Friday, April 24, 2020

திருப்பாத தரிசனம் - 28

நாகப்பட்டினம் -  ஸ்ரீ ரத்ன சிம்மாசன பாரவார தரங்க

 சுந்தர விடங்கர் - 2



இத்தலத்தின் மற்றொரு பதிவைக் காண இங்கு செல்லவும் :  திருநாகை  -1






அதிபத்த நாயனார் வரலாறு: இத்தலத்துடன் தொடர்புடைய நாயனார் அதிபத்தர் ஆவார். அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது. இத்தலத்தில் வழிபட்ட நாயனார் அதிபத்த நாயனார் ஆவார். இவர்  நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் குலத்தில் அவதரித்தார். குல வழக்கப்படி  மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்து வந்தார். வர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு தினமும் தனக்குக்  கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த வழமை தவறாது வந்தார்.
ஒரு சமயம் தொடர்ந்து பல  நாளுக்கு ஒரு மீன் என்றவாறே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபத்தர் பசியோடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழக்கமாக நிகழ்ந்தது. ஆயினும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு  முதல் மீனை  அர்ப்பணிக்கும் செயலை செய்து  தொடர்ந்து வந்தார். அதிபத்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் சாதாரண மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபத்தரிடம் கூறினார்கள். அன்றைய நாளில் அம்மீன் ஒன்றே கிடைத்தமையால், வழக்கம் போல் அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு முக்தியளித்தார். இவரை  “விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்” என்று  திருத்தொண்டத் தொகையில் சுந்தரர் போற்றுகின்றார். இனி இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களைப் பற்றிக் காணலாம்.





ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா மிகவும்  சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தியாகராஜர் திருத்தேரோட்டம் கண்டருளி பாத தரிசனம் தந்தருளுகின்றார். ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறுகிறது. சிவ பெருமான் சாலிசுக மன்னனுக்கு திருமணக் கோலத்துடன் காட்சி கொடுத்து முக்தி மண்டபத்திலிருந்து அதிகாலை புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடைபெறுகிறது.

நீலாயதாக்ஷி அம்பாள் யானை வாகனம் 


ஆடிப்பூர உற்சவம்: அம்பிகை இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக, 'யௌவன பருவ' கோலத்தில் காட்சி தருகிறார். எனவே ஆடிப்பூர விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடி பரணியன்று கொடியேற்றம், பத்து நாள் விழாவாக  வெகு விமரிசையாக நடக்கிறது. ஆரம்ப நாள் மூலவர் அம்மனுக்கு சந்தனக்காப்பு, காணக் கண் கோடி வேண்டும்.  காலையிலும், இரவிலும் அம்மன் வித விதமான அலங்காரத்துடனும், பூதம், ரிஷபம், பால யானை, என்று பல வாகனங்களில்  பரிவாரத்துடன் எழுந்தருளி நகரில் ஊர்வலம் வந்து  அருட்காட்சி அருளுகின்றாள். அம்மன் முன்னும் பின்னும் நாதஸ்வர கலைஞர்களும், ஓதுவார்களும் வாசித்தபடி,ஓதியபடி வருவர் .நான்கு வீதிகளிலும் மேடை அமைத்து கச்சேரி நடக்க்கிறது. இரவில் கச்சேரி நடந்து ஸ்வாமி கோவிலை திரும்ப அடைய விடிகாலை ஆகி விடும். கச்சேரியை கேட்க பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வந்து விடிய விடிய கேட்டு செல்கிறார்கள். அவரவர் வீட்டு கல்யாணம் போல காலை, மாலை எந்நேரமும் கோவிலில் திரளாக கூட்டம். மக்கள் தங்கள், தங்கள் வீட்டு வாசல் முன் நீர் தெளித்து கோலமிட்டு விமரிசையாக வரவேற்கின்னர். ஆடிப்பூரம் அன்று காலை அம்மன் அலங்காரமாக கோவில் பிரகாரத்தில் வரும்போது சிறப்பு இசைக் கச்சேரி நடைபெறுகிறது. அம்மன் வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்து அருட்காட்சி தருகிறாள், அப்போது  நீலாயதாக்ஷி அம்மனின் பின்னலங்காரம் மிகவும் விசேஷமாக இருக்கும். அதைக்  காணும் விதத்தில் சுற்றிவர கண்ணாடிகள் வைக்கப்படும். பூப்படைந்த பெண்ணுக்கு நடக்கும் அத்தனை சடங்குகளும் அம்மனுக்கு அன்று நடக்கின்றது, ஆடிப்பூரம் கழிப்பு காலை 1 ணிக்குள் முடியும். இரவில் சிறப்பு  வாண வேடிக்கைகள் நடக்கும். ஆடிப்பூரத்தன்று இரவு ஸ்ரீநீலாயதாக்ஷி அம்மன் வெண்மை நிற ஜரிகை புடைவையை அணிந்து, அருட் காட்சி தருகின்றாள் இது வெள்ளை சார்த்தல் என்றழைக்கப்படுகின்றது. பின்னர் பூரம் கழித்தல் நிகழ்ச்சி,   இரவில் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் இரதத்தில் ஊர்வலம் வருவார் அம்மன் அதைக் காண கண் கோடி வேண்டும்.  வலம் முடித்து உஷ்ணாபிஷேகம் கண்ட பின்னரே அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளுகின்றாள். மறு நாள் சரஸ்வதி அலங்காரத்தில் ஊஞ்சல் விழா. பிரசாத படையல் மிகவும் சிறப்பு.  கல்யாண விருந்து போல அன்னதானம் நடைபெறுகின்றது. அனைவரும் தங்கள் வீட்டுக் கல்யாணம் போல வந்து இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். அடுத்து ருத்ராபிஷேகம், சின்ன ரதம், புஷ்ப்பல்லக்குடன் திருவிழா சிறப்பாக நிறைவு பெறுகின்றது.


