Friday, May 1, 2020

திருப்பாத தரிசனம் - 30

      திருநள்ளாறு – உன்மத்த நடன நக விடங்க செண்பகத் தியாகேசர் - 2







இத்தலத்தின் மற்றொரு பதிவைக் காண இங்கு செல்லவும் :  திருநள்ளார்  -1



திருநள்ளாற்றின் சிறப்புமிகு தீர்த்தங்கள்: ஆதி காலத்தில் திருள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் இருந்தன என்று தலபுராணம் கூறுகின்றது. பிரம்மன், கலைமகள், அன்னப்பறவை, இந்திரன், திசைபாலர் எண்மர் தத்தம் திசைகளில் லிங்கமும் தீர்த்தமும் அமைத்தனர். மேலும் திருமால், காசிபன், வாயு, நளன், அகத்தியன் உருசி, போஜன், பாஞ்சாலன் ஆகியோரும் நள்ளாறரை வழிபட்டுள்ளனர்.  இத்தலத்தின் தீர்த்த நீர் பட்டாலே வினை போம் என்பது  ஐதீகம். 

மஹா விஷ்ணு வழிபட்ட போது அவர் பெயரால் உருவாக்கியது விஷ்ணு தீர்த்தம். பிரம்மனுக்கு விரும்பிய வரத்தை அளித்து சிருஷ்டிகர்த்தாவாக மீண்டும் நியமித்தார் எம்பெருமான். எனவே பிரம்மன் தன் தண்டாயுதத்தால் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு உருவாக்கிய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். இது கோயிலுக்கு நேர் கிழக்கில் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராட பிரம்மபதம் கிட்டும் என்பது ஐதீகம். பிரம்மனோடு கூட நாமகளாம் சரஸ்வதியும் சிவபூஜை செய்து நலம் பல பெற்றாள். சரஸ்வதி(வாணி) தீர்த்தம் அம்மன் சன்னதிக்கு எதிரே மதிலை ஒட்டி அமைந்துள்ளது. இதில் நீராடுபவர்களுக்கு அனைத்து கலை ஞாங்களும் கிட்டும். பேச்சுதிறன் பெற  வாணி தீர்த்தம் ஆடுக என்கிறது தலபுராணம். 

பிரம்மனின் வாகனமான அன்னப்பறவையும் சிவபூஜை செய்து சிறப்புகளை அடைந்தது. ஹம்ஸ தீர்த்தம் ஆலயத்திற்கு வடக்கில் அமைந்துள்ளது. அன்ன தீர்த்தம் பசுக் கொலை பாவமும் தீர்க்கும். ஆவணி பௌர்ணமி மூழ்க குறைகள் நீங்கும்.  இத்தலத்தின் மற்ற தீர்த்தங்கள் தெற்கு மட விளாக குளம் மற்றும் நள தீர்த்தம் ஆகும். நள தீர்த்தத்தில் நீராட சகலவிதமான துன்பங்களும் அனலிடைப்பட்ட மெழுகு போல் மறைந்து விடும். அருகில் நளனுக்காக சிவபெருமான் தன் சூலாயுதத்தால் கங்கையை வரவழைத்த நளகூபம் அமைந்துள்ளது. இதில் யாரும் நீராடுவதில்லை. இறைவன் அபிஷேகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.


