ஆரூருக்குரிய இசைக் கருவிகள்
வாணாசுரன் குடமுழா வாசிக்கும் சிற்பம்
பஞ்சமுக வாத்தியம் (குட முழா):
தாட உடுக்கையன் தாமரைப்பூஞ்சேவடியன
கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
ஆடரவக்கிண் கிணிக்காலன்னனோர் சேடனை
ஆடுந்தீக் கூத்தனை நான் கண்டது ஆருரே – என்று அப்பர் பெருமான் பாடியபடி திருக்கால்களில் கிண்கிணி சதங்கைகள்
ஒலிக்க ஆருரன் ஆடும்போது ஒலிக்கப்பெறும் வாத்தியங்களில்
ஒன்று குடமுழா என்றழைக்கப்படும் பஞ்சமுக வாத்தியம்.
இந்திரனிடமிருந்து முசுகுந்த
சக்கரவர்த்தி தியாகராஜரை பெற்று பூவுலகிற்கு கொண்டு வந்த போது
உடன் செங்கழுநீர்ப்பூ, பஞ்சமுக
வாத்தியம், வெள்ளை யானை, பாரி நாதஸ்வரம் சுத்த மத்தளம், இரத்தின சிம்மாசனம், கட்கம்
ஆகியவற்றையும் சேர்த்தே திருவாரூருக்கு கொண்டு வந்தார். இப்பஞ்சமுக வாத்தியத்தை இசைக்க கந்தவர்களையும், இந்திரன் உடன் அனுப்பி வைத்தானாம். பஞ்சமுக வாத்தியம்
இத்தலத்தின் தனிச்சிறப்பு ஆகும். தனித்துவமாக இசைக்கப்படும் இவ்விசைக்கருவியை ஐம்முக
குடமுழா என்றும் அழைக்கின்றனர். புதுமையான இவ்வாத்தியத்தை இன்றளவும் வாசிக்கும் ஒரே
தலம் திருவாரூர். சிவகணங்களின் தலைவரான நந்தியெம்பெருமானும், திரிபுர தகனத்திற்குப்
பின் செருக்கழிந்த வாணாசுரனும் தன் ஆயிரம்
கரங்களைக்
கொண்டு வாசித்த வாத்தியம். இன்றும் மாலை நேரப் பூஜையாகிய திருவந்திக் காப்பின் போது பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகின்றது. அதனுடன் 21 வகையான இசைக்கருவிகளும், 18 வாத்தியங்களும் இசைக்கப்படுகின்றன.
கூடுமே குட முழவம் வீணை
தாளங்
குறுநடை சிறுபூதம் முழக்க
மாக்கூத்தாடுமே - என்று அப்பர் பெருமான் குட முழவத்தின் இசையில்
தாளத்தில் ஆரூர் கூத்தன் ஆடும் அழகைப் பாடுகிறார்.
ஐம்முக குழவம் ஒரே வாயையுடைய தோல்
கருவி அடியில் பெரிய மண் பானை வடிவம் போன்றும், அதற்கு மேல்புறம் ஐந்து வாய்களும் உள்ள கருவியாகும். சிவ வழிபாட்டில்
பஞ்சதேக மூர்த்தியின் வழிபாட்டையொற்றி பஞ்சமுக வாத்தியம் தோன்றியது
என்பர். பஞ்சமுக வாத்தியத்திலிருந்து உண்டாகும்
ஐந்து ஒலியானது ஐந்து நடனங்களுக்கு
உரியது என்பர். இவ்வாத்தியம் தேவாரப்பாடல்
மற்றும் சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளது என்பது ஒரு சிறப்பு.
இக்குடமுழாவை
வாசிப்பவர்கள் பாரசைவர்கள் என்றழைக்கப்படுகின்றனர். இவர்கள் நந்தி வழியில் தோன்றியவர்கள்
என்பது ஐதீகம். இவர்கள் சுத்த மத்தளத்தையும் இசைக்கும் நுணுக்கம் அறிந்தவர்கள். இவர்கள்
தற்போது முட்டுக்காரர்கள் என்றழைக்கப்படுகின்றனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான
முத்துசுவாமி தீட்சிதர் பாடிய நவாவரண கீர்த்தனைகளை அவரிடம் பயின்ற முட்டுகாரர்களால்
தாளமாக்கப்பட்டு இன்றும் வாசிக்கப்படுகின்றன. இன்று திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி
ஆகிய ஆலயங்களில் குடமுழா வாசிக்கப்படுகின்றது.