அதிபத்த நாயனார் சன்னதி விமானம்

அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான் அருள் செய்த விழா ஆவணி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆண்டு தோறும் ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெறுகிறது. அன்று அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். கட்டுமரத்தில் அதிபத்தர்  உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார். அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததை போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்தாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான்  வெள்ளி ரிஷப வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளுகின்றார், அவருக்கு  தங்க மீனை படைத்து பூசை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும்  நிகழ்ச்சி நிகழ்கிறது. அதிபத்த நாயனார் வாழ்ந்த செம்படவர்சேரி தற்போது நம்பியாங்குப்பம் என்றழைக்கப்படுகின்றது.

          
சுந்தரர் குதிரை வாகனம் 

புரட்டாசியில் நவராத்திரியின் போது அம்பாள் தினம் ஒரு அலங்காரத்தில் அற்புதமாக கொலு காட்சி தந்தருளுகிறாள். விஜயதசமியன்று சுந்தரர்  குதிரை வாகனத்தில் தியாகராஜப்பெருமானின் வாளோடு மாட வீதி உற்ஸவம் கண்டருளுகிறார்.

ஆடி - தை அமாவாசை மற்றும் மாசி மக நாட்களில் சமுத்திர தீர்த்த வாரியும், விநாயகர் சதுர்த்தியின் போது விஸ்வரூப விநாயகர் விழாவும்,  ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம்திருக்கார்த்திகை, சிவராத்திரி, முதலான உற்சவங்களும்,   தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும்  இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகின்றன. ஆடி சுவாதியன்று நம்பி ஆரூரர் பரவை நாச்சியார் திருக்கல்யாணம், அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் திருவீதி உலா, திருக்கயிலாயக் காட்சி.

 மற்ற ஆலயங்களில்  பிரதோஷ காலத்தில்,  சிவபெருமான்  ரிஷப வாகனத்தில் புறப்பாடாவது வழக்கம். ஆனால் இக்கோயிலில் மோகினி வடிவில் பெருமாளும்  உடன் புறப்பாடாகிறார் என்பது சிறப்பு. பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். இவரை பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனாரின் மூலஸ்தானத்திற்குள் பெருமாளை தரிசிக்கலாம்.

நாகாபரண பிள்ளையார் சன்னதி  

பதினெண் சித்தர்களில் ஒருவரான அழுகுணி சித்தரின் ஜீவ சமாதி இவ்வாலயத்தில் அமைந்துள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றது. பௌர்ணமி தோறும் பாயச நைவேத்யம் படைத்து சிறப்பு பூஜை செய்துவழிபடுகின்றனர்

                               அழுகுணி சித்தர் நந்தவனம் 

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணம் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. நாகை காரோணத்தை நினைப்பவரை விட்டு திருமங்கை விலக மாட்டாள் என்பது அப்பர் வாக்கு. காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தபோது பசியால், வீதியில் பாக்கு  விளையாடும் பாலகர்களை நோக்கிப் "சோறு எங்கு விக்கும்?" என்று கேட்டார். அச்சிறுவர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினர். (விற்கும் என்பது பேச்சு வழக்கில் விக்கும் என வழங்குதலும் உண்டு.) புலவர் சிறுவர்கள் மீது கோபங்கொண்டு, அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு சுவரொன்றில் "பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு..." என்று எழுதி நிறுத்தி விட்டு, பசி தீர்ந்து எஞ்சிய பகுதியைப் பாடி முடிப்போம் என்று சென்று, பசியாறி வந்து பார்க்கும் போது, அப்பாடலின் இரண்டாமடி "நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை" என்று எழுதி இருப்பதைக் கண்டு, சிறுவர்களின் கல்வியறிவை மெச்சிச் சென்றார் என்பது தனிப்பாடல் திரட்டில் காணப்படும் வரலாறு.
தூமென் மலர்க்கணை கோத்தூத்தீ வேள்வி தொழிற் படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோண நின்
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்
சாமன்று உரைக்கத் தருதிகண் டாய் எங்கள் சங்கரனே  - என்று அப்பர் பெருமான் பாடியபடி உயிர் பிரிகின்ற காலத்து நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து நாமத்தை பரவ அருள் புரிய வேண்டும் என்று கடல் நாகைக் காரோண  சுந்தர  விடங்கரை வேண்டுவோம்.  எம்பெருமான் சுந்தர விடங்கராக அருள் பாலிக்கும் திருநாகைத்தலத்தை தரிசித்தோம் வாருங்கள் இனி உன்மத்த நடன நக விடங்க செண்பகத் தியாகேசகரை  திருநள்ளாற்றில் தரிசிக்கலாம் அன்பர்களே.                                                                                                                                               திருப்பாத  தரிசனம் தொடரும் . . . . .


No comments: