திருவாரூரின் திருவிழாக்கள்
திருவாரூர்
திருவாதிரைத் திருவிழாவை அப்பரடிகள் கண்டு வணங்கி அதன் சிறப்பை முத்து விதானம் மணிபொன் கவரி
முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப்
பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலைமாலை
விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால்
அது வண்ணம்! என்று ஓர் திருப்பதிகத்தினால் சம்பந்த பெருமானுக்குக்
கூறியருளியிருக்கிறார்கள். அவரது காலத்தில் மிகவும் சிறப்பாக திருவாதிரை விழா கொண்டாடப்பட்டிருக்கின்றது.
திருவாதிரைத் திருப்பாத தரிசனம்: தற்போது திருவாதிரையன்று தியாகராஜப்பெருமான்
தனது இடது பாத தரிசனம் தந்தருளுகின்றார். தனுர் (மார்கழி) மாதம் என்பதால் பத்து நாட்கள்
மாணிக்க வாசக சுவாமிகள் இராஜநாராயண மண்டபம் எழுந்தருளி அறநெறியார்,
நீலோத்பலாம்பாள், மற்றும் வன்மீகநாதர் சன்னதிகளில் திருவெம்பாவை விண்ணப்பிக்கின்றார்.
கல்யாண சுந்தரர், பார்வதி, சுக்கிரவார அம்மன் பக்த காட்சி மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு
தரிசனம் அளித்து பின் இரவு யதாஸ்தானம் திரும்புகின்றனர். ஆருத்ரா தரிசனத்திற்கு அஜபா நடனத்துடன் இராஜ நாராயண
மண்டபம் எழுந்தருகிறார் கமல வசந்த தியாகர், அங்கு அவருக்கு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை
நடைபெறுகின்றது. நள்ளிரவில் மஹா அபிஷேகம் கண்டருளி, அதிகாலையிலிருந்து
திருப்பாத தரிசனம் தந்தருளுகிறார். திருவிளமலில் இருந்து பாத தரிசனம் காண பதஞ்சலி முனிவரும்,
வியாக்ரபாத முனிவரும் திருவாரூர் எழுந்தருளுகின்றனர். அன்று நாள் முழுவதும் திருப்பாத
தரிசனம் காணலாம்.
வசந்த விழா: மகாயோகீஸ்வரராக சிவபெருமான்
திருக்கயிலாயத்தில் தவம் செய்து கொண்டிருந்தார். சிவசக்தி ஐக்கியம் உண்டாகி அதன் மூலம்
ஆணவமாம் சூரர் குலத்தை கருவறுக்கும் தலைமகன் தோன்ற வேண்டி தேவர்கள் அவர் தவத்தை கலைக்க
மன்மதனை வேண்டினர். மன்மதனும் அகங்காரம் கொண்டு, அவர் மேல் தன் பாணத்தை எய்தினான்,
ஆனால் எம்பெருமானின் நெற்றிக் கண்ணால் சாம்பரானான். அதனால் துன்புற்ற இரதிதேவி தன்னுடைய
மாமனாரான திருமால் முன்பு சோமாஸ்கந்தரான தியாகராஜப்பெருமானை பூசித்ததைப் போல தானும்
பெருமானையும், உமையம்மையையும், கந்தனையும் பூசித்தாள். தேவி தன் வரத்தின் படி மன்மதனை
உயிர்ப்பித்து இரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படி அருள் செய்தாள். இரதியும் மன்மதனும்
மகிழ்ந்து பெருமானுக்குப் பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தனர். எனவே இவ்விழா அவன் பெயரால்
வசந்தவிழா என்றழைக்கப்படுகின்றது. ஆருர் பெருமானுக்குரிய திருவிழாக்களுள் வசந்த விழாவே
தலைசிறந்ததாகும்.
இப்பெருவிழாவை
அப்பர் சுவாமிகள் முன்னின்று நடத்துவதாக ஒரு மரபு திருவாரூரில் இன்றும் உண்டு. அது
போலவே தைப்பூச விழாவை திருஞானசம்பந்தர் முன்னின்று நடத்தியதாகவும் மரபு உண்டு. எனவே
ஆரூரில் தைப்பூச விழாவை ஞானசம்பந்தர் விழா என்றும் அழைப்பர். தைப்பூச விழாவின் போது
சம்பந்தர் திருமேனியை எழுந்தருளச் செய்து விக்னேஸ்வரர் ஸ்தம்பத்தினை சண்டிகேசுவரர்
சன்னதியிலும், பிரபா ஸ்தம்பத்தை ஆயிரங்கால்
மண்டபத்தின் வாயிலிலும், ரதஸ்தம்பத்தை தேரடியிலும் நடுகின்றனர். இது ஆழித்தேர் திருவிழாவிற்கு
பூர்வாங்கமாகும்.
இதற்கு பின்
தமிழ்மொழி பண்டாரம், கோயில் கணக்கர், ஆலய சிப்பந்திகள் மற்றும் தியாகரை பூசிக்கும்
நயனார் பெருமான் திருமுன் தேர்த்திருவிழா பற்றிய மடலைப் படிப்பர். அத்திருமுகத்தில்
ஆண்டின் பெயரும் விழாத்தேதியும் இடம் பெற்றிருக்கும். பெருமானே திருவிழாவிற்கு அனைவரையும்
அழைக்கும் திருமுகமாகும் இது. விக்னேஷ்வரர் பூசை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் அங்குரார்ப்பணம். அடுத்து
தியாகேசர் ஆதியில் வைகுண்டத்திலும் பின்னர் அமரர் உலகத்திலும் சில நாட்கள் வாசம் செய்ததால், அனைத்து தெய்வங்களும்,
முப்பத்து முக்கோடி தேவர்களும் பூவுலகத்தோருடன்
ஆழித்தேரோட்டத்தில் கலந்து கொள்வதாக ஐதீகம்.