சுத்தமத்தளம்: இது ஏனைய
மத்தளங்களைக் காட்டிலும் மிக நீண்டதாக இருக்கும், திருவந்திக்காப்பு, மற்ற தீபாராதனைக்
காலங்களிலும் குடமுழா இசைக்கப் பெறாத போதும் இசைக்கப்படுகின்றது. இதனையும் பாரசைவர்களே
இசைக்கின்றனர். வசந்த விழாவின் போது பூத நிருத்தத்தின் போது சுத்த மத்தளம் இசைக்கப்படுகின்றது.
கொடுகொட்டி: இதுவும்
ஒரு தாளக்கருவி, சிவாபெருமானுக்கு மிகவும் பிரியமானது. தற்போது ஆழித் தேரோட்டத்தின்
போது மட்டுமே வாசிக்கப்படுகின்றது. பூஜைக் காலங்களில் உபயோகிப்பது மிகவும் அருகிவிட்டது.
இதை இசைப்பவர்கள் பார சைவர் அல்லாதவர்கள்.
பாரி நாயனம்: ஒரு வித நாதஸ்வர கருவியாகும்.
தியாகேசருக்குரிய பத்து அங்கங்களில் ஒன்றாகும். இப்பாரிநாயனம் இத்திருக்கோவிலில் மட்டுமே
பயன்பாட்டில் உள்ளது. நாதஸ்வரம் என்னும் நீண்ட இசைக் கருவியிலிருந்து பாரிநாயனம் சற்று வேறுபட்டது (அளவில் சிறியது). எனவே இதன் ஒலி
பெருகி சற்று மாறுபட்டிருக்கும், சீவாளியும் நீளமாக இருக்கும்.
இவ்விசைக்கருவியில் சின்ன சின்ன விதிகளில் குறிப்பிட்ட ராகங்களில்
வாசிக்கலாம் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இவ்விசை கருவி வீதிவிடங்கப்பெருமானின்
பூஜை வேளைகளிலும், தேவாரப்பண், தீக்ஷிதர் கிருதிகளையும் வாசிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
பாரி நாயனத்தைப் பற்றிய குறிப்புகள் புராணத்தில் உள்ளன. மற்ற தலங்களில் பூசை நடப்பதைக்
குறிக்க கெட்டிமேளம் வாசிப்பர். ஆனால் இந்த பாரிநாதஸ்வரம் இறைவனின் அங்கம் என்பதால்
பூசை வேளையில் மந்திர ஒலியுடன் இணைந்தது இந்த நாதஸ்வர ஒலியாகும். அதனால் பாரி நாதஸ்வரத்தில்
கெட்டி மேளம் வாசிப்பது கிடையாது என்பது மிகவும் சிறப்பு.
மல்லாரி: இறைவழிபாட்டிற்கு முக்கிய
அங்கம் பெரும் இசையில் நாதஸ்வரம், தவில், ஒத்து, தாளம் ஆகியவை
ஒருங்கே இணைந்து சுவாமி புறப்பாட்டின் போது நாதஸ்வரத்தில் வாசிப்பதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட மல்லாரி, ரக்கி, ஒடக்கூறு, எச்சரிக்கை
போன்ற இசை வகைகளில் மல்லாரி முக்கிய இடம் பெற்று வாசிக்கப்படுகின்றது. திருக்கோயில்களில்
சுவாமி புறப்பாட்டின் போது வாசிக்கப்படும் மல்லாரி, இறைவனின் திருவுலாக்காட்சியை தாளக்
கலைஞர்களின் உறுதுணையுடன் நாதஸ்வரத்தில் தயாராவதைக் கட்டியம் கூறும் ஒரு வகை மல்லாரி
வாசிக்கும் போது நாதஸ்வர தவில் கலைஞர்கள் மல்யுத்தம் புரிவது போல் இசையில் மல்லுக்கு
நிற்கும் காட்சியினால் இவ்வகை இசை மல்லாரி என பெயர் பெற்றிருக்கலாம்.
