Showing posts with label அன்னாபிஷேகம். Show all posts
Showing posts with label அன்னாபிஷேகம். Show all posts

Friday, April 3, 2020

திருப்பாத தரிசனம் - 21


திருவிளமல்


வியாக்ரபாதருக்கும் பதஞ்சலிக்கும் திருப்பாத தரிசனம் அளித்த தலம்

மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
 ஒத்தக நகமணி மிளிர்வதொ ரரவின ரொளிகிளர்
 அத்தக வடிதொழ வருள்பெரு கண்ணொடு முமையவள்
வித்தக ருறைவது விரிபொழில் வளநகர் விளமரே -   என்று ஆளுடையப்பிள்ளையார் பாடிய தலம் திருவிளமல்.  சிவாலயங்களில் பாத தரிசனம் என்பது பக்தர்கள் இறைவனின் திருவடியைக் கண்டு வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டதாகும். இந்தப் பாத தரிசனம் பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய இரு ரிஷிகளுக்குத்தான் முதன் முதலில் கிடைத்தது. அப்படிக் கிடைத்த சிறப்புமிக்க ஆதி முதல் தலம் விளமல் என்றழைக்கப்படும் திருவிளமல்.

திருவாரூரில் தியாகராஜரின் திருமுக தரிசனம் காண்பவர்கள் 3 கி.மீ தொலைவில் உள்ள திருவிளமல் என்னும் சிவாலயத்தில் சென்று ருத்ரபாத தரிசனம் காண்பது சிறப்பு. வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவரும், பதஞ்சலி என்னும் பாம்பு முனிவரும் வணங்கிய தலம் திருவிளமல் ஆகும்.

இத்தலத்தை பதஞ்சலி மனோகரர் ஆலயம் என்பர். திருவாரூர் புராணத்தில் திருஞானசம்பந்தர் இக்கோயிலின் இலிங்கத்தை வியந்து பாடியுள்ளார். தேவாரத்தில் திருநாவுக்கரசர் கயிலாயநாதரை எங்கெங்கு காணலாம் என குறிப்பிடும் பாடலில் விளமலைப் பற்றிய குறிப்பு உள்ளது. மாணிக்கவாசகரும் தம் சிவபுராணத்தின் பல இடங்களில் விளமல் தலத்தின் புகழ் பாடுகிறார். திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து மூன்று கி.மீ தூரத்தில், தஞ்சை செல்லும் சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. 

பரந்தாமனை எப்பொழுதும் தாங்கிக் கொண்டிருந்த ஆதிசேஷனுக்கு அன்றென்னவோ மகாவிஷ்ணு மிகுந்த பாரத்துடன் இருப்பதாகத்தோன்றியது. மகா விஷ்ணுவிடமே ஆதிசேஷன் விளக்கம் கேட்க, ‘‘கலி பிறப்பதற்கு முன்னால் சிவத்தின் மகிமையை ரிஷிகள் அனைவரும் உணர வேண்டும். அவர்களால் உலகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக சிவபெருமான் பிச்சாண்டியாகவும், மகாவிஷ்ணுவாகிய நான் மோகினிப் பெண்ணாகவும் வேடமிட்டோம். ரிஷிகளை நான் மயக்கி அவர்கள் என் பின்னால் வந்த போது பிச்சாண்டியான சிவபெருமான் ஆனந்த நர்த்தனம் ஆடினார். அதைக் கண்டு நானும், முனிவர்களும், யோகிகளும் மெய்மறந்து நின்றுவிட்டோம். அக்காட்சியை நினைத்துக் கொண்டிருந்ததால் நான் உனக்கு பாரமாகத் தோன்றுகிறேன்‘‘ என பதில் அளித்தார்.