பாராய்க் கனலாய் நீராகிப் பகரும் காலாய் வானாகிச்
சீரார் தருப்பை வனமூலம் சிறந்த முளையாய்ச் செழுங்கனியாய்
வேராய் வித்தாய் அடங்காத வெவ்வே ருவாய் உருவாகிப்
பேராய் என்நா வினில்ஊறும் பெம்மான் எனவும் பிறப்பறுமே -  என்று பாடல் பெற்ற இத்தலத்தின் மகிமையைப்பற்றி கூறும் புராணம் ஒன்று தமிழில் உள்ளது.  அதில் உள்ள சில வரலாறுகள். அசுவமேத யாகம் செய்த கலிங்க நாட்டு அரசனைக் காண அந்தணன் ஒருவன் சென்றார். விதி வசத்தால்  அவர்  காத்திருப்பதை அரசன் மறந்துவிட்டான். வெகு நேரம் காத்திருந்த அந்தணர் கோபமுற்று அரசனும் அவனது மனைவி மக்களும் காட்டு யானைகளாக மாற சாபம் கொடுத்தார். மன்னனும், மனைவி மக்களும் காட்டு யானைகளாக  காட்டில் திரிந்து கொண்டிருந்தனர். நாரதமுனிவர் அவர்களை சந்தித்து உண்மை நிலைமையை  உணர்த்தி, சாப விமோசனம் பெற  திருநள்ளாறு செல்ல  பணித்தார் அவர்களும்  திருநள்ளாறு சென்று மாசி மக  நாளில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி  இறைவனை துதித்து  சாப விமோசனம் பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தனர்.

கோதாவரி நாட்டு மன்னன் தூயகண்டவர்மன் புத்திர காமேஷ்டி யாகம் செய்து மகப்பேற்றை அடைந்தான். அதற்காக அவன் அந்தணர்களுக்கு பல்வேறு தானங்கள் செய்தான். அப்போது இரு அந்தணர்களுக்கிடையே ஏற்பட்ட பூசலில் ஒரு பசு மாட்டை கொன்று விட்டனர். அதனால் அவர்களுக்கு கோஹத்தி பாவம் ஏற்பட்டு கானகத்தில் அலைந்து கொண்டிருந்தனர்.   உரோசம முனிவர் திருநள்ளாறு வந்து ஆங்கு காலனை காலாலுதைத்த முக்கண் கவுளை வணங்குமாறு அறிவுரை கூறினார். அவர்கள் திருநள்ளாறு வந்து  கோவிலின் அருகில் நின்று கொண்டிருந்தனர். தீர்த்தங்களில் நீராடி வருபவர்களின் சிரசிலிருந்து வீழ்ந்த நீர் அவர்களின் மேல் பட அவர்களின் பாவம் நீங்கியது.  அவர்கள்  அத்தீர்த்தங்களில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி அவரின்  திருவருள் பெற்று சிவலோகம் அடைந்தனர்.

ஒரு சமயம் அவந்தி நாட்டு மன்னன் உருசிராஜன், பாரத்வாஜ முனிவரை அணுகி வணங்கி, தானங்களில் சிறந்தது எது என விளக்குமாறு வேண்டினான். அதற்கு அவர் தானங்களில் சிறந்தது அன்னதானம். அதைவிடச் சிறந்தது காலமறிந்து அன்னதானம் அளித்தல், அதைவிடச் சிறந்தது காவிரி நதி தீரத்தில் அன்னதானம் அளித்தல். அதைவிட உயர்ந்தது சிவாலயத்தில் அன்னம் பாலித்தல், அச்சிவாலயங்களுள் திருநள்ளாறு ஆலயத்தில் அன்னதானம் அளித்தால் அதுவே உலகில் உயர்ந்தது என்றார். அத்தலத்தில் முசுகுந்தர் விடங்கப்பெருமானை நிறுவியுள்ளார், அவரை வணங்கி பின்னர் கோபுரத்து சனி பகவானை பூசை செய் உன் வினை தீரும் என்றார்.  அவ்வாறே உருசிராஜனும் திருநள்ளாறு சென்று தனுர் மாத பௌர்ணமியில் அன்னதானங்களோடு அடியவர்களுக்கு  வேண்டுவன கொடுத்து இறைவனைத் துதித்தான்.  இறைவனும் மகிழ்ந்து பல்வேறு வரங்கள் தந்து மறைந்தான்.

காம்பீலி நாட்டில் வாழ்ந்த ஒரு வணிகனின் இரு மைந்தர்கள் விதி வசத்தால் பரத்தையர் பால் சென்று செல்வம் எல்லாம் இழந்து, களவாடி பிடிபட்டு சிறை சென்று, அங்கிருந்து தப்பி கானகம் சென்று அலையும் காலத்தில் ஒரு அந்தணர் அவர்களுக்கு நற்புத்தி கூறி திருநள்ளாறு செல்லுமாறு அறிவுறுத்த அவர்களும் திருநள்ளாறு வந்து முக்குளத்தில் நீராடி மூன்று மாதம் நள்ளாற்றில் தங்கி அங்கேயே மரணமடைய, திருநள்ளாற்றில் வழிபட்டு இறந்தால் நற்பேறு பெற்றனர். இரண்டாம் பிரகாரத்தின் மதில் சுவற்றில் இவ்வரலாறுகள் எல்லாம் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.


மூவராலும் பாடல் பெற்ற தலம்:
சிட்டமர்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ண வெண்ணீறாடுதன்றியும் போய்
பட்டமர்ந்த சென்னி மேலோர் பால் மதியஞ்சூடி
நட்டமாடும் நம் பெருமான் மேயது நள்ளாறே !
என்று திரிபுர அசுரர்களின் அழியாத கோட்டைகள் மூன்றனையும் தனது நெற்றிக் கண்ணினால் எரித்த, பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறாடி, செஞ்சடையிலே இளமதியஞ் சூடிய எம்பெருமான் உன்மத்த நடனம் செய்யும் தலம் திருநள்ளாறே என்று ஞான சம்பந்தப் பெருமானாலும், மற்றும் அப்பர், சுந்தராலும் பாடல் பெற்றது இத்தலம். தேவாரத்தலங்களில் காவிரி தென் கரை தலங்களில் 52வது தலம். சம்பந்தர் நான்கு பதிகங்களும், வாகீசர் இரண்டு பதிகங்களும் சுந்தரர் ஒரு பதிகமுமாக மொத்தம் ஏழு பதிகங்கள் பெற்ற தலம்.'

கோவில் அமைப்பு:                     
திருநள்ளாற்றுக் கோவில் அழகும், அருளும் நிறைந்த ஓர் கலைக்கோவிலாகும். கோவிலில் நுழையும் போது இப்போது புது ஏழு நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கின்றது. இந்த இராஜ கோபுரத்திற்கும் அடுத்துள்ள இரண்டாம் கோபுரத்திற்கும் இடையில் உள்ள மண்டபத்தின் தூண்களில் டராஜப்பெருமானின் பல்வேறு ஆடற்கோலங்கள் எழிலார் சுதைச் சிற்பங்களாக மிளிர்கின்றன.  இம்மண்டபத்தைக் கடந்து சென்றால் மூன்று நிலை ராஜ கோபுரத்தின் வழியாக கோவிலுக்குள் நுழைகின்றோம் இவ்வாயில் இடப வாயில் என்றும் அழைக்கப்படுகின்றது. நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் தியாகரை தனது நெஞ்சில் வைத்து வழிபடும் மஹாவிஷ்ணுவின் பள்ளி கொண்ட திருக்கோலத்தை தரிசிக்கின்றோம். வெளி பிரகாரத்தின் மதில் சுவர்களில் நளனுடைய சரித்திரமும் மற்றும் இத்திருக்கோவிலுக்கு சம்பந்தப்பட்ட மற்ற வரலாறுகளும் ஓவியமாக வரையப் பட்டுள்ளன. வெளிப்பிரகாரத்தில் நந்தவனம், இளவேனில் மண்பம், அருள்மிகு காளத்தியப்பர் சன்னதி ஓரு சிற்றாலயமாக எழிலுற அமைந்திருக்கிறது. காளத்தியப்பர் சிவஜோதியாக வீற்றிருக்கிறார், கற்பக விநாயகர் ஆலயமும் இச்சுற்றில் அமைந்துள்ளது. சனி பகவானுக்கு எள் விளக்குப் போடும் இடமும் உள்ளது. இத்தலம் சனி பகவானுக்கு மட்டுமில்லாமல் ராகு, கேது இவர்களுக்காகவும் வழிபட வேண்டிய தலமாகும்.