எனவே துவஜாரோகண நாளன்று திருமண்டபத்தில் அன்னப்பாவாடை விரிக்கப்பட்டு, தியாகருக்கு
அமுது நிவேதனம் செய்த பின், அவர் முன்றிலில் சிறப்புடன் தயாரிக்கப் பெற்ற சர்க்கரை
பொங்கலை தரையில் பரப்பப்பட்டுள்ள நீண்ட வாழை இலைகளில் பரப்பி பாவாடையாக செய்து அதற்குரிய
வழிபாடு செய்து, பிறகு அப்பாவாடை அமுது விழாவிற்கு
வந்துள்ள தேவர்களுக்கும் சிவகணங்களுக்கும்
விநியோகம் செய்யப்படுகின்றது.
அடுத்து
மஹாத்வஜாரோகணம் என்கிற பெரிய கொடியேற்றம் முதல் அப்பர் சுவாமிகள் திருமேனியை உலா வரச்செய்வர்.
அச்சமயம் தியாகப்பெருமான் திருமுன் இராஜநாராயணன் மண்டபத்தில் அப்பர் பெருமான் இத்ததிருவிழாவை
முன்னின்று நடத்துகிறார் என்பதை குறிக்கும் வண்ணம் சிவனடியார்களுக்கு கோவணமும் புதிய
திருவோடும் வழங்கப்படுகின்றது. மறு நாள் கொடியேற்றம்.
ரிஷபம் மற்றும் மங்கலப் பொருட்கள் வரையப்பெற்ற கொடி ஏற்றப்படுகின்றது. அப்போது பாரசைவர்
சுத்தமத்தளம் இசைப்பர். இதன் பின் வேள்விகள் தொடங்கும். முதல் ஏழு நாட்கள் கணபதி, சுப்பிரமணியர்
உற்சவம் நிகழும். இதன் பிறகு மூன்று நாட்கள் பக்தோத்சவம் எனப்படும் மூவர் முதலிகளின்
திருவிழா நடைபெறும். இவ்விழாவில் அதிகாரநந்தி, சண்டிகேசர், அப்பர், சம்பந்தர், சுந்தரர்,
மாணிக்கவாசகர் திருமேனிகள் திருவிழா நடைபெறும். அதனை அடுத்து ஒரு நாள் கால பைரவர் திருவிழா. மறுநாள்
காட்சி கொடுத்த நாயனார் திருவுலா, மறுநாள் சந்திரசேகரர் பட்டம் ஏற்பார்.
திருவாரூர்
திருத்தலத்தில் சிவபெருமான் தியாகராஜராக எழுந்தருளுவதாலும், இராஜாதிராஜ க்ஷத்திரிய
திருக்கோலம் என்பதாலும் இவர் இரத்தின சிம்மாசனத்தில் அன்றி மற்ற வாகனங்களில் எழுந்தருளுவதில்லை.
எனவே இவருக்குரிய திருநாட்களில், பட்டம் பெற்ற சந்திரசேகரர் திருவீதி உலா வந்து அருள்
பாலிக்கின்றார். இப்பட்டம் ஏற்கும் நாளே சந்திரசேகர பட்டோற்சவம் என்றழைக்கப்படுகின்றது.
இவ்விழாவை முசுகுந்த சக்கரவர்த்தி முன்னின்று நிகழ்த்துவதாக ஐதீகம். இவ்வுற்சவத்தில்
சந்திரசேகரர் திருவுலா வரும் போது எட்டு திசைகளிலும் திக்பிரயோக மந்திரங்களும், திக்
பலிகளும் தருவர். ஈசான திக்கில் சந்திரசேகரர் எழுந்தருளும் போது முட்டுக்காரர் தலையில்
பரிவட்டம் கட்டிக்கொண்டு சுத்தமத்தளத்தை தலை மேல் வைத்துக்கொண்டு மத்தளத்தை முழக்குவார்.
இப்படி பூதநிருத்தியமாடிய பின் பட்டம் புனைந்த சந்திரசேகரர் திருவீதிகளில் உலா வந்தருளுவார்.
சந்திரசேகரர் கேடக உற்சவம் ஐந்து நாட்கள் நடைபெறுகின்றது.
ஐந்தாம் நாள் உச்சிக் காலத்தில் வன்மீகநாதருக்கு உச்சிக் காலத்தில் பிரசனார்த்தம் சகஸ்ரகலசாபிஷேக
உற்சவம். 1008 கலசங்கள் வைத்து ஹோமம் செய்து
வெண்ணை சாற்றி அபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.
இதன் மறு நாள் தியாகப்பெருமானின் வசந்த உற்சவம் துவங்குகின்றது. (பங்குனி மாத கார்த்திகை நட்சத்திரத்தில்) பூங்கோயிலின் எட்டு
திக்குக்களிலும் “அஷ்டகொடி விழா” என்னும் கொடியேற்றத்துடன் இத்திருவிழா சிறப்பாக துவங்குகின்றது. அன்று முதல் நாள் பெருமான் சுத்தமத்தள
தாளத்திற்கேற்ப அஜபா நாட்டியமாடி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளுவார். மறு நாள்
இந்திரவிமான உற்சவம். சந்திரசேகரர் இந்திர விமானம், பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனத்திலும்
எழுந்தருளுகின்றார்.
மறு நாள் வீர கண்டயம் இரதத்திற்கு செல்லுதல், திருக்கயிலாய வாகனம், ஆயில்ய
நட்சத்திரத்தில் தியாகப்பெருமான் ஆழித்தேருக்கு எழுந்தருளும் மகாரதாரோகணம்
நிகழ்வுறும். பின்னர் ஆழித்தேரில் ஆரூரர் திருவீதிகளில் ராஜ கம்பீரமாக உலா வந்தருளுகின்றார். ஆழிதேரோட்டம் நிறைவு
செய்த பின் தியாகராஜர் தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பங்குனி உத்திரம்
உதயத்தில் சபாபதி தீர்த்தம், கௌதம தீர்த்தம், மதியம் மூன்று மணி அளவில் சந்திரசேகர
சுவாமி தேவதீர்த்தம் அவபிருதஸ்நானம், இரவு தியாகராஜ சுவாமிக்கு மஹா அபிஷேகம்
மறுநாள் தியாகராஜ சுவாமி பதஞ்சலி, வியாக்ரபாத மகரிஷிகளுக்கு பாத தரிசனம் அருளுதல்.
வசந்த உற்சவ நிறைவாக பக்தகாட்சி உற்சவத்தன்று காலை
பக்தகாட்சி மகாபிஷேகம், இரவு பக்தகாட்சி மகாஉற்சவம்
தியாகேசர் அஜபா நடனமாடியபடி யதாஸ்தானம் எழுந்தருளுகின்றார். இவ்வாறு வசந்த விழா மிகசிறப்பாக திருவாரூரில்
நடிபெறுகிறது.
மூவர் முதலிகள்
காலத்திலும் திருவாரூரில் திருவிழாக்கள் சிறப்பாக நடந்துள்ளது என்பதை பல தேவாரப்பதிகங்களில்
காணலாம். அவற்றுள் ஆனந்த சேந்தனார் திருப்பல்லாண்டில்
குழல் ஒலி
யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பொருள் : வேய்ங்குழல்இசை, யாழின்இசை, கூத்தாடுதலின் ஓசை, துதித்தலின் ஓசை என்பன கூட்டமாகப் பெருகித் திருவிழா நாளில்
நிகழ்த்தப்படும் ஓசையோடுகூடி வானத்தளவும் சென்று பெருகி மிகுகின்ற திருவாரூரில்
இளைய காளையை வாகனமாக உடைய சிவபெருமானுக்குப் பரம்பரை பரம்பரையாக அடிமையாய் அத்தகைய
குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்கின்ற அடியவர் குடும்பங்களில் பிறந்த
பழ அடியாரோடும் கூடி எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக என்று
திருவிழாக்களின் சிறப்பையும், திருவாரூர் அடியார்களின் சிறப்பையும் பாடியுள்ளார். இனி
வசந்தவிழாவின் ஒரு அம்சமான உலகப்புகழ் பெற்ற
ஆழிதிருத்தேரோட்டத்தைப் பற்றிக் சற்று விரிவாகக்
காணலாம்.
ஆழித்திருத்தேர்: திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு,
மன்னார்குடி மதிலழகு, வேதாரண்யம் விளக்கழகு என்பது பழமொழி. அத்தகைய அழகுடையது திருவாரூர்த்
தேர். தமிழகத்திலுள்ளச் ஆலயங்களிலும் திருவாரூரின் தேரே மிகப்பெரியதாகும். இதனால் இத்தேரை
“ஆழித்தேர்” என்று அழைக்கின்றனர். 'ஆழி' என்பது சக்கரமாகும். மனுநீதிசோழன் தன்
மகன் கன்றைக் கொன்றதால், மகனையே தன் தேர்க்காலில் இட்டுக்
கொன்று நீதியைக் காத்ததால் இத்தேர் திருவிழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு
வருகிறது.
தியாகேசரின் முகுகுந்த சகஸ்ரநாமத்தில்
ரதப்பிரியன் – தேரில் உலா செல்ல விருப்பமுள்ளவர், பூமிதரன் - திரிபுரங்களை எரித்த அந்நாளில்
பூமியை தேராகக் கொண்டவர், கலாரதன்- 64 கலைகளையே இரதமாகப் பெற்றவர், சதார சக்ர சம்யுக்த ரதோகரன சோபனன்
– எப்போதும் ஒழிவின்றி ஓடிக்கொண்டிருக்கும் மேலான தேரில் உலா வரும் மங்கல சொரூபன் என்ற
பல நாமாக்கள் தியாகேசர் தேரில் உலா வரும் பாங்கைக் குறிப்பிடுகின்றன. குமரகுருபரரும்
தியாகேசனை “தேரூர்ந்த செல்வத்தியாகனே ஆரூர
வீதிவிடங்கா” என்று போற்றிப் பாடுகின்றார்.
பொதுவாக இறைவன் தேரில் வலம் வருவதை அருளல் என்பர். ஆனால் ஆருரில் ஆழித்தேரோட்டம் அழித்தல் என்னும்
சம்காரத்தை உணர்த்துகின்றது. தாரகாட்சன், வித்யுன்மாலி, வாணாசுரன் என்ற மூன்று
அசுரர்கள் பல்நெடுங்காலம் தவம் செய்து வெள்ளிக்கோட்டை, இரும்புக்கோட்டை, பித்தளைக்கோட்டை
ஆகிய அரண்மனைகளை பரிசாகப்பெற்றனர். ஆணவத்தால் மூவரும் தாம் பெற்ற கோட்டைகளுடன் பறந்து
சென்று பல நகரங்களையும் அழித்து வந்தனர். முனிவரும், தேவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
போரிட தேர் தயாரானது. பூமி தேர் பீடமானது, நந்தியும், முகுந்தனும் அச்சாக உருமாறினர்,
அஷ்டதிக் பாலகர்களும், சூரிய சந்திரர்களும் பத்து சக்கரங்களாயினர். ஆத்ம தத்துவம்,
வித்யா தத்துவம், சிவ தத்துவம் மூன்றும் தேர்த்தட்டுகளாயின. 64 கலைகளும் விதான கால்களாக
மாறின, ஏழு மேல் உலகங்களும் தேரின் விதான கூரையாக மாறின. நால் வேதங்கள் குதிரைகளாயின,
சாரதியாக பிரம்மன் அமர்ந்தார், பெருமானுக்குத் துணையாக சூலினி துர்க்கை சென்றாள். தக்க
தருணத்தில் மேருவை வில்லாக வளைத்து, வாசுகியை நாணாக்கி, ஏழு கடலையும் அம்புராதூணியாக
முதுகில் அணிந்து தேரில் தியாகேசப்பெருமான் ஆரோகணித்தார்.