அக்னி தீர்த்தம்

உடனே, ஆதிசேஷன், தானும் சிவபெருமானின் நர்த்தனத்தைக் காண விரும்பித் தவம் இயற்றினார். சிவபெருமானும் அவர் முன் தோன்றி, அளித்த வரத்தின்படி அத்திரி முனிவர் - அனுசுயா தேவிக்கு பிள்ளையாக பதஞ்சலி என்ற பெயருடன் வியாக்ரபுரத்தில் பிறந்தார் ஆதிசேஷன். வியாக்ரபாதரோடு தில்லையில் மகாசிவனின் ஆனந்த நடனத்தைக் கண்டு பரவசப்பட்டார். பிறகு, பதஞ்சலியும் வியாக்ரபாதரும் சிவபெருமானிடம் அவருடைய அஜபா நடனத்தையும் ருத்ர தாண்டவத்தையும் காண விரும்புவதோடு, அவரது திருவடி தரிசனத்தையும் என்றென்றும் எல்லோரும் தரிசிக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டார்கள். அதைக் கேட்ட சிவன், அவ்விருவரையும் ஸ்ரீபுரம் எனும் திருவாரூர் செல்லப் பணித்தார். இதன் பிறகு பதஞ்சலியும் வியாக்ரபாதரும் திருவாரூர் வந்தார்கள்.

ஊர் முழுவதும் சிவலிங்க சொரூபமாக இருப்பதைக் கண்டு பூரிப்படைந்த அவர்கள், திருவாரூர் கமலாம்பாளை வணங்கும் பொருட்டு பதஞ்சலி தன் உடலைப் பாம்பு வடிவமாகவும், வியாக்ரபாதர் புலிக் கால் கொண்டவராகவும் மாறினார்கள். சிவலிங்கங்கள் நிறைந்த ஊரில் தங்கள் பாதம் படக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு உருமாறினார்கள். அப்போது கமலாம்பாள் கூறியபடி, விளமல் என்னும் இடத்தில் பதஞ்சலி விமலாக்க வைரம் என்ற தேவலோக மண்ணால் லிங்கத்தைப் பிடித்து வைக்க, அவர் முன் சிவன் தோன்றினார். உடனே பதஞ்சலி தேவகாந்தாரி ராகத்தில் பாட, அப்பாடலுக்கு சிவன் ‘அஜபா’ நடனம் ஆடி, இரு முனிவர்களுக்கும் திருவடி தரிசனம் தந்தார். இதனை மகாவிஷ்ணு, பிரம்ம தேவர், முசுகுந்த சக்ரவர்த்தி, தேவாதி தேவர்கள் அனைவரும் புடை சூழ நின்று தம் நிலை மறந்து கண்டு களித்தார்கள். “
பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக “ என்று மாணிக்கவாசகர் போற்றுகின்றார்.   இவ்வாறு முனிவர்கள் இருவரும் திருப்பாத தரிசனம் கண்ட தலம் விளமல் தலத்தின்

இறைவர்: பதஞ்சலி மனோகரர், விளமல் விமலன்.
இறைவி: மதுரபாஷினி – யாழினும் தேன் மொழியம்மை
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்,
தலவிருட்சம்: வில்வம்
பாடியவர்: திருஞானசம்பந்தர்.
சிறப்பு: சிவபாத தலம், சக்தி பீடங்களில் ஸ்ரீவித்யா பீடம்.

தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி வழிபாடு செய்த தலங்களுள் ஒன்று. சிவன் மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார். மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது லிங்கம் தீபஜோதியாய் ஒளிரும்.



திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலம் 


சிவபெருமான் காட்டிய ருத்ர பாதத்திற்கு இன்றளவும் தினமும் பூசைகள் அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தலம் திருவடித் க்ஷேத்திரம், சிவபாத தலம் என்றும் அழைக்கப்படுகின்றது.  குருக்கள் அனைத்து தலங்களின் சிவபெருமானின் நாமங்களையும் கூறி ருத்ரபாதத்திற்கு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்யும் தலம். 