ஸ்ரீசனிபகவான் சன்னதி இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்து. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும்.  உக்ரமூர்த்தியாகிய சனீஸ்வரன் இங்கு அனுக்கிரக தேவதையாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகின்றார். ஏனைய நவக்கிரகங்கள் இத்தலத்தில் தனியாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பதும் இவருடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.

நளச்சக்கரவர்த்தியை துன்புறுத்தி கொண்டிருந்த ஸ்ரீசனிபகவான் நளன் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரை வந்து வணங்கி தரிசித்தவுடன் விலகி விடுகின்றார். பின்பு எம்பெருமானுடைய அருளாணையின் வண்ணம் பக்தர்களுக்கு அருள் வழங்கும் அனுக்ரக மூர்த்தியாக ஈஸ்வரப்பட்டம் பெற்றுக்கொண்டு துவார தேவதையாக இரண்டாவது கோபுர வாயிலில் விளங்குகின்றார்.

ட்பிரகாரத்தில் தியாகருக்கு எதிராக நகவிடங்கப் பெருமாளை வணங்கும் சுந்தர மூர்த்தி நாயனார் சன்னதிதெற்கு பிரகாரத்தில் அறுபத்து மூவரின் திருவுருவச் சிலைகளும், நளன் வழிபட்ட நள லிங்கம், கலி நீங்கப்பெற்ற நளன் ஆகியோரை தரிசனம் செய்யலாம்மேற்குப் பிரகாரத்தில் சொர்ண விநாயகரின் சன்னதியும், சப்த விடங்கத் தலங்களின் சிவலிங்கங்ளின் சன்னிதியும், அருணகிரி நாதரால் பாடல் பெற்ற சிங்கார வேலவரின் சன்னதி உள்ளதுதேவியர் இருவருடன் எழிலாக அருட்காட்சி தருகின்றான் முத்துக்குமரன், இவரை

நச்சு வெண்பட மீதணை வார்முகில் பச்சை புய னார் கரு டாசனர்
      நற்க ரந்தநு கோல்வளை நேமியர் மருகோனே-
நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
நத்தி வந்துந ளாறுறை தேவர்கள் பெருமாளே.என்று  அருணகிரி நாதர் திருப்புகழில் பாடியுள்ளார். அடுத்து  திருமகள் சன்தியை தரிசிக்கின்றோம், வடக்கு பிரகாரத்தில் தியாகர் எண்ணைக் காப்பு கண்டருளும் எண்ணைக் காப்பு மண்டபம் அழகிய சிறிய சிற்பங்களுடன் கூடிய தூண்களுடன்  அமைந்துள்ளது. மேலும் தல விருட்சமான தர்ப்பையும் உள்ளது. இப்பிரகாரத்தின் இறுதியில் தெற்கு நோக்கி ஆடல் வல்லானின் சன்னதி அமைந்துள்ளது. ஈசான மூலையில் பெரிய உருவில் பைரவர் அருள் பாலிக்கின்றார். கிழக்கு சுற்றில் மேற்குப் பார்த்தபடி சூரியன் சன்னதி உள்ளது.

ஐயனின் கோட்டத்தில் ஆலமர் செல்வனும், சிறிய மஹா விஷ்ணு, பிரம்மா உருவங்களுடன் லிங்கோத்பவரும், பிக்ஷாடணரும், துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர். கருவறையின் வடபால் கருணை வடிவமாக துர்க்கை விளங்குகிறாள்.  துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளி, நவராத்திரி, பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் சப்த ரிஷிகள் பூசித்த லிங்கங்கள் மற்றும் சப்த விடங்க தலங்களின்  லிங்கங்களுடன் மொத்தம் 17 சிவலிங்கங்களை தரிசிக்கலாம். சோழர் காலத்திய கல்வெட்டுகள்  இவ்வாலயத்தில் உள்ளன.