அரக்கர் மூவரும் தாம் பெற்ற வரங்களினால் வெற்றி உறுதியென கோட்டைகளுடன்
பறந்து வந்து விண்ணதிர சிரித்தனர். பெருமானின் தேரின் உறுப்புகளான இந்திராதி தேவர்கள்
கர்வம் கொண்டனர். இறைவன் தேரிலிருந்து இறங்கி தனித்து நின்றார். கோட்டைகளில் இருந்து
கொண்டு கொக்கரித்த அசுரர்களை பார்த்து புன்முறுவல் பூத்தார். மூன்று கோட்டைகளும் எரிந்து
சாம்பலாயின.
தவவலிமையின் செருக்கால் உதித்த அரக்கர்களின் ஆணவமும், தேவர்கள்
மனத்தில் உதித்த ஆணவமும், ஆருரனின் அரும்பும் புன்னகையால் அழிந்தொழிந்தன. இப்புராண
அடிப்படையே ஆழித்தேர் திருவிழாவாகும்.
ஆணவம் ஒழிந்த மூன்று அரக்கர்களில் தாரகாட்சன், வித்யுன் மாலி
ஆகிய இருவர் ஐயனின் கருணையினால் ஐயனின் வாயில் காவலன் ஆயினர், வாணாசுரன் ஐயன் ஆடுகின்ற
ஆடலுக்கு மணி முழவம் முழக்கும் கலைஞன் ஆயினான்.
முப்புரம் என்பது மும்மலங்கள் என்பது சித்தாந்தம். “முப்புரமாவது மும்மலக் காரியம் அப்புரம் எய்தமை யாரரிவாரே”
– என்பது திருமூலர் வாக்கு. இவ்வாறு முப்புரங்களை எரித்ததை உணர்த்தும் வகையில் தியாகேசர்
ஆழித்தேரோட்டம் கண்டருளுகின்றார். ஈசனைத் தேரில் அலங்கரித்து பவனி வரச்செய்வதால் அவரது
திருப்பார்வையால் மும்மலம் அழியும், மழை பெய்து நாடு வளம் பெறும். ஊர் செழிக்கும்,
இத்தேரை நாம் ஒன்று கூடி இழுப்பதால் ஒற்றுமை உணர்வு ஓங்கும். உயர்வு தாழ்வு என்ற பேதம்
ஒழியும், மனம் மகிழ்வுறும்.
வீதி விடங்கர் என்று சிறப்பு பெயர் கொண்ட தியாகேசர், மாட வீதிகளில் ஆரோகணித்து வர வேண்டும் என விரும்பிய, மன்னன் விக்கிரம சோழன் அகல விதிகளில் எழிலாக பவனி வர ஆழித் தேர் என்ற பெரிய தேரை ( எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் ) உருவாக்கித் தந்தான். இத்தேர் அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி பிரம்மாண்டமாகவே உள்ளது. மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும். தேர்களை நடமாடும் கோவிலாகக் கருதலாம். வாருங்கள் இனி ஆழித்தேரோட்டத்தைப் பற்றிய சில சுவையான தகவல்களைக் காணலாம்.
போழொத்த வெண்மதியஞ்சூடிப் பொலிந்திலங்கு
வேழத்துரி போர்த்தான் வெள் வளையாள் தான் வெருவ
ஊழித் தீயன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர்
ஆழித்தேர்
வித்தகனே நான் கண்டது ஆரூரே - என்று திருநாவுக்கரசர் பாடுகிறார். அவர் காலம்
7 ஆம்
நூற்றாண்டு. இதன்மூலம் அதற்கு முன்பே தேர்த்திருவிழா
நடந்து வருவதை அறியலாம்.
1748இல் தேர்த் திருவிழா
நடைபெற்றதற்கான குறிப்பு தஞ்சை அரண்மனை சரஸ்வதி மகால் நூலக மேயடி ஆவணம் கூறுகிறது.
1765ஆம் ஆண்டு
தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா, திருவாரூர்
தேர் விழாவுக்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
பல நூற்றாண்டுகள்
வெற்றிகரமாக நடத்தப்பட்ட தேரோட்டத்துக்கு 1926ம்
ஆண்டில் ஒரு பெரும்
சோதனை ஏற்பட்டது. அவ்வாண்டில் தேர்
ஓடிக் கொண்டிருக்கும்போது, அது
பெரும் தீ விபத்துக்குள்ளானது.
கொழுந்துவிட்டு எரியும் தீக்கு
அஞ்சி, மேலே தேர்
தட்டில் இருந்த பலர்
அதிலிருந்து கீழே குதித்தனர்.