ஆலய முகப்பிலேயே அக்னி தீர்த்தத்தை காணலாம். விளமலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசையன்று பித்ரு தர்ப்பணம் செய்வது சிறப்பு. திங்கட்கிழமை, அமாவாசை அல்லது சஷ்டி தினங்களில் தம்பதி சமேதராய் வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானுக்கு நெய்யிட்டு அன்னம் சாத்தி வழிபட்டால், புத்திர பாக்கியம் கிட்டும். திக்குவாய் உள்ள குழந்தைகள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள், அக்னி தீர்த்தத்தில் நீராடி அம்பாளையும், ஈசனையும்  வழிபட சர்வ விமோசனம் பெற்று சகல சௌபாக்கியங்களும் பெறுவர். இத்தலத்தில் ஒரு பிடி அன்னதானம் செய்தால் பல அசுவமேத யாகம் செய்த பலனைப் பெற முடியும். இவ்வாலயம் சோழ மண்டலத்தில் அன்னதானக் கட்டளையாக தொன்று தொட்டு விளங்கி வந்துள்ளது.

நுழைவாயிலின் இருபுறமுள்ள விநாயகர், சுப்ரமணியரை வணங்கி விட்டு வெளிப் பிரகாரத்தில் நுழைகிறோம். அங்கேயுள்ள நந்தி சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்து ஆடிய  வடகிழக்கு திசை நோக்கி இருப்பதைக் காணலாம். பிரகாரம் நந்தவனமாக உள்ளது. பிரகாரத்தில் சனீஸ்வரன், சந்திர, சூரியர், விநாயகர், கஜலட்சுமி, சன்னதிகள் அமைந்துள்ளன. முன்மண்டபத்தில் பதஞ்சலியின் திருவடிவமும் மகாமண்டபத்தில் வியாக்ரபாதர் திருவடிவமும் உள்ளன. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். 

அதைக் கடந்து உள்பிராகாரம் சென்றால் தென்திசை நோக்கி க்ஷேத்ரபால பைரவர் அருளுகிறார்.  இந்த க்ஷேத்ரபால பைரவர் தனித்துவத்தோடு அருள்கிறார். நவகோள்களின் அதிபதியாக க்ஷேத்ரபால பைரவர் இருப்பதால் இத்தலத்தில் நவகிரகம் கிடையாது. இவர் நவகோள்களைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டவர். இவரை தரிசனம் செய்பவர்களுக்கு நவகிரகங்கள் கெடுதல் செய்யாது.

கருவறையில் ‘பதஞ்சலி மனோகரர்’ எனும் திருப்பெயரோடு ஈசன் அருளாட்சி நடத்துகிறார். மூலஸ்தானத்தில் இலிங்கம், அதற்குப்பின் பதஞ்சலி முனிவருக்குக் காட்சி தந்த நாட்டியப் பெருமான் - நடராஜர், முன்புறம் சிவபெருமானின் திருப்பாதங்கள் என்று ஒரே சன்னதியில் சிவபெருமானின் மூன்று வடிவங்களை ஒரு சேர தரிசிக்கலாம்.

பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் நடைபெறும், இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.  பித்ருக்களுக்கு முறையாக திதி கொடுக்க முடியாதவர்கள் அமாவாசையன்று கமலாலய குளத்தின் பிதுர் கட்டத்திலும், பின்னர் விளமலில் அக்னி தீர்த்தத்திலும் நீராடி, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட பித்ரு தோஷம் விலகும்.




அம்பாளின் அமுதமான திருப்பெயர் ‘யாழினுமென் மொழியாளம்மை’. வடமொழியில் மதுரபாஷினி, மஞ்சுளவாணி என்றும் அழைக்கப்படுகிறாள். சூரியனையும் சந்திரனையும் பிறையாகக் கொண்ட அம்பாள் மதுரபாஷினி, சகல சௌபாக்கியங்களையும் வழங்கும் சடாட்சர தேவியாக இராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக விளங்குவதால் இத்தலம்    சக்தி பீடங்களில் வித்யா பீடமாக விளங்குகின்றது. சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பது போல அம்மனுக்கு சந்திரனைப் போல குளிர்ச்சியான நெற்றிக்கண்ணுடன் அருள் பாலிக்கின்றாள்.  தினமும் அம்பாளை வணங்கி வந்தால் கலைகள், கல்விகளில் பெயரும் புகழும், வளர்ச்சியும் பெருகும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்னர் மதுரபாஷினி அம்மனுக்கு அர்ச்சனை செய்து பின்பு பள்ளியில் சேர்க்கும் நடைமுறை உள்ளது. கல்வியில் சிறந்து விளங்க அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் மகா சக்தி ஸ்ரீவித்யா பூஜை நடைபெறுகின்றது.