கோவிலை இவ்வாறு வலம் வந்தபின் கொடி மரத்தின் முன் நாம் நிற்கின்றோம். பலி பீடம் சற்று விலகியுள்ளதைக் காணலாம். தியாகர் மற்றும் தர்ப்பாரண்யேஸ்வரரின் சன்னதிகள் உயரமாக அமைந்துள்ளன. மற்ற விடங்கத்தலங்களைப் போலவே தர்ப்பாரண்யேஸ்வரருக்கு வலப் பக்கத்திலே தியாகரின் சன்னதியும் அவருக்கு நேர் எதிரே பரவையார் உடனாய சுந்தர மூர்த்தி நாயனாரின் சன்னதியும் அமைந்துள்ளது. மரகத விடங்கர் இரும்புப் பெட்டியிலே வைத்து பாதுகாக்கப்படுகின்றார். அபிஷேக காலங்களில் மட்டுமே அவரது தரிசனம் கிடைக்கும்.

போகமார்த்த பூண் முலையாள் அம்பாள் சன்னதி முதல் பிரகாரத்தில் சோபன மண்டபத்தில் அமைந்துள்ளது. சனீசுவர பகவான் சன்னதி கிழக்கு முகமாய் அம்பாள் சன்னதிக்கு முன்புறம் அமைந்துள்ளது. திருமறைக் காட்டிலிருந்து மதுரைக்கு சென்று  வெப்பு நோயால்  அவதிப்பட்ட கூன்பாண்டியனை திருநீற்றுப் பதிகம் பாடி அவனது வெப்பு நோயை நீக்கி, அவனை நின்றசீர் நெடுமாறனாக்கிய பின்னும் சமணர்கள் அனல் வாதத்திற்கு அழைத்த போது இப்பச்சைப் பதிகம்  வேகாமல் அப்படியே நின்றது. இவ்வாறு சைவ சமயத்தின் புணருத்தாரணத்திற்கு பிராணனாக இருந்த இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் அம்பிகை பிராணேஸ்வரி, பிராணாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றாள். அத்திர நயனி என்றொரு திருநாமமும் அம்பாளுக்கு உண்டு. அம்மையின் தனி சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது, அதற்கு அடுத்து பள்ளியறையும் அமைந்துள்ளது. பள்ளியறை முழுதும் பல கோணங்களில் அமைந்துள்ள கண்ணாடிகளில் அம்மையின் முழு உருவத்தையும் காண முடிகின்றது.


கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள்:

மாதி னுக்குடம் பிடங்கொடுத் தானை மணியி னைப்பணி வார்வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமல னைஅடி யேற்கெளி வந்த
தூதனைத் தன்னைத் தோழமை யருளித் தொண்ட னேன்செய்த துரிசுகள் பொறுக்கும்
நாத னைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

பொருள்:  உமையம்மைக்கு உடம்பின் இடப் பக்கத்தைக் கொடுத்தவனும், மாணிக்கம் போன்றவனும், தன்னைப் பணிகின்றவர்களது வினையை அழிக்கின்ற, வேத முதல்வனாய் உள்ளவனும், வேதத்தின் வழி வேட்கின்ற வேள்வியை உடையவர்கள் வணங்குகின்ற தூயவனும், அடியேனுக்கு எளிமையாய்க் கிடைத்த தூதனும், தன்னை எனக்குத் தோழமை முறையினனாக அளித்து, அடியேன் செய்த குற்றங்களைப் பொறுக்கும் தலைவனும், திருநள்ளாற்றில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய அமுதம் போல்பவனை மறந்து, நாய் போலும் அடியேன் வேறு எதனை நினைப்பேன். ஒன்றையும் நினையேன் என்று வன்தொண்டர் பாடிய இத்திருக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜை நடைபெறுகின்றது.  காலையில் சூரிய பகவானுக்கு பூஜை நடந்தபின் ஐயனுக்கு திருப்பள்ளியெழுச்சியுடன் மற்ற பூஜைகள் தொடங்குகின்றன.