ஆனால் ஆழித் தேரின் தலைமைக் கொத்தனாரான திரு முத்து கொத்தனார் என்பவர், மற்றவர்களைப் போல் தன் உயிரைக் காத்துக்கொள்ள முயற்சிக்காமல், தியாகேசர் திருமேனியை பாதுகாக்க முயன்றார். சமயோசிதமாக அவர் இறைத் திருமேனியை அசுர வேகத்துடன் தன் இருகரங்களால் பீடத்துடன் தள்ளிக்கொண்டு போய் கைக்கு கிடைத்த கயிறுகளைக் கொண்டு கட்டி கீழே தள்ளிவிட்டார். மேலே என்ன நடக்கிறது என்று திகிலோடு பார்த்துக் கொண்டிருந்த பக்தர்கள் பலர் கூடி இறைத் திருமேனியை, கீழே விழாமல் தாங்கிப் பிடித்து ஆலயத்திற்குள் கொண்டு சென்றனர். பிறகு
பக்தர்கள் நிதி திரட்டி இரண்டாண்டுகள் தீவிர முயற்சி செய்து புதிய தேரை உருவாக்கினர்
அப்புதிய தேர் 1930ல் ஓடத் தொடங்கியது. இத்தேர், இன்று வரை ஆரூர் வீதிகளில் ஆண்டு தோறும் பவனி வருகிறது. 1930 முதல் 1948 வரை தடையேயேதுமின்றி வீதி உலா வந்த தேருக்கு மீண்டும் சோதனை வந்தது. ஏதோ காரணத்தால் தேரோட்டம் நின்றுவிட்டது.
பிறகு 1970ம் ஆண்டில், நவீன தொழில்நுட்பத்தை பயன் படுத்தி, பாரத் மிகு மின் நிறுவனத்தினர் மூலம் இரண்டு பெரிய இரும்பு அச்சுகள், நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்டு தேர் புதுப்பிக்கப்பட்டது. அப்போது ஹைட்ராலிக் பிரேக்களும்
அமைக்கப்பட்டது, அது முதல், தொடர்ச்சியாக சில ஆண்டுகள் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. எதனாலோ மீண்டும் தேரோட்டம் தடைபட்டது.
மீண்டும் 1989ம் ஆண்டு அரசு எடுத்த பலத்த முயற்சியால் வெகு சிறப்பாக தேரோட்டம் தொடர்ந்தது. மீண்டும் தடை ஏற்பட, 2010 தேர் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தேரோட்டம் இப்போது சிறப்பாக நடைபெறுகின்றது. மிகுந்த எடை கொண்ட
தேர் என்பதால் தேரைத் தள்ள தற்போது புல்டோசர் பயன்படுத்தப்படுகிறது திருப்பங்களில்
இரும்பு பலகைகளில் கிரீஸ் தடவி, ஹைட்ராலிக் பிரேக்கின் உதவியுடன் அனாசயமாக
திருப்பி விடுகின்றனர். முற்காலத்தில் மனித சக்தியால் மட்டுமே ஓடியதால் தேர் நிலை
வந்து சேர மூன்று, நான்கு நாட்கள் பிடித்தன, அப்போது தியாகராஜ சுவாமிக்குரிய
பூசைகள் தேரிலேயே நடைபெற்றன. ஆனால் இன்று ஒரே நாளில் ஆழித்தேர் நிலைக்கு வந்து
விடுகிறது.
ஆழித்தேரின் அமைப்பு: தேரின் அழகு அதன் பீடங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் தனி சிறப்புடையதாகும். தேரின்
கட்டமைப்பு எண் கோண வடிவில் உள்ளது. ஆழித்தேரின் அமைப்பு ஒவ்வொரு புராண தத்துவத்தை
விளக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பிரபஞ்ச வடிவான தேர், சரீரமயமான தேர். ஆசியாவின் இரண்டாவது உயரமான தேர்
என்ற சிறப்பும் உண்டு. தேரின் எடை ஏறத்தாழ 300 டன்களாகும், தேரின் அடிபீடம் 30 அடி உயரம். அலங்கரிக்கப்பட்ட
பின் உயரம் 115 அடிகள், சக்கரங்கள் 4, அதன் விட்டம் 9 அடிகள், 400 அடி நீளமும் 20 அங்குல சுற்றளவும் உடைய
வடங்கள் 6, 20 பட்டைகள் கொண்டதாக அலங்கரிக்கப்படுகின்றது.
30 கிலோ முதல் 45 கிலோ வரை எடையுள்ள 450 முட்டுக்கட்டைகள், பரப்புக்
கட்டைகள் சுமார் 750 வரை பயன்படுத்தப்படுகின்றது. இதைத் தவிர திருப்பங்களில் பெரிய
இரும்புத்தகடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய குதிரை -4, பாம்பு யாளம்-1, யாளம்-2, ரிஷபம்–8, பிரம்மா-1, துவார பாலகர்–2, கமாய்கால்–2,
மேல்கிராதி-4, கீழ்கிராதி-2, பெரிய கத்தி கேடயம்-2, பூக்குடம்-16, ராஜாராணி–2, கிழவன் கிழவி-2, சுருட்டி-4, இலை-8, பின் பக்கம் கமாய்கால்-6, அம்பராத்தோணி-2 பொம்மைகள் அனைத்தும் தேரின்
முன்பகுதி சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு குதிரைகள், பாம்பு யாளம் இவற்றின் நீளம் 30 அடியாகும். இப்பொம்மைகள் எல்லாம் காகிதக்கூழால் செய்யப்படுகின்றன
இத்தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59மீ விட்டம் கொண்டவை.
ஆழித்தேர் நான்கு நிலைகளையும், பூதப்பார்,
சிறு உறுதலம், பெரிய உறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என ஏழு
அடுக்குகளைக் கொண்டது. இத்தேரின் நான்காவது நிலையில் தியாகராஜ
சுவாமி வீற்றிருப்பார். அப்பீடம் மட்டுமே 31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது. இத்தேரில் ஒரு சுரங்க வழி உள்ளதும் ஒரு சிறப்பாகும்.
