர் தனித்துவத்தோடு அருள்கிறார். நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபால பைரவர் இருப்பதால் இத்தலத்தில் நவகிரகம் கிடையாது. இவர் நவகோள்களைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டவர். இவரை தரிசனம் செய்பவர்களுக்கு நவகிரகங்கள் கெடுதல் செய்யாது.

கருவறையில் ‘பதஞ்சலி மனோகரர்’ எனும் திருப்பெயரோடு ஈசன் அருளாட்சி நடத்துகிறார். மூலஸ்தானத்தில் இலிங்கம், அதற்குப்பின் பதஞ்சலி முனிவருக்குக் காட்சி தந்த நாட்டியப் பெருமான் - நடராஜர், முன்புறம் சிவபெருமானின் திருப்பாதங்கள் என்று ஒரே சன்னதியில் சிவபெருமானின் மூன்று வடிவங்களை ஒரு சேர தரிசிக்கலாம்.

பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறும், இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.  பித்ருக்களுக்கு முறையாக திதி கொடுக்க முடியாதவர்கள் அமாவாசையன்று கமலாலய குளத்தின் பிதுர் கட்டத்திலும், பின்னர் விளமலில் அக்னி தீர்த்தத்திலும் நீராடி, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட பித்ரு தோஷம் விலகும்.




அம்பாளின் அமுதமான திருப்பெயர் ‘யாழினுமென் மொழியாளம்மை’. வடமொழியில் மதுரபாஷினி, மஞ்சுளவாணி என்றும் அழைக்கப்படுகிறாள். சூரியனையும் சந்திரனையும் பிறையாகக் கொண்ட அம்பாள் மதுரபாஷினி, சகல சௌபாக்கியங்களையும் வழங்கும் சடாட்சர தேவியாக இராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக விளங்குவதால் இத்தலம்    சக்தி பீடங்களில் வித்யா பீடமாக விளங்குகின்றது. சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பது போல அம்மனுக்கு சந்திரனைப் போல குளிர்ச்சியான நெற்றிக்கண்ணுடன் அருள் பாலிக்கின்றாள்.  தினமும் அம்பாளை வணங்கி வந்தால் கலைகள், கல்விகளில் பெயரும் புகழும், வளர்ச்சியும் பெருகும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்னர் மதுரபாஷினி அம்மனுக்கு அர்ச்சனை செய்து பின்பு பள்ளியில் சேர்க்கும் நடைமுறை உள்ளது. கல்வியில் சிறந்து விளங்க அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் மகா சக்தி ஸ்ரீவித்யா பூஜை நடைபெறுகின்றது.

இங்குள்ள இராஜ துர்க்கை, இடத்திருக்கரத்தில் கிளியுடன் இருப்பதால் மதுரை மீனாட்சியின் அவதாரம் என்கிறார்கள். வலதிருக்கரத்தில் சூலம் மற்றும் சிம்மத்துடன் அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள். செவ்வாய் தோஷம், இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இராஜ துர்க்கையை வழிபட தோஷம் விலகும். மஹாலட்சுமியும் இருபுறமும் ஐராவதங்கள் புடை சூழ அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றாள்.

இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களின் நோய்கள், துயரங்கள் நீங்குவதால் எமனுக்கு வேலை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் எமசண்டிகேஸ்வரர், கையில் ஆயுதம் எதுவுமின்றி, மலர்களுடன் பூஜை செய்யும் கோலத்தில் வீற்றிருக்கிறார். ஆலயத்திற்குள் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சூரியன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோரை தரிசிக்கலாம்.

சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடிய தலமாதலால், மார்கழி திருவாதிரை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர சிவராத்திரி மற்றும்  சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு ஆடிப்பூரம், நவராத்திரியன்று அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஆடிப்பூரத்தன்று அம்மனின் பாத தரிசனம் மற்றும் அன்னாபிஷேகம் காணலாம்.  திருவாரூர் தியாகேசப்பெருமான் பாத தரிசனம் தந்தருளும் ஆருத்ரா தரிசனத்தன்றும், பங்குனி உத்திரத்தன்றும் இவ்வாலயத்தில் இருந்து பதஞ்சலியும், வியாக்ரபாதரும் திருவாரூர் எழுந்தருளுகின்றனர்.

                                                           திருப்பாத தரிசனம் தொடரும் . . . . 

2 comments:

Yarlpavanan said...

அருமையான பதிவு
பாராட்டுகள்

S.Muruganandam said...

வாருங்கள் யாழ்பாவாணன். மிக்க நன்றி. தொடருங்கள்.