இத்திருக்கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் முதல் நாள் தியாகருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. வைகாசி மாதம் வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. முதல் ஐந்து நாட்கள் வினாயகர் உற்சவமும் அடுத்த ஐந்து நாட்கள் முருகர் உற்சவமும் அதற்கடுத்த 4 நாட்கள் அடியார் உற்சவமும் நடைபெறுகின்றது. பின் செண்பக தியாகரின் உற்சவம், ஐந்தாம் திருநாள்  பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர தரிசனம் (தெருவடைச்சான் சப்பரம்)  சேவை தந்தருளுகின்றனர். தங்க ரிஷப வாகனத்தில் அருட்காட்சி அருளுகின்றார் எம்பெருமான். ஏழாம் நாள் திருத்தேரோட்டம், பஞ்ச மூர்த்திகளுக்குமாக ஐந்து தேர்கள் வலம் வருகின்றன.
இரவே சொர்ண விநாயகர், வள்ளி – தேவசேனா சமேத முருகர், சண்டிகேஸ்வரர்களுடன்  சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு உன்மத்த நடனத்துடன் எழுந்தருளும் தியாகர் மற்றும் நீலோத்பலாம்பாள்  மறு நாள் அதிகாலை வடம் பிடிக்கபட்டு தேரோட்டம் முடித்து, எண்ணெய்க் காப்பு மண்டபம் எழுந்தருளி பிராயச்சித்தாபிஷேகம் கண்டு யதாஸ்தானம் திரும்புகின்றனர். பாரத் மின் மிகு நிறுவனத்தினரின் மூலம்  திருத்தேர்கள்  இரும்பு சக்கரங்கள் மற்றும் ஹைட்ராலிக் பிரேக்குகளுடன் புதிக்கப்பட்டதால் தற்போது தேரோட்டம் ஒரே நாளில் முடிந்து விடுகின்றது. திருநள்ளாறா தியாகேசா என்று பக்தர்கள் தேர்களை இழுக்கும் நாமும் அவர்களுடன் கலந்து கொண்டு தேரை இழுப்பதே ஒரு இனிமையான அனுபவம்.

பிராயச்சித்தபிஷேகத்தின் போது மரகத விடங்கரையும் எண்ணைக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளச் செய்கின்றார். அப்போது அவரை நாம் நீண்டநேரம் தரிசிக்கலாம். மிகவும் விஸ்தாரமாக அபிஷேகம் நடக்கின்றது. காணக்கொடுத்து வைத்திருக்க வேண்டும். அடியேனுக்கு பலமுறை ஐயனின் தேரோட்டத்தையும் அபிஷேகத்தையும் தரிசிக்கும் பாக்கியத்தை இறைவன் அருளினார் என்பது அவரது கருணையே.

மறு நாள் பிரம்ம தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடைபெறுகின்றது. தெப்போற்சவம் முடிந்தவுடன், சனி பகவான் தங்க காக வாகனத்தில் வீதி உலா வருகின்றார். அன்றுதான் நளனுக்கு சனி நீங்கியதாக ஐதீகம். மறு நாள் தியாகர் இடையனுக்கு காட்சி கொடுத்த லீலை நடைபெறுகின்றது. வைகாசி விசாகத்தன்று காலை நடராஜர் பிரம்ம தீர்த்ததிற்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்க  பிரம்மோற்சவம் நிறைவடைகின்றது.