முற்காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்கப் பயன்பட்டது. அப்போதெல்லாம்
தேர் நிலைக்கு வர வாரக்கணக்காகுமாம். பின்னர் அது படிப்படியாக
குறைந்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது இரும்பு சக்கரங்கள் மற்றும் ஹைட்ராலிக்
பிரேக் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதாலும், இயந்திரங்கள்
மற்றும் தொழில் நுட்பத்தின் உதவியாலும் ஒரே நாளில் நிலைக்கு வந்து விடுகின்றது.
திருவாரூர் ஆழித்தேர்
தத்துவம் நிறை அமைப்பை பறைசாற்றும் அளவில்
அமைக்கப்பட்டுள்ளது. தேரில் காணப்படும் 4 குதிரைகள் நான்கு வேதங்களையும், ஆறு வடங்கள் 6 அங்கங்களையும் , தேரின் மேல் பகுதியில் இடம் பெறும் சட்டங்கள் .கயிற்றின் நாண்கள் ஆகியவை 64 கலைகளையும், 96 தத்துவங்களையும் குறிப்பதாக ஐதீகம். ஆழித்தேரில் சிவனின்
திருவிளையாடல்களைக் கூறும் 600க்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. இவ்வளவு பிரம்மாண்டமான ஆழித்தேர் பூரண
அலங்காரத்துடன் தியாகராஜ சுவாமியுடன் ஆடி ஆடி அசைந்து 150 மணிகள் ஒலிக்க உலா வரும் அழகே தனி.
அவ்வழகைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஆழித்தேரோட்டத்தின் போது
திருவாரூரில் குவிகின்றனர். குறிப்பாக கமலாலயக்குளம், மேற்கு இராஜகோபுரம் அருகே
வரும் போது மூன்றையும் ஒன்றாக தரிசிப்பவர்கள் பேறு பெற்றோர் என்பதில் எந்த ஐயமும்
தேவையில்லை.
இத்தேரில் தியாகேசர் பவனி வரும் அழகை அப்பர் பெருமான் இவ்வாறு போற்றுகின்றனர். மாயப்போர் வல்லானை, மாலை தாழ் மார்பானை, ஆடுந்தீக்கூத்தானை ஆழித்தேர்
வித்தகனை நான் கண்ட ஆரூரே..! என்று கூறி மயங்கி நாடிக் காணமாட்டாத தழலாய நம்பனை
திருவாரூர் அம்மானை ஆரூர் வீதியில் என்று பாடுவார். தேவாரத்தில் சிறப்பிக்கப்பட்ட தேராகும்
ஆழித்தேர். தியாகராஜப்பெருமானுக்குரிய முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனையில் ஆழித்தேரின்
அமைப்பும், அதில் பெருமான் உலா வரும் அழகும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
தேரை பிரபஞ்ச வடிமாக கூறும் போது உயிர், உயிரற்றவை, இடம், காலம்
ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் வடிவமாகக் கொள்ளலாம். தேரின் கீழ்த்தட்டுகள்
பூமிக்கு கீழே உள்ள பாதாள லோகங்களைக் குறிக்கின்றன. மையப்பகுதி பூமண்டலம், மேலுள்ள
விதானப்பகுதி மேல் உலகங்கள். இதன் ஆறு சக்கரங்களும் ஆறு பருவங்கள். இதனை இயக்கும் சாரதி
பிரம்ம தேவன், அவனுள் இருந்து முதலும் முடிவுமற்ற
காலத்தை வழி நடத்திபவர் தியாகராஜர்,
நான்கு குதிரைகளும் நான்கு வேதங்கள் மற்றும் அதன் குறிக்கோளான அறம், பொருள்,
இன்பம், வீடு ஆகியவற்றை குறிக்கின்றது. தேரை இழுக்க பயன்படும் ஆறு வடங்கள் ஆறு சாத்திரங்கள்,
தேரின் மையத்தில் அமைந்துள்ள நான்கு வாயில்கள் நான்கு வேதங்களின் மகா வாக்கியங்கள்.
இதன் 64 கால்களும்
64 கலா தத்துவங்கள், தத்துவம்
கடந்து சிவலோகத்தில் சாலோக, சாரூப சாமீப சாயுச்சிய
பதவிகளைக் கடந்து சிவனோடு ஒன்றுதலை கலசம் உணர்த்துகின்றது.
ஒற்றைக்குடை சிவத்தொடு இரண்டறக்கலந்து பரவெளியில் ஒன்றிவிட்ட நிலையைக் குறிக்கும்.
தேரை சரீர வடிவமாகவும் காணலாம் அப்போது, உட்சக்கரங்கள் இரண்டும்
சூரிய, சந்திர நாடிகளான இடகலை, பிங்கலை நாடிகளைக் குறிக்கும். இவற்றை இணைக்கும் மையக்
கட்டையே நாடி சக்கரமாகும். வெளி சக்கரத்தின் மையக்கட்டைகள் இரண்டும் சிதக்னி குண்டத்தின்
சிவசக்தி அம்சங்கள். வெளி நான்கு சக்கரங்களும் மூலாதாரத்தின் நான்கு இதழ்கள். இவ்விதழ்களின்
விரிவால் இடகலை பிங்கலை செயல்பட்டுக் குண்டலினி
சக்தி மேலெழும்புகிறது. தேரின் அடிப்பகுதி ஆன்ம தத்துவம், நடுப்பகுதி வித்யா தத்துவம்,
மேல் பாகம் சிவத்தத்துவம். வித்யா தத்துவத்தில் 64 கலைகளும் 64 கால்களாக நிற்கின்றன. இதன் நடுவே இருதயம் என்ற குகையாகிய தகராலயத்தில் யோகராஜராக
தியாகேசப்பெருமான் வீற்றிருக்கின்றார். யோக வித்தையையும், தியாகராஜ இரகசியத்தையும்
அறிந்தவர் சிந்தனையின் ஓட்டத்தை அடக்கி சிதாகாசத்தை அடைந்து சகஸ்ர கமலத்தில் விளங்கும்
பரசிவத்துடன் கலந்து பேரின்பமடைகிறார்.