இங்குள்ள இராஜ துர்க்கை, இடத்திருக்கரத்தில் கிளியுடன் இருப்பதால் மதுரை மீனாட்சியின் அவதாரம் என்கிறார்கள். வலதிருக்கரத்தில் சூலம் மற்றும் சிம்மத்துடன் அஷ்டபுஜ துர்க்கையாக அருள் பாலிக்கின்றாள். செவ்வாய் தோஷம், இராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இராஜ துர்க்கையை வழிபட தோஷம் விலகும். மஹாலட்சுமியும் இருபுறமும் ஐராவதங்கள் புடை சூழ அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக்கின்றாள்.

இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களின் நோய்கள், துயரங்கள் நீங்குவதால் எமனுக்கு வேலை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் எமசண்டிகேஸ்வரர், கையில் ஆயுதம் எதுவுமின்றி, மலர்களுடன் பூஜை செய்யும் கோலத்தில் வீற்றிருக்கிறார். ஆலயத்திற்குள் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சூரியன், வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோரை தரிசிக்கலாம்.

சிவபெருமான் தனது திருப்பாதம் காட்டி நடனம் ஆடிய தலமாதலால், மார்கழி திருவாதிரை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர சிவராத்திரி மற்றும்  சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது. அம்மனுக்கு ஆடிப்பூரம், நவராத்திரியன்று அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஆடிப்பூரத்தன்று அம்மனின் பாத தரிசனம் மற்றும் அன்னாபிஷேகம் காணலாம்.  திருவாரூர் தியாகேசப்பெருமான் பாத தரிசனம் தந்தருளும் ஆருத்ரா தரிசனத்தன்றும், பங்குனி உத்திரத்தன்றும் இவ்வாலயத்தில் இருந்து பதஞ்சலியும், வியாக்ரபாதரும் திருவாரூர் எழுந்தருளுகின்றனர்.

                                                           திருப்பாத தரிசனம் தொடரும் . . . . 

Monday, October 26, 2015

கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்

இந்த வருடம் (2015) ஐப்பசி பௌர்ணமி இரண்டு நாள் இருப்பதால் இன்றே போக் சாலை முத்துமாரியம்மன் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது அந்த தரிசனத்தையும் மற்றும் அன்னாபிஷேகத்தின் சிறப்பு என்பதையும் இப்பதிவில் காணலாமா அன்பர்களே? 

அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமான் 


சாம வேதத்திலே ஒரு இடத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.

அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள்,  ஐப்பசி பௌர்ணமி நாள்.

பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப்
 பையுறு சீவனுக்கும்

மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்
அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.

ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லை நடனசபாபதிக்கு நித்யமும் அன்னாபிஷேகம் 


தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.  

இதையே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றும் கூறுவார்கள். அன்னாபிஷேக கோலத்தில் எம்பெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும் . 

சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.

ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும்.  அவை என்ன என்று காணலாமா அன்பர்களே,

மாதம் -                    அபிஷேகப் பொருள் -             பலன்
சித்திரை  - மருக்கொழுந்து - புகழ்
வைகாசி  - சந்தனம்- மனை, வீடு, நிலம், புதையல்
ஆனி  - முக்கனி = மா, பலா, வாழை -கேட்ட வரம் கிட்டும்
ஆடி  - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்
ஆவணி  - வெல்ல சர்க்கரை - சாபம் தோஷம் பாவம் நீங்கும்
புரட்டாசி  - கோதுமை+பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - அஷ்ட ஐஸ்வரியம்
ஐப்பசி - அன்னாபிஷேகம் - கல்வி கலை தேர்ச்சி ஞானம் கிட்டும்
கார்த்திகை  - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி
மார்கழி  - பசு நெய் & நறுமண வென்னீர் -கண்டம் நீங்கி ஆயுள் கூடும்
தை  - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்
மாசி  - பசுநெய்யில் நனைத்த கம்பளி -குழந்தை பாக்கியம்
பங்குனி  - பசுந்தயிர் -மனைவி, மக்கள், உறவினர் உதவி.