தியாகேசர் – நீலோத்பலாம்பாள் திருத்தேர்கள்


ஆனி மாதம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடி மாதம் எம்பிரான் தோழர் சுந்தர மூர்த்தி நாயனாரின் உற்சவம் நடைபெறுகின்றது. புரட்டாசி மாதம் பௌர்ணமி அன்று தியாகருக்கு "நிறைபணி விழா" மிக சிறப்பாக நடை பெறுகின்றது. பிராணேஸ்வரிக்கு 9 நாட்கள் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றது. ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி உற்சவம். கார்த்திகை சோமவாரங்களில் 108 சங்காபிஷேகமும் நிறை வாரம் 1008 சங்காபிஷேகமும் நடை பெறுகின்றது. கார்த்திகை தீபத்தன்று பஞ்ச மூர்த்திகளும் எழுந்தருளி சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது. மார்கழி மாதம் பத்து நாள் "ஆருத்ரா தரிசன" திருவிழா நடை பெறுகின்றது தினமும் இரவு மாணிக்கவாசகரின் திருவெம்பாவை இசைக்கப்படுகின்றது. திருவாதிரை நாள் அருணோதய காலத்தில் ஒரே சமயத்தில் தியாகருக்கும் சிவகாம சுந்தரி உடனுறை நடராஜ பெருமானுக்கும் ஏக காலத்தில் அபிஷேகம் நடை பெறும் அது மற்ற எக்கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சி. மாசியில் மஹாசிவராத்திரியன்று இரவு நான்கு ஜாம அபிஷேகம் மட்டுமல்லாமல், சந்திரசேகரர்  தங்க ரிஷப வாகனத்தில் அருட்காட்சி அருளுகின்றார். மேலும் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

எல்லாரோலும் நன்கு அறியப்பட்ட இத்தலத்தின்  திருவிழா சனிப் பெயர்ச்சியாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது இத்திருவிழா கொண்டாடப்படுகின்றது. சனி பகவானுக்கு விசேஷ ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றது. பின்னர் அவர் தங்க காக வாகனத்தில் காட்சி தருகின்றார். சனிப் பெயர்ச்சியின் போது இந்தியாவெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வருகின்றனர்.


உள்ளா றாததோர் புண்டகரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ் சடை
நள்ளா றாஎன நம் வினை நாசமே!

பொருள்: சோதி வடிவாக விளங்குகின்ற தாமரைப் பாதங்களை உடைய கொன்றை மாலை சூடிய நள்ளாற்றின் சிவபெருமானே என்று நாம் கூற நம் விணைகள் அனைத்தும் அழிந்துபடும் என்று அப்பர் பெருமானின் கூற்றுக்கிணங்க நாமும் திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரையும், பிராணாம்பிகையையும், நக விடங்க செண்பக தியாகரையும், சனீஸ்வரரையும் வழிபட்டு நம் வினைகள் நீங்கி நலம் பெறுவோமாக. அடுத்து புவனி விடங்கராக எம்பெருமான் அருள் பாலிக்கும் திருமறைக்காடு திருத்தலத்தை தரிசிக்கலாம் அன்பர்களே.

                                                              திருப்பாத  தரிசனம் தொடரும் . . . . .


2 comments:

கோமதி அரசு said...

திருநாள்ளாறு நிறைய தடவை போய் இருக்கிறோம்.
நல்ல விளக்கமாக, விரிவாக பதிவு அருமை.
விளம்பரங்கள் இல்லை நன்றி.

//சோதி வடிவாக விளங்குகின்ற தாமரைப் பாதங்களை உடைய கொன்றை மாலை சூடிய நள்ளாற்றின் சிவபெருமானே என்று நாம் கூற நம் விணைகள் அனைத்தும் அழிந்துபடும்//

இப்போது வந்து இருக்கும் கொரோனா என்ற தொற்றை அழித்து உலகமக்கள் எல்லோரையும் காக்க வேண்டும் நாள்ளாற்றின் சிவபெருமான்.

S.Muruganandam said...

// இப்போது வந்து இருக்கும் கொரோனா என்ற தொற்றை அழித்து உலகமக்கள் எல்லோரையும் காக்க வேண்டும் நாள்ளாற்றின் சிவபெருமான்.//

அடியேனும் அவரிடம் அப்படியே வேண்டிக் கொள்கிறேன் அம்மா.