பஞ்ச மூர்த்திகளுக்குமாக ஐந்து தேர்கள் உள்ளன. விநாயகர், கமலாம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்
தேர்கள் பரமேசனின் தேர் நாளுக்கு முன்னதாகவே பவனி வரச்செய்து பின்னரே ஆழித்தேரை இழுப்பது வழக்கமாக
உள்ளது. ஆழித்தேர் பற்றிய குறிப்புகள் மூவர் தேவாரம், பெரிய புராணம் மற்றும் கல்வெட்டுகளில் உள்ளன.
பக்தகாட்சி: திருவாரூரை ஆண்டுகொண்டிருக்கும் தியாகேச பெருமானை ஒருமுறை
குபேரன் தனது நாடான குபேரபுரியை ஆள வருமாறு பணிந்தான் குபேரபுரி செல்ல மனமில்லாமல்
திருவாரூரிலேயே இருக்க சித்தமானார் தியாகேச பெருமான். குபேரன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, நான் குபேரபுரியை ஆள வர வேண்டுமெனில் என்னுடைய நடனத்தின்
ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொன் அளிக்கவேண்டும் என தியாகேசர் குபேரனிடம் கேட்க அவ்வாறே
அளிப்பதாக குபேரன் ஒப்புக்கொண்டான்.
முதலாம் பிரகாரத்தில் தியாகேசர் திருநடனம் புரிந்தபோது, ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொன் என குபேரன் தான் அணிந்திருந்த
மொத்த நகைகளையும் அளிக்க நேரிட்டு பின் தன் மனைவி அணிந்திருந்த நகைகளையும்
அளித்தான் .
இரண்டாம் பிரகாரத்திற்கு சென்ற போது தனது சேனைகள் அணிந்திருந்த அனைத்து
பொன்களையும் பொருட்களையும் அளிக்க வேண்டியதாயிற்று .
மூன்றாம் பிரகாரத்திற்கு சென்று ஆரூர் பக்தர்களுக்கு நடனத்துடன் காட்சி
அளித்துவிட்டு குபேரபுரி செல்லலாம் என தியாகேசர் குபேரனிடம் கூற குபேரனும் அவ்வாறே
ஆகட்டும் என கூறினான். ஆனால் தியாகேசர் நீண்ட நெடியதும், காணக்கிடைக்காததும், கண்கொள்ளாததும், மெய்சிலிர்க்க வைப்பதும், அதிர்வலைகளை ஏற்படுத்துவதும், நொடிக்கு ஓராயிரம் அடிகளுடன் கூடியதுமாகிய தனது நடனத்துடன்
பக்தர்களுக்கு காட்சியளிக்க, தியாகேசனின் அடுத்த அடிக்கு கொடுப்பதற்கு பொன், பொருள் ஏதும் இல்லாமல் குபேரபுரியின் செல்வக் கிடங்கு
காலியாகி குபேரன் செய்வதறியாது திகைத்து நின்றான்.
உடனே தியாகேசபெருமான் தோல்வியுற்ற *குபேரனிடம் இருந்து பெற்ற பொன், பொருள் என அனைத்தையும் பல மடங்காக்கி குபேரனிடம் அளித்து, குபேரபுரி சென்று நல்லாட்சி புரிந்திடுக என ஆசி வழங்கி
அனுப்பினார். பின் “ஆரூரில் இருப்பதே இன்பம்” என கூறி யதாஸ்தானம் எழுந்தருளினார்.
இச்சம்பவத்தினை அனைவரும் அறிய வேண்டும் வகையில் ஆண்டுதோறும் தேரோட்டம்
முடிந்து, அபிஷேகம் கண்டருளி பாத தரிசனம் அளித்து தியாகேசர் யதாஸ்தானம் செல்லும் முன் பக்தகாட்சி
உற்சவம் ஆரூரில் சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் குபேரர்களாக இருந்து திருநடனத்துடன் காட்சி கொடுக்கும் தியாகேசனுக்கு
பக்தியுடன் மலர் தூவி அளிக்கின்ற புஷ்பத்தில் பொன், வெள்ளி சேர்த்து அளிக்கிறார்கள் அவ்வாறு அளிக்கப்படும்
பொன்னையும், பொருளையும்
தியாகேசப் பெருமான் பலமடங்காக்கி
பக்தர்களுக்கே திரும்ப அளித்து அருள் பாலிப்பார் என்பது ஐதீகம். இது வரை வசந்த விழாவின் சிறப்புகளைப்
பற்றி கண்டோம் அடுத்து இத்தலத்தில் நடைபெறும் மற்ற திருவிழாக்களைப் பற்றிக்காண்போம்.
தெப்பத்திருவிழா சிறப்பு: பங்குனி உத்திரத்தன்று கமலாலயத்தில் பெரிய அழகியத் தெப்பத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தெப்பத்தில் கல்யாண சுந்தரர் மூன்று முறை பவனி வருகின்றார். தெப்பம் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு
இத்திருவிழா ஆண்டுதோறும் 3 நாட்கள் இரவில் நடைபெறும். தெப்பத்தில் 500 முதல் 600 பக்தர்கள் அமரலாம். தெப்பத்தில்
இசைக்கச்சேரிகள், நாதஸ்வரக் கச்சேரிகள் இரவு தொடங்கி விடிய விடிய 3 நாளும் தொடர்ச்சியாக நடைபெறும்.
மெய்யன்பர்களின் கண்ணுக்கும் காதுக்கும் மகிழச்சி வழங்கும் தெப்போற்சவம் அவசியம் காண
வேண்டிய ஒன்றாகும்.