திருமயிலை கபாலீசுரத்திலும், வடபழனி வேங்கீஸ்வரத்திலும்  மாதா மாதம் இதே கிரமம் திரவியங்கள் சிவபெருமானுக்கு  சார்த்தப்படுகின்றன. 
ஐப்பசி மாதம்  அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபி ஷேகனம் எனப்படுகின்றது. சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் (கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம்.) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறுகின்றது பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படுகின்றது. பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீபாரதாணையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திர சேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுகின்றான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம்.

ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர்.

சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இன்னும் சில ஆலயங்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும் பலப் பல படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கருமாரி திரிபுர சுந்தரி ஆலயத்தில் திரியம்பகேஸ்வரருக்கு மிகவும் நூதனமான முறையில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஒரு வருடம் எம்பெருமானின் மூன்று கண்களை குறிக்கும் வகையில் மூன்று லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர், ஒரு வருடம் பஞ்ச பூதத் தலங்களை குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்களை அமைத்து அலங்காரம் செய்தனர், ஒரு வருடம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை குறிக்கும் வகையில் பன்னிரண்டு லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர் ஒரு  வருடம் கருமாரி அம்பாள்,  புற்றின் கீழ் காமதேனு வாகனத்தில் கற்பகாம்பிகையாக எழுந்தருளி அருள் பாலிக்கும் அருமையான சந்தனக் காப்பு அலங்காரம் செய்திருந்தனர். அம்மனை தரிசித்த உடன் அப்படியே மெய் சிலிர்த்தது.

அசோக் நகர் சித்தி விநாயகர் சொர்ணபுரீஸ்வரர் ஜடாமுடியிலிருந்து கங்கை பாய, நாகம் கழுத்தில் ஆட திருக்கயிலை நாதராக முக்கண்களுடன் எழிற்கோலம் காட்டுகின்றார்.

வடபழனி வேங்கிரீஸ்வரர் ஆலயத்தில் கையிலாய மலையையே அன்னாபிஷேகதன்று தரிசனமாக காட்டினர்.

மஹாலிங்கபுரம் மஹாலிங்கேஸ்வரர் யோகியாக அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் பால முருகனுக்கும் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. முழுவதும் அன்னம் சார்த்தப்பட்டு அழகன் முருகன் அன்று சிவ பெருமானாக அருட்காட்சி தருகின்றார். உத்திராட்ச மலைக்கு கறுப்பு திராட்சைப்பழங்களும், காதுக்கு குண்டலமாக அப்பிள் பழமும் அருமை.

காஞ்சியில் காமாக்ஷியம்மன் ஆலயத்தில்

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது, சென்னை திருமயிலை முண்டககண்ணியம்மனுக்கும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.



இப்பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள்   போக் சாலை முத்து மார்ரியம்மன் ஆலயத்தின் அன்னாபிஷேக படங்கள் ஆகும்,  தில்லையில் இரத்ன சபாபதிக்கு தினமும் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது என்பதால் சிவகாம சுந்தரி சமேத   நடராஜர் சிலைகளையும் சந்தனத்தால் அருமையாக அமைத்த்திருந்தனர்.  இன்றும்  பல ஆலயங்களில் அன்னதான நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுகின்றது.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.

வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக
 அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக்
 கூட்ட முதலான žவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்யலாம்.

நாளை (27.10.2015) பல ஆலயங்களில்  அன்னாபிஷேகம் நடைபெறுவதால் முடிந்த அன்பர்கள் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்து கோடி சிவ தரிசன பலன் பெறுமாறு வேண்டுகின்றேன்.




