அன்பர்கள் அனைவருக்கும் இனிய சார்வரி வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இறையருளால் அனைவரும் நோய் நீங்கி சுகமாக வாழ பிரார்த்திக்கின்றேன்.
நீலோத்பலாம்பாள் சன்னதியின் மகாமண்டபத்தில்
அற்புதமான கண்ணுக்கு விருந்தாக பல வர்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றுள் தியாகராஜப்பெருமான் நடத்திய திருவிளையாடல்கள்
364ல் இரண்டு திருவிளையாடல்கள் சித்திரங்களாக
இடம் பெற்றுள்ளன எனவே அவற்றை சற்று விரிவாகக் காணலாம். முதலாவதாக மாணிக்க நாச்சியர் சரிதம்.
நாயகனின் பெண்பால் நாச்சி. நாச்சு என்றால்
நாட்டியம் எனவே நாச்சியார் என்றால் ஆடல் மகள் என்றோர் பொருளும் உண்டு. தமிழகத்து கணிகையர்கள்
தங்கள் பெயருடன் இப்பதத்தை சேர்த்துக் கொண்டனர். இவர்கள் சமயப்பணியில் சரித்திரம் படைத்தவர்கள்.
அரசவைக்கு அணிகலனாக விளங்கியவர்கள். ஆலய பூசையில் அங்கம் வகித்து ஆண்டவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டவர்கள்.
பரமனுக்கு காணிக்கையான பவித்திரமானவர்கள் என்பதால் பரத்தையர் என்றழைக்கப்பட்டார்கள்.
“கோதில் குலத்து அரன் தன்
கோயில் பிணாப் பிள்ளைகாள்” என்று மாணிக்கவாசகர் பாடிய இவர்கள் கல்வெட்டுகளில் பதியிலார், தளியிலார், தளிச்சேரிப்பெண்டுகள் என்றெல்லாம் குறிக்கப்பட்டுள்ளனர். பரமனைத் தலைவனாகக்
கொண்டவர்கள் என்பதால் பதியிலார். கோயிலை இல்லமாகக் கொண்டவர்கள் என்பதால் தளியிலார்.
கோயிலை ஒட்டிய வளாகத்தில் வாழ்ந்தவர்கள் ஆதலினார்
தளிச்சேரி பெண்டுகளாயினர்.
சோழ அரசர்கள் இவர்களில் சிறந்தவர்களை
தலைக்கோலி பட்டம் கொடுத்து சிறப்பித்தனர். சிவபாத சேகரன் இராஜராஜ சோழன் தென்திசை மேரு என உலகமே வியந்து போற்ரும் தஞ்சை பெருங்கோயிலைக்
எடுத்த போது அங்கு இயல், இசை, கூத்து என்ற அனைத்துக் கலைகளும் வளர ஆக்கம் அளித்தான்.
அதை கல்வெட்டிலும் எழுதினான். இப்பெருமகன் 400க்கும் மேற்பட்ட பல்வேறு ஊர்களில் பணிபுரியும்
ஆடல் மகளிர்களில் தலை சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து தஞ்சை பெரிய கோயிலில் நடனமாட நியமித்தான்
அவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்தான் அவர்களுக்கு ஊழியம் செய்ய பணீயாளர்களையும்
நியமித்தான். அக்காலத்தில் இவ்வாறு சிறப்புடன் விளங்கினர் ஆடல் மகளிர்.
இவர்கள் என்றும் விதவையாவதில்லை. இவள்
தாலி புனிதமானது. சிவாலயங்களில் இவர்கள் தேவாரத் திருப்பதிகங்களுக்கு அபிநயம் பிடித்து
ஆடினர். திருவாரூரில் இருந்த பதியிலார் மரபில்
மாணிக்க நாச்சியார் பிறந்தார். இவர் வளர வளர, தியாகேசப்பெருமான் மேல் இவர் கொண்ட பக்தியும்
வளர்ந்தது.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே
என்று அப்பர் பெருமான் பாடியது போல
இவர் திருவாரூர்ப் பெருமான் மேல் காதலாகி கண்ணீர் மல்கி பிச்சியாகி வாழ்ந்து வந்தார்.
இவருக்கு ஒரு வித்தியாசமான ஆன்மீக வேட்கை
இருந்தது. அது என்னவென்றால் “எம்கொங்கை நின்னன்பர் அல்லார்
தோள் சேரற்க” என்றபடி சிவனடியாரிடமே அற்றைப் பரிசங்கொள்ள விரும்பினார். ஒரு
நாள் சிவனடியார் யாரும் வராததால் இவர் காத்துக்கொண்டிருந்தார். இவரது மேன்மையை உலகத்தோர்க்கு உணர்த்த திருவுள்ளம்
கொண்ட தியாகேசப்பெருமான் ஒரு நாள் மாலை ஒரு வயோதிக அடியார் கோலத்தில் மாணிக்க நாச்சியார்
இல்லத்திற்கு எழுந்தருளினார். அவரை வரவேற்று தம் குல மரபுப்படி அற்றைப்பரிசம் வேண்டினார்.
வயோதிகரும் தன்னிடம் வேறு எதுவுமில்லை என்று தாம் அணிந்திருந்த கண்டிகையை கழற்றி நாச்சியாருக்கு
அளித்தார்.
நாச்சியாரும் மகிழ்ச்சியுடன் அவரை உபசரிக்க ஆரம்பித்தார். உணவருந்தும் போது விக்கல் வந்து முதியவராக
வந்த இறைவர் இறந்தார் போல வீழ்ந்தார், அவரே எம் கணவராவர் என்று நாச்சியாரும் அவருடன்
உடன் கட்டையேறினார். அப்போது கமலவசந்த தியாகேசர் தன்னுரு காட்டி அவருக்கு சிவபதம் அளித்தார்.
இவரது ஆலயம் இராஜவீதியில் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. தியாகேசர் வயோதிகராக பூமியில்
எழுந்தருளி மாணிக்க நாச்சியாருக்கு அருளிய திறத்தைப் பற்றிக் கண்டோம் அடுத்து சோமாசி
மாற நாயனாருக்கு எவ்வுருவில் வந்து அருள் பாலித்தார் என்ற சரிதத்தைப்
பற்றி அடுத்துக் காணலாம் அன்பர்களே.
திருப்பாத தரிசனம் தொடரும் . . . . .
4 comments:
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
//நாச்சியாரும் மகிழ்ச்சியுடன் அவரை உபசரிக்க ஆரம்பித்தார். உணவருந்தும் போது விக்கல் வந்து முதியவராக வந்த இறைவர் இறந்தார் போல வீழ்ந்தார், அவரே எம் கணவராவர் என்று நாச்சியாரும் அவருடன் உடன் கட்டையேறினார். அப்போது கமலவசந்த தியாகேசர் தன்னுரு காட்டி அவருக்கு சிவபதம் அளித்தார். இவரது ஆலயம் இராஜவீதியில் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. தியாகேசர் வயோதிகராக பூமியில் எழுந்தருளி மாணிக்க நாச்சியாருக்கு அருளிய திறத்தைப் பற்றிக் கண்டோம் அடுத்து சோமாசி மாற நாயனாருக்கு எவ்வுருவில் வந்து அருள் பாலித்தார் என்ற சரிதத்தைப் பற்றி அடுத்துக் காணலாம் அன்பர்களே.//
நாச்சியார் ஆலயம் பார்த்தது இல்லை. கதையும் தெரிந்து கொண்டேன்.
தொடர்கிறேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
தொடருங்கள் கோமதி அம்மா.
மிக்க நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.
Post a Comment