ஆடிப்பூர
விழா: கமலாம்பாளுக்கு ஆடிப்பூர விழா சிறப்பாக
நடைபெறுகின்றது. கொடியேற்றத்துடன் பத்து நாள் உற்சவமாக கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.
தினமும் மாலையில் கேடயம், பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், திருக்கயிலாய
வாகனம் என்று மனோன்மணியம்மன் வாகன சேவை தந்தருளுகின்றாள். 9ம் திருநாளன்று ஆழித்தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் மாட வீதி
வலம் வந்து அருளுகின்றாள். ஒன்பதாம் திருநாள் இரதாரோகணம் கமலாம்பாள் தேரோட்டம் கண்டருளுகிறாள்.
ஆழித்தேர்
போலவே அம்மன் தேரும் அலங்கரிக்கப்படுகின்றது. மதியம் தேரில் எழுந்தருளுகின்றாள் கமலாம்பாள்,
மாலை வடம் பிடிக்கப்படுகின்றது, இரவு தேரோட்டம், மின் விளக்கு அலங்காரத்தில், பக்தர்களின்
ஆரூரா! கமலாம்பா! என்ற கோஷத்துடன் தேரோட்டத்தைக் காண்பதே ஒரு அருமையான அனுபவம். தினமும் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை அம்மனுக்கு நடக்கின்றது. ஆடிப்பூரத்தன்று
காலை அம்பாள் தீர்த்தம் கொடுக்கின்றாள். மாலை வெள்ளை சார்த்தல், அம்மனுக்கு வளையல்
அலங்காரம் மற்றும் ஆடிப்பூரம் கழித்தல், மறு நாள் சைத்ரோபசார விடையாற்றியுடன் ஆடிப்பூர விழா நிறைவடைகின்றது.
நிறைபணி திருவிழா: புரட்டாசி மாதம் பௌர்ணமியன்று
மாலை தேவேந்திர பூஜை என்றும் தேவேந்திர சாயரட்சை
என்றும் அழைக்கப்படும் நிறைபணி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
அனைத்து தலங்களிலும் எம்பெருமானின் திருமேனிக்கு மலர் மாலைகளையும், மலர்ச்சரங்களையும்
சூட்டுதலே வழக்கம். ஆனால் தியாகருக்குரிய சிறப்பு திருப்பணி சாத்துதலாகும். இங்கு மல்லிகை,
முல்லை, செவ்வந்தி, பவளமல்லி போன்ற சுகந்த மலர்களை மாலையாகவோ சரமாகவோ தொடுக்காமல்,
தியாகப்பெருமான் மீது மலர்களைத் தூவித் தூவி அலங்கரிக்கும் முறையே பணி சாத்துதலாகும்.
பணி சாத்துதலுக்கு என்றே ஒரு தனி விழா நடைபெறுகின்றது. இதனை “நிறைபணி உற்சவம்” என்றழைப்பர்.
புரட்டாசி மாதம் பூரட்டாதி நாளன்று செங்கழுநீர் ஓடையிலிருந்து செங்கழுநீர்ப் பூக்கள்
கொய்யப்பெற்று அவற்றைப் பல்லக்கில் வைத்து திருவாரூரின் பவனி வரச்செய்து, தியாகப்பெருமான்
திருமுன்னர் கொண்டு சென்று பூஜைகள் செய்து பணி சார்த்தப்பெறும். அப்போது இத்திருக்கோயிலின்
மரபுவழி மாலை தொடுப்பவரான “திருமாலைக்கட்டி” என்ற ஊழியர் கோயில் மரியாதையான பரிவட்டம்
கட்டி கௌரவிக்கப்படுவார். இதுவே நிறைபணி உற்சவமாகும்.thi
தியாகராஜர், பரவையார்- சுந்தரர்
தம்பிரான் தோழர்
ஆடி சுவாதி சுந்தரர் குரு பூசை: வன்தொண்டர் திருக்கயிலாயம் சென்ற தினமான ஆடி சுவாதி திருவாரூரில்
சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. காலை நம்பி ஆரூரர் பரவை நாச்சியார் திருக்கல்யாணம்,
இரவு அறுபத்து மூன்று நாயன்மார்களுடன், 63 நாதஸ்வரங்களுடன் மாடவீதி உலா வருகின்றார், மாலை வெள்ளை யானை
வாகனத்தில் சுந்தரர் திருக்கயிலாயம் செல்லும் உற்சவம் என்று சுந்தரர் குரு பூசை திருவாரூரில்
சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
மாசி நெல்
அட்டித்தரும் விழா: திருவாரூர்
திருவீதிகளில் மாசி உத்திரத்தன்று ஈசன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள பூதகணங்களைப் போல
வேடமணிந்தவர்கள் உடன் வருவர். அன்று பரவைக்காக திருக்கோளிலி எம்பெருமானிடம் சுந்தரர்
பெற்ற நெல்லை பூத கணங்கள் இரவில் கொண்டு வந்து
திருவாரூரில் சேர்த்த விழா. அன்றைய தினம் பூத கண வேடமிட்டவர்களிடம் நெல் கோட்டையைக்
கொடுத்து வாங்கிக் கொள்ள தான்ய விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். இது வரை திருவாரூரில்
சிறப்பாக நடைபெறும் சில திருவிழாக்களைப் பற்றிக்
கண்டோம் வாருங்கள் இனி ஆரூருக்கே உரிய சிறப்பு இசைக் கருவிகள் என்ன என்று காணலாம்.
திருப்பாத தரிசனம் தொடரும் . . . . .
1 comment:
அருமையான ஒரு தகவல் தொகுப்பு
http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html
Post a Comment