Thursday, November 10, 2011

அகத்தீஸ்வரர் பிரம்மோற்சவம் -11



சிவமயம்

திருசிற்றம்பலம்


தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!





அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவிலின் தக்ஷிணாயண புண்ய கால பிரம்மோற்சவத்தின் ஏழாம் திருநாள் எல்லா திருக்கோவில்களும் போல திருத்தேரோட்டம். பஞ்ச மூர்த்திகளும் திருத்தேரில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். தேரோட்டம் முடிந்த பின் குளக்கரையில் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு அருட்காட்சி தருகின்றனர் பின்னர் மாலை சிறப்பு அலங்காரத்துடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளுகின்றனர். அந்த காட்சிகளை கண்டு இன்புறுங்கள் அன்பர்களே.


குளக்கரையில் அகத்தீஸ்வரர்

திருத்தேரோட்டம் என்பது ஐயனின் ஐந்தொழில்களில் சம்ஹாரம் எனப்படும் அழித்தல் தொழிலை குறிப்பது. ஐயனும் அம்மையும் போருக்கு செல்வது போல் நேர்த்தியாக அலங்காரம் செய்துள்ள அழகைக் காணுங்கள்.


ஐயனின் கையில் உள்ள வில் இப்படத்தில் தெளிவாக தெரிகின்றதல்லவா?

போர் கோலத்தில் அன்னை அகிலாண்டேஸ்வரி

சும்ப நிசும்ப, சண்ட முண்ட, ரக்தபீஜ , மஹிசாசுரர்களை சம்ஹாரம் செய்து காத்த கோலத்தில் அன்னை

திருத்தேரில் அன்னை

அம்மனுக்கு அற்புதமான பூந்தேர்


இன்றைய தினம் (10-11-11) துலா( ஐப்பசி) பௌர்ணமி, இன்றைய தினம்தான் அனைத்து உயிர்களுக்கும் அமுதூட்டும் ஐயனுக்கு அன்னபிஷேகம் சிறப்பாக எல்லா சிவாலயங்களிலும் நடைபெறும் நாள். அன்னாபிஷேகத்தின் சிறப்பைப் பற்றி அறிந்து கொள்ள இப்பதிவுவைப் பாருங்கள்.







அகத்தீஸ்வரரின் பிரம்மோற்சவம் தொடரும்…..

Wednesday, November 12, 2008

கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்

”அப்பா! சாமி வெள்ளையா மாறீட்டாரு ” ன்னு ஒரு நாள் காரைக்காலில், சௌந்தராம்பிகை சமேத கயிலாச நாதர் ஆலயத்தில் என் மகள் ஓடி வந்து என்று படபடப்பாக கூறினாள், என்னடா இது சுவாமி கூட Fair and lovely போட்டு வெள்ளையாகிவிட்டாரோ? ன்னு சந்தேகத்தோட உள்ள போயி பார்த்தால் சுவாமி அன்னாபிஷேகத்தில் அற்புதமாக அருட்காட்சி தந்துகிட்டு இருந்தார். பின் சுவாமி நிறம் மாறவில்லை அன்னாபிஷேகம் கண்டருளுகிறாருன்னு மகளுக்கு விளக்கினேன், வாங்களேன் நீங்களும் அன்னாபிஷேகம்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்க.




அன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி



சாம வேதத்திலே ஒரு இடத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.

முதல் முதலில் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது "மயிலையே கயிலை" ஆன திருமயிலையில், அன்று ஏதோ தோன்றியது கபாலீச்வரரையும், கற்பகவல்லி அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும் என்று, அலுவகத்திலிருந்து நேராக திருக்கோவில் சென்றேன். எப்போதும் 4.30 மணிக்கே திறந்து விடும் கபாலீஸ்வரர் சன்னதியில் அன்று மட்டும் திரை போடப்பட்டிருந்தது. 6:30 மணியளவில்தான் தரிசனம் கிடைத்தது ஆனால் அற்புதமான தரிசனம் எப்போதும் கருநிறமாக இருக்கும் எம்பெருமானின் திருமேனி அன்று மட்டும் வெண்ணிறமாக இருந்தது. விபூதி அலங்கரம் போல் தோன்றவில்லை அர்ச்சகரிடம் விசாரித்த போது இன்று எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்துள்ளோம் என்று கூறினார்.