பஞ்சமுக பரமனின் பாதச்சலங்கையில் ஒலித்து
பவனி வரும் நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம்
இணைந்து ஆலாரிப்புடனே தாளம் தவிலுடன் தழுவி
குழலில் நடனம் செய்யும் மல்லாரி
என்று சொல்லும்
காவியக் கலையிதுவே என மல்லாரி விளக்கச் செய்யுள் ஒன்று கூறுகின்றது.
மல்லாரி
வாசிக்கத்தொடங்கும் முன்பு தவிலில் இறைவனின் பஞ்ச முகத்தைப் போற்றும் வகையில் ஐந்தெண்
கொண்ட கண்ட ஜதியில் வாசிக்கப்படுவது அலாரிப்பு எனப்படும். அலாரிப்பு வாசிக்கப்பட்ட
பிறகே நாதஸ்வரத்தில் கம்பீர நாட்டை ராகத்தில் மல்லாரி வாசிக்கப்படுகின்றது. கம்பீர நாட்டையும் ஐந்து சுரங்களைக் கொண்ட ராகமாகும்.
இறைவன் கம்பீரமாக எழுந்தருளி வருவதை போற்றும் வகையில் கம்பீர நாட்டை ராகத்தில் மல்லாரி
வாசிக்கப்படுகின்றது. பின்னர் ராக மாலிகையாக கம்பீர நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம்
ஆகிய கன பஞ்ச ராகங்களில் வாசிப்பது மரபு. இவ்வைந்து ராகங்களின் சிறப்பாக
பவனி வருங்கால் நாட்டை
பக்திப்பெருக்கால் கௌளை
பரம் ஜோதியே ஆரபி
பந்தத்தை மறக்க வராளி
பரமனைப்பாதி ஸ்ரீ – என்று கூறப்படுகிறது. சுவாமி
பவனி வருவதைக் குறிக்க நாட்டை ராகமும், பரமனை பணிய குழுமியிருக்கும் பக்தர்களின் மனதில்
பக்திரசம் பெருகச்செய்ய கௌளை ராகமும், பரஞ்ஜோதியே இறைவன் என்பதை
உணர்த்த ஆரபி ராகமும், பந்த பாசங்களை மறந்து மனதை ஒரு நிலைப்படுத்த வராளி ராகமும், பரமனின் பாதி பார்வதிதேவி என்பதை உணர்த்த
ஸ்ரீராகமும் சிறப்பு வாய்ந்தவைகளாகும்.
ஐந்து வகை மல்லாரி இசை: திருமஞ்சனம் எடுத்து வரும் போது வாசிப்பது
தீர்த்த மல்லாரி. நிவேதனம்
எடுத்து வரும் போது வாசிப்பது தளிகை மல்லாரி, பூர்ண கும்பம் எடுத்து வரும் போது வாசிப்பது கும்ப மல்லாரி, சுவாமி தேருக்கு புறப்படும்
போது வாசிப்பது தேர் மல்லாரி, சுவாமி புறப்பாட்டின் போது வாசிப்பது புறப்பாட்டு மல்லாரி
என மல்லாரி இசை ஐந்து வகைப்பாடு கொண்டுள்ளது.
தியாகராஜ சுவாமியின் புறப்பாட்டின் போது வரிசையாக நாதஸ்வரக் கலைஞர்களும், தவில் கலைஞர்களும் எதிரெதிரே நின்றபடியே வாசிக்கும் அழகு கண்ணுக்கும் காதிற்கும் விருந்து என்பதில்
எந்த ஐயமுமில்லை. நாதஸ்வரத்திற்கே உரிய மல்லாரி தற்போது நாட்டிய நிகழ்ச்சிகளிலும்,
வயலின் முதலிய இசைக் கச்சேரிகளிலும் இடம் பெறுவது இதன் சிறப்பிற்கு சான்று. இனி திருவாரூக்கே
உரித்தான சில சிறப்புகளைப் பற்றிக் காணலாம்
திருப்பாத தரிசனம் தொடரும் . . . .
2 comments:
குடமுழா, சுத்த மத்தளம், பஞ்ச முக வாத்தியம், பார சைவர், பாரி நாயனம், மல்லாரிப்பற்றி தெரிந்து கொண்டேன்.
அருமையான விளக்கம்.
வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி கோமதி அம்மா.
Post a Comment