இரண்டாவது முறை அன்னாபிஷேகம் தரிசித்தது.  காரைக்காலில். அக்கோவிலில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்த விதமே மிக அருமையாக இருந்தது, எம்பெருமானின் மேனி முழுவதும் சாதம், ஐந்து முகங்கள் அமைக்கப்பட்டிருந்தன, கண்களுக்கு கருப்பு திராட்சை, காதிலே குண்டலமாக முறுக்கு, இரண்டு பக்கமும் புடலங்காய், ஆவுடையாரின் மீது அன்னாசிபழங்கள்், மற்ற இனிப்பு வகைகள், அந்த தரிசனத்திலே மயங்கி அன்றே மற்ற அண்ணாமலையார், பார்வதீஸ்வரர், சோமேஸ்வரர் ஆலயங்களிலும் அன்னாபிஷேக அலங்காரங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்த அழகில் மயங்கி அன்னாபிஷேகம் பற்றி படித்து, விசாரித்து அறிந்து கொண்டவைகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

எந்தப் பொருளை நாம் தானம் செய்தாலும் போதும் என்று யாரும் சொல்லமாட்டார்கள் ஆனால் அன்னதானத்தில் மட்டுமே போதும் என்று சொல்வார்கள் எனவே தானத்தில் எல்லாம் சிறந்தது அன்னதானம் ஆகும். அது போலவே எண்ணற்ற திரவியங்களினால் நாம் அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தாலும் அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு. 

பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப்
பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார்.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் சாற்றுதல் நடைபெறுகின்றது சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் ( கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம். ) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறுகின்றது பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படுகின்றது. பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீபாரதாணையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திர சேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுகின்றான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளா ல் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம்.

ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர்.

சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இன்னும் சில ஆலயங்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும் பலப் பல படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கருமாரி திரிபுர சுந்தரி ஆலயத்தில் திரியம்பகேஸ்வரருக்கு மிகவும் நூதனமான முறையில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஒரு வருடம் எம்பெருமானின் மூன்று கண்களை குறிக்கும் வகையில் மூன்று லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர், ஒரு வருடம் பஞ்ச பூதத் தலங்களை குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்களை அமைத்து அலங்காரம் செய்தனர், ஒரு வருடம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை குறிக்கும் வகையில் பன்னிரண்டு லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர்.

அசோக் நகர் சித்தி விநாயகர் சொர்ணபுரீஸ்வரர் ஜடாமுடியிலிருந்து கங்கை பாய, நாகம் கழுத்தில் ஆட திருக்கயிலை நாதராக முக்கண்களுடன் எழிற்கோலம் காட்டுகின்றார்.

வடபழனி வேங்கிரீஸ்வரர் ஆலயத்தில் கையிலாய மலையையே அன்னாபிஷேகதன்று தரிசனமாக காட்டினர்.

மஹாலிங்கபுரம் மஹாலிங்கேஸ்வரர் யோகியாக அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் பால முருகனுக்கும் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. முழுவதும் அன்னம் சார்த்தப்பட்டு அழகன் முருகன் அன்று சிவ பெருமானாக அருட்காட்சி தருகின்றார். உத்திராட்ச மலைக்கு கறுப்பு திராட்சைப்பழங்களும், காதுக்கு குண்டலமாக அப்பிள் பழமும் அருமை.

காஞ்சியில் காமாக்ஷ’யம்மன் ஆலயத்தில்

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது,


வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக
அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து

கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக்
கூட்ட முதலான žவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து நன்மையடைவோமாக.

* * * * *